மேஷம் முதல் மீனம் வரை: ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 - 19.05.2025

By செய்திப்பிரிவு

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து கொண்டு உடல் நலக்குறைவுகளையும், குடும்பத்தில் பிரச்சினைகளையும் தந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். ராகுவால் உங்களுக்கு விபரீதமான ராஜ யோகங்கள் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். தம்பதிக்குள் நடந்துவந்த நிழல் யுத்தம் நீங்கி நல்லுறவு தொடரும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் தீரும்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசியில் 7ஆம் இடத்தில் கேது இருந்துகொண்டு எந்த வேலையையும் முடிக்க முடியாத சூழலை தந்தார். கேது இனி ஆறாம் வீட்டுக்கு வருகிறார். அடுக்கடுக்காய் விபரீத ராஜ யோகங்களை உருவாக்குவார். விநாயகர் வழிபாட்டில் ஈடுபாட்டை ஏற்படுத்துவார். வேதங்கள் படித்து அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். > மேஷம் ராசியினருக்கான முழுமையான பலன்களை அறிய

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு காரியத் தடைகள், மன உளைச்சல், சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமை என அடுக்கடுக்காக பல சிக்கல்களையும், நெருக்கடிகளையும் கொடுத்து வந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினோராம் வீட்டுக்கு வருவதால் புத்துணர்ச்சியும், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவார். இனி கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் நிலவும். பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். அரைகுறையாக பாதியிலேயே நின்று போன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். கன்னிப் பெண்களின் அலட்சியப் போக்கு மாறும். அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெறுவார்கள்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணவரவையும், வி.ஐ.பிகளின் நட்பையும், கொஞ்சம் அலைச்சல், டென்ஷனையும் கொடுத்து வந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் புகழ் கூடும். சொந்த வீடு கட்டுவீர்கள். > ரிஷபம் ராசியினருக்கான முழுமையான பலன்களை அறிய

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீடான லாப வீட்டில் அமர்ந்து கொண்டு பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதிகள் என பல வகையிலும் முன்னேற்றம் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்து அமர்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி பெற வைப்பார். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுயமாக தொழில் செய்யும் வல்லமை கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். ராசிக்கு 10-ல் ராகு வருவதால் வெளிவட்டாரத் தொடர்பு அதி கரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, உறவினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளையும், பல கசப்பான அனுபவங்களையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பதட்டத்திலிருந்து விடுபட வைப்பதுடன் பக்குவப்படுத்துவார். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் இனி நடக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும். > மிதுனம் ராசியினருக்கான முழுமையான பலன்களை அறிய

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஒரு வேலையையும் செய்ய விடாமல் முடக்கிப் போட்ட ராகுபவான் இப்போது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்வதால் முடியாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். குல தெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்: கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டில் வந்தமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் கரை புரளும். சங்கடங்கள் தீரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். சொந்த ஊரில் உங்களை மதிப்பார்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். உதாசீனப்படுத்திய உறவினர்கள், நண்பர்கள் இனி தேடி வருவார்கள். > கடகம் ராசியினருக்கான முழுமையான பலன்களை அறிய

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து கொண்டு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதபடி செய்ததுடன், வருமானத்துக்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்த ராகு பகவான் இப்போது எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால், நீங்கள், இனி ஓரளவு நிம்மதியடைவீர்கள். நேர்பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வீட்டில் தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் இனி சிறப்பாக நடக்கும். தம்பதிக்குள் ஏற்படும் பிரச்சினையை உடனே பேசி தீர்த்துக் கொள்ளவும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். உங்கள் மகனுக்கு எதிர்பார்த்த கல்வி பிரிவில் இடம் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி பெறுவார். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். சொந்த வீடு கட்டுவீர்கள்.

கேதுவின் பலன்கள்: கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். இனி சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். பணவரவு, யோக பலன்கள் உண்டாகும். மகள், மகனுக்கு எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். > சிம்மம் ராசியினருக்கான முழுமையான பலன்களை அறிய

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை படாதபாடு படுத்தியெடுத்துக் கொண்டிருந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் திக்கு திசையறிவீர்கள். உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிவரும். இனி உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போவீர்கள். தம்பதிக்குள் சந்தோஷம் நிலைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக முடிப்பீர்கள். அரசாங்க காரியங்களில் இருந்து வந்த தடுமாற்றங்கள் விலகும்.

கேதுவின் பலன்கள்: கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்தமருவதால் இனி சமயத்துக்கு தகுந்தாற்போல் பேச வைப்பார். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவீர்கள். தலைச்சுற்றல், ஒற்றைத் தலைவலி, காய்ச்சல், தூக்கமின்மை, எதிலும் ஒருவித சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். சகோதரர்கள், நண்பர்களுடன் இணக்கமாகச் செல்லவும். > கன்னி ராசியினருக்கான முழுமையான பலன்களை அறிய

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு தாழ்வு மனப்பான்மையையும், மன உளைச்சலையும், வீண் கவலைகளையும் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் வந்தமர்வதால் எதிலும் முன்னேற வைப்பார். மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசுவதால், உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். மனைவியின் ஆரோக்கியம் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். பழைய கடன்களில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேலை தேடி அலைந்த உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். தடைபட்ட கல்வியை மீண்டும் தொடர்வார்கள். பெற்றோர் சொல்லுக்கு மதிப்பு அளித்து திருமணத்துக்கு உடன்படுவார்கள்

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து உடல் சோர்வு, காரியத் தடைகள், மன உளைச்சல், விரக்தி, சோம்பல் என அடுக்கடுக்காக அதிர்ச்சி கொடுத்து வந்த கேது இப்போது பனிரெண்டில் சென்று அமர்கிறார். தடுமாறிய உங்கள் பேச்சில் இனி தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கோபம் குறையும். குடும்பத்தில் நல்லது நடக்கும். சகோதர - சகோதரி வகையில் அலைச்சல் இருந்தாலும் மகிழ்ச்சி குறையாது. நல்ல உறக்கம் வரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். > துலாம் ராசியினருக்கான முழுமையான பலன்களை அறிய

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணவரவையும், பிரபலங்களின் நட்பையும் ஒருபுறம் தந்தாலும் மறுபுறம் வீண் அலைச்சல், மன உளைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி, குதூகலம் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் வெடித்த சண்டை விலகும். எதிலும் வெற்றி உண்டு. வீண் அலைச்சல், டென்ஷன், முன் கோபம் குறையும்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து ஆடம்பரச் செலவுகள், வீண் அலைச்சல், கடன் பிரச்சினைகளை ஏற்படுத்தி, தூக்கமில்லாமல் தவிக்க வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றாம் வீட்டுக்கு வந்து அமர்வதால் லாட்டரி, ஷேர் மூலம் பணம் வரும். திடீர் யோகம், பணப்புழக்கம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். > விருச்சிகம் ராசியினருக்கான முழுமையான பலன்களை அறிய

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து இழப்பு, ஏமாற்றம், விரக்தி என நாலாப்புறமும் வாட்டி வதைத்த ராகு பகவான், இப்போது ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் இனி மன நிம்மதியை தருவார். பாதியிலேயே நின்று போன வேலைகளையெல்லாம் இனி பக்குவமாய் பேசி முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். வீட்டில் அமைதி திரும்பும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து பணப்புழக்கத்தையும், பிரபலங்களின் நட்பையும் ஏற்படுத்திக் கொடுத்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் எந்த வேலையையும் திறம்பட செய்து முடிக்கும் மனோபலத்தை தருவார். பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். > தனுசு ராசியினருக்கான முழுமையான பலன்களை அறிய

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு தாயாருக்கு மருத்துவச் செலவையும், மனஸ்தாபங்களையும் கொடுத்து உங்களை நாலாபுறமும் பந்தாடிய ராகு பகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டுக்கு வந்தமருவதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். சோம்பல், அலட்சியம் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.இனி குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உங்களின் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து எந்த பணிகளையும் செய்ய விடாமல் ஒருவித தடுமாற்றத் தையும், தயக்கத்தையும், வீண் குழப்பத்தையும், பழியையும் தந்த கேது பகவான் இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் சமயோஜித புத்தியுடன் செயல்பட வைப்பார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறும். பணப் பற்றாக்குறை நீங்கும். வருங்காலத்துக்காக கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். உடன் பிறந்தோரின் ஆதரவு உண்டு. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். > மகரம் ராசியினருக்கான முழுமையான பலன்களை அறிய

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு புதிய திருப்பங்களையும், விஐபிகளின் நட்பையும், பணவரவையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்வதால் தடைபட்டுப்போன பல காரியங்கள் இப்போது கைகூடி வரும். ஆனால் வாக்கு ஸ்தானத்தில் நுழைந்திருப்பதால் சமயோஜிதமாகப் பேசி சங்கடங்களில் சிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். பேச்சில் கவனம் தேவை. குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்வார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து தந்தைக்கு உடல்நலக் குறைவையும், கருத்துமோதல்களையும், சொத்துப் பிரச்சினை களையும் தந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மன நிம்மதியுண்டு. குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனைவியிடம் விட்டுக் கொடுத்து போகவும். > கும்பம் ராசியினருக்கான முழுமையான பலன்களை அறிய

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்து கொண்டு மனப் போராட்டங்களையும், வீண் அலைச்சலையும், காரியத் தடைகளையும் கொடுத்து வந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் படபடப்பான உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களின் விருப்பத்துக்காக, அவர்கள் விரும்பாத பாடத்தில் சேரும்படி வற்புறுத்தாதீர்கள். மகளுக்கு, நல்ல இடத்தில் வரன் அமையும். பணவரவு அதிகரிக்கும்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு நிம்மதி இல்லாமலும், சரியான தூக்கமில்லாமலும் துரத்தியடித்த கேது பகவான் இப்போது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைப்பதால் உங்கள் ஆழ்மனதில் இருந்த பயம் விலகும். எதிர்ப்புகள் அடங்கும். குறை கூறியவர்கள் புகழ்ந்து பேசுவார்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரியின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். > மீனம் ராசியினருக்கான முழுமையான பலன்களை அறிய

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்