துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) பலன்கள்: புரட்சிகரமான சிந்தனை உள்ளவர்களே! இதுவரை உங்களுக்கு எதிரி வீடான ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்து மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிக்க வைத்து உங்களைப் பஞ்சாய் பறக்கடித்த குரு பகவான் இப்போது ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை ஏழாம் வீட்டில் நிற்பதால் குழம்பியிருந்த உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் உங்களின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்கமாட்டார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீண் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள்.
சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடிந்ததே! இனி இங்கிதமாகப் பேசுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். நின்று போன திருமணம் நல்ல விதத்தில் முடியும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெகுநாட்களாக வீடு கட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததே, இனி வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உரியவரான குருபகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவு, சிலநேரங்களில் சண்டை சச்சரவு, மனைவி வழி உறவினர்களுடன் பகைமை வரக்கூடும்.
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் பதவி பட்டம் பெறுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். இளைய சகோதரரால் உதவியுண்டு. பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். புதிய சொத்தும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால் கெட்டவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். பழகிக் கொண்டே உங்களை பாழ்படுத்த முயல்பவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். அண்டை அயலாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக் கட்டங்களில் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
» குரு பெயர்ச்சி பொதுப்பலன் - ஏப்.22, 2023 முதல் மே 1, 2024 வரை | ஒரு பார்வை
» சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - துலாம் ராசியினருக்கு எப்படி?
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எதிலும் வெற்றி, எதிர்பாராத பணவரவு உண்டு. கூடாப்பழக்க வழக்கம் நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். அண்டை மாநிலக் கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். விலகியிருந்த மூத்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் இக்காலக்கட்டங்களில் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தவும். செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். ஆர்வம் இல்லாமல் இருந்த நீங்கள், சுறுசுறுப்பாக வாடிக்கையாளர்களை கவனிப்பீர்கள். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி, மார்ச் மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்சினைகள் ஓயும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். வராது என்றிருந்த பழைய பாக்கிகள் வந்து சேரும்.
உத்தியோகத்தில் ஓடி ஒடி உழைத்தும் கெட்டப் பெயர்தானே மிஞ்சியது, இனி அந்த அவலநிலை மாறும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். செப்டம்பர், ஜனவரி, மார்ச் மாதத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். கணினி துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்த குரு மாற்றம் புதிய கோணங்களில் உங்களை யோசிக்க வைப்பதுடன் வளர்ச்சியையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: சீர்காழி தரங்கம்பாடி சாலை இடையேயுள்ள திருநாங்கூர் – அண்ணன் கோயிலில் அருள்பாலிக்கும் கண்ணன் நாராயணப் பெருமாளையும் பூவார் திருமகளையும் ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழை கர்ப்பிணிப் பெண்ணின் பிரசவ செலவை ஏற்று கொள்ளுங்கள். வளம் பெருகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago