சோபக்ருது தமிழ்ப் புத்தாண்டு 2023 பொதுப்பலன்கள் | ஒரு பார்வை

By Guest Author

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ சோபக்ருத் வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 01-ம் தேதி இதற்கு சரியான ஆங்கிலம் 14 ஏப்ரல் 2023 அன்று பகல் 02:05 மணிக்கு, அன்றைய தினம் தினசுத்தி அறிவது வெள்ளிக்கிழமை - கிருஷ்ணபக்ஷ நவமியும் - திருவோண நக்ஷத்ரமும் - ஸாத்வீக நாமயோகமும் - கரஜி கரணமும் - கடக லக்னத்தில் - மீன நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 21:35-க்கு சோபக்ருது வருஷமான தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.

வெண்பா:

சோபகிருதுதன்னிறி றொல்லுலகெல்லாம் செழிக்கும்
கோபமகன்று குணம் பெருகும் - சோபனங்கள்
உண்டாகுமாரி யொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகுமென்றே யுரை

பலன்: சோபக்ருது வருடத்தில் அகில உலகமெங்கும் உள்ள தொன்மையான நாடுகள் செழிப்படையும். மனிதர்களிடம் உள்ள தீயகுணங்களான பொறாமை, கோபம், ஆணவம் போன்றவை அகன்று நல்ல பண்புகள் ஏற்படும். சுபமான மங்கலகரமான சிறப்புகள் உண்டாகும். மழை தேவையான நேரங்களில் இடைவிடாது பெய்யும். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

சூரியன் ஆதிக்கம் பெற்ற ஆண்டு சோபக்ருது: ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி சூர்யன் பாக்கிய ஸ்தானத்தில் மிகப் பெரிய கூட்டணியுடன் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி சூரியன் 9-ம் இடத்தில் கேது சாரம் பெற்று உச்சமாக இருக்கிறார். குருவின் சஞ்சாரத்தால் கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் - மழலை பாக்கியமும் - வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை - எழுத்துத்துறை - ஆசிரியர் பணி - கணிதம் - ரசாயனம் - ஆன்மீகம் - சோதிடம் - வழக்கறிஞர் துறை - பதிப்புத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

சுக்கிரன் தனது சஞ்சாரத்தை ஆட்சி ஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறை செழிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் கலைஞர்கள் கவுரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை, சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணை - சமையல் எண்ணை விலை அதிகரிக்கும். புத்தாண்டு பிறக்கும் போது உள்ள புதனின் இருப்பால் இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் உயரும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும்.

மழை பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். அண்டார்டிகா - அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் - சுமத்ரா தீவு - ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.

பொதுப்பலன்கள்: வெளிநாட்டின் வருவாய் அதிகரிக்கும். முதலீடுகள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சி பெறும். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் நாடு முன்னேற்றமடைய பாடுபடுவார்கள். உள்நாட்டில் வேலை வாய்ப்பு பெருகும். புதிய நவீன ஏவுகனைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும். அறிவியலில் ஒரு இலக்கை அடைவோம். புதிய வகை விமானங்கள், போர்க்கருவிகள் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும். பலம் வாய்ந்த நாடுகளில் நமது நாட்டிற்கும் தனித்தன்மை ஏற்படும்.

மழையின் அளவு ஓரளவு இருக்கும். ஆறு, குளம், கண்மாய், அணைகள் நிரம்பும். விவசாயம் செழிக்கும். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளில் விலை உயரும். உணவு உற்பத்தி அதிகரிப்பதுடன் ஏற்றுமதி வளம் பெறும். கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்படும். கல்வியின் தரம் மேம்படும். மாணவமணிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். விளையாட்டில் நமது நாட்டினைச் சார்ந்தவர்கள் சாதனைகள் புரிவார்கள். அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் பூமி அதிரும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE