‘செவ்வாய் தோஷம் பார்க்காதீங்க!’ - புதிய ஜோதிட முறையில் விளக்கம்

By செய்திப்பிரிவு

இன்றைக்கு திருமணத் தடை மற்றும் தாமதத்தினால் வருத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜாதகம், ஜோதிடம் என்று நம்புபவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. ஜோதிடம் என்பது முழுமையான கணக்கீட்டு அறிவியல். இதை உணராமல், பொறுப்பில்லாமல் ஒரு சிலர், எதை எதையோ எழுதவும் சொல்லவும் போய் தவறான புரிதல்களால், மனிதர்களின் வாழ்க்கை, துயரங்கள் நிறைந்ததாக மாறியுள்ளது. குறிப்பாக திருமணத் தடை மற்றும் தாமதம் இரண்டுக்கும் செவ்வாய் தோஷம் காரணமாக சொல்லப்படுகிறது. செவ்வாய் தோஷம் குறித்து விரிவாக நாம் அலசுவோம்.அறிந்து கொள்வோம்.

ஜாதக சந்திரிகை என்ற நூலில், ஜென்ம லக்னத்திலிருந்து, செவ்வாய் தோஷம் பிறப்பு லக்னம், 2ம் பாவகம், 4ம் பாவகம், 7ம் பாவகம், 8ம் பாவகம் மற்றும் 12ம் பாவகத்தில் இருந்தால், செவ்வாய் தோஷம் என்று குறிப்பிடப்படுகிறது.

கொடும்பாவி செவ்வாயின் கொடிய பலன் ஏது சொல்வேன்
கேடு செய்யும் செவ்வாயின் கெடு பலனை கேளப்பா,
இரண்டிலே செவ்வாயப்பா, இல்வாழ்க்கை கசந்துவிடும்,
இருக்கும் செல்வம் அழிந்துவிடும்,
இருவருக்கும் பகையாகி எலி பூனை போல் ஆகும்.
நான்கிலே செவ்வாயும், நலமில்லை பாரப்பா,
நலமான தாய்க்கு தோஷம், நாற்கால் ஜீவன் நாசம்
மண், மனை பாழதாகும், பொன், பொருள் விரயமாகும்,
ஏழு எட்டில் செவ்வாயப்பா, எடுத்தெல்லாம் பிரச்சனைதான்,
எட்டெடுத்து வைத்த வீட்டில் எல்லோரும் எதிரிகளே
பன்னிரண்டில் செவ்வாயப்பா, பலதோஷம் செய்யும்பார்,
பாம்பின் வாய் தேரை போல், பரிதவிப்பார் ஜாதகரே.
தொட்டதெல்லாம் நட்டமாகி, தொலைதூரம் சென்றிடுவார்
கெட்ட பெயரோ வந்துவிடும் கெடுதிக்கோ பஞ்சமில்லை
- இவ்வாறாக, செவ்வாய் தோஷத்தின் பலனை, கெடுபலன்களாக சொல்லி பயமுறுத்தி வைத்துள்ளார்கள.

பண்டைய காலம் தொட்டு, செவ்வாய் என்றால், மக்களிடையே ஒரு பயம் என்பது அதிகமாகிறது. லக்னத்தில் செவ்வாய் இருந்தால், முரட்டுத்தனம் நிறைந்தவர்களாகவும், துணிச்சல் மிக்கவர்களாகவும், எதையும் அவசரமாக முடிவெடுத்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள். அசட்டு துணிச்சல் ஆபத்தைத் தரும் என்பது இவர்களுக்கு பொருந்தும்.

ஜாதகத்தில் செவ்வாய்: 2-ம் பாவகத்தில் செவ்வாய் இருப்பவர்கள், எடுத்தெறிந்து பேசும் குணம் மிக்கவர்களாகவும், தான் சொல்வதை சரி என்ற எண்ணமும், வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவும் பேசும் திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்லும் குணம் இவர்களிடம் குறைவு என்பதால், குடும்பத்திற்குள் குழப்பங்களும் பிரச்சினைகளும் அதிகரிக்கும். தான் சொல்லுக்கு மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரிமாக இருக்கும் என்பதால், கணவன் மனைவிக்கு இடையே கருத்து மோதல்கள் அதிகரிக்கும்.

4-ம் பாவகத்தில் செவ்வாய் இருப்பவர்கள், தாயினுடைய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும், பூமி சார்ந்த சொத்து பிரச்சினைகளும் அதிகம் இருக்கும். கால்நடைகள் மற்றும் வாகனம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த யோகங்கள் இருக்காது. சுகம் பாதிக்கப்படும்.

7-ம் பாவகத்தில் செவ்வாய் இருப்பவர்கள், கணவன் மனைவியிடையே ஈகோ பிரச்சினைகள் தலைதூக்கும். ஒருத்தரை ஆளுமை செய்ய மற்றவர் நினைப்பார். தனக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும், ஆதிக்கக் குணமும் அதிகமாக இருப்பதால், பிரச்சினைகள் அதிகரிக்கும். அதிகார நோக்கம் இருப்பதால், அடக்கி ஆளும் குணம் இருப்பதால், எதிர்பாலினத்தவரிடையே பிரச்சினைகள் அதிகமாகும். நண்பர்களிடமும் ஒத்துப் போக மாட்டார்கள். அதனால் நண்பர்கள் பெரிய அளவில் இருக்கவும் மாட்டார்கள். கூட்டு முயற்சிகளும் இவர்களுக்கு உதவாது.

8-ம் பாவகத்தில் செவ்வாய் இருப்பவர்கள், மங்கள காரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாய், 8-ல் இருப்பதால், மாங்கல்ய தோஷம் என்றும் சொல்வார்கள். மாங்கல்ய பலத்தைத் தரக்கூடிய இடத்தில் செவ்வாய் இருப்பதால், மாங்கல்ய தோஷம் என்றும் அழைக்கப்படும். எதிர்பாராத விபத்துக்களையும் கண்டங்களையும் ஏற்படுத்தும். கணவன் மனைவி ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திக் கொண்டு, அவமானங்களையும், அவப்பெயர்களையும், அடுத்தவர்கள் மீது பழிசொல்லுதலுக்கும் ஆட்படுவார்கள். மற்றவரை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவார்கள். கோர்ட், கேஸ் போன்ற வழக்குகளையும் சந்திக்க நேரிடும். ஒழுக்க கேடான செயல்களிலும் ஈடுபடுவார்கள்.

12-ம் பாவகத்தில் செவ்வாய் இருப்பவர்கள், மனைவியோ அல்லது கணவனோதான் பிரச்சினையாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க, வெளிநாடு அல்லது வெளியூர் சென்று வசிக்க நேரிடும். சேர்ந்து இருக்கக்கூடிய சூழ்நிலை இருப்பின், கண்டிப்பாக அவர்கள் பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும். அயன, சயன, போகம் கெடும், இரவு நேரங்களில்தான் இவர்களுக்கிடையே கருத்து மோதல்கள் அதிகரிக்கும்.

இவையே, செவ்வாய்தோஷம் என்று முன்னோர்கள் சொல்லி பயம் உறுத்தி வைத்தார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.

மாறக்கூடியது செவ்வாய் தோஷம்: நம்முடைய வயதிற்கு தகுந்த இன்றைய காலத்திற்கேற்ப, நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்து, இதில் வரும் பலாபலன்கள் வேறு வேறாக உள்ளது என்று, நவீன காலத்திற்கு ஏற்றபடி நவீன பரிணாம வளர்ச்சியாக, வளரும் லக்னம் அல்லது வயதின் லக்னம் என்று சொல்லக்கூடிய அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில், செவ்வாய் தோஷம் என்பதை மாறும் தன்மையுடையது என்று நிரூபணம் செய்து, ஒருவருக்கு பிறக்கும்போது செவ்வாய் தோஷம் இருந்தால், வாலிப வயதிலும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை, நிரூபித்துள்ளார்கள்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய முனைவர் சி. பொதுவுடைமூர்த்தி, இன்றைய லக்னம் மாறும் போது, உதாரணமாக, ஜென்ம லக்னம் துலாம் லக்னம் என்றால், 8-ம் இடத்தில் ரிஷபத்தில் செவ்வாய் என்று எடுத்துக் கொண்டால், அது கடுமையான செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது. ஆனால், நமது அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில், பத்து வருடத்திற்கு ஒரு லக்னம் மாறும் என்ற அடிப்படையில், அவர்களின் திருமண வயது காலம் வரும் பொழுது, 20 முதல் 30 வயது வரை, தோராயமாக தனுசு லக்னமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது ரிஷபத்தில் நிற்கக்கூடிய செவ்வாய், தனுசு அட்சய லக்னத்திற்கு, 6-ல் செவ்வாயாக மாறுவார். 6-ம் இடத்தில் செவ்வாய் என்பது தோஷத்தை தராது. அது மட்டுமல்லாமல், அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறைப்படி, செவ்வாயுடைய ஆதிபத்ய காரகத்துவங்களை பொறுத்தே ஒருவருக்கு சாதக, பாதகங்களை தரும் என்று அறியப்படுகிறது.

செவ்வாய் என்பவர் தைரியமானவர். ஒரு மனிதன் தனிநபர் வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என்றால், செவ்வாயின் அனுக்கிரகம் தேவை. செவ்வாய் என்பவர், சகோதரக்காரகர். உறவு நிலைகளில் சகோதர சகோதரிகளுக்கு காரகர் என்பதால், அவர்களுடைய உறவுக்கும் ஒற்றுமைக்கும் செவ்வாயின் தயவு வேண்டும். செவ்வாய் இரத்தத்திற்கு காரகர் என்பதால், நாம் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு செவ்வாயின் அனுக்கிரகம் தேவைப்படுகிறது.

செவ்வாய் பெண்களுக்கு கணவர் காரகன் என்பதால், நல்ல கம்பீரமான கணவன் அமைவதற்கு செவ்வாயே காரணமாகிறார். செவ்வாய் ஆளுமை கிரகம் என்பதால், நம்முடைய சுய கௌரவம், புகழ், கீர்த்திகளை பெறுவதற்கு அல்லது நாம் செய்யும் செயல்களில் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் செய்து முடிப்பதற்கு செவ்வாயின் தயவு தேவைப்படுகிறது. நம்மை காக்கும் காவல் கிரகமாக செயல்படுவது செவ்வாய் கிரகமே ஆகும்.

இவ்வளவு சிறப்புகளை கொண்ட செவ்வாயை, நாம் தோஷம் என்ற ஒற்றை வார்த்தையால் ஒதுக்கி வைப்பது சரியல்ல. உதாரணமாக, மேஷ லக்னம் அட்சய லக்னமாக செல்லும்போது, 8-ம் பாவகமான விருச்சிகத்தில், அதன் அதிபதியுமான செவ்வாய் இருந்தால், ஆயுள் பலத்தையும், மாங்கல்ய பலத்தையும் அதிகரிப்பார்.

ரிஷப லக்னம் அட்சய லக்னமாக செல்லக் கூடியவர்களுக்கு, செவ்வாய் 12-ம் இடமான மேஷத்தில் நின்றால், அயன, சயன, போகம் கிட்டும். மீன லக்னம் அட்சய லக்னமாக செல்லும் போது, 2-ம் இடமான மேஷத்தில் செவ்வாய் இருந்தால், அவர்களுடைய சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்கள்.

சிம்ம லக்னம் அட்சய லக்னமாக செல்லும்போது, செவ்வாய் 4-ம் இடத்தில் இருந்தால், அதிகாரமிக்க தாயார், நல்ல வீடு, மனை, வாகனம் யோகங்கள் கிட்டும்.

துலாம் லக்னம் அட்சய லக்னமாக செல்லும்போது, 7-ம் பாவகமான மேஷத்தில் செவ்வாய் இருந்தால், தோஷம் என்பது கிடையாது. அதற்கு மாறாக, நல்ல கம்பீரமான தோற்றமுடைய, ஆளுமை மிக்க கணவர் அமைவார்.

ஆக, செவ்வாய் தோஷம் 120 வருடங்களுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திரப் புள்ளியில், ALP லக்னப் புள்ளி செல்லும் காலங்களான, 4 வருடம் 5 மாதம் 10 நாட்கள் மட்டுமே, செவ்வாயின் தோஷம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுவே, அட்சய லக்ன பத்ததியின் வழிகாட்டுதல் ஆகும்.

இவ்வாறு, தனி சிறப்புகளை பெற்ற செவ்வாய் பகவானை, நம் கால புருஷனுக்கு முதல் ராசியாக வைத்துள்ளனர். அதனால், செவ்வாய் தோஷம் என்பதை கண்டு கேட்டு பயப்பட வேண்டாம்.

அதனால் செவ்வாய் தோஷம் பார்க்காதீர்கள்.

நம் ஒவ்வொருக்கும், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கண்டிப்பாக தேவை.

அங்காரகனே துணை! மங்கள காரகனே போற்றி!

- முனைவர் சி.பொதுவுடைமூரத்தி, அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கியவர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE