புத்தாண்டு 2023 - பொதுப்பலன்களும் கிரகப் பெயர்ச்சிகளும் | ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

நிகழும் சுபகிருது வருடம் மார்கழி மாதம் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை தசமி திதியில், சமநோக்குடைய அஸ்வினி நட்சத்திரம், மேஷம் ராசி, கன்னி லக்னத்தில், சிவம் நாமயோகத்தில், தைத்துலம் நாம கரணத்தில், சித்தயோகத்தில் நேத்திரம் 1, ஜுவன் 1/2 நிறைந்த நன்னாளில் ஜனவரி 1-ம் தேதி நள்ளிரவு மணி 12.00-க்கு பிறக்கிறது.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி தசமி திதியில் இந்த வருடம் பிறப்பதால் சுய தொழில் தொடங்குவோர் மற்றும் பரம்பரை தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். தோற்றுப் போனவர்கள் ஓர் அணியாக திரண்டு வெற்றி பெறுவார்கள். 5-ல் சுக்கிரன், சனி இருப்பதால் பொருளாதாரம் உயரும். இந்தியாவுக்கு மரியாதை கூடும். புது தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். சினிமாத்துறை பிரமாதமாக இருக்கும். பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகும். சரித்திரப் படங்கள் அதிக வசூல் தரும். அதிக தளங்கள் மற்றும் நவீன வசதி கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் கட்டப்படும். புது மாவட்டங்கள் உருவாகும். சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களின் புறநகர் பகுதிகள் அதிக வளர்ச்சி அடையும். குடியிருப்பு பகுதிகளில் நூதன திருட்டுகள் அதிகமாகும். புதையல்கள் வெளிப்படும். சொந்த ஊரை விட்டு வெளியே வந்தவர்களில் சிலர் மீண்டும் பூர்வீகத்தை நோக்கி பயணிப்பர்.

சூரியன், புதன் 4-ல் இருப்பதாலும் புதன் வக்ரத்தில் இருப்பதாலும் மாணவர்களுக்குள் பிரிவினையால் மோதல்கள் வரும். தீவிரவாத குழுக்களின் பிடியில் சிக்குவர். போலி கல்வி நிறுவனங்கள் மூடப்படும். பள்ளிகளில் மாணவர்களின் சீருடை சம்பந்தமான விவாதங்கள் அதிகரிக்கும். புதன் வக்ரத்தில் இருப்பதால் கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலைச் சுமை கூடும். புது வேலை வாய்ப்பு குறைவாக இருக்கும்.

எண் ஜோதிடப்படி தேடலுக்கும், ஊடலுக்கும் ஆன்மிக அறிவாற்றலுக்கும் உரிய கிரகமான கேதுவின் ஆதிக்க எண்ணாகிய 7-ல் (2+0+2+3=7) இந்த வருடம் பிறப்பதால் விலைவாசி உயரும். மக்கள் எல்லாவற்றுக்கும் மாற்று வழி தேடுவார்கள். உணவுக் கலப்படத்தாலும், நுண் கிருமிகளின் பரவலாலும் ஆரோக்கியம் குறையும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களின் சுதந்திரத்திலும், சுயநலத்திலும் அக்கறை காட்டுவார்கள். வங்கிக் கடன் பெறுவது எளிதாகும்.

இந்த ஆண்டின் (1+1+2+0+2+3=9) கூட்டு எண் 9 ஆக வருவதாலும், 9-ல் செவ்வாய் இருப்பதாலும், 8-ம் இடத்துக்குரிய செவ்வாய் 9-லும், சந்திரனுக்கு 2-லும் வக்ரமாகியிருப்பதால் 20 சதவீதம் வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் 40 சதவீதம் வேலையிழப்பு ஏற்படும். போராட்டங்கள் ஒடுக்கப்படும். ராணுவம், காவல் துறையின் கை ஓங்கும். உலகளவில் போர் அபாயம் மூளூம். உணவுத் தட்டுப்பாடு வரும். நிரந்தர வேலை இல்லாமல் பலரும் அடிக்கடி வேலை மாறுவார்கள். அரசு ஊழியர்களுக்குரிய சம்பளம் மற்றும் சலுகைகள் படிப்படியாக குறையும். வழிபாட்டுத் தலங்கள் இடிபடும். தீவிபத்து ஏற்படும். ரியல் எஸ்டேட் ஓரளவு வளர்ச்சி அடையும்.

8-ல் சந்திரனுடன் ராகு இருப்பதால் அடித்தட்டு மக்கள் பாதிப்படைவார்கள். தொழிலாளர்கள் சுரண்டப்படுவார்கள். மக்களிடம் போதை பழக்கம் அதிகமாகும். வேலையிழப்பால் மன உளைச்சலால் பலர் பாதிக்கப்படுவார்கள். சட்டத்துக்கு புறம்பான பணப்பரிவர்த்தனைகள் அரசால் கண்டறியப்படும். விவாகரத்துகள் அதிகரிக்கும். வெள்ளம், மழை, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் வர வாய்ப்புகள் அதிகம். பெட்ரோல் விலை கூடும். உணவுப் பொருட்களின் விலை உயரும். கங்கை நதியின் வெள்ளப் பெருக்கால் கரையோர நகரங்கள் பாதிப்படையும். டெல்லி மற்றும் ராஜஸ்தானில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்கும்.

நவாம்சத்தில் சூரியன் ஆட்சியாகவும், சந்திரன் உச்சமடைவதாலும் அரசியல்வாதிகளின் வருமானம் அதிகரிக்கும். புது அரசியல் கட்சிகள் உதயமாகும். விவசாயத்தில் மழை, வெள்ளத்தாலும், பூச்சித் தொந்தரவுகளாலும் மகசூல் பாதிக்கும். 7-ல் குரு இருப்பதால் மகான்கள், மடாதிபதிகள் கை ஓங்கும். புதிய மகான்கள் அவதரிப்பர். ஆனால் கால புருஷ தத்துவத்துக்கு 12-ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால் முக்கிய மடாதிபதி சித்தி அடைவார். இந்த வருட கிரகப் பெயர்ச்சிகள்:

குருப்பெயர்ச்சி: திருக்கணிதப்படி - நிகழும் சோபகிருது வருடம் சித்திரை மாதம் 11-ம் நாள் (24.04.2023) குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். வாக்கியப்படி - நிகழும் சோபகிருது வருடம் சித்திரை மாதம் 10-ம் நாள் (23.04.2023) குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனிபகவான் பெயர்ச்சி: திருக்கணிதப்படி - நிகழும் சுபகிருது வருடம் தை மாதம் 3-ம் நாள் (17.1.2023) சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். வாக்கியப்படி - நிகழும் சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15-ம் நாள் (29.03.2023) சனிபகவான் மகரம் ராசியிலிருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ராகு - கேது பெயர்ச்சி: திருக்கணிதப்படி - நிகழும் சோபகிருது வருடம் (1.11.2023) ஐப்பசி மாதம் 15-ம் நாள் ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும், கேதுபகவான் துலா ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார். வாக்கியப்படி - நிகழும் சோபகிருது வருடம் (9.10.2023) புரட்டாசி மாதம் 22-ம் நாள் ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலா ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்.

24.04.2023-ல் இருந்து ராகுவுடன் குரு இணைவதால் கரோனா தொற்று மீண்டும் பரவும். முன்பை விட அதிக வலிமை வாய்ந்த வைரஸ் கிருமிகள் மக்களை தாக்கும். மே, ஜுன், ஜுலை மாதங்களில் தொற்று அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த 2023-ம் ஆண்டு கடந்த ஆண்டை விட மக்களிடையே பணவரவையும், மகிழ்ச்சியையும் தந்து எல்லா விஷயத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமையும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்