தனுசு
தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர்களே...!
தவறு செய்தால், தலைவனாக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்கமாட்டீர்கள். இதுவரை இரண்டாம் வீட்டிலும், மூன்றாம் வீட்டிலும் அமர்ந்து, உங்களை தெளிவான பாதையில் அழைத்துச் செல்லாமல் திணறடித்த குருபகவான் இப்போது நான்காவது வீட்டுக்குள் நுழைந்து 14.04.2022 முதல் 22.04.2023 வரை நீடிப்பதால் கொஞ்சம் வேலைச்சுமை அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் கூட சண்டையில்தான் போய் முடியும். பிள்ளைகளின் கல்யாண விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். தாயாருக்கு மூட்டுவலி, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வந்து போகும். ஆனாலும் குரு பகவான் உங்கள் சுக ஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று அமர்வதால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பூர்வீகச் சொத்து விஷயங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் உதவியுண்டு. பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. சொத்து வாங்குவது விற்பதில் உஷாராக இருங்கள். உங்களின் 10-ம் வீட்டை குரு பார்ப்பதால் உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும்.
வீண் சந்தேகத்தால் கணவன் - மனைவி பிரிய வேண்டி வரும். சில விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள்.
உயர் கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் அத்துமீறி அவர்களின் விவகாரங்களில் நுழைய வேண்டாம். நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். வாகன விபத்துகள் நிகழக் கூடும். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான சுயரூபத்தை உணருவீர்கள். பணத் தட்டுப்பாடு அவ்வப்போது தொடர்ந்தாலும் ஏதேனும் ஒருவழியில் அவற்றைச் சமாளிப்பீர்கள்.
குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:
14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வெளியூர் பயணங்களால் கையிருப்பு கரையும்.
30.04.2022 முதல் 24.02.2023: மேற்கண்ட நாட்களில் உங்களின் தன, சேவகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பேச்சில் தடுமாற்றம், வீண் விவாதங்கள் வரக் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி நிம்மதியுண்டாகும்.
24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்களின் சப்தம, ஜீவனாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் கணவன் - மனைவிக்குள் இருந்த இடைவெளி நீங்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நாடாளுபவர்களின் சந்திப்பு நிகழும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். வியாபாரிகளே, லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். வரவேண்டிய பாக்கிகளை நாசூக்காக வசூலியுங்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய யுக்திகளை கையாளுங்கள்.
பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போகவும். உத்யோகஸ்தர்களே, பணிச்சுமை வாட்டியெடுக்கும். சக ஊழியர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். மேலதிகாரியிடம் மனஸ்தாபங்கள் அதிகரிக்கும். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் குருபகவான் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். மே மாதங்களில் நிம்மதி கிட்டும். பதவி உயர்வு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். இந்த குரு மாற்றம் அவ்வப்போது உங்களை கசக்கிப் பிழிந்தாலும் வருங்காலத்துக்கு பயனுள்ளதாக அமையும்.
பரிகாரம்: திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரையும், அங்குள்ள ஸ்ரீதட்சிணாமூத்தியையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாரிசு இல்லாத வயதான தம்பதியருக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.
******
மகரம்
உதட்டால் பேசாமல் இதயத்தால் பேசுபவர்களே...!
குலம், கோத்திரம் பார்க்காமல் பாசமுடன் பழகுபவர்களே! எடுத்த வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே! சிறந்த கலா ரசிகர்களே! இதுவரை உங்களின் ராசியிலும், 2-ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகளையும், கவுரவத்தையும், அதே நேரத்தில் அலைக்கழிப்பையும், தர்ம சங்கடத்தையும் கொடுத்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை முதல் ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிப் பெற்று அமர்கிறார். நல்லதே நடக்கும். மனைவியிடம் விட்டுக் கொடுத்து போகவும். உங்களுக்கு வேண்டியவர்களே உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தி பிரிக்க முயல்வார்கள். ஆனால் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் - மனைவிக்குள் அன்பும், அன்யோன்யமும் குறையாது. நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.
குருபகவான் உங்களின் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி தடபுடலாக நடத்தி முடிப்பீர்கள். மகளின் உயர்கல்விக்காக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். தந்தைவழி உறவினர்களிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குருபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் புது முயற்சிகள் வெற்றியடையும். விலை உயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.
எந்தச் செயலிலும் அவசரப்படாமல் நீங்கள் கொஞ்சம் நிதானமாகத்தான் செயல்படவேண்டும். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். அநாவசியமாக யாரையும் வீட்டுக்குள் அழைத்து வரவேண்டாம். இளைய சகோதரருடன் அவ்வப்போது உரசல் போக்கு வந்து நீங்கும். நீங்களும் தரவேண்டிய கடனையெல்லாம் தந்து முடிப்பீர்கள். அனைவரிடமும் இணக்கமான போக்கைக் கையாளவும். எதிலும் நிதானம் அவசியம். உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிலும் குறிப்பாக பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். திடீர் பணவரவு உண்டு. மூத்த சகோதரர் உதவுவார். பூர்வீகச் சொத்தை புதுப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும்.
குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:
14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் சேவக, விரயாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட லோன் வசதி கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட வழக்கு சாதகமாக முடியும்.
30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்கள் ராசிநாதனும், தனாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு
பகவான் செல்வதால் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் பிறக்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவுடன் சில வேலைகளை முடிப்பீர்கள்.
24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்களின் ரோக, பாக்யாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் தந்தையாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். கல்யாணம், காதுகுத்து என வீடு களை கட்டும். குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வியாபாரிகளே, போட்டியாளர்களுக்கு மத்தியில் ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி உங்களின் அணுகுமுறையை மாற்றி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் வசூல் அதிகரிக்கும். கெமிக்கல், ரியல் எஸ்டேட், ஹோட்டல் வகைகளால்லாபமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே, உங்கள் கோப தாபங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். சில சமயங்களில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். ஆனாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு கிடைக்கும். இந்த குரு மாற்றம் கவலைகளை கரைப்பதாகவும், காசுபணம் தருவதாகவும், எங்கும் முதல் வரிசையில் உட்கார வைப்பதாகவும் அமையும்.
பரிகாரம்: கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் உள்ள தென்குடித் திட்டையில் வீற்றிருக்கும் பசுபதிநாதரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.
******
கும்பம்
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே...!
புரட்சிகரமான முடிவும், தொலை நோக்குச் சிந்தனையும் கொண்டவர்களே, மந்திரியாக இருந்தாலும் மனசில் பட்டதை பளிச்சென பேசுபவர்களே. இதுவரை உங்கள் ராசிக்குள் 12-ல் குருவாகவும், ஜென்ம குருவாகவும், அமர்ந்து நல்லதையும், கெட்டதையும் கலந்து கொடுத்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை 2-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்து பலன் தரப் போகிறார். உங்களின் அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். இனி எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். உங்கள் ராசிக்கு 2-ம் வீடான குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள் வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள்.
குரு பகவான் உங்களின் ஆறாவது வீட்டை பார்ப்பதால் உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குருபகவான் உங்களின் எட்டாவது வீட்டை பார்ப்பதால் வராது என்றிருந்த பணம்கைக்கு வந்து சேரும். குரு உங்களின் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். அரசாங்க காரியங்களில் இருந்த தடுமாற்றம் நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். குலதெய்வம் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகள் வந்ததே! இனி அந்த அவலநிலை மாறும். செரிமானக் கோளாறு, தூக்கமின்மை, கை, கால் வலி, முதுகுவலி என அவஸ்தைப் பட்டீர்களே! இனி எல்லாம் சரியாகும். தேவையில்லாமல் பேசி சில நல்ல நட்புகளையெல்லாம் இழந்தீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பாசமழை பொழிவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. உங்களை கண்டும் காணாமல் போன உறவினர்கள் இனி தேடி வந்து உறவாடுவார்கள்.
குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:
14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் தன, லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். சுபநிகழ்ச்சிகளால் குடும்பத்தில் சந்தோஷம் பொங்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். பழைய சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.
30.04.2022 முதல் 24.02.2023: மேற்கண்ட நாட்களில் உங்களின் ராசிநாதனும், விரயாதி பதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தடைபட்டசில வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள்.
24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் பூர்வ புண்யாதிபதியும், அஷ்டமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் மகளின் கல் யாணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரிகளே, போட்டியாளர்களை சமாளிக்கும் அளவுக்கு புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். மருந்து, கமிஷன், மர வகைகளால் லாபமடைவீர்கள். டிசம்பர், ஜனவரி, மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும்.
உத்யோகஸ்தர்களே, உங்களின் கடின உழைப்பையும், திறமையையும் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்கள் நல்ல பெயர் எடுத்தார்களே! அந்த அவலநிலை மாறும். இனி மேலதிகாரியின் கனிவு பார்வை உங்கள் மீது விழும். உங்களின் சம்பளம் உயரும். இந்த குரு மாற்றம் எங்கும் எதிலும் முன்னேற் றத்தையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவ தாக அமையும்.
பரிகாரம்: விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீவிருத்தகிரிஸ்வரரையும், விபசித்து முனிவர் மற்றும் தட்சிணாமூர்த்தியையும் மூலம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள். சுபிட்சம் உண்டாகும்.
******
மீனம்
மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே...!
தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாதவர்களே! மூட நம்பிக்கைகளில் மூழ்காமல் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டிலும், 12-ம் வீட்டிலும் அமர்ந்து வீண்பழி, விரக்தி, விரயச் செலவு என்று உங்கள் நிம்மதியைக் குலைத்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை ராசிக்குள்ளேயே ஆட்சிப் பெற்று அமர்ந்து ஜென்மகுருவாக நீடிப்பதால் மன உளைச்சல், டென்ஷன், வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்து போகும். அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.
குரு பகவான் 7-ம் வீட்டையும் பார்ப்பதால் கணவன் - மனைவிக்குள் அன்பு குறையாது. சோர்ந்து கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குரு பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும். மகளின் கல்யாணம் தடபுடலாக நடந்து முடியும். வழக்குகள் சாதகமாக அமையும். குலதெய்வம் கோயிலை புதுப்பிப்பீர்கள். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தந்தைவழி பாட்டன் சொத்துகள் வந்து சேரும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.
பெரிய முடிவுகள் எடுக்கும்போது உணர்ச்சிவசப்படவேண்டாம். குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகளை எல்லாம் பெரிதாக்க வேண்டாம். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். குறுக்கு வழிகளைத் தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் நிலவி வந்ததே, இனி பாசமாக பேசுவார்கள். என்றாலும் அவர்களால் கொஞ்சம் செலவுகளும் இருக்கும். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அவரின் உடல்நிலை சீராகும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிட்டும். அக்கம் பக்க வீட்டார்கள் அன்பாக பேசுகிறார்களே என்று குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:
14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் எந்த வேலையையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் கவுரவப் பதவி வரும்.
30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் லாப, விரயாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தடைகள் நீங்கும். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் சுக, சப்தமாதி பதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நண்பர்கள் உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புதன் பாதகாதிபதியாக இருப்பதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரிகளே, போட்டியாளர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். அனுபவமில்லாத புதுத் துறையில் கால்பதிக்க வேண்டாம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, கமிஷன், ஷேர் மூலம் லாபமுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது பிரச்சினை செய்தாலும் இறுதியில் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள்.
உத்யோகஸ்தர்களே, மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் மறையும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை கற்றுத் தருவதுடன், அவ்வப்போது வெற்றியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: சென்னை திருவலிதாயத்தில் (பாடி) அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.
> குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 2022 - 2023 | குரு பார்க்க கோடி நன்மை
> குருப்பெயர்ச்சி 2022 - 2023 | மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான பலன்கள்
> குருப்பெயர்ச்சி 2022 - 2023 | சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான பலன்கள்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago