குருப்பெயர்ச்சி 2022 - 2023 | சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான பலன்கள் 

By செய்திப்பிரிவு

சிம்மம்

நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே!

வசதி வந்தபோதும் பழைய நட்பை மறவாதவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் கடந்த ஓராண்டு காலமாக 6-ம் வீட்டிலும், 7-ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்ததால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறிப் போனீர்களே! பணப்பற்றாக்குறையாலும், சரியான தூக்கமில்லாமலும் தத்தளித்தீர்களே, இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை எட்டாம் வீட்டுக்குள் ஆட்சிப் பெற்று அமர்கிறார். முன்பு போலவே பெயர் கெடுமோ, எந்த வேலையையும் திறம்பட செய்ய முடியாதோ! என வருந்தாதீர்கள். சர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் உபய வீட்டில் மறைவதுடன், தன் சொந்த வீட்டில் அமர்வதால் மேற்கண்ட காலக் கட்டங்களில் கெடு பலன்கள் குறைந்து நற்பலன்களே அதிகரிக்கும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் எல்லாம் இனி முழுமையடையும். வரவேண்டிய பணம் வந்துசேரும். பழைய கடனையும் பைசல் செய்வீர்கள்.

பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். வழக்குகள் சாதகமாகும். உங்கள் ஆலோசனையை அலட்சியப்படுத்தியவர்கள் இப்போது தேடி வருவார்கள். பணம் வரத்தான் செய்கிறது ஆனால் ஏனோ தங்கவில்லை என புலம்பினீர்களே! இனி பணத்தை சேமிக்கும் வழியை கண்டுப்பிடிப்பீர்கள். பழுதான எலட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் சாதனங்களை மாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் நல்ல பதவி கிடைக்கும். கொஞ்சம் மறைமுக எதிர்ப்புகளும் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். விமர்சனங்கள், வதந்திகள் வரும். அதற்காக அஞ்ச வேண்டாம். எதையும் துணிச்சலுடன் எதிர்கொண்டால், எதையும் சாதிக்கலாம்.

குருபகவான் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள், பனிப்போர் நீங்கும். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீங்கள் நல்லதே சொன்னாலும் சிலர் அதை தவறாகப் புரிந்து கொண்டார்களே, சில சமயங்களில் சொல்ல வேண்டிய விஷயத்தை சரியாக சொல்ல முடியாமல் தடுமாறினீர்களே, அந்த அவல நிலையெல்லாம் இனி மாறும். குருபகவான் உங்களின் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் ஆரோக்யம் மேம்படும். மருந்து மாத்திரைகளின் அளவு இனி குறையும். வீண் அலைச்சல், டென்ஷன், களைப்பு, மன உளைச்சல் நீங்கும். தண்ணீர் வசதி யில்லாத, இடவசதியில்லாத வீட்டில் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி விசாலமான வீட்டுக்கு மாறுவீர்கள்.

குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:

14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங் களில் உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான்தன் நட்சத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் உங்களின் தகுதி, அந்தஸ்து உயரும். பதவிகள் தேடி வரும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பெரிய உதவிகள் கிடைத்து, வாழ்க்கையில் முன்னேற வழி கிடைக்கும். பெரிய பிரபலங்களுடன் நட்பு ஏற்படும்.

30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் ரோக சப்தமாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மை, தயக்கம் வரக்கூடும். வாகன விபத்துகள், வீண் செலவுகள், மறைமுக அவமானம், உறவினர், பிரபலங்களுடன் பகையும் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக்கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து பேச வேண்டும். எந்நேரமும் பொறுமை காக்கவும்.

24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் தன லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் முழுமையடையும். குழந்தை பாக்யம் கிட்டும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். ஆன்மிகப் பயணங்கள் செல்ல திட்டமிட்டு, அப்பயணங்களால் நன்மை கிட்டும்.
வியாபாரிகளே, பழைய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க புது திட்டம் தீட்டுவீர்கள். பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்க வேண்டும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். டிசம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இரும்பு, கெமிக்கல், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் பிரச்சினைகள் வெடிக்கும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்யோகஸ்தர்களே, நீங்கள் திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மூத்த அதிகாரி புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவீர்கள். சக ஊழியர்களிடையே வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சக ஊழியர்களை நம்பி மேலதிகாரிகளைப் பற்றி குறை சொல்லாதீர்கள். புது வேலைக்கு மாறும்போது யோசித்து செயல்படுங்கள். அனைவரிடமும் இணக்கமான போக்கைக் கையாண்டால், எளிதில் வெற்றிகளைக் குவிக்கலாம். இந்த குருப்பெயர்ச்சி வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான மன உறுதியைத் தருவதுடன், வி.ஐ.பிகளின் மனதிலும் இடம்பிடிக்க வைக்கும்.

பரிகாரம்: காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருப்புலிவனம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரரையும், ஸ்ரீசிம்ம குரு தட்சிணாமூர்த்தியையும் சித்திரை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வெற்றி உண்டு.

******
கன்னி

வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் மண்ணின் மைந்தர்களே...!

ஆரம்பத்தில் அந்தரத்தில் கோட்டை கட்டும் நீங்கள், பிற்காலத்தில் ஆள்பவர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்கள் சுக ஸ்தானாதி பதியான குருபகவான் கடந்த ஓராண்டு காலமாக 5-ம் வீட்டிலும், 6-ம் வீட்டிலும் மாறிக் கொண்டேயிருந்ததால் கொஞ்சம் கூட ஓய்வெடுக்க முடியாத படி வேலைச்சுமை இருந்ததே! இப்போது குருபகவான் 14.04.2022 முதல் 22.04.2023 வரை ஏழாம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் குழம்பிக் கிடந்த உங்கள் மனம் இனி தெளிவடையும்.. குருபகவான் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் - மனைவி இனி ஒன்று சேருவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. வீட்டை முழுமையாகக் கட்டி முடிப்
பீர்கள். சொத்துப் பிரச்சினை தீரும்.

மூத்த சகோதரி பண உதவி செய்வார். இளைய சகோதரர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். குருபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு,வாகன வசதி பெருகும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். குருபகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் கவுரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் தனி மரியாதை கிடைக்கும். சொந்த ஊர் கோயில் திருவிழாவை முன்னின்று நடந்துவீர்கள்.

குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்: 14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் சுக, சப்தமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் தடைகள் நீங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த உரசல் போக்கு மாறும். அரசாங்கத்தால் அனுகூலமுண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள்.

30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் பூர்வ புண்ய, ரோகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீட்டில் தள்ளிப் போய்க் கொண்டிருந்த கல்யாணம், காது குத்து போன்ற சுபநிகழ்ச்சிகள் உடனே முடியும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பணவரவு ஓரளவு நிம்மதி தருவதாக இருந்தாலும் செலவுகள் துரத்தும். பழைய கடனை போராடி பைசல் செய்வீர்கள். கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும்.

24.02.2023 முதல் 22.04.2023 வரை இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உடல் சோர்வு, அசதி, கை, கால், மூட்டுவலி நீங்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். இடவசதியில்லாத வீட்டிலிருந்து விசாலமான வீட்டில் குடிபுகுவீர்கள். சிலர் புதிதாக வீடு, மனைவாங்குவீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சகோதரி உதவுவார். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரிகளே, முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். டிசம்பர், மார்ச் மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள்.

வராது என்றிருந்த பழைய பாக்கிகள் வந்து சேரும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். படித்த அனுபவமுள்ள வேலையாட்களை கூடுதலாக நியமிப்பீர்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரிபாகங்களால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் எதற்கெடுத்தாலும் நிலவி வந்த பிரச்சினைகள் இனி ஓயும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உத்யோகஸ்தர்களே! மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். மறைமுக எதிர்ப்புகள், வீண்பழி, வேலைச்சுமை நீங்கும். நினைத்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். இந்த குரு மாற்றம் சமூகத்தில் மதிப்பு, மரியாதை தருவதுடன் எதிர்பாராத திடீர் திருப்பங்களையும் அமைத்துத் தரும்.

பரிகாரம்: கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஹயக்ரீவரை புதன்கிழமையில் சென்று வணங்குங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோருக்கு உதவுங்கள். வளம் பெருகும்.

******

துலாம்

வெகுளித்தனமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுப்பவர்களே...!

தவறு செய்தால், தலைவனாக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், 5-ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் சிரமப்படுத்திய குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை 6-ம் வீட்டுக்குள் ஆட்சிப் பெற்று அமர்வதால் சந்தோஷத்தையும், சங்கடங்களையும் கலந்து தருவார். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சனிபகவான் மற்றும் புதனின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் அவ்வப்போது உங்களுக்கு யோகபலன்களையும் அள்ளித் தருவார். 6-ல் குரு அமர்வதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில காரியங்களை பலமுறை அலைந்து முடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

குருபகவான் உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் இருந்த கடுமை குறையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்கள் குடும்ப விஷயத்தை வெளியாரிடம் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களை தலைநிமிரச் செய்வார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகளெல்லாம் ஓயும். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். குரு உங்களின்
10-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். அரைகுறையாக நின்று போன கட்டிடப் பணிகள் முழுமையடையும். வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக நடந்து முடியும். அலுவலக சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிடைக்கும். குரு உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவீர்கள். புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பாக்யம் கிட்டும்.

குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:

14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் தைரிய ரோகாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பயணங்கள், சுபச் செலவுகள், அலைச்சல் என வந்து போகும். திட்டமிட்டபடி சில காரியங்களை செய்ய முடியாமல் போகும். அவ்வப்போது, வீண் அலைச்சல் வந்து போகும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடாதீர்கள். வீணாக சந்தேகப்பட்டு நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.

30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் சுக, பூர்வ புண்யாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் நிலவி வந்த பனிப்போர் மறையும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். மகளுக்கு வேலை கிடைக்கும். திருமணமும் நல்ல விதத்தில் முடியும். உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். குழந்தை பாக்யம் உண்டு. செலவுகளை ஈடுகட்ட பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். தாயாருக்கு இருந்த மூட்டுவலி, முழங்கால் வலியெல்லாம் நீங்கும். சிலருக்கு அயல்நாடு சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.

24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் பாக்ய, விரயஸ்தானாதிபதி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நினைத்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் தக்க சமயத்தில் கைக்கு வரும். கடனாக வாங்கியிருந்த தொகையைத் தந்து தீர்ப்பீர்கள். தந்தைவழியில் உதவியுண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். பழைய நண்பர்களால் ஆதாயமுண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரிகளே, தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரவேண்டிய பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, கமிஷன், ரியல் எஸ்டேட், மரவகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.
உத்யோகஸ்தர்களே, காலம்நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியது வரும். என்றாலும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் உண்டு.

இந்த குரு மாற்றம் ராகு, கேதுவின் தாக்கத்தை ஓரளவு குறைப்பதுடன், மாறுபட்ட அனுபவங்களையும், ஒரு சில வெற்றிகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் சென்று தரிசியுங்கள். பார்வையிழந்தவர்களுக்கு உதவுங்கள். பலம் கூடும்.

******
விருச்சிகம்

பணத்துக்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காதவர்களே...!

நீதி நியாயம் பற்றி பேசும் நீங்கள், அடிபட்டவர்களை அரவணைப்பவர்கள். இதுவரை 3-ம் வீட்டிலும்,4-ம் வீட்டிலும் மாறி மாறி நின்று கொஞ்சம் தடுமாற்றத்தையும், கொஞ்சம் மகிழ்ச்சியையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை 5-ம் வீட்டுக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவார்.

எதிர்பாராத திடீர் யோகங்கள் உண்டாகும். இழுத்துப் பறித்துக் கொண்டிருந்த சில காரியங்கள் உடனே முடியும். குடும்பத்தில் வீசி வந்த புயல் விலகும். உண்மையைப் பேசி பொல்லாதவர்களானீர்களே, வீட்டுக்குள் நுழைந்தாலே என்ன நடக்குமோ என்ற படபடப்பு இருந்ததே, இனி அந்த நிலையெல்லாம் மாறும். வசதி வாய்ப்புகள் இருந்தும் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று ஏங்கித் தவித்த தம்பதியருக்கு வாரிசு உருவாகும். பழைய சொத்தை விற்று புதுசு வாங்குவீர்கள். எப்பொழுது பார்த்தாலும் மாத்திரை, மருந்து என்றும் என்ன நோய் என்றே தெரியாமலும் இருந்ததே இனி அதற்கெல்லாம் விடுதலை. உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமும் கூடி வரும். பணத்தை ஏதோ ஒரு வகையில் சேமிப்பீர்கள். திடீர் பணவரவு திருப்தி தரும்.

குரு உங்கள் ராசியை பார்ப்பதால் விரக்தி, இனம்புரியாத கவலையிலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் அப்பாவுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வந்து சேரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். நாடாளுபவர்கள், சமுக அந்தஸ்துள்ளவர்கள் உதவுவார்கள். குரு பகவான் உங்களுடைய லாப வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த மனஸ் தாபங்கள் நீங்கி பாசமழை பொழிவார்கள். வாகன வசதி பெருகும். இழுபறியான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பழுதான டிவி, ஃப்ரிஜ், வாஷிங் மிஷினை மாற்றுவீர்கள். தங்க ஆபரணம், ரத்தினங்கள் சேரும். பழைய கடன் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களுடன் இணக்கமான போக்கு ஏற்படும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:

14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் தன பூர்வப் புண்யாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீண் விவாதங்கள் நீங்கும். வெகுநாட்களாக தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். சீமந்தம்,காதுகுத்து என வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிமாநில புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் தைரிய சுகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இளைய சகோதர வகையில் அடிக்கடி இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. ஆலயத்தைப் புதுப்பிக்க உதவுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் கருத்து மோதல்கள் வெடிக்கும். யாரிடமும் உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டாம். எதைப் பேசினாலும் யோசனை செய்து பேசவும்.

24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் அஷ்டம லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை முயன்று எந்த வேலையையும் முடிக்க வேண்டி வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். மூத்த அண்ணன் உதவுவார். சில நாட்களில் வருங்காலம் குறித்த கவலைகளால் தூக்கம் குறையும். வெளிநாட்டுப் பயணங்கள் தேடி வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

வியாபாரிகளே, சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதிய முதலீடுகளை போடுவதுடன் கடையை விரிவுபடுத்தி போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். வெகுநாட்களுக்குப் பிறகு பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அரிசி, எண்ணெய், மருந்து, ரசாயன வகைகள், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடனான கருத்து வேறுபாடுகள் மறையும்.

உத்யோகஸ்தர்களே, உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெகுநாட்களாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தீர்களே, உங்களைவிட தகுதி குறைந்தவர்களுக்கெல்லாம் பதவி உயர்ந்ததே, கவலை வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்தபடி பதவி உயரும். கூடவே சம்பளமும் உயரும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் அமையும். ஆகமொத்தம் இந்த குருப்பெயர்ச்சி பிரச்சினைகளால் சிதறிக் கிடந்த உங்களை சீர்செய்வதுடன், திடீர் யோகங்களையும், மனமகிழ்ச்சியையும் தருவதாக அமையும். எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும்.

பரிகாரம்: தஞ்சை மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஆபத்சகாயேஸ்வரரையும், குருபகவானையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

> குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 2022 - 2023 | குரு பார்க்க கோடி நன்மை

> குருப்பெயர்ச்சி 2022 - 2023 | மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான பலன்கள்

> குருப்பெயர்ச்சி 2022 - 2023 | தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான பலன்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்