மேஷம்
சுயமரியாதையின் சொந்தக்காரர்களே...!
படிப்பறிவைக் காட்டிலும் பட்டறிவு அதிகமுள்ளவர்களே, சபையாக இருந்தாலும், சத்திரமாக இருந்தாலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர்களே. இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிலும், 11-ம் வீட்டிலும் மாறி மாறி இருந்தாலும் பணவரவுக்கு குறைவில்லாமலும், வசதி வாய்ப்புகளையும், பிரபலங்களின் நட்புறவையும் ஏற்படுத்திக் கொடுத்த குரு பகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை உங்கள் ராசிக்கு விரய வீடான மீன ராசியில் ஆட்சிப் பெற்று அமர்கிறார். இதுவரை பாதியில் கட்டி முடிக்கப்படாமல் நின்று போன வீட்டை இனி முழுமையாகக் கட்டி முடித்து புது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.
குரு பகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் உடம்பில் ஏதோ பெரிய நோய் இருக்கிறது என்றிருந்த பயம் நீங்கும். ஆரோக்யம் கூடும். வெகுகாலமாக இருந்து வந்த சொத்துப் பிரச்சினைக்கு நல்ல முடிவு கிடைக்கும். தாயாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கு-ரு உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் சண்டைக்கு வந்தவர்களைக் கூட சமாதானமாகப் பேசி நண்பர்களாக்கி விடுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு 8-வதுவீட்டைப் பார்ப்பதால் திட்டமிடாத பயணங்களும், வீண் செலவுகளும் அதிகரிக்கும். குலதெய்வ கோயிலை விரிவுபடுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள்.
குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:
14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும். பழைய வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் நகருக்கு அருகில் வீட்டு மனை வாங்கும் வாய்ப்பு உள்ளது. லோன் கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை அமையும். அப்பா வழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வழக்கில் வெற்றியுண்டு. பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.
30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் ஜீவன, லாபாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். சுபச் செலவுகள் வரும். அயல் நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமுண்டு. பூர்வீகச்சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். என்றாலும் திடீர் இழப்புகள், ஏமாற்றங்கள், விரக்தி, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, சோர்வு, உடல் வலி வந்து செல்லும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திடாதீர்கள்.
24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் தைரிய, ரோகஸ்தானாதி பதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். சொந்த ஊரில் மற்றவர்கள் மதிக்கும்படியாக பொது காரியங்களை முன்னின்று செய்வீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். புதுக் கடன் வாங்குவீர்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நெஞ்சுவலி, முதுகுவலி வந்து நீங்கும். புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
வியாபாரிகளே, அரைத்த மாவையே அரைத்துக் கொன்டிருக்காமல் புதுவிதமாக யோசியுங்கள். போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். பழைய பாக்கிகளெல்லாம் இனி வசூலாகும். கொடுக்கல் - வாங்கலில் நிம்மதி ஏற்படும். புது முதலீடுகளைப் போட்டு கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். ஹோட்டல், கமிஷன், பார்மஸி வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழிலில் வளைந்து கொடுத்து போகப் பாருங்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
உத்யோகஸ்தர்களே, பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மேலதிகாரிகளிடம் வீணாக கோபப்படாதீர்கள். மறைமுக எதிர்ப்புகளைச் சந்திப்பீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேலைச்சுமை குறையும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. இந்த குரு மாற்றம் சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிய வைப்பதுடன், வாழ்க்கையில் வெற்றி பெற கொஞ்சம் வளைந்து கொடுக்க வேண்டுமென்பதை உணர வைக்கும்.
பரிகாரம்: திருச்சிக்கு அருகிலுள்ள திருவெறும்பூரில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபாலச்சந்திர விநாயகரையும், ஸ்ரீ எறும்பீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் தரிசியுங்கள். விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
******
ரிஷபம்
ஏமாளிகள், அப்பாவிகளுக்காக பரிந்து பேசுபவர்களே..!
கரடுமுரடாக வாழ்க்கை அமைந்தாலும் சளைக்காமல் பயணிப்பவர்களே, ஓயாத உழைப்பால் சாதனைப் பட்டியலில் இடம்பிடிப்பவர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டிலும், 10-ம் வீட்டிலும் கொஞ்சம் காலம் இருந்து படாதபாடு படுத்தியும், ஓரளவு பணவரவையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை லாப வீட்டுக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்து பலன் தரப் போகிறார். இனி பதுங்கியிருந்த நீங்கள் வெளிச்சத்துக்கு வருவீர்கள். பழைய கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். திட்டமிட்ட எந்த வேலையையும் தடையில்லாமல் முடிப்பீர்கள். குடும்ப வருமானம் உயரும். தொல்லை தந்த அதிக வட்டிக்கடனை பைசல் செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வ கோயிலை புதுப்பிப்பீர்கள். அலைச்சல் ஒருபுறம் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். சொந்த ஊரில் மரியாதை கூடும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை இல்லையே என்று கோயில் கோயிலாக ஏறி இறங்கிய தம்பதியருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். வி.ஐ.பிகளின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்.
தாய்வழி சொந்தங்களால் ஆதாயமுண்டு. குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு, விரக்தி விலகும். புதுத் தெம்பு பிறக்கும். கடினமான வேலையைக் கூட இனி எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வெளிவட்டாரத்தில் உங்களை தாக்கிப் பேசியவர்கள் இனி புகழ்வார்கள். உங்களின் வெளிப்படையான பேச்சால் தடைபட்ட சில வேலைகள் விரைந்து முடியும். அண்டை அயலாரின் ஆதரவு பெருகும்.
குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:
14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களுக்கு அஷ்டம லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் வீண் செலவு, மனக்கவலை, ஏமாற்றம், அலைச்சல், திடீர் பயணங்கள், சகோதரருடன் மனத்தாங்கல், சிறு சிறுவிபத்துகள் என வரக் கூடும். யாருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதி தர வேண்டாம்.
30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் பாக்ய, ஜீவனாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு
பகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். திருமணம், கிரகப்பிரவேசம் சிறப்பாக முடியும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சொத்து சேரும். உடல் ஆரோக்யம் மேம்படும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள்.
24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்கால கட்டத்தில் குருபகவான் உங்கள் தன, பூர்வ புண்ணியாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம், உத்யோகம் திருப்திகரமாக அமையும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரிகளே, தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். செய்ய முடியாமலிருந்த சில மாற்றங்களை இப்போது செய்வதுடன், புதிய முதலீடுகளும் செய்வீர்கள். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். விளம்பரத்தால் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்.
புதுப் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். எலக்ட்ரானிக்ஸ், ஏற்றுமதி - இறக்குமதி, இரும்பு வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வரவேண்டிய பாக்கித் தொகையும் வசூலாகும். உத்யோகஸ்தர்களே, உங்களை கசக்கிப் பிழிந்து, உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்புக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூபிப்பீர்கள். சக ஊழியர்களிடம் செல்வாக்கு கூடும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வேறு நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். இந்த குரு மாற்றம் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதுடன், வருங்கால நிம்மதிக்கான வசதி வாய்ப்புகளையும் அமைத்துத் தரும்.
பரிகாரம்: திருவையாறுக்கு அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சாதித்துக் காட்டுவீர்கள்.
******
மிதுனம்
அதிகம் ஆசைப்படாமல் உதிக்கும்போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே...!
வாக்குவாதம் என வந்து விட்டால் வரிந்துக் கட்டி வாதாடுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் கொஞ்சம் காலம் இருந்து பணப்புழக்கத்தையும், எட்டாம் வீட்டில் கொஞ்சம் காலம் இருந்து மனப் போராட்டத்தை மாறிமாறி தந்த குருபகவான் இப்பொழுது 14.04.2022 முதல் 22.04.2023 வரை பத்தாவது வீட்டுக்குள் நின்று பலன் தரப் போகிறார். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சனி பகவானின் நட்சத்திரத்திலும், புதனின் நட்சத்திரத்திலும் குருபகவான் செல்ல இருப்பதால் ஓரளவு நல்ல பலன்களே உண்டாகும். வெகுநாட்களாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த பிரார்த்தனைகளையெல்லாம் இப்போது நிறைவேற்றுவீர்கள். நவீன ரக வாகனத்தை வாங்குவீர்கள். கவுரவத்தைப் காப்பாற்றுவதாக நினைத்து வீண் செலவுகளை செய்யாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.
குருபகவான் உங்களின் 2-ம் வீட்டை பார்ப்பதால் பேச்சிலிருந்த தடுமாற்றம், பயம் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை உணருவீர்கள். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். பல வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். என்றாலும் நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். குரு உங்களின் சுக வீடான 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயுடன் அவ்வப்போது இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். அவரின் உடல்நிலையும் சீராகும். தாய்வழி சொந்த பந்தங்கள் உதவுவார்கள். உங்களின் 6-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் பழைய கடனை அடைப்பதற்கு புது வழி பிறக்கும். இழுபறியில் இருந்த வழக்கிலும் வெற்றியுண்டு.
குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:
14.04.2022 முதல் 29.04.2022 வரை இக்காலகட்டங்களில் உங்கள் பாதகாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் உத்யோகத்தில் மறைமுக இடையூறுகள், மேலதிகாரியுடன் உரசல்போக்கு வரக் கூடும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், கருத்து மோதல், சிறு சிறு விபத்துகள் வரக் கூடும். சிலர் உங்களைப் பற்றிய தவறான வதந்திகளையும் பரப்பி விடுவார்கள். கொஞ்சம் உஷாராக இருங்கள். லேசாக கால்வலி, உடல் அசதி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் அஷ்டம, பாக்யாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வெகுநாட்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திட்டமிட்டபடி வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். என்றாலும் வீடு, வாகனபராமரிப்புச் செலவு என்று ஒருபக்கம் அதிகரிக்கத் தான் செய்யும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு வரக் கூடும். அவ்வப்போது விரக்தி, சோர்வு வந்து நீங்கும்.
24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் ராசிநாதனும், சுகாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் சோம்பல் நீங்கி சுறு சுறுப்படைவீர்கள். குடும்ப வருமானம் உயரும். தங்க ஆபரணம் சேரும். வியாபாரிகளே, தொழிலில் புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகு முறையை மாற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள்.
கூட்டுத் தொழில் செழிக்கும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களே, இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டியது வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். அலுவல ரகசியங்களை வெளியிடாதீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். அடிக்கடி விடுப்புகள் எடுக்காதீர்கள். அதிக சம்பளத்துடன் பெரிய பதவி வந்தால் பலமுறை யோசித்து ஏற்பது நல்லது. இந்த குருப்பெயர்ச்சி பணம், காசின் அருமையை உணர்த்துவதுடன், மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றியைத் தருவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள திருக்கொள்ளம்புதூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவில்வ வனநாதரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் சனிக்கிழமையில் சென்று தரிசியுங்கள். மூட்டைத் தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.
******
கடகம்
கடமை உணர்வு கொண்ட நீங்கள் எல்லாவற்றையும் விரும்பிச் செய்பவர்களே...!
பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளரமாட்டீர்கள். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலும், 8-ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து எதையும் முழுசாக செய்யவிடாமல், பலவிதங்களில் உங்களை டென்ஷனாக்கிய குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை உங்கள் ராசிக்கு பாக்ய வீடான 9-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் திட்டங்கள் யாவும் வெற்றியடையும்.
‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு' என்ற பழமொழிக்கேற்ப உங்களின் அடிப்படை வசதிகளும், அந்தஸ்தும் உயரும். எடுத்த வேலையை முடிக்க முடியாமலும், அடுத்த வேலையைத் தொடங்க முடியாமலும் தத்தளிக்க வைத்த குரு இனி தொட்டதையெல்லாம் துலங்க வைப்பார். சாதுர்யப் பேச்சால் பல வேலைகளை சாதிக்க வைப்பார். வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய திட்டங்களைத் திட்டுவீர்கள். வெகுநாட்களாக வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்களெல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். மனைவிவழி உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கல்யாணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வீடு, வாகன வசதிகள் பெருகும்.
குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் முகச் சுருக்கம் நீங்கி தேஜஸ் கூடும். வருமானம் கூடும். எப்போதும் பரபரப்பாக இருப்பதைப் போல
காணப்பட்டாலும், விரைவில் அனைத்திலும் சாதிப்பீர்கள். அதிக வட்டிக்கடனை பைசல் செய்வீர்கள். குரு பகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்
பதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். பாகப்பிரிவினை மற்றும் சொத்துப் பிரச்சினைகளில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றியடைவீர்கள்.
குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:
14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. பழைய சொத்தை மாற்றிவிட்டு புதுச் சொத்து வாங்குவீர்கள். மகளுக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும். இனி நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது முயற்சிகளில் வெற்றியுண்டு.
30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் சப்தம, அட்டமாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு
பகவான் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த நகைகள், ரத்தினங்களை கவனமாகக் கையாளுங்கள். வி.ஐ.பிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்களின் தைரிய, விரய ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் வெகு நாட்களுக்குப் பிறகுபழைய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பு நிகழும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர் பாசமாக இருப்பார். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். ஷேர் மூலம் பணம் வரும். அடிக்கடி பழுதாகிக் கொண்டிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிக காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.
வியாபாரிகளே, இனி புது யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். இணையதள விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள். உங்களின் அதிரடியான செயல்களைக் கண்டு சக வியாபாரிகளும் திகைப்பார்கள். ரியல் எஸ்டேட், கம்ப்யூட்டர் உதிரி பாகம், எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் ஆதாயமுண்டு. உத்யோகஸ்தர்களே, எப்போதும் உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனி புகழாரம் பாடுவார். காத்திருந்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களுடன் இணக்கமான போக்கு ஏற்படும். இந்த குருமாற்றம் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று அவதிபட்ட உங்களை கோபுரமாய் மிளிர வைக்கும்.
பரிகாரம்: சென்னைக்கு தெற்கேயுள்ள திருக்கழுக்குன்றத்தில் அருள்பாலிக்கும் வேதகிரீஸ்வரரையும், நந்தீஸ்வரரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள். செழிப்புக் கூடும்.
> குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 2022 - 2023 | குரு பார்க்க கோடி நன்மை
> குருப்பெயர்ச்சி 2022 - 2023 | சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான பலன்கள்
> குருப்பெயர்ச்சி 2022 - 2023 | தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான பலன்கள்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago