அவிட்டம், கிருஷ்ணர், உரல், காகம், மத்தளம், உடுக்கை; உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 29

By செய்திப்பிரிவு

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

சென்ற வாரம் திருவோணம் நட்சத்திரம் பற்றி விரிவாகக் கண்டோம். இந்த வாரம் நாம் அவிட்டம் எனும் தனிஷ்டா நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் காணலாம்.

அவிட்டம் எனும் தனிஷ்டா
அவிட்டம் எனும் தனிஷ்டா என்பது வானத்தில் மகர ராசி மற்றும் கும்ப ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். நாம் கண்களில் காணும்போது பாத்திரம் போலவும், காக்கை போலவும், மத்தளம் போலவும், உடுக்கை போலவும் காட்சி அளிக்கும். ஆகவே இதன் வடிவமாக பாத்திரம், காக்கை, மத்தளம், உடுக்கை ஆகியவற்றைக் கூறலாம்.

இதன் அதிபதி செவ்வாய் கிரகம் ஆகும். இது சிவப்பு நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு செவ்வாய் திசையே முதலில் தொடங்கும். இந்த ராசியில் சனி மற்றும் குரு பலம் பெறுகிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு செவ்வாய் மற்றும் குரு நீச்சம் அல்லது பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்த மாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கிருஷ்ணரும் உரலும் தாரை ரகசியம்

ஸ்ரீகிருஷ்ண நட்சத்திரம் ரோகிணி ஆகும். ரோகிணியின் சம்பத்துதாரை என்பதை மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களாகும். அவிட்ட நட்சத்திரத்தின் வடிவம் உரல் அல்லது மத்தளம் என்று அழைக்கப்படுகிறது.

மண்ணை உண்ட கண்ணனை அவன் தாய் யசோதை அவரது சம்பத்து தாரை வடிவான உரலில் கயிறு கொண்டு கட்டி விடுகிறார். உரலில் கட்டுண்ட ஸ்ரீகிருஷ்ணர் உரலுடன் தவழ்ந்து சென்று இரண்டு மருத மரத்திற்கு நடுவில் புகுந்து செல்கிறார்.

மருத மரங்கள் என்பது சுவாதி நட்சத்திர விருட்சங்கள் ஆகும். உரல் வடிவ அவிட்டத்தில் சம்பத்து தாரை சதயம், திருவாதிரை மற்றும் சுவாதி. ஆகவே உரலை உருட்டிக்கொண்டு சென்ற கண்ணன் மருத மரங்களின் நடுவில் புகுந்து அவிட்ட வடிவான உரல் கொண்டு மரங்களை கவிழச் செய்தான்.

இதனால் நாரதரின் சாபம் பெற்று மருத மரங்களாக மாறிய குபேரனின் மகன்களான நளகூவரன், மணிக்ரீவன் இருவரும் சாப விமோசனம் பெறுகிறார்கள்.

ஆகவே திருவோணம், ரோகிணி, அஸ்தம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த நபர்கள் உரல் வடிவத்தை தனது வாழ்க்கையில் உபயோகம் செய்து வளம் பெறலாம். அதுபோலவே சதயம், சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திர நபர்கள் வடிவத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையில் நல்வழி காட்டுதல் பெறலாம்.

உடுக்கை தாரை வடிவ ரகசியம்

உடுக்கை அவிட்ட நட்சத்திர வடிவம் ஆகும். அவிட்ட நட்சத்திரம் சமஸ்கிருதத்தில் தனிஷ்டா என்று அழைக்கப்படுகிறது. இது வானத்தில் உடுக்கையைப் போன்றும் பானையைப் போன்றும் மற்றும் பறை மேளம் போன்றும் காட்சியளிக்கிறது.

இந்த உடுக்கை வடிவம் சிவபெருமானின் சூலாயுதத்தில் காணலாம். சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆகும். திருவாதிரை நட்சத்திரத்தின் பரம மித்திர தாரை மிருகசீரிடம், சித்திரை மற்றும் அவிட்டம் ஆகும். ஆகவே சிவபெருமான் தனது சூலாயுதத்துடன் இந்த உடுக்கையை இணைத்து காட்சியளிக்கிறார்.

ஒருவர் தனது ஜென்ம தாரை வடிவத்துடன் பரம மித்ர தாரை வடிவத்தையோ அல்லது ஜென்ம தாரை வடிவத்துடன் சம்பத்து தாரை வடிவத்தையோ இணைத்து பயன்படுத்த வேண்டும் என்பதை சிவபெருமானின் கையில் இருக்கும் சூலாயுதத்தைக் கண்டு அறியலாம்.
சிவபெருமானின் சூலாயுதம் திருவாதிரை ஆகும். இந்த சூலாயுதம் உடன் உடுக்கை இணைக்கப்பட்டிருக்கிறது. இது திருவாதிரை மற்றும் அவிட்ட நட்சத்திர வடிவங்களின் இணைவு ஆகும்.

திருவாதிரை, சதயம், சுவாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த நபர்கள் இந்த சூலாயுதம் மற்றும் உடுக்கை இணைந்த வடிவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருவோணம், ரோகிணி, மற்றும் அஸ்தம் ஆகிய நட்சத்திர நபர்கள் உடுக்கை வடிவத்தை பயன்படுத்திக் கொண்டு பலன் பெறலாம்
இதுவரை அவிட்டம் நட்சத்திரம் பற்றி அறிந்தோம். இனி வரும் கட்டுரையில் சதயம் நட்சத்திரம் பற்றி தெளிவாக அறியலாம்.

• வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE