- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
கும்ப ராசி அன்பர்களுக்கு வணக்கம்.
இந்த குருப் பெயர்ச்சி கும்ப ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை தர இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
இதுவரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ம் இடத்தில் இருந்த குருபகவான் இப்போது உங்கள் ராசியில் வரப்போகிறார். அதாவது ஜென்ம குருவாக வரவிருக்கிறார். ஜென்ம குருவாக வரும் போது பலவிதமான குழப்பங்களையும், இடமாற்றங்களையும், தவறான முடிவுகளை எடுக்க வைக்கவும், செலவை அதிகரித்து எப்படி சமாளிப்பது என்றெல்லாம் தருவார் என்று நினைக்கலாம்! உண்மையில் குருபகவான் உங்களுக்கு அப்படி ஏதும் கஷ்டங்களை தரமாட்டார்.
என்ன காரணம்? உங்கள் ராசிக்கு குரு பகவான் 2க்கும் 11 க்கும் அதிபதியாவார். 2, 11 என்பது "பணபர ஸ்தானம்" ஆகும். அதாவது பணவரவும் சேமிப்பையும், செல்வ வளத்தையும் குறிக்கும். இப்படி பணபர ஸ்தானத்திற்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு வரும்போது பொருளாதார சிக்கல்கள் ஏதும் தர மாட்டார். பணவரவில் எந்தத் தடையும் இருக்காது. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து தருவார். வீடு கட்டுதல், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளுதல், வாகன மாற்றம் போன்றவற்றைச் செய்வார். பூர்வீக இடத்திற்கு செல்ல வைக்கும். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும். இப்படி குருபகவான் நன்மைகளைத் தர தவறமாட்டார். அதேசமயம் கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்றவற்றை செய்யக் கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் முழுமையாகப் படித்துப் பார்க்காமல் கையெழுத்து போடக்கூடாது. யாருக்கும் ஜாமீன் தரக்கூடாது. காசோலைகளை கவனமாக பராமரிக்க வேண்டும். இணையதளங்களை கவனமாக கையாள வேண்டும். தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக் கூடாது. புதிதாக அறிமுகமாகும் நண்பர்களிடம் கவனமாக எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். இதுபோன்ற ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்தாலே இந்த குருப்பெயர்ச்சிக் காலம் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அலுவலகப் பணிகளில் இடமாற்றம் ஏற்படும். வேறு நிறுவனங்களுக்கு மாறவேண்டிய சூழ்நிலை உருவாகும். ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். உயரதிகாரிகள் பாராமுகமாக இருப்பார்கள். இதுபோன்ற செயல்களால் வேறு நிறுவனங்களில் வேலை தேட வேண்டிய அவசியம் ஏற்படும். அல்லது பணியிட மாற்றம் வெகுதொலைவில் ஏற்படும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நிச்சயமாக சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு அலுவலர்கள் தங்கள் பணியில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். கவனக்குறைவு ஏற்பட்டால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியது வரும். எனவே உங்கள் பணியில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். ஒரு சிலருக்கு பணியை விட்டு விலகி சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டால் தயவு செய்து அந்த முடிவை அடுத்த குருப் பெயர்ச்சி வரை தள்ளி வையுங்கள்.
சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது தொழில் தொடர்பாக ஒரு சில அழுத்தங்கள் அதிகரிக்கும். தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டியது வரும். தொழிலகத்தில் இருக்கும் இயந்திரங்களில் பழுது ஏற்படும். எனவே பராமரிப்புப் பணிகளை சரிவர செய்து வாருங்கள். சிறிய குறைகள் ஏற்பட்டால் அதை சரி செய்த பிறகு இயக்கவேண்டும். ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவில்லை என்றால் ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். உற்பத்தி செய்யும் பொருட்களில் தரத்தை எந்த வகையிலும் குறைத்து விட வேண்டாம், தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கணக்கு வழக்குகளில் குறைகள் ஏற்பட்டால் அது தொடர்பான சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியது வரும். இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருந்தால் தொழில் சிறப்பாகவே இருக்கும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது, யாராவது ஒருவருடைய தலைமையில் தொழிலை இயக்குவது நல்லது.
வியாபார விஷயங்கள் சிறப்பாக இருக்கும். போட்டி வியாபாரிகளால் சில இடைஞ்சல்கள் ஏற்பட்டாலும் அந்த பிரச்சினைகள் அனைத்தும் சமாதானமாக பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. புதிய வியாபாரம் தொடங்குதல் அல்லது கூட்டாக வியாபாரம் செய்தல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். உங்கள் வியாபாரத்தை நீங்கள் மட்டுமே கவனித்து வாருங்கள். வியாபாரத்தில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம். இருக்கின்ற வியாபாரத்தை இருப்பது போல தொடர்வது நல்லது. வியாபாரத்திற்காக உள்ள பொருட்களின் தரத்தைச் சரியாக கவனிக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். கொடுக்கல்-வாங்கல் பிரச்சினைகளில் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபட எண்ணம் தோன்றும். சுய ஜாதகத்தின் அடிப்படையில் விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடலாம். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி காலம் வியாபாரத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பது உறுதி.
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படும். ஆனாலும் எந்த நிறுவனம் சென்றாலும் இந்த அழுத்தங்களும், நிர்பந்தங்களும் இருக்கத்தான் செய்யும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே இருக்கும் இடத்திலேயே உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை செய்யுங்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தேவையில்லாமல் மற்றவர்களுடைய கருத்திற்கு இடையூறு செய்யாதீர்கள். செய்தி சேகரிப்பின்போது முழு நம்பகத்தன்மை பெற்ற பிறகே செய்தி சேகரிக்க வேண்டும். அவதூறு செய்திகளை பரப்பும் பிரச்சினைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மொத்தத்தில் முழு கவனத்தோடு இருந்தால் இந்த குருப்பெயர்ச்சி காலம் சிறப்பாக இருக்கும் என்பது நிதர்சனம்.
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான குருபெயர்ச்சி என்றுதான் சொல்லவேண்டும். உங்களுடைய தகுதி, திறமை வெளிப்படுகிற காலம் இது. உங்களுக்கான கௌரவம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அறிமுகமில்லாத நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட வேண்டாம். புதிய நபர்களிடம் கவனமாக இருங்கள். கலைத்துறை தொடர்பாக பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கும் வாய்ப்பு நிறைய பேருக்கு உண்டு. ஒருசிலருக்கு வெளிநாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள். பொருளாதாரத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். வீண் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் பின்பற்றினால் இந்த குருப்பெயர்ச்சி மிகச் சிறப்பாகவே இருக்கும்.
பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும் என்பதில் ஐயமில்லை. திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நனவாகும். பணியில் இருக்கும் பெண்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் சுயதொழில் செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அதிக முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதர சகோதரிகள் ஒற்றுமை பலப்படும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகளில் விட்டுக் கொடுத்து சென்றால் இப்போது பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். கடன் பிரச்சிகள் முடிவுக்கு வரும். அதேசமயத்தில் புதிய கடன்கள் எதுவும் வாங்க வேண்டாம். யாருக்கும் கடன் கொடுப்பதும் வேண்டாம். அதேபோல யாரையும் நம்பி பணம் நகை போன்றவற்றை தரவேண்டாம். ஜாமின் தராதீர்கள். மற்றபடி குழந்தைகளின் ஆரோக்கியம் கணவருடைய ஒற்றுமை என குடும்ப விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் தேவையான உதவிகள் கிடைக்கும். அதே சமயத்தில் படிப்பில் கவனம் சிதறும் வாய்ப்பு உள்ளது. மனதை ஒருநிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம். இது ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி பட்டயக்கல்வி வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் பொருந்தும். முழுமையாக படிப்பில் கவனத்தை செலுத்தினால் மட்டுமே படிப்பை முடிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையற்ற மாணவர்களின் சகவாசத்தை விடுங்கள். படித்தவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுடைய தொடர்பு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். அந்த நட்பை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். இதை அனைத்தையும் சரிவர பின்பற்றினால் இந்த குருப் பெயர்ச்சியில் பல சாதனைகளைச் செய்ய முடியும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலம் ஸ்ரீகாளகஸ்தி ஆகும். அந்த ஆலயத்திற்கு ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். மேலும் ஆலங்குடி சென்று குரு பகவானை வழிபாடு செய்யுங்கள். வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களில் தட்சணாமூர்த்தி மற்றும் நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்., அதிக நன்மைகள் நடக்கும். வாழ்க வளமுடன்.
***********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago