2021 - 2022 குருப்பெயர்ச்சி பலன்கள்; கன்னி ராசி அன்பர்களே! எதிலும் கவனம்; சொத்து சேரும்; வேறு இடத்தில் வேலை;தொழிலில் முன்னேற்றம்! 

By செய்திப்பிரிவு


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


கன்னிராசி வாசகர்களுக்கு வணக்கம். குருப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும் என்பதை பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து ஓரளவுக்கு நன்மைகளை குருபகவான் தந்திருப்பார். அது ஏன் ஓரளவுக்கு என்று சொல்கிறேன் என்றால்... உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ராகு பகவான் அமர்ந்து குரு கொடுக்க வேண்டிய அனைத்து நன்மைகளையும் கிடைக்கவிடாமல் ராகு தடுத்துக் கொண்டிருந்தார். இதன் காரணமாக தந்தை, தந்தை வழி உறவுகள், தந்தையின் ஆரோக்கியம் போன்ற பலவித பிரச்சினைகள்... அவ்வளவு ஏன் உங்கள் உடல் நலத்திலும் பலவிதமான தொந்தரவுகள் ஏற்பட்டிருக்கும். ஐந்தாம் இடத்தில் இருந்து குரு பகவான் தர வேண்டிய நன்மைகளை இப்போது ஆறாமிடம் செல்கிறார், அவர் எப்படிப்பட்ட பலன்களை தருவார் என்ற குழப்பம் உங்களுக்குள் இருக்கும். 6-ஆம் இடத்தில் குரு நிச்சயமாக உங்களுக்கு எந்தக் கெடுதலையும் தர மாட்டார் என்பதை நம்பலாம்.

அது எப்படி என்ற கேள்வி வரும்? உங்கள் ராசிக்கு 4ம் 7-க்கு அதிபதியான அதாவது கேந்திரங்களுக்கு அதிபதியான குருபகவான் நன்மைகளை தரக் கூடியவராக இருந்தாலும் அவரே பாதகாதிபதியும் ஆவார். எனவே பாதகத்தைச் செய்யும் ஒருவர் மறைவு ஸ்தானத்தில் சென்று மறைவது பலவகையிலும் நன்மையைத் தரும் என்பதை மறவாதீர்கள்.

குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறவுகள் பலப்படும். சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும். அதற்காக கடன் பெற்று சுப நிகழ்வுகளைச் செய்யவேண்டியது வரும். கடன்களால் எந்தப் பிரச்சினையும் வராது என்பதை நம்பலாம். சொந்தவீடு கட்டுதல், திருமணம், அசையாச் சொத்துக்கள் வாங்குதல் போன்றவை இப்போது நடக்கும். தொழில் வளர்ச்சி, வியாபார வளர்ச்சி போன்றவற்றிற்கு வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும். அதேபோல பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்பு உண்டு. சகோதர சகோதரிகள் ஒற்றுமை பலமாக இருக்கும். பாகப்பிரிவினைகள் இப்போது எளிதாக நடந்தேறும். தாய் மாமன் வகை உறவுகளால் நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்கள் சிறப்பாக இருக்கும்.

அலுவலகப் பணிகளில் சிறப்பாக பணியாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு பலருக்கும் ஏற்படும். வேறு நிறுவனங்களுக்கு மாறுதல், வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு என பலருக்கும் ஏற்படும். சுயமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் அலுவல் பணி சார்ந்த விஷயங்களுக்காக பலவிதமான நபர்களை சந்திக்க வேண்டியது வரும். அவர்கள் மூலமாகவும் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். மொத்தத்தில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய அனுபவ ஆதாயங்கள் அதிகமாக உண்டு. சக ஊழியர்களிடம் முக்கியமான ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உயரதிகாரிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் செயல்படுங்கள். அலுவல் விஷயத்தை வெளி நபரிடம் விவாதிக்காதீர்கள். இதையெல்லாம் சரியாக பின்பற்றினால் உத்தியோகத்திற்கு எந்த வகையிலும் பிரச்சினைகள் வராது என்பதை நம்பலாம். அலுவலகத்தில் கடன் பெற்று சொந்த வீடு வாங்குதல், புதிய வாகனம் வாங்குதல் போன்றவை நடக்கும். அதற்கு இந்த காலகட்டம் மிகச் சிறப்பாக இருக்கும்.

சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலம் நன்மை தரக்கூடிய அளவிலேயே இருப்பதால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கடனுதவி, அரசு சலுகைகள் போன்றவை கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதன் மூலமாக தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முடியும். அரசு ஒப்பந்தப் பணிகள் மிக எளிதாகக் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் பலருக்கும் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு மிகச் சிறப்பான நன்மைகள் நடைபெறும். பெரிய அளவிலான நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

வியாபாரிகளுக்கு மிக அற்புதமான காலகட்டம் இது. வியாபார வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு லாபம் இருமடங்காக இருக்கும். ஆனாலும் எந்த ஒரு விஷயத்தையும் சரியாக திட்டமிட்டு செய்யவேண்டும். அகலக் கால் வைக்காதீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துகிறேன் பேர்வழி என்று அதிகப்படியான செலவுகளைச் செய்ய வேண்டாம். கடனுக்கு பொருட்களை விற்பதை நிறுத்த வேண்டும். கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்க வேண்டும். சிறிய அளவிலான தவறுகள் கூட அபராதம் விதிக்கக் கூடிய அளவிலான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். எனவே எந்த ஒரு விஷயத்தையும் முழுமையான நேர்மையோடு இருங்கள்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். பலவித ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியது வரும். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் இருந்தால் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய அளவிலான சாதனைகளைச் செய்யும் வாய்ப்பு உண்டு. எனவே மனம் தளராமல் இருங்கள். செய்தி சேகரிப்பின்போது உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சர்ச்சைக்குரிய விஷயங்களில் கவனமாக கருத்தை பதிவிடுங்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். மொத்தத்தில் பொறுமையாக இருந்தால் பெருமை கிடைக்கும்.

கலைத் துறை சார்ந்தவர்களுக்கு அதாவது திரைப்பட கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் என அனைவருக்கும் இந்த காலகட்டத்தில் நன்மைகளும் நடக்கும். ஒரு சில சங்கடங்களும் சந்திக்க வேண்டியது வரும். ஆனாலும் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது என்பதை உறுதியாக நம்பலாம். புதிய நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடும் போது அதன் நம்பகத் தன்மையை முழுமையாக அறிந்து கொண்ட பிறகு ஏற்றுக் கொள்ளுங்கள். அதேபோல நிகழ்ச்சிகளை ஏற்றுக் கொள்ளும்போது முழு தொகையையும் பெற்றுக் கொண்ட பிறகு நிகழ்ச்சிகளை ஒத்துக்கொள்ளவேண்டும். இப்படி திட்டமிட்டு செய்தால் வருமானத்திற்கு குறை இல்லாமல் இருக்கலாம். கடன் பிரச்சினைகளை தீர்க்க முடியும், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள் என்றால் நிதானத்தோடு செயல்படுங்கள். அதனுடைய முழு நம்பகத்தன்மையும் பெற்ற பிறகு ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த குருப் பெயர்ச்சி எந்த வகையிலும் பெரிய அளவிலான பாதிப்பைத் தராது, ஆனாலும் சோதனைகளைத் தந்து அதில் உங்களை வெற்றி பெற வைக்கக் கூடியதாகவே இருக்கும்.

பெண்களுக்கு மிகச் சிறப்பான காலகட்டம் என்று தான் சொல்லவேண்டும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். இதுவரை கற்ற கல்விக்கு ஏற்ற வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது தகுதியான வேலை கிடைக்கும். ஒரு சில பிரச்சனைகளால் கணவன்-மனைவி பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். மாற்றார் பேச்சைக் கேட்டுக் கொண்டு குடும்பத்தினரிடம் தேவையில்லாத விவாதங்களைச் செய்யாதீர்கள். மனம்விட்டுப் பேசி பிரச்சினையை அப்போதைக்கப்போது முடித்துக் கொள்வது நல்லது. உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். குறிப்பாக உணவு விஷயத்தில் அதிக கவனம் வேண்டும். மற்றபடி கடன் பிரச்சினைகள் பெரிய அளவில் நெருக்கடி தராது. படிப்படியாக கடன் தீரும். பூர்வீகச் சொத்துக்கள் ஒருசில சச்சரவுகளுக்குப் பிறகு உங்களுக்கு கிடைக்கும், முடிந்தவரை பாகப்பிரிவினையின்போது மற்றவர்கள் மனம் நோகாமல் செயல்படுங்கள். பிடிவாதத்தை கைவிடுங்கள். நன்மைகள் அதிகமாக நடைபெறும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்விக்கடன் மிக எளிதாகக் கிடைக்கும். உயர்கல்வியில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்யும் வாய்ப்பு உண்டு. கல்விக்குத் தகுந்த வழிகாட்டி கிடைப்பார். உயர்கல்வி படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது கல்வியை முடித்தவுடன் வேலை வாய்ப்பு மிக எளிதாகக் கிடைக்கும். ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகுந்த அலைச்சல் ஏற்படும். ஆனாலும் நிச்சயமாக உங்களுடைய ஆராய்ச்சி படிப்பு நல்லவிதமாக முடியும். பட்டம் பதவிகள் தேடிவரும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு ஸ்ரீரங்கநாதர் ஆலயமே சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும். அதிலும் குறிப்பாக திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் பெரியபிராட்டி ஆலயத்திற்கு எதிரே இருக்கும் ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு, மற்றும் செட்டிபுண்ணியம் ஸ்ரீஹயக்ரீவர் ஆலய வழிபாடு மிகச் சிறந்த நன்மைகளைத் தரும். வாழ்க வளமுடன்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்