2021 - 2022 குருப்பெயர்ச்சி பலன்கள்; சிம்ம ராசி அன்பர்களே! கடன் பிரச்சினை தீரும்; ஆரோக்கியம் கூடும்; வேலை மாற்றம்; குடும்பத்தில் நிம்மதி! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


சிம்ம ராசி அன்பர்களுக்கு வணக்கம்.


இந்த குருப் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தர இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்த குரு பகவான் தற்போது ஏழாமிடம் செல்கிறார். ஏழாம் இடம் சென்று நேர் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள், ஆரோக்கிய பாதிப்புகள், மருத்துவச் செலவுகள், வீண் செலவுகள், அலைச்சல்கள், கடன் பிரச்சினைகள் என அனைத்தும் இப்போது முடிவுக்கு வரும். அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து வெற்றிகரமான மனிதராக வலம் வருவீர்கள்.

|குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். இதுவரை கடன் பிரச்சினைகளாலும், குடும்பத்தினரின் ஆரோக்கியப் பிரச்சனைகளாலும் கடுமையான மன உளைச்சலுக்கு நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் ஆட்பட்டு இருந்திருப்பீர்கள். இப்போது ஆரோக்கியப் பிரச்சனைகள் படிப்படியாக தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் சேரும். எடுத்துக் கொண்ட எல்லா முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்படும். சொந்த வீடு வாங்குதல், ஆடை ஆபரணச் சேர்க்கை என சொத்துகள் சேரும். சகோதர வழியில் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் தீரும். தாய் தந்தையின் ஆதரவு கிடைக்கும்., அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பலவிதமான கடன் சுமைகள் ஏற்பட்டிருக்கும். இப்போது அந்தக் கடன்கள் அனைத்தும் படிப்படியாக தீரும். ஆறாமிடத்தில் இருக்கும் சனிபகவான் மகாலட்சுமி யோகத்தையும், ஏழாம் இடத்து குரு பார்வை சிறப்பான வழிகாட்டுதலையும், பத்தாமிடத்தில் இருக்கக்கூடிய ராகு பகவான் மிகப்பெரிய முன்னேற்றப் பாதையையும் காட்டக் கூடியவராகவும் இருப்பதால் சிம்ம ராசிக்கு மிகப்பெரிய யோகமான காலம் ஆரம்பித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

அலுவலகப் பணிகளில் சிறப்பான நிலை ஏற்படும். உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். இதுவரை இருந்த அழுத்தங்கள் தீரும். கடுமையான மன உளைச்சல் ஏற்படும்படியாக அலுவலகத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கும். இனி அந்த நெருக்கடிகள் அனைத்தும் அகன்று, திறமையை ஆதரிக்கக் கூடிய வகையில் அனைவரின் ஆதரவும் கிடைக்கும். மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும். கல்விக்கு தகுந்த வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது கற்ற கல்விக்குத் தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்காக தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு இப்போது அரசுப் பணி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பும் இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபட்டால் நிச்சயமாக வெளிநாடு செல்லலாம்.

சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த நெருக்கடிகள் அகலும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் காணாமல்போகும். வழக்குகள் சாதகமாகும். உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். தொழில் வளர்ச்சி விரிவுபடுத்துவதற்கு தேவையான பண உதவி கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கும். மிகப்பெரிய நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மிகச் சிறிய தொழில் செய்து கொண்டிருந்தாலும் பெரிய அளவிலான தொழில் செய்து கொண்டிருந்தாலும் இப்போது மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சி காத்திருக்கிறது. ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகள் அனைத்தையும் இப்போது செய்து கொடுத்து ஊழியர்களை உற்சாகமாக வைத்திருப்பீர்கள். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் அனைத்தும் இப்போது விலகும். புதிய தொழில்நுட்பம் வாய்ந்த இயந்திரங்கள் வாங்குவீர்கள், அதேபோல மிகத் திறமையான ஊழியர்களை பணிக்கு அமர்த்துவீர்கள். நீண்ட நாளாக யோசனை செய்து வைத்த புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இப்போது ஈடேறும்.

வியாபாரிகளுக்கு மிகச் சிறப்பான காலம் தொடங்கிவிட்டது. இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து வியாபாரத்தில் ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகிறீர்கள். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வியாபாரம் வரை அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கும். அற்புதமான காலகட்டம் என்பதால் உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் இப்போது செயல்படுத்தலாம். உங்களுக்குப் போட்டியாக வியாபாரத்தை தொடங்கியவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள். புதிய வியாபாரத்தை தொடங்குவது, கிளைகள் ஆரம்பிப்பது, தற்போது இருக்கக்கூடிய வியாபார இடத்தை வேறு நல்ல இடத்திற்கு விசாலமாக மாற்றுவது, ஆடம்பர அலங்காரங்கள் செய்வது என இப்போது அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கும்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை சரியான அங்கீகாரம் இல்லாமல் மனச் சோர்வு ஏற்பட்டு இருந்திருக்கும். இப்போது அந்த மன சோர்வு நீங்கும்படியாக பரபரப்பான பத்திரிகையாளராக வலம் வருவீர்கள். உங்களுடைய எழுத்துக்கு மதிப்பு மரியாதை கிடைக்கும். உங்களுடைய திறமை அங்கீகரிக்கப்படும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் செய்திகளின் நம்பகத்தன்மை பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும். நிறுவனத்தின் அங்கீகாரம் மட்டுமல்லாமல், அரசாங்க அங்கீகாரமும், அரசு ஆதரவும் கிடைக்கும். மிகச் சிறப்பான காலம் தொடங்கி விட்டதால் சுறுசுறுப்பாகப் பணியாற்றி விரைவில் நல்ல பேர் சம்பாதிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

கலைத்துறை சார்ந்தவர்கள் திரைத்துறை, சின்னத்திரை, இயல் இசை நாடகம் போன்ற கலைத் துறைகளில் இருப்பவர்களுக்கு மிகச் சிறப்பான காலம் வந்துவிட்டது. இனி பரபரப்பாக இயங்கி உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் தருணம் இது. பலவித ஒப்பந்தங்கள் கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிநாடுகளுக்குச் சென்று உங்கள் திறமையை நிரூபிக்க கூடிய காலகட்டம் வந்துவிட்டது. கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். பொதுச் சேவை நிறுவனங்களின் கௌரவம், அரசு கவுரவம் போன்றவை கிடைக்கும். பதவி பட்டங்கள் தேடிவரும். மிக அருமையான குருப் பெயர்ச்சி காலம் இது என்பதை முழுமையாக உணரலாம்.

பெண்களுக்கு மிக சிறப்பான குருப் பெயர்ச்சியாகும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்போது எளிதாக நடந்தேறும். திருமணம் ஆன பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். இப்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து தம்பதி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கைப் பயணம் தொடங்கும். கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கும். அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் சேரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வாகன பிராப்தி உண்டு. சகோதர சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். தாய் தந்தையரின் சொத்துகள் தடையின்றி வந்து சேரும். சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும். சிறிய அளவிலான வியாபாரம் தொடங்குவது முதல் பெரிய அளவிலான வியாபார வாய்ப்புகள் வரை கிடைக்கும். அதற்கு பக்கபலமாக நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் உதவி செய்வார்கள். இந்த காலகட்டத்தை சரியாக பயன்படுத்தினால் மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வர முடியும் என்பது உண்மை.

ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை படிக்கின்ற மாணவர்கள் அனைவருக்கும் மிகச் சிறப்பான காலகட்டமிது. விரும்பிய கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி கற்பதற்கான வங்கிக் கடன் கிடைக்கும். அயல்நாடுகளில் சென்று படிக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும். ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த ஆண்டு தங்கள் ஆராய்ச்சியில் முடித்து பட்டம் பெறக்கூடிய வாய்ப்பு பலமாக இருக்கிறது. நீண்ட நாளாக தீர்க்கமுடியாத கல்வி தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் மிக எளிதாக தீரும். அதற்கு தகுந்த நபர் ஒருவர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்.

சிம்மராசிக்காரர்களுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் எப்போதும் துணையாக இருப்பார். எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்யுங்கள். அங்கே இப்போதும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருக்கிற சித்தர் பெருமக்களை மனதார நினைத்து வணங்க அனைத்து நன்மைகளும் பல மடங்காக நடக்கும். வாழ்க வளமுடன்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்