2021 - 2022 குருப்பெயர்ச்சி பலன்கள்; மிதுன ராசி அன்பர்களே! கடன் பிரச்சினை தீரும்; வேலையில் உயர்வு; வியாபாரத்தில் லாபம்; வெற்றிகள் குவியும்! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மிதுன ராசி அன்பர்களுக்கு வணக்கம்.

இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும் என்பதைப் பார்ப்போம்.

மிதுன ராசிக்கு இதுவரை அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் இடத்தில் சனி பகவானும் குரு பகவானும் இணைந்து பல்வேறு சோதனைகளை தந்து கொண்டிருந்தார்கள். விரக்தியின் உச்சத்திற்கே சென்றிருப்பீர்கள். இப்போது குரு பகவான் கும்ப ராசிக்கு வந்து 5-ஆம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்கப் போகிறார். உங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல மறையும் காலம் வந்துவிட்டது. இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். அஷ்டமச்சனி இருக்கிறதே என்ற கவலை வேண்டாம். குரு பார்வையால் அஷ்டமத்துச் சனியின் பலன்கள் மட்டுப்படும். குரு பகவான் அதை தடுத்தாட்கொண்டு உங்களை நிச்சயம் காப்பாற்றுவார்!

குடும்பம், தொழில், வியாபாரம், வேலை என அனைத்திலும் கடும் பிரச்சினைகளும் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கும். தேவையற்ற அவமானங்கள், தலைகுனிவு, விசாரணைகள், முயற்சிகளில் தோல்வி, ஒரு அடி எடுத்து வைத்தால் பல அடி சறுக்கக் கூடிய நிலை என அனைத்தும் இப்போது முடிவுக்கு வந்து, ஒரு வெற்றிகரமான மனிதராக அனைத்து பிரச்சினைகளையும் வென்று, உங்களை நிலை நிறுத்தக்கூடிய நேரம் தொடங்கிவிட்டது. இனி எதற்கும் கவலைப்படாமல் உங்கள் கடமையை கண்ணும் கருத்துமாக செய்யுங்கள். அனைத்து வெற்றிகளும், தேவையான ஆதரவும், பணப்புழக்கமும் இனி தாராளமாக இருக்கும்.

கவலை தந்த கடன் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். அடகு வைத்த நகைகளை மீட்டு விடுவீர்கள். குடும்பத்தில் திசைக்கு ஒருவராக இருந்த நிலை மாறி குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், மன வருத்தங்கள் அகன்று, ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு அனைவரும் ஒற்றுமை பாராட்டுவார்கள். சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் அனைத்தும் சமாதானமாக மாறும். உறவினர்கள் பகை மாறும், உறவினர்களிடம் கடன் வாங்கி பலவித அல்லலுக்கு ஆட்பட்டு இருந்திருப்பீர்கள். இனி உங்கள் நிலையைப் புரிந்து கொண்டு அவர்கள் உங்களை அனுசரித்துச் செல்ல கூடிய காலம் வந்துவிட்டது. அனைத்து கடன் பிரச்சினைகளையும் படிப்படியாக தீர்க்கும் காலம் வந்துவிட்டதால், இனி எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு சமாதானமாகி பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்து சாதகமாகும். எதிரிகளின் தொல்லை முடிவுக்கு வரும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீண்டும் தொடரும். அதற்கு தேவையான வங்கிக் கடன் கிடைக்கும். அரசு தொடர்பான பல பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும்.

அலுவலகப் பணிகளில் வேலையை விட்டுச் சென்று விடலாமா என்ற நிலையில் இருந்த உங்களை, இப்போது அலுவலகமே உங்களுக்கு தகுந்த மதிப்பு மரியாதை கொடுத்து உங்களை தக்க வைத்துக் கொள்வார்கள். உங்கள் மீதான களங்கம் துடைக்கப்படும். உங்கள் மீதான விசாரணைகள் கைவிடப்படும். உங்களுடைய பதவி உயர்வு இப்போது கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் எண்ணம் இருந்தால் அதுவும் இப்போது ஈடேறும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கும் இப்போது நல்ல வேலை கிடைக்கும். அரசு பணியாளராக இருந்தால் பலவித பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். தற்காலிக பணி நீக்கம் இடை நீக்கம் போன்ற பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இப்போது அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து மீண்டும் பணிக்குச் செல்வீர்கள். உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீர்த்துப்போகும். குற்றமற்றவர் என வெளி வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இப்போது கிடைக்கும். அவர்கள் மூலமாக உங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும். எனவே உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லுங்கள். அவர்களுடைய ஆதரவு இனி எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு தொல்லை தந்த எதிரிகள் இப்போது காணாமல் போவார்கள். அல்லது அவர்கள் மீது நடவடிக்கை பாயும். இனி உங்கள் பணியில் முழு கவனத்தையும் செலுத்தி உங்களுடைய திறமையை வெளிக் கொண்டு வரும் பணியை செய்யுங்கள். அனைத்தும் இனி சிறப்பாக இருக்கும்.

தொழிலில் பலவித இன்னல்களுக்கு ஆளாகி இருந்திருப்பீர்கள். மேலும் கடந்த இரண்டு வருடமாக கரோனோ பாதிப்பினால் தொழிலில் ஒரு முடக்க நிலை ஏற்பட்டிருக்கும். கடன்களை அடைக்க முடியாமல் திக்குமுக்காடி இருந்திருப்பீர்கள். இப்போது படிப்படியாக உங்கள் பிரச்சினை தீரும். வேலையை விட்டு விலகிச் சென்ற ஊழியர்கள் மீண்டும் திரும்ப வருவார்கள். திறமையான பணியாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். அவர்களை எல்லாம் பயன்படுத்தி தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு செல்வீர்கள். அடிக்கடி பழுதுபட்டுக் கொண்டிருந்த இயந்திரங்கள் எல்லாம் இனி எந்தவிதமான தடையும் இல்லாமல் இயங்கும். தொழில் தொடர்பாக வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் இப்போது திரும்பக் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர் உங்களுக்கு எதிர்பார்ப்பில்லாமல் உதவ முன்வருவார்கள். அதைப் பயன்படுத்தி தொழிலை நல்ல முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வீர்கள். போட்டி நிறுவனங்கள் இனி உங்களை தொந்தரவு செய்யாது, போட்டியிலிருந்து விலகிக் கொள்வார்கள். இனி உங்களுடைய தொழில் பிரகாசமாக இருக்கப் போகிறது. வேறு தொழில் நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். வெளிநாடுகளில் இருப்பவர்கள் உங்களுக்கு தொழில் ரீதியாக உதவி செய்வார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முடங்கிக் கிடந்த தொழில், இப்போது முன்னேற்றப் பாதைக்குச் செல்லும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். மீண்டும் தொழிலில் ஒரு பரபரப்பான இயக்கத்தை தொடங்கப் போகிறீர்கள். அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். குருபகவான் அனைத்து வகையிலும் உங்களுக்கு துணை இருப்பார்.

வியாபாரிகளுக்கு இதுவரை இருந்த முடக்கமான நிலை மாறி சுறுசுறுப்பான வியாபாரத்திற்கு தயாராவீர்கள். கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். ஒரே வியாபாரத்தில் எல்லாப் பிரச்சினைகளும் முடியக் கூடிய அளவிற்கு சிறப்பான நேரம் தொடங்கிவிட்டது. வியாபாரத்தில் பலவகையிலும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த நபர்கள் காணாமல் போவார்கள். இனி அவர்களால் எந்த தொந்தரவும் இருக்காது. புதிய வியாபார வாய்ப்புகளும் தேடிவரும். வியாபாரத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள், கிளைகள் தொடங்குவது போன்றவை நடக்கும். இவை அனைத்தும் சிறிய வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் பொருந்தும்.

பெண்களுக்கு தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்போது நடந்தேறும். இதுவரை திருமணத்திற்காக ஜாதகம் அனுப்பும்போது எந்த பதிலும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருந்திருக்கும். இப்போது அந்த நிலை மாறி மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்டு படையெடுப்பார்கள். அந்த அளவுக்கு ஒரு சிறப்பான நேரம் வந்துவிட்டது. குருவின் பார்வையினால் மிகச் சிறந்த வாழ்க்கைத் துணை கிடைக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். புத்திரபாக்கியம் இல்லாமல் பலவித மன நெருக்கடிக்கு ஆளானவர்களுக்கு இப்போது ஆறுதல் தரும் விதமாக குரு பகவான் புத்திர பாக்கியம் அருளுவார். சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து பணி நிரந்தரமாகும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தந்தைவழி உறவுகள் சகோதரர்கள் உங்கள் பிரச்சினைகளை தீர்த்து தருவார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து உங்களுக்கு உண்டான பங்கு இப்போது கிடைக்கும். சொந்த வீடு வாங்குவது, ஏற்கெனவே இருக்கக்கூடிய வீட்டில் பலவித பிரச்சினைகள் இருந்தால் அவை அனைத்தும் இப்போது தீரும். கணவர் வீட்டாரிடம் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் முடிவுக்கு வந்து குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இல்லத்தில் சுபகாரிய விசேஷங்கள் நடக்கும். குலதெய்வ வழிபாடு மன ஆறுதலைத் தரும்.

திரைப்படக் கலைஞர்கள், சின்னத்திரை, கலைஞர்கள் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள், இசை நடனம் நாட்டியக் கலைஞர்களுக்கு மிக அற்புதமான பொன்னான நேரம் வந்துவிட்டது. இந்த பொன்னான நேரத்தை தருபவர் குரு என்னும் பொன்னவன் தான். எனவே இதுவரை இருந்த சூழ்நிலைகள் மாறி ஓய்வு கூட எடுக்க முடியாத அளவிற்கு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று வருமானம் பல மடங்காக பெருகும். நிறைய பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் சிரமங்களையும் சந்தித்து இருப்பீர்கள். இப்போது பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.வீண் களங்கம் சுமத்தப்பட்டிருக்கும். இப்போது அந்த களங்கங்கள் தீரும். உரிய அங்கீகாரம் இல்லாமல் இருந்திருப்பீர்கள். இப்போது சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். பாராட்டுகள் கிடைக்கும். பட்டங்கள் தேடிவரும். அரசின் உதவிகள் கிடைக்கும். அயல்நாடுகளுக்குச் சென்று கலைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பு கிடைத்து, அதன்மூலம் பல மடங்கு வருமானம் கிடைக்கும். உங்களுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சொத்துச் சேர்க்கை ஏற்படும். யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். உங்களுடைய சேமிப்பை வளமாக்கி கொள்ளுங்கள்.

பத்திரிகையாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நேரம் வந்து விட்டது, நல்ல வாய்ப்பு கிடைக்காமல் உங்கள் திறமையை வெளிக்காட்ட முடியாமல் இருந்து இருப்பீர்கள். இப்போது உங்கள் முழு திறமையும் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது. பத்திரிகைத் துறையில் மிகப்பெரிய சாதனையைச் செய்வீர்கள். அதன் மூலம் புகழ் வெளிச்சம் கிடைக்கும். நல்ல சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும் கிடைக்கும்போது எதையும் தவறவிடாமல் செய்யுங்கள். எந்த பிரச்சினைகளும் உங்களை அணுகாது. முழு வேகத்தோடு செயல்படுங்கள். மிகப்பெரிய வெற்றியைக் காண்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் இதுவரை இருந்த மந்தமான நிலை மாறி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள் உயர்கல்வியில் பலவிதமான தோல்விகளை சந்தித்து இருப்பீர்கள். இப்போது தோல்விகள் அனைத்தும் வெற்றிகளாக மாறக்கூடிய நேரம் வந்துவிட்டது. உயர்கல்வி கற்பதற்கான வெளிநாட்டு வாய்ப்புகளும் கிடைக்கும். நல்ல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கல்விக்குத் தகுந்த வேலை வாய்ப்பு இப்போது கிடைக்கும். பொறியாளர் படிப்பு படித்தவர்களுக்கு இப்போது தகுந்த வேலை கிடைக்கும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு திருச்சி ஸ்ரீரங்கநாதர் ஆலயம் சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும். அங்கே ரங்கநாதரை தரிசித்து, அந்த ஆலயத்திலேயே வீற்றிருக்கும் ஸ்ரீ ராமாநுஜரை வணங்குங்கள். அதிகப்படியான நன்மைகளும், யோகங்களும் கிடைக்கும். வாழ்க வளமுடன்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்