ஸ்வஸ்திக், ஹிட்லர் பயன்படுத்திய தாரை, ஏகாம்பரநாதர்;  உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 26

By செய்திப்பிரிவு

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்


சென்ற வாரம் மூலம் நட்சத்திரம் பற்றி விரிவாகக் கண்டோம். இந்த வாரம் நாம் பூராடம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் காணலாம்.

பூராடம்
பூராடம் என்பது வானத்தில் தனுசு ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். நாம் கண்களில் காணும் போதும் கதாயுதம் போலவும், தாமரை மொட்டு போலவும், குறுவாள் போலவும் காட்சி அளிக்கும். ஆகவே இதன் வடிவமாக கதாயுதம், தாமரை மொட்டு, குறுவாள் ஆகியவற்றைக் கூறலாம்.

இதன் அதிபதி சுக்கிரன் கிரகம் ஆகும். இது வெள்ளை நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சுக்கிர திசையே முதலில் தொடங்கும். இந்த ராசியில் சுக்கிரன் பலம் பெறுகிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சுக்கிரன் நீச்சம் அல்லது பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்த மாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று இந்த கட்டுரையில் காணலாம்.

ஹிட்லர் பயன்படுத்திய தாரை
ஹிட்லர் நட்சத்திரம் பூராடம். இது ஆயுதம் குறிக்கும் நட்சத்திரம். இதுவே கதாயுதமாக புராணங்களில் பாவிக்கப்படுகிறது. பூராடத்தின் க்ஷேமத்தாரை என்பது அவிட்டம், மிருகசீரிடம் மற்றும் சித்திரை.

சித்திரை நட்சத்திரம் சுவாதியின் ஆரம்பநிலை நட்சத்திரம் என்பதால் இது ஸ்வஸ்திகா குறியீடு கொண்டது. ஆக பூராடத்திற்கு காரிய ஸித்தி நல்கும் திறனைக் கொண்டிருக்கிறது. ஹிட்லர் ஸ்வஸ்திக் குறியீட்டை தவறாக பயன்படுத்தினார் அதனால் வெற்றியைக் கொடுத்து அதேசமயம் அவருக்கு அதீத வீழ்ச்சியும் கொடுத்தது.

ஸ்வஸ்திகா என்பது நேர்கடிகார சுழற்சியில் சுழலும் சக்கரம். அதை சாய்வாக உபயோகித்து முழுமையான பலனைப் பெற தவறினார் ஹிட்லர்.

பூராட வடிவான ஏகம்ப கரை நாதர்

ஏகம்ப கரை நாதர் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் மண் தத்துவம் கூறும் ஸ்தலமாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும்.

காம்பை நதிக்கரையில் ஒற்றை மாமரத்தின் அடியில் பார்வதி அன்னை பூஜிக்க தன் கரத்தால் உருவாக்கிய லிங்கத்திற்கு ஏகாம்ப நாதர் அல்லது ஏகாம்பர நாதர் என்று பெயர்.

எங்கெல்லாம் பார்வதிக்காக சிவபெருமான் லிங்கவடிவு எடுக்கிறாரோ அல்லது பார்வதியால் லிங்க வடிவம் உருவாக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அவர் பூராட வடிவமாகிறார். பார்வதி தேவியின் நட்சத்திரம் பூரம் ஆகும். பூரத்தின் அனுஜென்ம தாரை பூராடம் ஆகும். பூராடத்தின் தாரை வடிவம் சிறிய லிங்க வடிவம் ஆகும். அருகே இருந்த மாமரம் மூல நட்சத்திர விருட்சம் ஆகும். மூல நட்சத்திரத்தில் பிறந்து திருமண தாமதம் ஏற்படும் நபர்கள் மற்றும் திருமண பந்தம் சிக்கல் இருக்கும் நபர்கள் ஏகாம்பர நாதரையும் அம்பாளையும் வழிபாட்டு நன்மை பெறலாம்.

ஆகவே பூரம், பூராடம் மற்றும் பரணி நட்சத்திரக்காரர்கள் ஏகாம்பரநாதரை வணங்கி ஆரோக்கிய வாழ்வு பெறலாம்.

மூலம், அஸ்வினி மற்றும் மகம் நட்சத்திரக்காரர்கள் ஏகாம்பரநாதரை வணங்கி சர்வ சம்பத்துக்களை பெறலாம். நட்சத்திரக்காரர்கள் ஏகாம்பரநாதரை வணங்கி சர்வ சம்பத்துகளைப் பெறலாம்.

உத்திராடம், உத்திரம் மற்றும் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் ஏகாம்பரநாதரை வணங்கி நல்வழி பெறலாம்.

அனுஷம் ,பூசம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் ஏகாம்பரநாதரை வணங்கி காரியங்களில் வெற்றியைப் பெறலாம்.
ஸ்வாதி, திருவாதிரை மற்றும் சதயம் நட்சத்திரக்காரர்கள் ஏகாம்பரநாதரை வணங்கி சாதகமான நிலையைப் பெறலாம்.

கற்பக விநாயகர் கையில் லிங்கம்

பிள்ளையார்பட்டியில் வீற்றிருக்கும் கற்பக விநாயகரின் கையில் ஒரு சிவலிங்கத்தை காண முடியும். நான் ஏற்கெனவே கூறியது போல சிவலிங்கம் என்பது பரணி மற்றும் பூராட நட்சத்திர வடிவங்களின் இணைவு ஆகும். பரணி என்பது பெண் யோனி வடிவாகவும், அதன்மேல் இருக்கும் லிங்கபீடம் என்பது பூராட நட்சத்திர வடிவாகவும் கொள்ள வேண்டும்.

மூல நட்சத்திரத்திற்கு சம்பத்து தாரையாக வருபவை பூராடம், பரணி மற்றும் பூரம் ஆகும். எனவே மூல நட்சத்திர வடிவான கற்பக விநாயகர் கையில் இருக்கும் அந்த சிவலிங்கம் மிகவும் சக்தி வாய்ந்தது, மேலும் சர்வ சம்பத்துகளும் வழங்கும் வல்லமை கொண்டது. மகம், அஸ்வனி, மூல நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாகக் கொண்ட அன்பர்கள், இந்த கற்பக விநாயகரை மற்றும் அவரது கையில் இருக்கும் லிங்கத்தை வணங்குவதன் மூலம் சர்வ சம்பத்துகளும் பெற்று புகழுடன் வாழலாம்.

இதுவரை பூராடம் நட்சத்திரம் பற்றி அறிந்தோம். இனி வரும் கட்டுரையில் உத்திராடம் நட்சத்திரம் பற்றி தெளிவாக அறியலாம்.

- வளரும்
***********

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE