மாந்தி தோஷம் நீங்குவதற்கான பரிகாரங்கள்! இறந்தவர்களை திட்டினால் மாந்தி தோஷம் வரும்! தோஷங்கள்... பரிகாரங்கள்! - 11

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே!

மாந்தி தோஷம் பற்றி பார்த்து வருகிறோம்.

முந்தைய பதிவில் மாந்தியின் பிறப்பு, அவருடைய குணங்கள், அவர் எந்த பாவகத்தில் இருந்தால் என்ன மாதிரியான பலன்கள் தருவார் என்பதையெல்லாம் பார்த்தோம். சிம்மத்தில் அமர்ந்த மாந்தி எந்த தோஷத்தையும் தருவதில்லை என்பதையும் பார்த்தோம். நிறைய பேர் சனியின் பிள்ளை மாந்தி என்கிறீர்களே, அப்படியானால் குளிகன் என்பவரும் சனியின் பிள்ளைதானே! அவர் ஏன் ஜாதகத்தில் இடம் பெறவில்லை? என்று கேட்டிருக்கிறார்கள்.

உண்மைதான். சனி பகவானுக்கு இரண்டு மைந்தர்கள் ஒருவர் மாந்தி, மற்றொருவர் குளிகன். இதில் குளிகன் சனி பகவானுக்கும் நீலா தேவிக்கும் பிறந்தவர். ஆனால் மாந்தி சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர். மேலும் ராசி கட்டத்திலேயே இந்தப் பிறப்பு உருவானதால் அவருக்கு ராசிக்கட்டத்தில் இடம் கிடைத்தது.
ஆனால் குளிகன் நீலாதேவிக்கு பிறந்தவர், அவருக்கு ராசிக்கட்டத்தில் இடமில்லை. ஆனால் அவருக்கும் சில பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுதான் குளிகை காலம் என்னும் குளிகை நேரம் ஆகும். ஒவ்வொரு நாளிலும் இந்த குளிகனுக்கு குறிப்பிட்ட காலம் ஒதுக்கப்பட்டுள்ளது,

ஞாயிறு குளிகை நேரம்-மாலை 3 - 4. 30

திங்கள் - மதியம் 1. 30 - 3

செவ்வாய் - மதியம் 12 - 1. 30

புதன் பகல் 10.30 - 12

வியாழன் காலை 9 - 10.30

வெள்ளி காலை 7.30 - 9

சனி காலை 6 - 7.30

குளிகன் நற்பலன்களைத் தரக்கூடியவர். சுபகாரியங்களைத் தொடர்ச்சியாக தருபவர்., ஒரு சில காரியங்களைத் தவிர மற்ற அனைத்து காரியங்களும் குளிகையில் செய்யலாம்.

பதவியேற்பது, வீடு மனை பத்திரம் பதிவு செய்வது, தங்க நகைகள் வாங்குவது, ஆடை ஆபரணங்கள் வாங்குவது, வங்கியில் கணக்கு தொடங்குவது, சேமிப்பு ஆரம்பிப்பது, இப்படி புதிதாக ஆரம்பிக்கக் கூடிய சுப விஷயங்கள் அனைத்தும் இந்த குளிகை நேரத்தில் தொடங்கலாம். கடனை அடைக்கவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குளிகை நேரத்தில் செய்வதால் அந்த விஷயங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறும் என்பது குளிகையின் சிறப்பம்சமாகும்.

தவிர்க்கக் கூடிய காரியங்கள் சில எனச் சொன்னேன் அல்லவா... அவை என்ன என்பதையும் பார்த்துவிடலாம்!

பெண் பார்க்கும் படலம் செய்யக்கூடாது, திருமண வைபவத்தை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது. சவம் எடுக்கக்கூடாது. கடன் வாங்கக் கூடாது. வரன் தேடுவதை குளிகையில் ஆரம்பித்தால் திருமணம் நடக்காது. வரன்களை தேடிக்கொண்டே இருக்கவேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.

திருமணம் குளிகை நேரத்தில் நடந்தால் மீண்டும் மீண்டும் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலைகளை உண்டாக்கித் தரும். அது இழப்புகளால் இருக்கலாம். பிரிவுகளாலும் இருக்கலாம். கடன் வாங்கினால் கடன் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இப்படி சில விஷயங்களை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது.

சரி, மீண்டும் மாந்தி பற்றி பார்ப்போம்.

மாந்தி என்பவர் வெட்டுப்பட்ட கால் என்பதைப் பார்த்தோம். வெட்டுப்பட்ட கால் என்றாலே அது சவத்துக்கு சமம். எனவே சவ ஊர்வலங்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதும், இறந்தவரின் ஆன்மாவுக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதும், சவ அடக்கத்துக்கு நம்மால் முயன்ற உதவிகளைச் செய்வதும், மாந்தியின் தோஷத்தை வெகுவாகக் குறைக்கும். இன்னும் சொல்லப்போனால் மாந்தி தோஷம் இல்லாமலே போகும்!

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பக்கத்தில் திருநரையூர் எனும் ஸ்தலத்தில் சனிபகவான் தனிச்சந்நிதியில் எழுந்தருளுகிறார். அதுமட்டுமா? தன் மனைவி நீலாதேவி மகன்கள் குளிகன் மற்றும் மாந்தி என குடும்பத்தோடு அருள்பாலிக்கிறார். அங்கே சென்று முறையாக பூஜை செய்து வழிபட்டால் மாந்தி தோஷம் விலகும்.
பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காடு ஆலயம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் மாந்தி வழிபட்ட லிங்கம் உள்ளது, அங்கே சென்று அந்த சிவலிங்கத்தை வழிபட்டாலும் மாந்தி தோஷம் நீங்கும்.

பட்டுகோட்டைக்கு அருகே விளங்குளம் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தில் சனி பகவான் குடும்பத்தோடு காட்சி தருகிறார். அங்கே சென்று வழிபட்டாலும் மாந்தி தோஷம் இல்லாமல் போகும்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிலும் குறிப்பாக கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள். அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து இந்த மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைத்துக்கொள்ளலாம். குறிப்பாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவாக புத்திர பாக்கியம் பெறுவார்கள்.

குடும்பத்தில் அமைதியின்மை, நிம்மதியற்ற நிலை, வருமானம் போதுமான அளவிற்கு இல்லையே என்று கலங்குபவர்கள், குடும்பத்தினர் ஆளுக்கொரு பக்கம் பணிபுரிந்து கொண்டு சேர்ந்து வாழ முடியாமல் தவிப்பவர்கள் என்றிருந்தால், மேற்கண்ட பரிகாரங்கள் மிகப்பெரிய பலன்களைக் கொடுக்கும்! பிரச்சினைகள் விரைவாகத் தீரும். தொடர்ந்து சிவபெருமானை வழிபாடு செய்வதும், தினமும் காலையில் சூரிய வழிபாடு செய்வதும், ஆதித்யஹிருதயம் கேட்டு வருவதும் மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைக்கும்.

பொதுவாக எந்த ஒரு மனிதர் இறந்தாலும் அவரை தூற்றுவது, அதாவது அவர் கெட்டவராகவே இருந்தாலும் இறந்த பிறகு அவரை தூற்றுவது "பிரேத சாபம்" என்னும் கடுமையான தோஷத்தைத் தரும். இதுவும் மாந்தி தோஷத்தில் ஒரு பகுதியே! எனவே எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்து பேசாதீர்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் செயல்பாடுகளே உங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

அன்பார்ந்த வாசகர்களே, அடுத்த பதிவில் மற்றுமொரு தோஷம் பற்றி பார்ப்போம்!

- வளரும்
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்