ஜாதகத்தில் இருந்து கொண்டு ‘மாந்தி’ படுத்தும் பாடு!  தோஷங்கள்... பரிகாரங்கள்! - 10

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே!

’தோஷங்கள் பரிகாரங்கள்’ என்ற இந்தத் தொடரில் இப்போது நாம் பார்க்க இருப்பது "மாந்தி தோஷம்."

ஜாதகத்தில் 9 கிரகங்கள் இருக்கும்போது இந்த மாந்தியை அனைத்து ஜோதிடர்களும் ஜாதகங்களில் குறிப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனாலும் தமிழ்நாட்டில் இந்த மாந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்ப்தில்லை. ஆனால் கேரளாவில் மாந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஜோதிடர்கள் பார்க்கின்றனர்.
மாந்தி என்ன பலன்களை தருவார்? அல்லது என்ன தோஷத்தை உண்டாக்குவார்? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

அதற்கு முன்பாக இந்த மாந்தி என்பவர் யார்? இவர் ஜோதிடத்தில் எப்படி வந்தார்? நவக்கிரகங்கள் ஆட்சி செய்யும் இடத்தில் மாந்திக்கு எப்படி இடம் கிடைத்தது?

இலங்கையை ஆண்ட ராவணன் அனைத்து உலகத்தையும் வென்று தனது ஆட்சிப் பிடியில் வைத்து இருந்தார் என்பது நாம் அறிந்ததே! தேவலோகத்தையும் வெற்றி கொண்ட ராவணன், நவக்கிரகங்களையும் தனக்கு அடிமையாக்கி சிம்மாசனத்தின் படிகளாக வைத்துக் கொண்டார்.

ராவணனுக்கு மகனாக இந்திரஜித் பிறக்கும்போது சாகாவரம் இருக்கும்படியாக கிரகங்களை அணிவகுத்து நிற்கச் சொன்னான். அனைத்து கிரகங்களும் அணிவகுத்து நின்றன. சனிபகவானால் நேராக நிற்க முடியாது. காரணம் அவர் மெலிந்த தேகத்தை உடையவர். கால்கள் இரண்டும் சூம்பிப் போயிருக்கும். மெதுவாகத்தான் நடக்க முடியும். தடுமாற்றம் அதிகமாக இருக்கும்.

இந்தக் காரணங்களினால் அவர் தன்னுடைய ஒரு காலை, தான் நின்ற இடத்தில் இருந்து அடுத்த ராசிக்கு வைக்கப் போனார், இதை கவனித்த ராவணன் அந்தக் காலை வெட்டி விட்டார். அது போய் விழுந்த இடம் மாரகத்தை தரக்கூடிய லக்னத்திற்கு 7-ம் இடமாகும்.

இப்படி சாகாவரம் பெற்று பிறக்க வேண்டிய இந்திரஜித் மரணத்தைத் தழுவ சனியின் கால் தான் காரணமாக இருந்தது. அந்த கால் "மாந்தி" என்று அழைக்கப்படலாயிற்று.

இப்படி சனியின் புதல்வனாகவே மாந்தி உருவானார். எனவே மாந்தி என்பவர் மரணத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டார். ஆனாலும் மாந்தி குறித்து கவலைப்படத் தேவையில்லை. மாந்தி ஒவ்வொரு ராசியில் அமர்ந்திருக்கும்போதும் ஒவ்வொரு விதமான பலன்களைத் தருவார். அதைப் பற்றியும் இப்போது விரிவாகப் பார்க்கலாம். ஜாதகத்தில் மாந்தியானவர் 3- 6 - 10 - 11 ஆகிய இடங்களை தவிர, மற்ற இடங்களில் இருந்தால் பாதிப்புகள் உண்டாகும்.

லக்னத்தில் மாந்தி இருந்தால், அவர்கள் மந்தமான செயல்பாடுகளை உடையவராக இருப்பார்கள். அனைத்து திறமைகள் இருந்தாலும் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காதவர்கள். வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை யாரும் கவனிக்க மாட்டார்கள். ஏமாற்றங்கள் அதிகம் ஏற்படும். நல்ல வாய்ப்புகளை இவராகவே தவற விடுவார்கள். முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் காரணமாக "பிரேத சாபம்" உடையவர்கள்.

இரண்டாம் இடத்தில் மாந்தி இருந்தால்... குடும்ப அமைப்பு சரிவர இருக்காது, குடும்பத்தினர் அனைவரும் திசைக்கு ஒருவராக இருப்பார்கள். குடும்ப ஒற்றுமை குறையும். வருமானம் சொற்பமாக இருக்கும். கவலை சூழ்ந்த குடும்பமாக இருக்கும்.

மூன்றாம் இடத்தில் மாந்தி இருந்தால்... நீங்கள் ஆணாக இருந்தால் சகோதரர் இருக்கமாட்டார், பெண்ணாக இருந்தால் சகோதரி இருக்கமாட்டார், ஒருவேளை சகோதர சகோதரி இருந்தாலும் ஒற்றுமை இருக்காது. சண்டை சச்சரவுகள், விரோதம் ஏற்படும். ஆனால் அதேசமயம் எதிர்பாராத வெற்றிகளும், சிறிய முயற்சி எடுத்தாலே எளிதான வெற்றியையும் காண்பார்கள். பயணங்களில் விருப்பம் அதிகமிருக்கும். அந்தப் பயணங்களால் ஆதாயமும் உண்டாகும்.

நான்கில் மாந்தி இருந்தால் சொந்த வீடு, வாகனம் போன்றவை அமைவதில் தடங்கல்கள், சிரமங்கள் ஏற்படும். அப்படி வீடு வாகனம் அமைந்தாலும் அதில் ஏதாவது ஒரு வில்லங்கம், பிரச்சினை, குறைபாடு இருந்து கொண்டே இருக்கும். தாயாரின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும்.

ஐந்தில் மாந்தி இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும். தாமதமான புத்திர பாக்கியம் கிடைக்கும். பிற்காலத்தில் புத்திரர்களால் எந்த உதவியும் கிடைக்காமல் போகும். புத்திரர்களை பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். குலதெய்வம் அறிய முடியாமல் போகும். குலதெய்வ வழிபாட்டில் குறைகள் இருந்து கொண்டே இருக்கும். தெய்வ நம்பிக்கை இல்லாமல் போகும்.

ஆறில் மாந்தி இருந்தால் கடன் இல்லாத வாழ்க்கை, நோயற்ற வாழ்வு, பெரும் செல்வந்தராகும் வாய்ப்பு, கேட்காமலேயே உதவிகள் கிடைப்பது, சொந்தமாக தொழில் வாய்ப்பு உண்டாவது, உழைப்பில்லாத வருமானம் கிடைப்பது, உலகை வலம் வரக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பது முதலான ஏராளமான நன்மைகள் நடக்கும்.

ஏழாம் இடத்தில் மாந்தி இருந்தால் வாழ்க்கைத் துணை எண்ணத்திற்கு மாறாக நடப்பவராக இருப்பார். நண்பர்களாலும் உபத்திரம் உண்டாகும். கூட்டுத்தொழில் அறவே கூடாது. கூட்டுத் தொழில் செய்து வந்தால் ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டியது வரும். எவரிடம் பழகினாலும் அவரே எதிரியாக மாறுகிற சூழ்நிலை உண்டாகும். வீட்டிற்கு அக்கம்பக்கத்தினருடன் சுமுக நிலை இருக்காது, சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். பணிபுரியும் இடத்திலும் யாருடைய உதவியும் இல்லாமல் பணியாற்ற வேண்டிய நிலை உண்டாகும்.

எட்டாம் இடத்தில் மாந்தி இருந்தால் தேவையற்ற பிரச்சினைகள், வம்பு வழக்குகள் தேடி வந்து கொண்டே இருக்கும். அவமானங்களை அதிகம் சந்திக்க வேண்டியது வரும். செய்யாத தவறுக்கு சிறை செல்ல வேண்டியது வரும். ஜாமீன் கொடுத்தால் அவதிக்கு ஆளாகி வேண்டியது வரும். மிக மிக முக்கியமாக "நித்திய கண்டம் பூரண ஆயுசு" என்பது இந்த எட்டாமிடம் மாந்திக்கே பொருந்தும்.

ஆமாம்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உடல் உபாதைகளைச் சந்திக்க வேண்டியது வரும். அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். அறுவை சிகிச்சை போன்றவை அதிகம் உண்டாகும்.

ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால் பூர்வீகச் சொத்து எதையும் அனுபவிக்க முடியாமல் போகும். பாட்டன் சம்பாதித்த சொத்துகளை வேறு யாராவது அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்/ உங்களால் உரிமை கொண்டாட முடியாமல் போகும். தந்தை, தந்தை வழி உறவுகள் பகையாக மாறுவார்கள். தந்தையால் பெரிய அளவில் உதவ முடியாமல் போகும். இன்னும் சொல்லப்போனால் தந்தையால் எந்தவிதமான பயனும் கிடைக்காது. பதவி, கௌரவம் போன்றவை கிடைக்காமல் தட்டிப் போகும்.

பத்தாமிடத்தில் மாந்தி இருந்தால் மிகச் சிறப்பான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தோல்வியே இல்லாத வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். வெற்றிமேல் வெற்றி வந்து கொண்டே இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். புகழ் பெற்ற தொழில் அதிபராக மாறுவார்கள். ஊழியர்கள் உண்மையாக உழைப்பார்கள். உலக அரங்கில் மதிக்கத் தக்க மனிதராக இருப்பார்கள்.

பதினோராம் இடத்தில் மாந்தி இருந்தால் உலகம் முழுவதும் சுற்றி வரும் வாய்ப்பு கிடைக்கும். வசதி வாய்ப்புகளுக்கு குறை இருக்காது. செல்வம் சேரும். மிகப் பெரும் செல்வந்தராக மாறுவார்கள். உலகம் முழுக்க தொழில் வளர்ச்சி, தொழில் தொடர்புகள் இருக்கும். மிகப்பெரிய அளவிலான சாதனைகளைச் செய்வார்கள். எந்தத் தொழில் செய்தாலும் லாபம் வந்து குவிந்து கொண்டே இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும்.

பனிரெண்டாம் இடத்தில் மாந்தி இருந்தால் இந்த ஜென்மமே போதும் என்கிற அளவிற்கு மனக்கவலைகளைத் தரும். எந்த இடத்திலும்... எந்த ஊரிலும் நிலையாக இருக்க வைக்காமல் நாடோடி போன்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
நிறைய ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டியது வரும். நம்பிக்கைத் துரோகங்களை பார்க்கவைக்கும். வாழ்க்கை துணை முதல் நண்பர்கள் வரை, பெற்றோர்கள் முதல் வாரிசுகள் வரை எவராலும் நிம்மதி என்பதே இருக்காது. எடுத்த ஜென்மத்தை நிறைவு செய்வது மட்டுமே தீர்வாக இருக்கும்.

இதைப் படித்துப் பார்க்கும்போது சற்று மனக்கவலை ஏற்படுவது இயல்புதான்..! இது பொதுவான கணிப்பு மட்டுமே! மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை பெறும்போது இந்த பலன்கள் பெரும்பாலும் மாறிவிடும்.

கூடுதலான தகவல் ஒன்று சொல்கிறேன். இந்த மாந்தியானவர் சிம்ம ராசியில் இருந்தால், அந்த சிம்ம ராசி எந்த பாவமாக இருந்தாலும் கவலை இல்லை. சிம்மத்தில் அமர்ந்த மாந்தி எந்தக் கெடுதலையும் செய்வதில்லை. அதேபோல சூரியனோடு சேர்ந்து மாந்தி இருக்குமாயின் கெடுபலன்களை தருவதில்லை.

இது ஏன்? சனியின் பிள்ளை மாந்தி என பார்த்தோம். சனி... சூரியனின் மகன் ஆவார். சூரியனுக்கும் சனிக்கும் ஆகாது. இன்னும் சொல்லப்போனால் கடும்பகை. நாம் நம் குடும்பத்திலோ அல்லது உறவுகளிலோ பார்த்திருப்போம், வீட்டுக்கு எதிராக மணம் புரிந்த ஒருவரை பெற்றோர்கள் தங்களோடு சேர்த்துக் கொள்ள மறுப்பார்கள், ஆனால் ஒரு பேரக் குழந்தை பிறந்தவுடன், இந்த பேரக் குழந்தையின் மூலமாக அந்த உறவு பலப்படும் என்பதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

அதுபோல சூரியன் தன் மகன் சனியை பகையாகப் பார்த்தாலும், பேரப்பிள்ளை மாந்தியை அன்போடுதான் பார்ப்பார். தாத்தாவோடு சேர்ந்த பேரப்பிள்ளை வேறு எந்த கெடு பலனையும் சிந்திக்க மாட்டார். சூரியனின் சொந்த வீடான சிம்மத்தில் மாந்தி இருந்தால் கெடு பலன் தராது என்பதற்கும் இதுவே காரணம்.

அடுத்த பதிவில் இன்னும் சில தகவல்களுடன், பரிகாரங்களையும் பார்ப்போம்.

- வளரும்
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

37 mins ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்