குழந்தை வரத்துக்கு தடையாக இருக்கும் கிரகங்கள்; தோஷங்கள்... பரிகாரங்கள் - 9;

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

புத்திர தோஷம் பற்றிய விவரங்களைப் பார்த்து வருகிறோம். தொடர்ந்து இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

சென்ற பதிவில் புத்திர பாக்கியத்திற்குத் தடையாக இருக்கக்கூடிய கிரக அமைப்புகளைப் பார்த்தோம். குரு பகவான் புத்திரகாரகனாக இருந்தாலும், அவருடைய பார்வை பலம் இருந்தால் மட்டும் போதாது. ஜாதகத்தில் ஐந்தாமிடம் வலுவடைந்து குரு பார்வை பெற்றால்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அதேபோல ராகுவின் துணையில்லாமல் திருமணமோ, புத்திரபாக்கியமோ கிடைக்காது என்பதையும் பார்த்தோம். மேலும் சூரிய பகவான் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். செவ்வாய் என்னும் வீரியகாரகன் பலம் அடைந்தால்தான் புத்திரபாக்கியம் உறுதியாகக் கிடைக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். சுக்கிர பகவான் குழந்தை பாக்கியத்திற்கான வழிவகைகளைச் செய்யக் கூடியவர். அவர்தான் ஆணின் சுக்கிலம் என்னும் விந்து மற்றும் சுரோணிதம் என்னும் பெண்ணின் கர்ப்பப்பை என்பதை அறிந்துகொள்ளுங்கள். சுக்கிரபகவான் எந்த வகையிலும் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும்.

ஆணின் விந்துவில் இருக்கும் உயிரணுக்கள் சூரியனுடைய உயிர் காரகத்தையும், செவ்வாயின் வீரியத் தன்மையையும் பெற்றவை. அதில் நீர்த்தன்மை சுக்கிரன் மற்றும் சந்திரனின் இணைவு ஆகும். இப்படி பல கிரகங்கள் புத்திர பாக்கியத்திற்கு துணை நிற்கின்றன. இதில் புதன் பகவான் காதலையும், ராகுபகவான் காமத்தையும் குறிக்கின்றன. சிற்றின்பத்தின் உச்சநிலை சனிபகவானை குறிக்கும். அதாவது ஆழ்ந்த அமைதியான அசைவற்ற நிலை சனி பகவானையும், அதனால் ஏற்படக் கூடிய மன அமைதி, உடல் சோர்வு, சில நிமிட அசைவற்ற நிலை இவை அனைத்தும் கேதுவின் நிலையாகும். ஒன்பது கிரகங்களும் புத்திர பாக்கியத்திற்கு துணை புரிகின்றன. எனவே நவக்கிரகங்களும் ஒரு குழந்தை பிறப்பிற்கு உதவி செய்கின்றன என்பதை உணர வேண்டும்.

எனவே புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் நவக்கிரக வழிபாடு செய்வது அவசியமாகும். தினந்தோறும் கோளறு பதிகம் படித்து வருவது நல்ல பலனைக் கொடுக்கும். மிக முக்கியமாக குலதெய்வ வழிபாடு அவசியம் செய்து வர வேண்டும். எந்த நிலையிலும் குலதெய்வ வழிபாட்டை மறக்கக் கூடாது. குலம் செழிக்க குலதெய்வமே வழிகாட்டும். குலதெய்வம் தெரியாதவர்கள் எப்பாடுபட்டாவது குலதெய்வத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்கள் ஜாதகத்திலேயே குலதெய்வத்தின் அடையாளம் இருக்கும். அதன் அடிப்படையில் குல தெய்வத்தை தேடி கண்டுபிடித்து வழிபாடு செய்யத் தொடங்குங்கள். குலதெய்வம் அறிய முடியாவிட்டால் வம்ச விருத்தி என்பது இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.

மேலும் புத்திர பாக்கியம் பெறுவதற்கான ஆலய வழிபாடுகளைப் பார்ப்போம்.

செவ்வாய் பகவானின் அம்சமாக கருதப்படும் முருகப் பெருமான் வழிபாட்டை தவறாமல் செய்பவர்களுக்கு நிச்சயமாக புத்திர பாக்கியம் கிடைக்கும். திருச்செந்தூர் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் திருத்தலம், மிக முக்கிய ஸ்தலம். அனைத்து முருகன் கோயில்களும் சிறப்பு வாய்ந்தவையே.

குருபகவான் வீற்றிருக்கும் தலங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை தான். ஆலங்குடி குரு ஸ்தலம், திட்டை குரு ஸ்தலம் சிறப்பான பலன்களைக் கொடுக்கும் ஆலயங்களாகும். அதுமட்டுமல்லாமல் சிதம்பரம் அருகே இருக்கக்கூடிய ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் ஆலயமும் குருபகவானின் ஸ்தலமாகும். இந்த ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வருவதன் மூலம் புத்திர பாக்கியம் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதை உறுதியாகவே சொல்லிக் கொள்கிறேன்!

மேலும் வைத்தீஸ்வரன்கோவில் அனைத்துவிதமான நோய்களையும் தீர்க்கும் ஆலயம். இது செவ்வாய் பரிகார ஸ்தலம். எனவே நல்ல சத்தான, அறிவுக்கூர்மை மிக்க குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த ஆலயத்திற்குச் சென்று வந்தால் குழந்தை பாக்கியம் பெறுவதற்கு உண்டான தடைகளை நீக்கி, புத்திர பாக்கியத்தை நிச்சயம் அருளுவார் வைத்தியநாத சுவாமி.

மேலும் கருவின் உருவாக இருக்கும் கருமாரியம்மன் ஆலயங்கள் அனைத்தும் புத்திர பாக்கியம் நல்கும் ஆலயங்களே! சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் போன்ற ஆலயங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவையே!

அதேபோல திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பட்டூர் பிரம்மா ஆலயம் பிறவிப் பயனை அனுபவிக்கச் செய்யும் ஸ்தலம். திருப்பட்டூர் பிரம்மாவிடம் வேண்டுதல் வைக்க குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புத்திர பாக்கியத்தை அருளும் முக்கிய ஸ்தலம்.

குருவாயூர் கிருஷ்ணர் ஆலயமும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயமும் குழந்தை பாக்கியத்திற்கு வழிகாட்டக் கூடிய, வழி கிடைக்கக்கூடிய அற்புத திருத்தலங்கள். இந்த ஆலயங்களில் துலாபாரம் என்னும் வேண்டுதல் வைத்து வந்தால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். குழந்தைப் பேறு பெற்ற லட்சக்கணக்கான பேர், இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதை தினந்தோறும் காணலாம்!

அதேபோல அத்தி மரத்தை நட்டு வளர்த்து வருவதும், அத்திமரத்தை பேணிக் காப்பதும் குழந்தை பாக்கியத்தை தரும். தான தர்மங்களும் புத்திர பாக்கியத்தை தரும். அக்கம்பக்க குழந்தைகளுக்கு உணவு வழங்குதல், இனிப்புகள் வழங்குதல் போன்ற செயல்கள் புத்திர பாக்கியத்தை தரக்கூடியதாகும்.

பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் பகவானே கணவரைக் குறிக்கும் கிரகம். எனவே செவ்வாயை பலப்படுத்துவதன் மூலமாக புத்திர பாக்கியத்தை எளிதாக கிடைக்கச் செய்ய முடியும். ஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் அறிந்து அதன் சாதக பாதக பலன்களை அறிந்து செயல்பட்டால் செவ்வாயை பலப்படுத்த முடியும். உதாரணமாக ஜாதகத்தில் செவ்வாய் சூரியன் கூடியிருந்தால் கணவருக்கு உஷ்ண தேகம் இருக்கும். முன்கோபமும், எளிதில் உணர்ச்சி வசப்படுதலும் இருக்கும். தாம்பத்தியத்தில் குறுகிய நேர செயல்பாடு இருக்கும். இதன் காரணமாக புத்திரபாக்கியம் தாமதப்படும். மேலும் உடல் சூட்டின் காரணமாக உயிரணுக்களில் பலவீனம் உண்டாகும். இதை எப்படி சரிப்படுத்துவது என பார்த்தோமேயானால், கணவரின் உடல் சூட்டை தணிக்கும்படியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வதும், வாரம் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் சிறந்த பலனை தரும். அதேபோல செவ்வாய் சந்திரனோடு இணைந்து இருக்கும்போது உடல் குளிர்ச்சியைத் தரும். தாம்பத்தியத்தில் நீடித்த தன்மை இருக்காது. எனவே நீடித்த தாம்பத்தியம் பெறவேண்டுமானால் சந்திரனின் விருட்சமான கல்யாணமுருங்கை குடும்பத்தைச் சேர்ந்த முருங்கைக் கீரையை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் சரிப் படுத்த முடியும். மேலும் செவ்வாய் புதனுடன் சேர காதலும் காமமும் ஒருங்கே பெற்றவர்களாக இருப்பார்கள். எனவே பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது, செவ்வாய் குருவோடு சேர்ந்து இருந்தால் நன்மை தரக்கூடியது ஆகும். செவ்வாய் சுக்கிரனோடு இணைந்திருக்க அதீத காம எண்ணங்கள் கொண்டவராக இருப்பார். அளவுக்கதிகமான காமமும் தவறானது. எனவே அளவோடு இருக்கும்படியாக பார்த்துக் கொள்ள வேண்டும். செவ்வாய் சனி பகவான் இணைந்திருக்க தாம்பத்தியத்தில் பெரிய நாட்டம் ஏதும் இருக்காது. அதை மாற்றியமைக்கும்படியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது.

செவ்வாய் கேதுவோடு இணைந்திருக்க தாம்பத்தியத்தில் முற்றிலுமாக ஆர்வம் இருக்காது, இப்படிப்பட்ட ஜாதகத்தை தவிர்ப்பதே நல்லது, (அதேசமயம் மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை போன்ற விபரங்களை முழுமையாக அறிந்து கொண்ட பிறகே முடிவெடுக்க வேண்டும்) செவ்வாய் ராகு கூடியிருக்க அளவற்ற காம வேட்கை இருக்கும். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே! இப்படி கிரகங்கள் தாம்பத்தியத்திலும், தாம்பத்தியத்தின் மூலமாக குழந்தைப் பேறு பெறுவதற்கும் துணையாக இருக்கின்றன. எனவே பெண்கள் குழந்தை பாக்கியம் பெறுவதற்கு கிரக பலத்தையும் ஆராய்ந்து, தெய்வ நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

துர்கை வழிபாடும், முருகப்பெருமான் வழிபாடும் சிறந்த பரிகார முறைகள். அதிகாலை நேரத்தில் அரசமரத்தை 48 முறை சுற்றி வருவதன் மூலமும் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டாகும். எறும்புப் புற்றுக்கு வெல்லம் பொட்டுக்கடலை கலந்து தருவதால் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் வந்து சேரும். கர்ப்பிணிகளுக்கு அவர்கள் விரும்புவதை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதன் மூலம் அவர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்று குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது உண்மை.

மேற்கண்ட ஆலய பரிகாரங்களை முறையாகச் செய்து, நம்பிக்கையோடு வணங்கி வந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

அடுத்த பதிவில் வேறொரு தோஷ விளக்கங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன்!

- வளரும்
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்