- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
’தோஷங்கள்.. பரிகாரங்கள்’ என்ற இந்தத் தொடரில் இதுவரை செவ்வாய் தோஷம் மற்றும் ராகுகேது தோஷம் பற்றி பார்த்தோம்.
இந்த தோஷங்கள் இரண்டும் பாதிப்பைத் தராது என்பதையும், அதற்கான விளக்கத்தையும் முழுமையாகவே பார்த்தோம்.
» மகரம், கும்பம், மீனம் : வார ராசிபலன்கள்; ஜூன் 3 முதல் 9ம் தேதி வரை
» துலாம், விருச்சிகம், தனுசு : வார ராசிபலன்கள்; ஜூன் 3 முதல் 9ம் தேதி வரை
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது "களத்திர தோஷம்" என்னும் திருமணத்திற்கு தடையை ஏற்படுத்தும் தோஷம். இந்த தோஷம் குறித்து என்னவென்று பார்ப்போம். அதை எப்படி நிவர்த்தி செய்வது என்பதையும் விளக்கமாகப் பார்ப்போம்.
முதலில் களத்திர தோஷம் என்றால் என்ன?
களத்திரம் என்பது மண வாழ்வைக் குறிக்கும். இந்த மண வாழ்வு அமைவதற்கு ஏற்படக் கூடிய தடை தாமதங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கு மாறான வாழ்க்கைத் துணை அமைவது போன்றவையே களத்திர தோஷம்!
தடை தாமதம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகிறது? ஒருவேளை திருமணத்தை நடத்த விடாமல் தடை செய்கிறதா? அல்லது திருமணத்திற்கான ஏற்பாடுகள், முயற்சிகள் செய்து அதில் தாமதத்தை உண்டாக்குகின்றனவா? என்பதையெல்லாம் முதலில் பார்த்துவிடலாம்.
ஒருவர் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7-ம் இடத்து அதிபதி மறைவு ஸ்தானங்களான 6 மற்றும் 8 ஆகிய இடங்களில் அமர்ந்து மறைந்து போவதும், அல்லது பாப கிரகங்களான ராகு கேதுவோடு இணைவதாலும், அல்லது நீச்சம் என்னும் பலவீனத்தை அடைவதும், அல்லது உச்சம் பெற்று வக்கிரம் அடைவதால் தன் பலத்தை முழுமையாக இழப்பதுமாக, இதுபோன்ற கிரக அமைப்புகள் இருக்குமாயின் அது திருமணத்திற்கு தடையை உண்டுபண்ணும்.
அதேபோல 7-ம் இடத்தில் களத்திர காரகன் என்னும் சுக்கிரன் தனித்து இருந்தாலும் "காரகோ பாவ நாஸ்தி" (திருமணத்தை நடத்திக் கொடுப்பவர் சுக்கிரபகவான், ஏழாம் பாவகம் என்பது திருமணத்தைக் குறிக்கும். சுக்கிரன் திருமணத்தை நடத்திக் கொடுப்பவராக இருந்தாலும், ஏழாமிடத்தில் தனித்து இருந்தால் அவருடைய காரகமான திருமணம் என்பதும், ஏழாம் பாவம் என்னும் திருமண ஸ்தானமும் சேரும்போது அந்த ஏழாம் பாவகம் "காரகோ பாவ நாஸ்தி " என்னும் நிலையை அடைகிறது ) என்னும் அடிப்படையில் திருமணத்திற்கு தடையை உண்டுபண்ணும். மேலும் ஏழாமிடத்தில் சூரியனும் சந்திரனும் அமர்ந்து அமாவாசை எனும் நிலை ஏற்படும் பட்சத்தில் திருமணத்திற்குத் தடையை ஏற்படுத்தும்.
மேலும், தாமதம் என்றால் என்ன என்பதையும் பார்த்து விடுவோம். ஏழாம் இடத்தில் சனி பகவான் இருந்தாலும், கேது பகவான் இருந்தாலும், ஏழாம் அதிபதியாக வரக்கூடியவர் பாதி மறைவு ஸ்தானங்களான 3 மற்றும் 12 ஆகிய இடங்களில் இருந்தாலும், நீச்சம் அடைந்து வக்கிரம் பெற்றிருந்தாலும், (நீச்சம் அடைந்து வக்கிரம் பெற்றால் நீச்சம் நீங்கி உச்ச பலம் பெற்று, நீச்சபங்க ராஜ யோகமாக மாறும். அதேசமயம் நீச்சத்திற்கான வேலையைச் செய்த பிறகே நீச்சபங்க ராஜ யோகத்திற்கான வேலையைச் செய்யும்) இப்படிப்பட்ட அமைப்புகள் திருமணத்திற்கு தாமதத்தை உண்டு பண்ணும்.
ஒரு சிலர் திருமணம் கூடி வரும்போது அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுவதும், அல்லது சொந்த வீடு வாங்கிய பின்பே திருமணம் செய்வேன் என்று சொல்வதும், தேவையான பணம் சேமிப்பாக மாறிய பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்பதும் இந்த கிரக அமைப்புகளினால் தானே தவிர, அவருடைய சிந்தனைக்கு உட்பட்டதல்ல. இந்த கிரகங்கள் இப்படிப்பட்ட எண்ணங்களைத் தூண்டி விடும். ஜோதிடம் என்பதே வரக்கூடிய பிரச்சினைகளை உணர்ந்து அதை எப்படியாவது தவிர்க்க முயற்சி செய்யக்கூடிய காரணியாகும்.
எனவே திருமண வாய்ப்புகள் தேடி வரும்போதே திருமணம் செய்து கொள்வதே புத்திசாலித்தனம். அந்த வாய்ப்பை தவற விடும் பட்சத்தில் திருமணத்தில் தடைகள் மட்டுமல்ல, தாமதங்களும் உண்டு பண்ணும். அதுமட்டுமல்லாமல் விரும்பிய மணவாழ்க்கை கிடைக்காமல் கிடைத்த வாழ்க்கையை ஏற்று நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.
எனவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திருமண வாய்ப்புகளை சொந்தக் காரணங்களுக்காக தள்ளி வைக்காமல், திருமணத்தை சரியான காலத்தில் செய்து கொள்வதே நல்லது. ஆண்கள் அதிகபட்சம் 32 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பெண்கள் அதிகபட்சம் 27 வயதிற்குள் திருமணம் செய்ய வேண்டும். இது அனைத்தும் தவறும்பட்சத்தில் புத்திர பாக்கியம் உண்டாவதிலிருந்து, மன ஒற்றுமை ஏற்படுவது வரை நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வருகிறது. இதை ஜோதிடமாக மட்டுமல்லாமல், பல ஜாதகங்களை ஆய்வு செய்தவன் என்ற முறையில் ஒரு நல்ல ஆலோசனையாக உங்களுக்குச் சொல்கிறேன்.
அதேபோல ஏழாம் பொருத்தம் என்ற சொற்றொடரை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அது என்ன ஏழாம் பொருத்தம்..?
உங்கள் ராசிக்கு உங்கள் வாழ்க்கைத் துணையின் ராசி ஏழுக்கு ஏழாக இருந்தால் அதற்கு ஏழாம் பொருத்தம் என்று பொருள். இது என்ன செய்யும்? என்று பார்த்தோமேயானால்.. முழுமையான விளக்கத்தை அறிந்து கொண்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு ராசியும் தன் வீட்டுக்கு ஏழாம் வீடு எதிர்மறையாக வேலை செய்யும். இன்னும் சொல்லப்போனால் ஒரு கிரகம் உச்சம் அடையும் வீட்டிற்கு நேர் ஏழாம் வீட்டில் நீச்சம் என்னும் நிலையை அடைகிறது. அதுபோல இந்த ராசிகளானது தம்பதியருக்கு 7க்கு 7 ஆக இருந்தால் அவருடைய குணாதிசயம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
உதாரணமாக ஒருவர் கோயிலுக்குச் செல்லலாம் என்றால் மற்றொருவர் இன்று கோயிலுக்கு வேண்டாம் சினிமாவுக்கு போகலாம்.. என்ற கருத்தைச் சொல்பவராக இருப்பார். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எதிர் எதிர் கருத்துகளை உடையவராகவும், எண்ணங்களைக் கொண்டவராகவும் இருப்பார்கள். இதுவே ஏழாம் பொருத்தம் என்பதாகும்.
இதற்கு என்ன தீர்வு என்று பார்த்தோமேயானால் விட்டுக்கொடுத்து செல்வது மட்டுமே தீர்வாக அமையும். கணவன் மனைவி யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலமாகவே இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியும்..இதற்கு பரிகாரமாக எந்த வழியும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படவே இல்லை என்பதுதான் உண்மை.
அதேபோல, ஆண்கள் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் அடைந்து இருந்தாலும், கேதுவோடு இணைந்திருந்தாலும் திருமணப் பற்று ஏற்படாது. பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கேதுவுடன் இணைந்து இருந்தாலும், சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகியிருந்தாலும் பெண்களுக்கு திருமணத்தில் நாட்டம் இருக்காது.
மேலும் ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் குரு கேது இருந்தாலும், சனியும் கேதுவும் இருந்தாலும், லக்னத்துக்கு பனிரெண்டாம் இடத்தில் சூரியன் கேது இணைந்து இருந்தாலும் அதை சந்நியாசி ஜாதகம் என்பார்கள். அதாவது திருமணத்தில் நாட்டம் இல்லாமல் போகும். ஆன்மிகச் சிந்தனைகள் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் ஆண் கிரகங்களாக கருதப்படும் சூரியன், செவ்வாய், குரு இந்த மூன்று கிரகங்களும் நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனத்தில் இருந்தாலும் அவர்களுக்கு திருமண பந்தத்தின் மீது பற்று இருக்காது.
அதேபோல ஏழாம் அதிபதி நீச்சம் அடைந்து இருந்தாலும், புதன் கேதுவோடு இருந்தாலும் அவர்களுக்கும் திருமண ஆசை இருக்காது. ஒருவேளை கோச்சார கிரகங்களின் துணையுடன் அல்லது தசாபுத்தி வலுவாக வரும் காலத்திலும் திருமணம் நடந்தாலும், பிற்காலத்தில் இல்லற வாழ்க்கையை விடுத்து துறவற வாழ்க்கையை மேற்கொள்வார்கள்.
இங்கே துறவற வாழ்க்கை என்பது வீட்டைவிட்டு தேசாந்திரம் செல்வது மட்டுமல்ல, வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் தனிமையில் இருப்பவராக, இல்லறத்தை தவிர்ப்பவராக, ஆன்மிக சிந்தனையோடு காலத்தைக் கழிப்பவர்களாக இருப்பார்கள்.
இப்போது உங்களுடைய கேள்வி என்னவாக இருக்கும்? இதை பரிகாரம் மூலம் சரிசெய்ய முடியாதா? என்பதாகத்தான் இருக்கும், நான் ஒவ்வொரு பதிவிலும் வலியுறுத்துவது போல விதி மதி கதி என்னும் நிலையில் விதியை மாற்ற இயலாது என்பதே என்னுடைய பதில்.
விதிக்கப்பட்டதை அனுபவித்து தான் தீர வேண்டும். பரிகாரங்கள் மூலமாக சரியாகுமா? என்றால் அது மதி என்னும் கோச்சார காலத்திற்கு மட்டுமே பொருந்தும். இப்படி கோச்சார காலத்தில் செய்யப்படும் பரிகாரங்களால் கிடைக்கும் பலன்கள் தான் "கதி" என்பதாகும். எனவே அனைத்திற்கும் பரிகாரம் எதிர்பார்ப்பது கூடாது. இயலாது. ஆனாலும் பரிகாரங்கள் மன அமைதியையும் ஒரு நிம்மதியையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அடுத்த பதிவில் மேலும் தகவல்களுடன், பரிகாரங்கள், பரிகாரத்திற்கு தொடர்புடைய ஆலயங்கள் என விரிவாகப் பார்ப்போம்.
- வளரும்
***************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago