உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 13

By செய்திப்பிரிவு

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

திருவாதிரை நட்சத்திரம் பற்றி கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் புனர்பூசம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாக மற்றும் விரிவாகப் பார்க்கலாம்.

புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரம் வான மண்டலத்தில் வளைந்த வில் போலவும், பெரிய நாய் போலவும், மூங்கில் குழாய் போன்ற தோற்றத்திலும் காணப்படும். இது இரண்டு நட்சத்திரங்கள் இணைந்தது போல வானில் காணப்படும். இதற்கு லத்தீன் மொழியில் castor மற்றும் polax என்ற பெயருண்டு. புனர்பூசம் நட்சத்திரம் வானமண்டலத்தில் நீல நிறத்தில் பளிச்சிடும் வண்ணத்தில் காணப்படும்.

இந்த நட்சத்திரம் ஆண் மற்றும் பெண் ராசியாகிய மிதுனம் மற்றும் கடகத்தில் ராசி மண்டலத்தில் அமைந்து இருக்கும் நட்சத்திரம் ஆகும். இதற்கு தமிழில் கழை என்ற பெயருண்டு. கழை என்றால் தமிழ் மொழியில் மூங்கில் என்று பொருள். மேலும் வேறு பரிமாணத்தில் இந்த நட்சத்திர மண்டலத்தின் அருகில் இருக்கும் canis major நட்சத்திர மண்டலம் நாயைப் போல காட்சியளிக்கிறது.

கடந்த அத்தியாயத்தில் விவரித்திருந்த பகீரத தவம் இந்த நாய் உருவத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. மாமல்லபுரத்தில் காணப்படும் பகீரத தவம் பற்றிய கல்வெட்டில், பல்லவர்கள் இந்த நாய் உருவத்தை செதுக்கி வைத்திருக்கின்றனர்.

திருவாதிரை நட்சத்திரம் என்பது சிவனாரைக் குறிக்கும். அவரது சிகை மூலம் கங்கை பூமிக்கு வந்த நிகழ்வு மிதுன ராசி மண்டலத்தில் தொடங்கி, கடக ராசி மண்டத்தில் நிகழ்ந்ததாக இந்தச் சிற்பம் விவரிக்கிறது. அந்தச் சிற்பத்தில் ஆகாயத்தில் இருந்து பெரும் பிரவாகமாய் கங்கை சீறிப் பாய்ந்து வர அதனை பூமியில் இருந்து அமர்ந்த நிலையில் வானம் பார்த்தபடி இருக்கும் நாய் உருவத்தைக் காணலாம்.

காலபைரவரின் வாகனம்
புனர்பூசத்தின் இன்னொரு பெயர் மிருகவியாதர் ஆகும். கால பைரவ உருவத்திற்குரிய நட்சத்திரம் திருவாதிரை. ஆகவேதான் காலபைரவர் தனது உடலில் மண்டை ஓடுகளைத் தாங்கி நிற்கிறார். திருவாதிரை நாயகனான கால பைரவருக்கு, அவரது சம்பத்து தாரை மிருகவியாதர் எனும் புனர்பூசம் நட்சத்திரம் ஆகும். எனவே அவரது காலுக்கடியில் மிருகவியாதர் எனும் நாய் இருக்கிறது.

நாய்க்கு உணவிடும் பரிகாரம் - புனர்பூச தாரை சூட்சுமம்

புனர்பூசம் நாயின் வடிவம் என்பதால், உத்திரட்டாதி, பூசம் மற்றும் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நாய்க்கு தினமும் உணவிட பல சிக்கல்களுக்கு வழிகாட்டுதல்கள் இயற்கையாகவே கிடைப்பதை அறியலாம்.

சதயம், திருவாதிரை மற்றும் ஸ்வாதி நட்சத்திரத்திற்கு புனர்பூசம் சம்பத்து தாரை ஆகும். நட்சத்திரத்தில் பிறந்தவர் நாய்க்கு உணவிட சர்வ சம்பத்துகள் (வளங்கள்) பெறுவதை அறியலாம்.

பரணி, பூரம் மற்றும் பூராடம் நட்சத்திரத்திற்கு புனர்பூசம் சாதக தாரை ஆகும். மேற்கண்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் நாய்க்கு உணவிட தொழில் மற்றும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கான சாதகமான சூழல் உருவாகும்.

ரோஹிணி, அஸ்தம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்திற்கு புனர்பூசம் க்ஷேம தாரை ஆகும். எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாய்க்கு உணவிட, காரியத்தில் வெற்றி கிட்டும்.

ஸ்ரீராமர் போருக்கு தேர்ந்தெடுத்த நட்சத்திரம்

உங்கள் நட்சத்திரத்திலிருந்து எண்ணிக்கொண்டே வந்தால், 6,15,24 நட்சத்திரங்கள் சாதக தாரை ஆகும். போராட்டங்கள் முடிவுக்கு வர சாதக தாரை தெய்வ வழிபாடு அல்லது சாதக தாரை வடிவம் அல்லது சாதக நட்சத்திரம் மிகவும் சிறந்தது.

இதற்கு புராண கால உதாரணமாக ராமாயணத்தில் ஒரு சம்பவத்தைக் கூறலாம்.

சீதையை தூக்கிச் சென்ற ராவணன் இருப்பிடம் அறிந்த ஸ்ரீ ராமர். தனது வானரப் படைகளின் உதவியால் பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைகிறார். அனுமன் தூது சென்று சமரசம் பேசி வழிக்கு வராத ராவணன் போரையே விரும்புகிறான். போர் செய்ய ராமர் நேரம் மற்றும் காலம் தேர்ந்தெடுக்கிறார்.

ஜோதிடப் புலவரான வால்மீகி இதனை நயம்பட ராமாயணத்தில் உரைக்கிறார். தனது ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம் என்பதால் தனது சாதகமான நட்சத்திரம் எது என்பதைத் தெளிவாக ராமபிரான் அறிந்திருந்தார்.

புனர் பூசத்தின் சாதக தாரைகள் முறையே உத்திரம், உத்திராடம் மற்றும் கார்த்திகை. தனது கடக ராசிக்கு உப ஜெய ஸ்தானமான கன்னி ராசியில் இருக்கும் உத்திர நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து போர் தொடங்கத் திட்டமிடுகிறார். அதுபோல வெற்றியும் பெறுகிறார்.

ஆகவே புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதியில் பிறந்த நபர்கள் நீண்ட நாள் போராட்டமான நிகழ்வுகளை சாதகமாக மாற்ற உத்திரம், உத்திராடம் மற்றும் கார்த்திகை நட்சத்திர நாட்களைப் பயன்படுத்தலாம்.

அடுத்த கட்டுரையில் பூசம் நட்சத்திரம் பற்றிய அரிய தகவல்களை தெளிவாகவும் விரிவாகவும் காணலாம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE