தோஷங்கள்... பரிகாரங்கள்!  -  5

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

"தோஷங்கள் பரிகாரங்கள்" என்ற இந்தத் தொடரில் சென்ற பதிவில் ராகு-கேது தோஷம் என்னும் சர்ப்ப தோஷம் பற்றிய விவரங்களைப் பார்த்தோம்.
தொடர்ந்து மேலும் சில தகவல்களைப் பார்ப்போம்.

நிறைய வாசகர்கள் "காலசர்ப்பதோஷம்" என்கிறார்களே... அதற்கும் இந்த விதிமுறைகள் பொருந்துமா? அதாவது சென்ற பதிவின் விளக்கங்கள் பொருந்துமா" எனக் கேட்டிருக்கிறார்கள். முதலில் 'காலசர்ப்பதோஷம்" என்றால் என்ன என்பதைப் பார்த்து விடலாம்,

கால சர்ப்பதோஷத்தில், தோஷம் தரும் "கால சர்ப்பதோஷம்" மற்றும் யோகத்தைத் தரும் "கால சர்ப்பயோகம்" என இரண்டு வகை உள்ளது.

ஒருவர் ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு உள்ளாக அனைத்து கிரகங்களும் லக்னம் உட்பட இருந்தால்... அது கால சர்ப்ப தோஷம் ஆகும். இதில் ஒரு கிரகம் வெளியே வந்து விட்டாலும்... லக்னம் உட்பட, அதாவது ராகு கேதுவைத் தாண்டி வெளியில் ஒரு கிரகம் வந்துவிட்டாலும் கால சர்ப்பதோஷம் வேலை செய்யாது.

இங்கே இரண்டு படங்கள் உள்ளன. ராகு கேதுக்குள்ளாக அனைத்து கிரகங்களும் இருப்பது தெரியும். இதில் ராகு கேது கடிகாரச் சுற்றுக்கு எதிராக வலம் வருபவர்கள் (anti clock) என்பது நாம் அறிந்ததே! அதன்படி ராகு அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அது "காலசர்ப்பயோகம். மாறாக கேதுவின் ஆதிக்கத்தில் அனைத்து கிரகங்களும் வந்தால் அது "காலசர்ப்பதோஷம்!" இந்த இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

ஆனால் தோஷமோ.. யோகமோ, எதுவாக இருந்தாலும் முழுமையாக தோஷத்தையும் தருவதில்லை, அதேபோல முழுமையான யோகத்தையும் தருவதில்லை! பின் எப்படி தன் கடமையைச் செய்கிறார்கள்?

உதாரணமாக ராகுவை எடுத்துக் கொள்வோம்.

பிறந்ததிலிருந்து 18 ஆண்டுகள் ராகுவானவர் யோகத்தைத் தருவார், இந்த பதினெட்டு ஆண்டுகள் என்பது குழந்தைப் பிராயமாக இருப்பதால் தந்தைக்கு யோகத்தைத் தரும். அடுத்த 18 ஆண்டுகள் சோதனை தருவதாக இருக்கும். மீண்டும் அடுத்த 18 ஆண்டுகள் யோகத்தைத் தரும்.

இப்படி மாற்றி மாற்றிப் பலன்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும். அதேபோல கேது தன் பணியைத் தொடங்கும்போது முதல் பதினெட்டு ஆண்டுகள் கடுமையான சிரமங்களையும், பாதிப்புகளையும் ஜாதகருக்கும்- ஜாதகரின் பெற்றோருக்கும் தருவார், அடுத்த 18 ஆண்டுகள் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இந்த சுற்று ஒவ்வொரு 18 ஆண்டுகளுக்கும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும்.

உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் வலுவாக இருந்து விட்டால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. அதேபோல குருபகவானும் சரியான இடத்தில் இருந்து விட்டால் இந்தப் பிரச்சினைகள் என்பதே இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும் திருமணம் போன்ற விஷயங்களுக்கு இந்த கால சர்ப்ப தோஷம் எந்த விதத்திலும் பாதிப்பை உண்டாக்குவது இல்லை என்பதை முழுமையாக நம்பலாம்.

எனது இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் குறைந்தபட்சம் 1000 ஜாதகங்களாவது மனதுக்குள்ளேயே சேமித்து வைத்திருக்கிறேன். இந்த சர்ப்பதோஷம் இருக்கின்ற ஒருவருக்கு (ஆணோ, பெண்ணோ) சர்ப்பதோஷம் இல்லாத மற்றொருவரை (ஆண் / பெண்) திருமணம் செய்து மிக்க மகிழ்ச்சியுடன்தான் இருந்திருக்கிறார்கள். சர்ப்பதோஷம் எந்தவகையிலும் அவர்களை பாதிக்கவில்லை என்பதே உண்மை.

சரி, அப்படியானால் இந்த சர்ப்பதோஷம் எப்படிப்பட்ட பாதிப்புகளை தரும்? என்பதையும் பார்த்து விடுவோம்..!

லக்னத்தில் ராகு இருந்தால் அதிக ஆசையைக் கொண்டவர். கனவு உலகில் சஞ்சரிப்பது, எப்போதும் பிரம்மாண்டமாக யோசித்துக் கொண்டிருப்பது என்று இருப்பார். உதாரணமாக குடியிருக்க வீடு இருந்தால் போதும் என்று நினைக்காமல், அரண்மனை போன்ற வீட்டில் வாழ வேண்டும் என்ற ஆசை கொண்டவராக இருப்பார். எந்தவொரு விஷயத்திலும் தானே முதன்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். மற்றவர்களிடமிருந்து மதிப்பு மரியாதையை கூட கேட்டு பெறுபவராக இருப்பார். அதற்காக சற்றும் தயங்க மாட்டார். மொத்தத்தில், தாமே எல்லாமும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பார். ஆக லக்னத்தில் ராகு இருந்தால் இந்த குணம் என்றால்..! ஏழாம் இடத்தில் கேது இருக்கும் அல்லவா!

அப்படியானால் வரக்கூடிய வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருப்பார். அதையும் பார்த்து விடலாம். வரக்கூடிய வாழ்க்கைத்துணை அமைதியானவர். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாதவராக இருப்பார். அவருடைய குறைகளை சுட்டிக்காட்டுவதாகவும் இருப்பார். திருத்துவதற்குத் தேவையான முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் ஒருவித சலிப்புத் தன்மைகளைத் தந்து நெருக்கத்தைக் குறைக்கச் செய்வார். ஆனாலும் எந்த வகையிலும் தன் வாழ்க்கைத் துணையை விட்டு தரமாட்டார், இதுதான் ஏழாமிடத்து கேது செய்யக்கூடியது ஆகும்.

இரண்டில் ராகு இருந்தால் அவருடைய குணாதிசயம் எப்படி இருக்கும்? அதையும் பார்ப்போம். இரண்டில் ராகு இருக்கும் ஜாதகர் பேசியே எதையும் வெல்லக் கூடியவராகவும், வார்த்தை ஜாலங்களால் மற்றவர்களை கவரக் கூடியவராகவும் இருப்பார். பலசமயங்களில் அடுத்தவர்களை காயப்படுத்திப் பேசுபவராகவும், குடும்பத்தில் பலவிதமான பிரச்சினைகளுக்கு காரணமாகவும் இருப்பார்.

பணம் சம்பாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்கமாட்டார். குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு செல்லுதல் வேறு மாநிலங்களுக்குச் செல்வது போன்றவை இருக்கும். குடும்பத்தில் அதிக அக்கறையைக் காட்டமாட்டார், தான்தோன்றித்தனமாக செயல்படுபவர்களாக இருப்பார். இவையெல்லாம் இரண்டில் ராகு இருந்தால் நடக்கக் கூடியது. அப்படியானால் வாழ்க்கைத் துணையாக வரக்கூடிய ஏழாமிடத்தில் இருக்கும் கேது, ஜாதகப்படி அது எட்டாம் இடமாக இருக்கும். அந்த எட்டாம் இடத்தில் அமர்ந்த கேது என்ன செய்வார் என்றால் ஜாதகரின் எதிர்பார்ப்புகளுக்கு எதிர்மறையான காரியங்களைச் செய்வார். கணவன் மனைவி பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலைகளை ஏற்படுத்துவார். ஆகவே தம்பதி இடையே அதிக ஒட்டுதல் இல்லாமல் இருக்கும். சிறிய பிரச்சினை கூட பெரிய அளவில் சச்சரவாக மாற்றக் கூடியவராக வாழ்க்கைத் துணை இருப்பார். ஆனாலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு பிரச்சினை ஏதும் இருக்காது, சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அனுசரித்துச் செல்ல கூடிய குணாதிசயம் இருக்கும்.

லக்னத்தில் கேது இருந்து ஏழாம் இடத்தில் ராகு இருந்தால் எப்படிப்பட்ட பலன்களை தருவார்கள்?

லக்னத்தில் கேது இருந்தால் அதிக எதிர்பார்ப்புகளும் இல்லாதவராக, சகலமும் பெற்றவராக, தன்னலம் கருதாதவராக, பிறருக்கு உதவி செய்வதில் முதன்மையானவராக இருப்பார். அரசனையும் ஆண்டியையும் சமமாக பாவிக்கும் மனம் கொண்டவராக இருப்பார். அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல கூடியவராகவும், தனிமை விரும்பியாகவும் இருப்பார்.

வாழ்க்கைத் துணையாக வரக்கூடியவர் எப்படி இருப்பார் என்று கேட்கிறீர்கள்தானே. அதாவது 7ஆம் இடத்தில் ராகு இருப்பதால் எப்படிப்பட்ட குணநலன்களுடன் வாழ்க்கைத் துணை வருவார்? பற்றற்ற மனநிலையில் இருக்கும் இந்த ஜாதகரை தன் வயப்படுத்தி தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய திறமை வாய்ந்தவராக வாழ்க்கைத் துணை இருப்பார். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று இருப்பவரை ஆசையே இன்பத்துக்கு காரணம் என மாற்றும் முயற்சியில் ஈடுபடுவார். தன் பேச்சுக்கு கட்டுப்படும்படியாக ஜாதகரை முற்றிலுமாக மாற்றுவார்.

அடுத்து இரண்டாம் இடத்தில் கேது இருந்து எட்டாம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன்? என பார்ப்போம்.

இரண்டில் கேது இருந்தால் குடும்ப உறவுகள் மீது பற்றற்றவராகவும், அளவாகப் பேசுபவராகவும், யார் எதைக் கேட்டாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லுபவராகவும் இருப்பார். எதிலும் ஆர்வமில்லாதவராக இருப்பார். எட்டில் ராகு இருந்து வரக்கூடிய வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருப்பார்? இவருக்கு நேர்மாறாக அதிகம் சம்பாதிக்கக் கூடியவராகவும், குடும்பத்தை வழிநடத்திச் செல்பவராகவும் இருப்பார். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில், உடல்நலனில் அக்கறை காட்டுபவராகவும், ஜாதகரின் வம்பு வழக்கு, வீண் பிரச்சினைகள் அனைத்தையும் சமாளிக்க கூடியவராகவும் இருப்பார்.

ஆக மொத்தம் ராகு கேது தோஷத்தினால் கணவன் மனைவி ஒற்றுமைக்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்பதை இவற்றில் இருந்து புரிந்துகொள்ளலாம். எல்லாக் குடும்பத்திலும் இருப்பதுபோல சிற்சில சச்சரவுகள், கசப்புகள் இவர்கள் வாழ்க்கையிலும் இருக்கத்தான் செய்யும், அனைத்தும் கலந்து இருப்பதுதானே வாழ்க்கை. எனவே தோஷத்திற்கு முக்கியத்துவம் தராமல் குணநலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருமணத்தை அமைத்தால் சிறப்பாக இருக்கும்.

ஆனாலும் சர்ப்ப தோஷங்களுக்கு எந்த மாதிரியான ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம்?

ராகுவின் ஆலயங்களாக திருநாகேஸ்வரம் மற்றும் திருப்பாம்புரம் அமைந்துள்ளது. இந்த ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் சென்று இறைவனை வழிபட ராகுவின் தோஷம் விலகி நன்மைகள் நடக்கும்.

சீர்காழி - மயிலாடுதுறை சாலையில் இருக்கும் கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயம் கேது பரிகார ஸ்தலமாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு சனிக்கிழமையில் சென்று இறைவனை தரிசித்தால் கேதுவின் தோஷம் நீங்கி நன்மைகள் நடக்கும்.

ஸ்ரீகாளகஸ்தி, ராகு-கேது இருவருக்குமான ஸ்தலமாக இருக்கிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று வருவது ராகு கேதுவின் தோஷம் வீரியத்தைக் குறைக்கும். மேலும் கேதுவின் ஆதிக்கத்தை குறைத்துக்கொள்ள காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்திற்கு சென்று வருவது நல்ல பலன்களைத் தரும்.

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீ துர்கை வழிபாடும், புற்று உள்ள அம்மன் ஆலயங்கள், கருமாரியம்மன் ஆலயம், நாகாத்தம்மன் ஆலயம் முதலான கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருவது ராகு கேதுவின் வீரியத்தைக் குறைத்து நன்மைகளை அதிகப்படுத்தித் தரும்.

அடுத்த பதிவில் இன்னும் பல விளக்கங்களைச் சொல்கிறேன்.

- வளரும்
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE