தோஷங்கள்... பரிகாரங்கள்! ராகு கேது தோஷம் என்ன செய்யும்? - 4

By செய்திப்பிரிவு

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே!

’தோஷங்கள்.. பரிகாரங்கள்!’ எனும் இந்தத் தொடரில், இப்போது நாம் பார்க்க இருப்பது சர்ப்பதோஷம் என்னும் ராகு-கேது தோஷம்!
முதலில் ராகு கேதுக்கள் ஜாதக கட்டத்தில் எந்த இடத்தில் இருந்தால் தோஷம் தருவார்கள் என்பதை பார்த்துவிடுவோம்.

லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும், அதற்கு ஏழாமிடத்தில் ராகு/ கேது இருந்தாலும், இரண்டாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும், எட்டாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும், ஐந்தாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும் தோஷத்தைத் தரும். இதையே சர்ப்ப தோஷம் என்று சொல்வார்கள்.

லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதற்கு 7ம் இடத்தில் ராகு அல்லது கேது கண்டிப்பாக இருப்பார்கள். காரணம் ராகு கேது என்பவர்கள் 180 டிகிரி கோணத்தில் நிரந்தரமாகச் சுற்றி வருபவர்கள். எனவே ராகு இருக்கும் இடத்திற்கு ஏழாம் இடத்தில் கேது இருப்பதும், கேது இருக்கும் இடத்திற்கு 7ம் வீட்டில் ராகு இருப்பதும் இயல்பான ஒன்றாகும்.

அப்படி லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து, ஏழாமிடத்தில் ராகு /கேது இருந்தால் திருமணத்தடை ஏற்படும். லக்னத்தில் இருக்கும் ராகு/ கேது அந்த ஜாதகரின் வளர்ச்சியைத் தடுத்து விடும் அல்லது நிலையான சிந்தனைகளையும் செயல்களையும் ஏற்படுத்த விடாது, 7ம் இடத்தில் ராகு /கேது இருந்தால் வாழ்க்கைத் துணை சரியாக புரிந்துகொள்ள முடியாதவராகவும், எதிர்வினை ஆற்றுபவராகவும், குடும்பத்தோடு இணைந்து செல்ல முடியாதவராகவும் இருப்பார் என ஜோதிட சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

இரண்டாம் இடத்தில் ராகு /கேது இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. பணப்பிரச்சினை அதிகரிக்கும். குடும்பம் விருத்தி அடைவதில் பிரச்சினைகள் ஏற்படும். எட்டாம் இடத்தில் இருக்கும் ராகு/ கேதுவால் கணவன் அல்லது மனைவிக்கு ஆபத்து நேரிடும். அவமானங்கள் உண்டாகும். நிம்மதியற்ற வாழ்க்கை உண்டாகும் என்று சொல்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

ஐந்தாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர பாக்கியம் பெறுவதில் தாமதம் ஏற்படும் அல்லது புத்திர பாக்கியம் இல்லாமல் போகும் என்பதும் இந்த தோஷத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. இவை சரியானதுதானா என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

இது உண்மையில் தோஷம்தானா..? என்பதைப் பிறகு பார்ப்போம், ஆனால் ஏன் இந்த அமைப்பு ஜாதகத்தில் ஏற்படுகிறது? அதாவது சர்ப்ப தோஷம் ஏன் ஏற்படுகிறது? என்பதை முதலில் பார்த்துவிடலாம்.

உங்கள் மூதாதையர்கள் அதாவது அப்பா, தாத்தா, முப்பாட்டன் என யாராவது புற்றை இடித்திருந்தாலும், அல்லது முன் ஜென்மத்தில் நீங்கள் புற்றை இடித்திருந்தாலும், உங்கள் முன்னோர்கள் பாம்பை அடித்துக் கொன்றிருந்தாலும் அல்லது இணை சேர்ந்த பாம்பைப் பிரிக்கும் நோக்கில் அடித்து விரட்டி இருந்தாலும் சர்ப்ப தோஷமானது பரம்பரை பரம்பரையாகத் தொடரும் என்று ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் ஜோதிட நூல்களில் இப்படியான எந்த விளக்கமும் இல்லை. மாறாக குணாதிசயங்கள், செயல்பாடுகள் போன்றவற்றில் மட்டுமே இந்த ராகு கேதுக்கள் விளைவை ஏற்படுத்துகின்றன என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகு கேது என்பவர்கள் யார்?

சூரியனின் தந்தையான காசியப முனிவருக்கும் அசுரப் பெண்ணுக்கும் பிறந்தவர்தான் ராகு கேது. அப்போது அவர்களுடைய பெயர் சுவர் பானு. மகாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்து தேவர்களுக்கு மட்டும் அமுதத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, இதை கவனித்த சுவர்பானு தேவர்கள் வரிசையில் நின்று அமுதத்தை பருகினான். இதை சூரியனும் சந்திரனும் மோகினியிடம் சுட்டிக்காட்டவே தனது சக்கராயுதம் மூலம் சுவர்பானுவை இரண்டாக வெட்டி வீழ்த்தினார். தலை வேறு, உடல் வேறாக இருந்த சுவர்பானுக்கு அமுதம் உண்டதால் மரணம் ஏற்படவில்லை. இரண்டாக இருந்த உடல் கூறுக்கு தலைப்பகுதி ராகு, உடல் பகுதிக்கு கேது என பெயர் சூட்டப்பட்டு கிரக அந்தஸ்தை கொடுத்தார் மகாவிஷ்ணு. புராணத்தின்படி நாமறிந்த கதை.

அறிவியலின்படி சூரியனை பூமி சுற்றி வருவது நாம் அறிந்ததே! அதேபோல சந்திரன் பூமியைச் சுற்றி வருவதையும் நாம் அறிவோம். இந்த பூமியின் சுற்றுவட்டப்பாதையிலும், சந்திரனின் சுற்றுவட்டப்பாதையிலும் வெட்டிக்கொள்ளும் இரு புள்ளிகளையே ராகு கேது என அழைக்கிறோம்.

இதனால்தான் ராகு கேதுக்களுக்கு உருவமில்லை. அவர்களுக்கென்று சொந்த வீடு இல்லை. கிரக வரிசையில் இருந்தாலும் அவர்கள் கோள் வடிவாக இல்லை..! ஆனாலும் இந்த இரண்டு வெட்டு புள்ளிகளும் பூமியின் மீது அதாவது நம் மீது அளவற்ற அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது. இன்னும் சொல்லப்போனால் மற்ற ஏழு கோள்களும் தருகின்ற அதிர்வுகளை இந்த ராகு கேதுக்கள் தனக்குள் உள்வாங்கி அவர்கள்தான் இந்த பூமிக்குத் தருகிறார்கள். எனவே இந்த ஏழு கோள்களும் எதைத் தருவதாக இருந்தாலும் அது நல்லதோ, தீமையோ எதுவாக இருந்தாலும் ராகு கேதுக்களின் அனுமதி பெற்றுத் தான் தர முடியும் என்பது அறிவியலின் கோட்பாட்டின்படி புரியவைக்கப் படுகிறது.

இந்த ராகு-கேது தோஷம் திருமணத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து பார்க்கப்படுகிறது, உண்மையில் ராகு கேதுக்களின் உதவி இல்லாமல் திருமணம் என்பது நடக்காது. நீங்கள் இதுவரை குருபார்வை, குருபலம் கிடைத்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்றுதான் தெரிந்து வைத்திருப்பீர்கள்!
உண்மையில் ராகுவின் உதவியில்லாமல் எவருக்கும் திருமணமும் நடக்காது. அதேபோல புத்திர பாக்கியத்திற்கு ராகுவின் உதவியே மிக முக்கியம். இதை உங்கள் ஜாதக அமைப்பைக் கொண்டும், உங்களுக்கு திருமணம் நடந்த காலகட்டத்தில் கோச்சார ராகு/ கேது எந்த இடத்தில் இருந்தார்கள் என்பதை வைத்து நீங்களே அறிந்து கொள்ள முடியும்!

திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்திற்கு ராகு-கேதுவே காரணம்..! ஏன்? எப்படி? பார்க்கலாம்..; ராகு என்பது பிளந்த அமைப்பு ஆகும், அதாவது பெண்களின் யோனியைக் குறிப்பதாகும், கேது என்பது நீண்டு இருக்கக்கூடிய பகுதியாகும், (கை விரல்கள், கால் விரல்கள்) ஆணுறுப்பு போன்றவை கேதுவின் அம்சம் ஆகும். எனவே ஆண் உறுப்பான கேதுவும், பெண் உறுப்பான ராகுவின் யோனியும் சேர வேண்டுமானால் கோச்சாரத்தில் ராகு கேதுக்கள் உதவி செய்தால் மட்டுமே திருமணம் நடந்தேறும்..! அதேபோல புத்திர பாக்கியமும் இவர்களின் உதவியோடு தான் கிடைக்கும்.! அப்படியானால் குருவானவர் என்ன செய்வார் என்றால்..!? அவர் இந்த நிகழ்வுகளுக்கு துணையாக இருப்பார், அதில் எந்தத் தடைகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே அவருடைய பணியாகும்.

இப்போது நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.!! இப்படி திருமணத்திற்கு மிக முக்கிய காரணியாக விளங்கும் ராகு-கேதுக்கள் திருமணத் தடைக்கு எப்படி காரணம் ஆவார்கள்? எனவே இந்த ராகு கேது தோஷம் என்பது எந்தவகையிலும் திருமணத் தடைக்கு தொடர்பில்லை என்பதை நிச்சயமாக நம்பலாம்..!

ராகு கேது பரிகார ஸ்தலம் என சொல்லப்படும் ஸ்ரீகாளகஸ்தியில், சுமார் இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எந்தவிதமான பரிகாரங்களும் நடத்தப்படவில்லை. அப்படியே பரிகாரங்கள் நடந்தால் 1, 2 பேர் மட்டுமே பரிகாரம் செய்து கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் தற்போது சுமார் 7, 8 இடங்களில் அதாவது அந்த ஆலயத்திற்கு உள்ளேயே 7, 8 இடங்களில் ராகு கேது தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்யப்படுவது கண்டு வியப்புதான் மேலிடுகிறது.
திருமணத்திற்கு மூல காரணமாக இருப்பவர்கள் தடையாக எப்படி இருக்க முடியும்? என்பது எனக்கு இன்னமும் ஆச்சர்யத்தை தந்து கொண்டிருக்கிறது, மேலும் புத்திர பாக்கியத்திற்கு அவர்களே முழுமுதற் காரணமாக இருக்கும் போது அவர்கள் எப்படி புத்திர பாக்கியத்தை தடை செய்வார்கள்? இதுவும் எனக்கு புரியாத புதிரே..! ஆச்சர்யங்கள் நிறைந்ததுதானே இந்த உலகம்!

செவ்வாய் தோஷத்திற்கு லக்னம் மற்றும் ராசி இரண்டுக்குமே பார்க்கப்பட்டு வருகின்ற வேளையில், இந்த ராகு கேது தோஷத்திற்கு லக்னத்தை மட்டுமே குறித்து வைத்து பார்க்கிறார்கள். ஏன் ராசியை வைத்துக் கொள்ளவில்லை என்பதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? காரணம், இந்த தோஷத்தை ராசிக்கும் பார்க்க ஆரம்பித்தால் நம்மில் ஒருவருக்குக் கூட இந்த தோஷம் இல்லாமல் இருக்காது. எனவே சில திட்டமிடல்களுடன் இந்த ராகு கேது தோஷத்தை லக்னத்திற்கு மட்டும் பார்க்கும்படியாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.

ராகு கேது தோஷம் என்பது நிச்சயமாக தோஷத்தை தராது. சந்தோஷத்தை மட்டுமே தரும் என்பது உண்மை!

அடுத்த பதிவில் இன்னும் பல தகவல்களோடு உங்களை சந்திக்கிறேன்..!

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்