- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே!
சென்ற பதிவில் செவ்வாய் தோஷம் பற்றி முழுமையான விளக்கத்தைப் பார்த்தோம்.
செவ்வாய்தோஷம் என்பதே கிடையாது, ஆகவே யாருக்கும் செவ்வாய் தோஷம் கிடையாது... ஒரு சிலரைத் தவிர... என்கிற முழுத் தகவலையும் பார்த்தோம்.
இப்போது செவ்வாய்க்கு உண்டான ஆலயங்கள், தெய்வங்கள் முதலான விஷயங்களைப் பார்ப்போம்.
» பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; மே 3 முதல் 9ம் தேதி வரை
» மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள்; மே 3 முதல் 9ம் தேதி வரை
அப்படியானால் இது பரிகாரத்தில் வருமா? என்று கேட்டால் இதை பரிகாரம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். நூறில் ஒருவர்... ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை.. லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த செவ்வாய் தோஷம் இருக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு இதை பரிகாரமாக எடுத்துக்கொள்ளலாம், மற்றவர்கள் செவ்வாய் கிரகத்தைக் கொண்டு நம் வாழ்க்கையை பலப்படுத்துவதற்காகவும் இந்தப் பிரார்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
சரி... செவ்வாயை ஏன் பலப்படுத்த வேண்டும்..?
செவ்வாய் என்ற கிரகம் பலமாக இருந்தால் மட்டுமே ஒருவருக்கு சொந்த வீடு எனும் யோகம் அமையும். காரணம்... செவ்வாய் என்பவர் பூமிகாரகன். இந்த பூமிகாரகனின் ஆதரவு பெற்றால் மட்டுமே சொந்த வீடு அமையும் பாக்கியம் கிடைக்கும்.
அதுமட்டுமல்ல... சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகவும், சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், பாகப்பிரிவினைகள் நியாயமாக நடக்கவும், சொத்துகளை விற்கும்போது நல்ல ஆதாயம் பெறவும், பூமி தொடர்பான தொழில் செய்பவர்கள் அதாவது ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்பவர்களும் செவ்வாயின் பரிபூரண ஆசி இருந்தால் மட்டுமே அனைத்தும் எளிதாக நடக்கும்.
மேலும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும், விவசாய இயந்திரங்கள் ( டிராக்டர், அறுவடை இயந்திரங்கள், விவசாய கொள்கலன்கள், விவசாயக் கருவிகள்....! ) தொடர்பான தொழில் செய்பவர்களுக்கும் செவ்வாய் பகவானே காரணமாகிறார். எனவே இவர்களுக்கும் செவ்வாயின் பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நல்ல ஆதாயத்தைப் பெற முடியும்.
மிக முக்கியமாக.. பெண்களுக்கு செவ்வாய் என்ற கிரகமே கணவரை குறிப்பதாகும். எனவே கணவரின் உடல் நலம், பொருளாதார வளம், நீண்ட ஆயுள் போன்றவற்றைப் பெறுவதற்கும் செவ்வாயின் அருளாசி மிகமிக முக்கியம்.
சரி, செவ்வாய் எந்த விஷயத்திற்கெல்லாம் காரணமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம். இப்போது செவ்வாய் என்பவர் நவக்கிரகத்தில் மட்டும்தானே இருக்கிறார். வேறு ஏதாவது சிறப்பு ஆலயங்கள் இருக்கிறதா? என்ற கேள்வி எழலாம்.
செவ்வாயானவர் நவக்கிரகத்தில் மட்டும் ஒரு கிரகமாக வீற்றிருக்கிறார், ஆனால் அவரின் அம்சங்களாக பல தெய்வங்கள் இருக்கின்றன. அவர்களைப் பற்றிய விபரங்களைச் சொல்கிறேன்.
செவ்வாயின் அம்சமாக முதன்மையில் இருப்பவர் முருகப் பெருமான். அடுத்ததாக ஸ்ரீபைரவர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீதுர்கை மற்றும் கருமாரி அம்மன் என செவ்வாயின் அம்சம் கொண்ட தெய்வங்கள்!
ஜாதகத்தில் 12 ராசிகளும் ஆண், பெண் என பிரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆண் ராசிகள், பெண் ராசிகள் என இருக்கின்றன. இதில் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த ஆறு ராசிகளும் ஆண் ராசிகள் என்றும்; ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஆறு ராசிகளும் பெண் ராசிகள் என்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் ஆண் ராசிகளில் அமர்ந்திருந்தால் ஆண் தெய்வங்களான முருகன், பைரவர், சக்கரத்தாழ்வார் முதலானோரை வழிபாடு செய்வதும், பெண் ராசிகளில் செவ்வாய் இருந்தால் ஸ்ரீதுர்கை, ஸ்ரீகருமாரியம்மன் போன்ற தெய்வங்களை வணங்கி வருவதும் நல்ல பலன்களைத் தரும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் (லட்சத்தில் ஒருவர் என்று சொன்னேனே அவர்களுக்காக) ஜாதகத்தில் செவ்வாய் ஆண் ராசியில் அமர்ந்து தோஷம் தந்தால்.. செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் பகவானுக்கு உரிய ஸ்தலமான வைத்தீஸ்வரன் ஆலயம் சென்று வழிபடலாம். அருகில் உள்ள முருகன் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதும் விசேஷமானது. பெண் ராசிகளில் அமர்ந்து தோஷம் தந்தால்.. செவ்வாய் தோறும் துர்கை வழிபாடு செய்வது, தோஷத்தின் வீரியத்தை குறைத்து, திருமணத் தடைகளை நீக்கி, விரைவாக திருமணம் நடைபெற வழிவகைகள் பிறக்கும்.
வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நிறைவேற வேண்டுமானால் செவ்வாய்க்கிழமைதோறும் முருகப் பெருமான் வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வரவேண்டும். விரைவாக சொந்த வீடு அமையும். உங்களுக்கு அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தாலே போதும்... குறிப்பாக சென்னைக்கு அருகே இருக்கக்கூடிய சிறுவாபுரி முருகன் ஆலயத்திற்கு தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை சென்று முருகக் கடவுளைத் தரிசித்தால் நிச்சயமாக சொந்த வீடு அமையும்.
மேலும் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில், குரு பலத்தோடு கூடிய சக்தி கொண்டவராக கந்தக் கடவுள் அருளாட்சி செய்யும் அற்புதத் திருத்தலம். எனவே அந்த திருச்செந்தூர் முருகனை வணங்கி வந்தாலும் சொந்தவீடு விரைவாக அமையும். மேலும் சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள், வில்லங்கங்கள், வழக்குகள் நடந்து கொண்டிருந்தாலும் திருச்செந்தூர் முருகன் மற்றும் அருகில் உள்ள முருகன் ஆலயங்களுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் சென்று முருகப் பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டி, நெய்தீபம் ஏற்றி வணங்கி வந்தால் விரைவில் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிரிகள் காணாமல் போவார்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்பவர்கள் திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டு வாருங்கள்.
கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு போன்றவற்றைப் பெறுவதற்கு சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை தரிசியுங்கள். ,
திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் பெறவும் திருத்தணி முருகக் கடவுளைத் தரிசித்து வாருங்கள்.
தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, வியாபாரத்தில் வளர்ச்சி, போன்றவற்றை பெறுவதற்கு பழநி பாலதண்டாயுதபாணியை தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள்.
மன அமைதி, குடும்ப ஒற்றுமை, தேக ஆரோக்கியம் போன்றவற்றை பெறுவதற்கு பழமுதிர்ச்சோலை முருகப் பெருமானை வணங்குங்கள்.
மேற்கண்ட அனைத்தையும் பெறுவதற்கு திருச்செந்தூர் முருக வழிபாடு மிகச் சிறந்த பரிகாரம்.
மேலும் பட்டீஸ்வரம் துர்க்கை வழிபாடும், ஆலயத்திற்கு சென்று அன்னையை தரிசிப்பதும் செவ்வாயின் உதவியை மிக எளிதாக பெறமுடியும். கடன் பிரச்சினைகள் தீரும், நோய்கள் தீரும், சொந்த வீடு அமையும், திருமணத் தடைகள் அகலும், பெண்ணின் மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும், கேட்ட வரத்தை கேட்டபடியே கிடைக்கச் செய்யும் ஆலயம் ஆகும்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் ஆலயத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் தரிசனம் செய்வதும்,
திருவிடைமருதூர், கதிராமங்கலம், நறுவெளி அருகில் இரட்டை கால பைரவர் ஆலயம் மற்றும் காசி மாநகரில் கால பைரவர் எட்டு திசைகளிலும் அமர்ந்து ஆட்சி செய்கிறார், அந்த அஷ்ட பைரவர்கள் வணங்குவதும் மிகச் சிறந்த நன்மைகளை வாரி வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை,
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம்.. சிவாலயம் என்றே நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம்! உண்மையில் அது சிவாலயம் மட்டுமல்லாமல் முருகனுக்கும் உகந்த ஆலயம் ஆகும்..! மேலும் செவ்வாயின் பரிபூரண சக்தியைப் பெற்ற அக்னி ஸ்தலம் ஆகும், அக்னி செவ்வாயின் அம்சம் என்பது நாம் அறிந்ததே! எனவே திருவண்ணாமலையை கிரிவலம் வந்தாலும், ஆலய தரிசனம் செய்தாலும் செவ்வாயின் ஆசி மட்டுமல்லாமல் சிவபெருமான் மற்றும் முருகனின் ஆசீர்வாதமும் முழுமையாக கிட்டும், பாவங்கள் நீங்கும், மோட்சம் கிட்டும், பொருளாதார பிரச்சனைகள் தீரும், மன நிம்மதியும், மனநிறைவும் கிடைக்கும்.
செவ்வாய் கிரகத்தின் விருட்சம் கருங்காலி மரம், இந்த கருங்காலி மரத்தை முடிந்தவரை நட்டு வளர்ப்பதும், கருங்காலி மரத்திற்கு நீரூற்றி வருவதும் நல்ல பலன்கள் கிடைக்கும். கருங்காலி மரம் மட்டுமல்லாமல் மகாவில்வம் என்னும் மரத்தை நட்டு வளர்ப்பதும் நல்ல பலன்களை கிடைக்கச் செய்யும்.
மேலும் செவ்வாய் நம் உடலில் இருக்கும் ரத்தத்தை குறிப்பவர் ஆவார். எனவே ரத்த தானம் செய்து வந்தாலும் செவ்வாயின் அனுக்கிரகம் முழுமையாக கிட்டும். மேலும் விபத்தில் காயம் பட்டவர்களுக்கு உதவி செய்வது, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றுவது போன்ற உதவிகள் செய்வது புண்ணியம் மட்டுமல்லாமல், செவ்வாயின் அருளாசியும் சேர்ந்து கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பெண்களுக்கு சிறப்பு தகவல்களாக சிலவற்றைச் சொல்கிறேன்.
மனித உடலில் இருக்கக் கூடிய ரத்தம், எலும்புகள், பற்கள், நகங்கள், புருவம் இவை அனைத்தும் செவ்வாயின் அம்சம். எனவே பெண்கள் தங்களுடைய நகத்தை சீராக வைத்துக் கொள்வதும், பற்களை சரியாகப் பராமரிப்பதும், புருவத்தை நேர்த்தியாக வைத்துக் கொள்வதும் செவ்வாயின் பரிபூர்ண பலனைப் பெறச்செய்யும்.
மேலும் வீட்டின் சமையலறை செவ்வாயின் அம்சம்! எனவே, சமையலறையை மிக நேர்த்தியாகவும், சுத்தமாகவும், பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி சுத்தமாக வைத்திருப்பதும் செவ்வாய் பகவானின் முழுமையான ஆசிகள் கிடைக்கச் செய்யும்.
இவற்றையெல்லாம் சரிவர பராமரித்து வந்தால் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். மனநிறைவு கிடைக்கப் பெறுவீர்கள்! முருகப் பெருமானின் ஆட்சி உங்கள் வீட்டில் வியாபித்திருக்கும்!
மேலும் பல தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.
- வளரும்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
32 mins ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago