தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: மேஷ ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)

By ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராஜா, அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி& செவ்வாய்
மந்திரி - புதன்,
ஸஸ்யாதிபதி - சுக்கிரன்
ரஸாதிபதி - சூரியன்
தான்யாதிபதி - குரு
நிரஸாதிபதி - சுக்கிரன்

நிகழும் மங்களகரமான பிலவ வருடம் சிசிர ருதுவுடன் உத்திராயணப் புண்ணிய காலம் நிறைந்த செவ்வாய்க்கிழமை இரவு மணி 1.32க்கு (விடிந்தால் புதன் கிழமை) 13.4.2021 சுக்கில பட்சத்து துவிதியை திதியில், கீழ்நோக்குள்ள பரணி நட்சத்திரத்தில், மேஷம் ராசியில், மகர லக்கினத்திலும், நவாம்சத்தில் மேஷம் லக்னம், கன்னி ராசியிலும், ப்ரீதி நாமயோகம், கௌலவம் நாமகரணத்திலும் சனிபகவான் ஓரையிலும், ஜுவனம் நிறைந்த நாளிலும், சித்த யோகத்திலும் பஞ்சபட்சியில் வல்லூறு ஊன் புரியும் நேரத்தில், சுக்கிர மகாதிசையில் சனிப்புத்தி, சந்திரன் அந்தரத்தில் பெருமைமிகு பிலவ வருடம் பிறக்கிறது.

பாடல்

“பிலவத்தின்மாரி கொஞ்சம் பீடைமிகும் ராசர்
சலமிகுதிதுன்பந் தருக்கும் நலமில்லை
நாலுகாற்சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மை
பாலுமின்றிச் செய்புவனம் பாழ்.”

என்று சித்தர்பிரான் இடைக்காடர் பொதுவாகக் கூறியுள்ளார். இந்த வருஷப் பிறப்பின் போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் சுக்கிரன் இருப்பதால் மழை பொழியும், மண் செழிக்கும், மகசூலும் உண்டு. ராஜாவாக செவ்வாய் வருவதால் உலகெங்கும் நிம்மதியற்ற போக்கு நீடிக்கும். மக்கள் ஒருவித பீதியுடன் வாழ்வார்கள். ஒருபக்கம் மழையும், மறுபக்கம் வறட்சியும் தீவிபத்துகளும், நிலச்சரிவும் சாலை விபத்துகளும் அதிகரிக்கும். பெண்கள் அரசியலை விட்டு ஒதுங்குவார்கள்.

இந்த வருடம் பிறக்கும்போது லக்கினத்துக்கு இரண்டில் குரு இருப்பதால் கடந்த ஆண்டை விட, மக்களிடையே பணப்புழக்கம். தொழில், வியாபாரம் வளரும், வங்கிக்கடன் உடனுக்குடன் கிடைக்கும். லக்கினத்தில் சனி ஆட்சிப் பெற்றிருப்பதால் நோய் விலகும். கரோனா பயம் குறையும். ஆனால் செவ்வாயின் போக்கு சரியில்லாததால் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்று நோய் அதிகரிக்கும். காது வலியால் பலர் பாதிக்கப்படுவார்கள்.

புதன் வலுவிழந்திருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள், ஆன்மிகக் கூடங்கள், மடங்கள், கோயில்கள் பல புதிய கட்டுப்பாடுகளுடன் இயங்கும். ரியல் எஸ்டேட் சுமார்தான். வாகன உற்பத்தி அதிகரிக்கும். ஐந்தில் ராகு நிற்பதால் தியேட்டர், பீச் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு தடைகள் ஏற்பட்டு பின்னர் படிப்படியாகப் பயன்பாட்டுக்கு வரும். விவசாயிகளுக்கு பல வகையில் நஷ்டமும் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை போராட்டங்களும் அதிகரிக்கும்.

மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் உற்பத்தி அதிகமாகும். காவல் துறை, ராணுவம் வளரும். அன்னிய சக்திகளால் நாட்டில் குழப்பங்களும் கலகங்களும் வெடிக்கும். தொழிற்சாலை மற்றும் சுரங்கங்கள் அதிக லாபம் அடையும். ஆனால் தொழிலாளர்கள் மத்தியில் போராட்டம் இருக்கும். தண்ணீரால் புனித ஸ்தலங்கள் மூழ்கும். சிறுபான்மையினரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நாட்டின் ஏற்றுமதி அதிகமாகும்.

மேஷ ராசி வாசகர்களே

உதட்டளவில் உளறாமல் இதயத்தால் பேசும் நீங்கள், குலம், கோத்திரம் பார்க்காமல் பாசமுடன் பழகுபவர்கள். எடுத்த வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருந்து சாதிக்கும் நீங்கள், இலக்கியம், இசை, ஆன்மீகம் என அனைத்திலும் ஆர்வம் கொண்ட சிறந்த கலா ரசிகர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே சுக்கிரன் நிற்கும்போது இந்த பிலவ ஆண்டு பிறப்பதால் அழகு, இளமை கூடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இந்த வருடம் திருமணம் கூடி வரும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவது நல்ல விதத்தில் முடியும். ஆனால் உங்கள் ராசியிலேயே இந்த பிலவ வருடம் பிறப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது வீண் படபடப்பு, தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும்.

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும்வரை குரு, உங்கள் ராசிக்கு 11-ல் தொடர்வதால் இக்காலகட்டத்தில் குடும்பத்தில் சந்தோஷம் கரைபுரளும். பழைய தவறெல்லாம் தொடராதபடி கவனமாக இருப்பீர்கள். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வருமானம் நாலா பக்கத்திலிருந்து வந்து குவியும். அடகில் இருந்த நகைகளை மீட்கும் அளவுக்கு வருமானம் உயரும். புதுரக ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். அரசாங்க நெருக்கடிகள், காவல்துறையின் கண்காணிப்புகள் நீதிமன்றத்தின் சம்மன்கள் இவற்றிலிருந்து விடுபடுவீர்கள்.

உலோக வியாபாரத்தில் இறங்கு பவர்களுக்கு ஏற்றம் உண்டு. 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு 10-ல் தொடர்வதால் மற்றவர்களின் விவகாரத்தில் தலையிட்டு வீணாகச் சிக்கிக்கொள்ளாதீர்கள். வேலைச் சுமை கூடும். உங்களின் வேலைகளை உடனுக்குடனே முடிப்பது நல்லது. குடும்பத்துக்கு நெருக்கமானவர்களிடம்கூட உங்கள் ரகசியங்களைப் பகிரவேண்டாம்.

இப்போது ராகு மற்றும் கேது இருக்கும் இடமும், அடுத்து பெயர்ச்சியாகும் இடமும் சரியில்லாததால் வருமானம் அதிகரித்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கத்தான் செய்யும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம், பெறுமையைக் கடைபிடிக்க வேண்டும். எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.
இந்த வருடம் முழுக்க சனிபகவான் 10-ல் தொடர்வதால் குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசி குறைநிறைகளை அலசி ஆராய்வீர்கள். சுற்றத்தினர் மத்தியில் செல்வாக்கு பெருகும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை வாங்குவீர்கள். உங்களைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த எதிர்மறை எண்ணங்கள் விலகும். சாதிக்கும் ஆற்றலும் பிறக்கும்.

மார்கழி, பங்குனி மாதங்களில் வீடு, மனை வாங்குவீர்கள். சிலர் வீட்டை விரிவுப்படுத்துவார்கள். உடன் பிறந்தோரின் ஆதரவு பெருகும். நவீனரக எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வெளிநாட்டுக்குச் செல்லும் முயற்சி தடைப்பட்டதே, இனி எல்லாம் கூடி வரும். வி.ஐ.பி.க்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாட்களாக நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். பிதுரார்ஜிதச் சொத்துக்கள் கிடைக்கும்.

வியாபாரத்தில் வைகாசி, ஆனி மாதங்களில் அதிரடி லாபத்தைக் காண்பீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நாசூக்காக வசூலிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். தை, பங்குனி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் உங்களைக் கோபப் படுத்தும்படிப் பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். உங்களின் நெடுநாள் கனவான பதவி உயர்வும், சம்பள உயர்வும் வருட மத்தியில் உண்டு.

எப்போதும் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
இந்த தமிழ்ப் புத்தாண்டு உடல்நலக் குறைவுகளை தந்தாலும்! பணப்புழக்கம், செல்வாக்குடன் பதவியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆஞ்சநேயரை சனிக் கிழமையில் சென்று திரவியப்பொடி அபிஷேகம் செய்து வணங்குங்கள். நீர் மோர் தானமாகக் கொடுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்