பிலவ வருடம்; 2021 தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்; தனுசு ராசி அன்பர்களே! எதிலும் வெற்றி; எதிர்ப்புகள் அகலும்; கடன் தீரும்; தொழில் உயரும்; புகழ் சேரும்! 

By செய்திப்பிரிவு

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


தனுசு ராசி வாசகர்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தர இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

பிலவ ஆண்டுக்கான புத்தாண்டுப் பலன்கள், புத்தாண்டின் போது இருக்கக்கூடிய கிரக நிலைகளையும் அடுத்து இந்த ஆண்டு முழுவதும் கிரகங்களின் நகர்வுகளைக் கொண்டும் கணிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு பிறக்கும்போது உங்கள் ராசி அதிபதி குரு பகவான் மகர ராசியில் இருந்து அதிசாரத்தில் கும்ப ராசியில் இருக்கிறார், இரண்டாமிடத்தில் சனி பகவான், நான்காமிடத்தில் புதன், ஐந்தாம் இடத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் என மூன்று கிரகங்களும், ஆறாமிடத்தில் ராகு பகவான், 7-ம் இடத்தில் செவ்வாய் பகவான், 12-ஆம் இடத்தில் கேது பகவான் என கிரகங்கள் அணிவகுத்து இருக்கின்றனர்.
குறிப்பாக உங்கள் ராசியதிபதி குரு பகவான் மகரத்தில் நீச்சமாக இருந்து, இப்பொழுது கும்ப ராசிக்கு அதாவது மூன்றாம் இடத்திற்குச் சென்று தன் நீச்ச அந்தஸ்தை மாற்றி வலுவாக மாறுகிறார், 3-ம் இடம் என்பது ஒரு மனிதனின் வெற்றியை, அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளைச் சொல்லும்.

இந்த ஆண்டு முழுக்க உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் ஆட்சி பெற்று இருப்பதாலும், அது ஏழரைச்சனி காலத்தில் சாதனையாகப் பார்க்கப்படுவதால் குடும்ப உறவுகள் பலப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

இல்லத்தில் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். உங்கள் ராசிக்கு பாதகாதிபதியாக வரக்கூடிய புதன் பகவான் நீச்சம் அடைந்து இருப்பதால், உங்களுக்கு எதிராக செய்யப்படும் எந்த பாதக செயல்களும் உங்களை பாதிக்காது.

ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மூன்று கிரக சேர்க்கை இருப்பது அதிக நன்மைகளை உண்டாக்கும். அதிலும் பாக்கியாதிபதி சூரியன் உச்சம் பெற்று இருப்பதும், எட்டாம் அதிபதி சூரியனோடு சேர்ந்து இருப்பதும், ஆறுக்கும், 11 க்கும் அதிபதியான சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் இருப்பதும் உங்களுடைய ஆரோக்கியப் பிரச்சனைகள், குறைபாடுகள் அனைத்தும் முழுமையாக விலகும்.

எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் அனைத்தும் காணாமல் போகும். இனி எதிர்ப்பு என்பதே இல்லாத நிலை உருவாகும். தந்தையின் உதவியும், பக்கபலமும் முழுமையாகக் கிடைக்கும். அவருடைய ஆதரவுடன் பலவித சாதனைகளைச் செய்வீர்கள். தந்தைவழி உறவுகளிடம் ஏற்பட்ட பகை உணர்ச்சி மாறி ஒற்றுமை பலப்படும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் சாதகமாகும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். எதிர்பாராத புகழ் சேரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

குடும்ப உறவுகள் பலப்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். வாழ்க்கைத் துணையிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் மாறி மீண்டும் ஒற்றுமை ஏற்படும். சகோதர சகோதரிகள் இணக்கமாக இருப்பார்கள். அவர்களுடைய பிரச்சினைகளை நீங்கள் முன்னின்று தீர்த்து தரக் கூடிய வாய்ப்பு உண்டாகும். இதன் மூலம் சகோதர ஒற்றுமை பலப்படும்.

பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பதை கண்முன் உணர்வீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி அடையும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரும்.

அலுவலகப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றி தங்களுக்கான அடையாளத்தைப் பெறுவீர்கள். உங்களுடைய முக்கியத்துவத்தை உயரதிகாரிகள் உணர்ந்து கொள்வார்கள். குழுவாகப் பணியாற்றும் வாய்ப்பு உண்டாகும். அந்தக் குழுவுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு எளிதாக கிடைக்கும்.

எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வு ஊதிய உயர்வு மிக எளிதாகக் கிடைக்கும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். அரசு அதிகாரிகளாக இருந்தால் உங்களுக்கு பதவி உயர்வு மட்டுமல்லாமல் அரசு கௌரவம் கிடைக்கும். பாராட்டுகள் கிடைக்கப்பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்பு தந்து கொண்டிருந்தவர்கள் காணாமல் போவார்கள். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றி அடையும். வெளிநாடுகளுக்கு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இப்போது மிக எளிதாக கிடைக்கும்.

தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். இதுவரை பல விதமான இழப்புகளுக்கு ஆளாகி இருந்திருப்பீர்கள், நெருக்கடிகள் அதிகரித்திருக்கும், ஊழியர்களின் ஒத்துழைப்பு சரிவர கிடைக்காமல் தவித்து கொண்டிருந்த நிலை அனைத்தும் மாறி தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

புதிய தொழில் நுட்பம் வாய்ந்த ஊழியர்களை பணியில் அமர்த்துவீர்கள். உற்பத்தி செய்த பொருட்களில் ஏற்பட்ட குறைபாடுகளை மாற்றி தரமான பொருட்களை உற்பத்தி செய்வீர்கள். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களும், உதிரி பாகங்களைச் செய்யும் தொழில் நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியைப் பெறும். தொழில் மீது ஏற்பட்டிருந்த கடன் சுமை வெகுவாகக் குறையும். பங்கு வர்த்தகத் தொழில் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் இருப்பவர்களும் நிதானமான வளர்ச்சியை நிச்சயம் காண்பார்கள், இதுவரை ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீண்டு வருவார்கள்.

வியாபார வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டியது வரும். புதிய கிளைகள் தொடங்குவது போன்றவை நடக்கும். சிறு வியாபாரிகள் முதலானோர் அனைவருக்கும் சீரான வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.
துணிக்கடைகள், நகைக்கடைகள், அழகுசாதனப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் விற்பனை போன்ற வியாபாரிகளுக்கு வெகு சிறப்பான வளர்ச்சி இருக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு அபரிமிதமாக இருக்கும். கடன் பிரச்சினை படிப்படியாக தீரும். வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த தேவையான வங்கிக் கடன் கிடைக்கும். உணவகம் நடத்தி வருபவர்களும், உணவு தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் சீரான வளர்ச்சியைப் பெறுவார்கள்.

விவசாயத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு விவசாயத்தில் எதிர்பார்த்த வருமானம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். விவசாயத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். உற்பத்தியான விளைபொருட்கள் நல்ல விலைக்கு விற்கும். விவசாய இடுபொருட்கள் தடையில்லாமல் கிடைக்கும். அரசு சலுகைகள் கிடைக்கும்.
இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு மேலும் வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். தங்கள் விவசாயப் பணியை மேலும் விரிவுபடுத்தும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும். விவசாய இயந்திரங்களைக் கொண்டு தொழில் செய்பவர்களுக்கு மேலும் புதிய இயந்திரங்களை வாங்கி தொழிலை விருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்குத் தேவையான அனைத்து உதவிகளும், அரசு மானியமும், வங்கிக் கடனும் மிக எளிதாகக் கிடைக்கும்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு சீரான வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் தோன்றும். அதற்கான சோதனை முயற்சியாக பல விஷயங்களைச் செய்து பார்ப்பீர்கள். அனைத்து வகை உதவிகளும் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சிறப்பாக இருக்கும். தனியாக ஊடகப் பணிகள் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாகவே இருக்கும்.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல ஒப்பந்தங்களாக மாறுவதற்கு காலதாமதம் ஆனாலும் உறுதியாக அந்த வாய்ப்புகள் முழுமையாகக் கிடைக்கப் பெறுவீர்கள். ஊதியம் குறைவாக இருந்தாலும் கிடைக்கின்ற வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஊதியத்தை காரணம் காட்டி வாய்ப்புகளைத் தவற விட வேண்டாம். கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பும் உங்களுக்கு முன்னேற்றத்தை தருவதாகவே அமையும் என்பது உறுதி.

பெண்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக இந்த பிலவ ஆண்டு இருக்கும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் திருப்புமுனையாக சில சம்பவங்கள் நடக்கும். அதனால் உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். நல்ல பணியில் இல்லையே என்று தவித்தவர்களுக்கு இப்போது நல்ல பணி கிடைக்கும்.

அரசு உத்தியோகத்திற்கு முயற்சி செய்தாலும் கிடைக்கும் சூழல் உள்ளது. சுயதொழில் செய்யும் ஆர்வமுள்ள பெண்களுக்கு இப்போது சுயதொழில் தொடங்குவதற்கான காலம் சிறப்பாக இருக்கிறது, வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கூட்டாக தொழில் செய்வது அல்லது கூட்டு வியாபாரம் செய்வது என்பதைத் தவிர்க்க வேண்டும். சுய தொழில், சுய வியாபாரம் என செய்தால் நிச்சயமாக முன்னேற்றத்தைக் காணலாம். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக் கூடிய அளவிற்கு உங்களுடைய பொருளாதார நிலை செழிப்புடன் இருக்கும் என்பது உறுதி.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். ஞாபகசக்தி அதிகரிக்கும். உங்கள் திறமைகள் முழுமையாக வெளிப்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மிக எளிதாக உயர்கல்வியை முடிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தவறிய பாடங்களை இப்போது எழுதி தேர்ச்சி அடையலாம்.

பொதுவாக தனுசு ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது. ஆனால் இப்போது ஒரு சிலருக்கு அலர்ஜி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக மருந்துகளால் ஏற்படும் அலர்ஜி, அழகுசாதன பொருட்களால் ஏற்படக்கூடிய அலர்ஜி போன்றவை ஏற்படும். தோலில் கரும்புள்ளிகள் வரும் வாய்ப்பு உள்ளது. முழங்காலில் வலி மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உள்ளது.

வணங்கவேண்டிய தெய்வம் :
திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி குரு பகவானை வழிபாடு செய்யுங்கள். வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களில் தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சிறப்பான பலன்கள் கிடைக்கும். நன்மைகள் பெருகும். தடைகள் அகலும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்