பிலவ வருடம்; 2021 தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் - கன்னி ராசி அன்பர்களே! உறவு பலப்படும்; புது வீடு கட்டுவீர்கள்; கடன் பிரச்சினை தீரும்; ஆரோக்கியத்தில் கவனம்! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

கன்னிராசி வாசகர்களுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த பிலவ ஆண்டு உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களை தரப் போகிறது என்று பார்ப்போம்.

புத்தாண்டு பிறக்கும் சித்திரை 1ம் தேதி அன்று கிரக நிலைகளைப் பார்ப்போம்.

உங்கள் ராசி அதிபதி புதன் உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான மீனத்தில் நீச்சம் என்னும் அந்தஸ்தில் இருக்கிறார். மூன்றாம் இடத்தில் கேது பகவானும், 9-ம் இடத்தில் ராகு பகவானும் இருக்கிறார்கள்.

ஐந்தாமிடத்தில் சனி பகவான், 6-ம் இடத்தில் அதிசாரத்தில் சென்ற குரு பகவான், 8-ம் இடத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் என மூன்று கிரகங்களும், பத்தாம் இடத்தில் செவ்வாய் என கிரகங்கள் அணிவகுத்து இருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் ராசி அதிபதி நீச்சம் அடைந்ததும், எட்டாம் இடத்தில் மூன்று கிரக சேர்க்கையும், ஆறாமிடத்து குருவும் ஒரு சில இடைஞ்சல்களை ஏற்படுத்தித் தருவது போல் தோன்றும். ஆனாலும் இவை அனைத்தும் அடுத்து ஒரு சில நாட்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே முதல் மாதம் மட்டுமே அதாவது சித்திரை மாதம் மட்டுமே ஒரு சில சிக்கல்களையும் தேவையில்லாத பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதன் பிறகு அந்த சிக்கல்களிலிருந்து மிக எளிதாகவே விடுபட்டு வெற்றி நடை போடுவீர்கள். இது பொதுப்பலன் என்ற பார்வையில் பார்த்தோமேயானால் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு பலவித நன்மைகளையும் யோகங்களையும் தரக் கூடியதாகவே அமைந்திருக்கிறது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப ஒற்றுமை பலப்படும். சித்திரை மாதத்தில் மட்டும் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து விடுங்கள். குடும்பத்தினர் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து தந்து விடுங்கள். சித்திரை மாதத்திற்குப் பின் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல், பிரச்சினைகளும் இல்லாமல் குடும்பம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.

இந்த பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டில் உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். சொந்த வீடு வாங்குவது முதல் கடன் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருவது வரை அனைத்தும் மிக எளிதாக நிறைவேறும்.

சகோதர ஒற்றுமை பலப்படும். ஆனாலும் இளைய சகோதரரிடம் இணக்கமாக இருந்து உறவாடுவது நல்லது. தாய் தந்தையின் உடல்நலம் ஆரோக்கியத்துடன் சிறப்பாகவே இருக்கும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும்.

ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சில உடல்நல பிரச்சினைகள் வந்தாலும் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் முற்றிலுமாக மருத்துவச் செலவுகள் இல்லாமலேயே போகும். அதேபோல உங்களுடைய ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது.
வாழ்க்கைத்துணையின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து அவர்களுடைய தேவைகளைச் சரிவர செய்து தாருங்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்களுடைய கல்வி வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் இப்போது அவர்களுக்கு திருமணம் நடக்கும்.

இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் இப்போது விலகி விடும். பூர்வீகச் சொத்து விஷயங்களிலும் பாகப்பிரிவினைகளிலும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வதால் உங்களுக்கான பங்கு மிகச் சரியாக கிடைக்கும்.

வீண் சர்ச்சைகளில் ஈடுபட்டு தேவையற்ற வழக்கு போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்பதற்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நெருக்கடி தந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் முயற்சி செய்தால் மிக எளிதாக வீட்டை கட்டி குடியேறுவீர்கள். குலதெய்வ வழிபாட்டை தொடர்ச்சியாக செய்து வாருங்கள்.

நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். இப்போது பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணி நிரந்தரம் எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது பணி நிரந்தரம் கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மேலும் சில மாதங்கள் காத்திருந்து அதாவது ஆவணி மாதத்தில் சுயதொழில் தொடங்கினால் மிக எளிதாக முன்னேற்றத்தைக் காண முடியும்.

தற்போது தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். தொழில் ஒப்பந்தங்கள் நன்றாகவே கிடைக்கும். தொழில் நிறுவனத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு வெகு சிறப்பாக இருக்கும். மேலும் ஊழியர்களை பணியமர்த்தும் வாய்ப்பு உள்ளது. புதிய தொழில்நுட்பம் வாய்ந்த பொறியாளர்கள், இயந்திரங்கள் உங்கள் தொழிலகத்தில் சேரும் வாய்ப்புகள் உள்ளன. அயல்நாட்டு நிறுவனங்களில் இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பும் உண்டு.

விவசாயிகளுக்கு மிகச்சிறந்த முன்னேற்றம் காத்திருக்கிறது. புதிய விவசாய முறைகளைக் கையாண்டு விவசாய வளர்ச்சிக்கு வித்திடப் போகிறீர்கள். இயற்கை விவசாயம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் விவசாயத் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வாய்ப்புகள் உள்ளன. பணப் பயிர்கள் மூலம் எதிர்பார்த்ததைவிட அதிக ஆதாயம் கிடைக்கும். விவசாய இயந்திரங்கள் கொண்டு தொழில் செய்பவர்களுக்கு மேலும் புதுமையான இயந்திரங்களைப் பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்தும் சூழல் உருவாகும்.

வியாபாரிகளுக்கு மிகச் சிறந்த வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவதும், புதிய வியாபார வாய்ப்புகள் பெறுவதும் நடந்தேறும். வியாபார ரீதியாக பயணங்கள் அதிக அளவில் ஏற்படும். அப்படிப்பட்ட பயணங்களால் ஆதாயம் முழுமையாக கிடைக்கும். பெரு நிறுவனங்களின் வியாபார வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு பலமாக இருக்கிறது, சரியாக பயன்படுத்தி உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம், கட்டுமானத் தொழில், மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில், உணவு உற்பத்தித் தொழில், பயணங்கள் தொடர்பான தொழில் என அனைத்துத் தொழிலும் மிகச் சிறப்பான வளர்ச்சியை காண இருக்கிறது. குறிப்பாக பங்குவர்த்தகத்தில் மிக அதிகப்படியான ஆதாயம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு படிப்படியான வளர்ச்சிகள் இருக்கும். உணவுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மேலும் பல கிளைகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. உணவுத் தொழிலில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், விரைவாக முடிவுகள் எடுக்கப்பட்டு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இசைக் கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நீங்களே எதிர்பாராத தொகைக்கு ஒப்பந்தம் கையெழுத்திடுவீர்கள். துறைசார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கும் வாய்ப்பும் சிறப்பாக உள்ளது. எந்த வாய்ப்புகள் வந்தாலும் அவற்றைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த காலகட்டம் முழுவதும் உங்களுக்கு கிரகங்கள் பலவித யோகங்களை தரும் என்பது உறுதி.

பெண்களுக்கு குடும்ப உறவுகள் பலப்படும். ஆனாலும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடவேண்டும். இல்லத்திற்கு விருந்தினர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். அப்படி வருகின்ற விருந்தினர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். மற்றபடி குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். சொந்த வீடு வாங்குவது முதல் ஆடை ஆபரணச் சேர்க்கை வரை அனைத்தும் சிறப்பாக நடந்தேறும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். குறிப்பாக குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு இனி மருத்துவச் செலவே இல்லாமல் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த ஆண்டுக்குள் உங்கள் இல்லத்தில் குழந்தை சத்தம் நிச்சயமாக கேட்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் இருக்கும். ஆரம்பத்தில் தடுமாற்றம் இருந்தாலும் அதிலிருந்து சுதாரித்து கல்வியில் ஒரு நிலையான இடத்தை எட்டிப் பிடிப்பீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மிகச்சிறப்பான மதிப்பெண்ணுடன் கூடிய தேர்ச்சி விகிதம் இருக்கும். வேலைவாய்ப்பும் உடனுக்குடன் கிடைக்கும்.

பொதுவாக கன்னி ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் என பெரிதாக ஏதும் இருக்காது, ஆனாலும் உணவு விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். நோய்த் தொற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும். உங்களுக்கு மிக எளிதாக நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு சிலருக்கு மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சினைகள் இருக்கும். எலும்பு தேய்மானம், கழுத்து வலி போன்ற பிரச்சினைகள் வரும் சூழலும் உள்ளன. முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
காஞ்சிபுரம், திருவெக்கா "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" ஆலயத்திற்கு சென்று வணங்கி வாருங்கள். உங்கள் கோரிக்கைகளை அவரிடம் வையுங்கள். உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் சொன்னவண்ணம் செய்த பெருமாள். மேலும் புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று துளசி மாலை சார்த்தி வணங்குங்கள். உங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்