- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
சிம்மராசி வாசகர்களுக்கு என்னுடைய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்த பில வருட தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தர இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
புத்தாண்டு துவங்கும்போது உங்கள் ராசிக்கு கிரகங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை முதலில் பார்த்துவிடுவோம்!
உங்கள் ராசி அதிபதி சூரியன் ஒன்பதாம் இடத்தில் உச்சம் பெற்று, கூடவே சந்திரனும் சுக்கிரனும் இணைந்து இருக்கிறார்கள். நான்காம் இடத்தில் கேது பகவான், 10-ம் இடத்தில் ராகு பகவான் இருக்கிறார்கள்.
6-ம் இடத்தில் சனி பகவான், 7-ம் இடத்தில் அதிசாரத்தில் சென்ற குருபகவான், எட்டாமிடத்தில் புதன் பகவான்,லாப ஸ்தானமான 11ம் இடத்தில் செவ்வாய் பகவான் என அனைத்துக் கிரகங்களும் உங்களுக்கு நன்மை தரக்கூடிய இடத்திலேயே இருக்கிறார்கள். அதிசார குரு உங்கள் ராசியைப் பார்ப்பது சிறப்பு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் ஆறாம் இடத்தில் அமர்ந்து சனி பகவான் மகாலட்சுமி யோகத்தைத் தருவார். அதுமட்டுமில்லாமல் ராசி அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பது சிறப்பான அம்சமாகும்.
உங்கள் ராசிக்கு யோகத்தை தரக்கூடிய யோகாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு. இப்படி அனைத்து கிரகங்களும் உங்களுக்கு நன்மை தரக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். எனவே இந்தப் புத்தாண்டு உங்களுக்கு மிகச் சிறந்த நன்மைகளைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆண்டு முழுவதும் செல்வ வளம் குறையாமல் இருப்பீர்கள். கடன்கள் அனைத்தும் அடைவதற்கு சிறந்த காலம் இது. உங்கள் எண்ணங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும் என்பது உறுதி!
குடும்ப உறவுகள் பலப்படும். ஆனாலும் சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதைத் தவிர்த்து விட்டாலே பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். அவர்களுடைய ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணையின் வழியே சொத்துகள் சேரும். அல்லது ஆதாயம் தரக்கூடிய வருமானம் கிடைப்பது போன்றவை நடக்கும். சகோதர சகோதரிகள் சிறப்பான ஒத்துழைப்பு தருவார்கள். தாய் தந்தையின் ஒத்துழைப்பும், அவர்களுடைய உதவியும் நீங்கள் கேட்காமலேயே கிடைக்கும்.
பூர்வீகச் சொத்துகள் எந்தச் சிக்கலும் இல்லாமல் உங்களை வந்தடையும். இன்னும் சொல்லப்போனால் பூர்வீகச் சொத்துகளால் மிகப்பெரிய ஆதாயங்கள் கிடைக்கும். மாமன் வகை உறவுகளால் தேவையான உதவிகள் கிடைக்கும்.
திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். இரண்டாவது குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்கள் இந்தக் காலகட்டத்தில் இரண்டாவது குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். கடன் பிரச்சினைகள் முழுமையாகத் தீரும். சொந்த வீடு கிடைக்கும் யோகம் இந்த வருடத்தில் பிரகாசமாக உள்ளது. வாடகை வீட்டில் இருந்தவர்கள் இந்த ஆண்டு முடிவதற்குள் நிச்சயமாக சொந்த வீட்டுக்குச் செல்வார்கள். அதுமட்டுமல்லாமல் வாகன யோகம், ஆடை ஆபரணச் சேர்க்கை யோகம் போன்றவை உண்டாகும். சுபகாரிய நிகழ்வுகள் நடக்கும்.
இதுவரை நல்லபடியான வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசுப் பணி கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சரியாக முயற்சி செய்தால் அரசு வேலை உறுதியாகக் கிடைக்கும். அதேபோல தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கூடிய வாய்ப்பு கிடைக்கும், அல்லது தற்போது பணிபுரியும் இடத்திலேயே எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும்.
தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பிரம்மாண்டமான வளர்ச்சியை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இதுவரை இருந்த தடை தாமதங்கள் முற்றிலுமாக விலகி, மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண முடியும். அயல்நாடு தொடர்பு உடைய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். பலவித ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு தொடர்பு கொண்ட கான்ட்ராக்ட் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மிகச்சிறப்பான பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு இருமடங்கு ஆதாயம் கிடைக்கும். ஆபரணத் தொழில் செய்பவர்களுக்கும், கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கும் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை காண முடியும். உற்பத்தி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்தி மேலும் உற்பத்தியை அதிகரிக்கக் கூடிய அளவில் தொழில் வளர்ச்சி மேன்மை பெறும்.
விவசாயம் சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான நன்மைகள் நடந்தேறும். விவசாய விளைபொருட்களுக்கு எதிர்பாராத விலை உயர்வு ஏற்பட்டு அதிகப்படியான லாபம் கிடைக்கும். பணப் பயிர்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான வருமானம் உண்டாகும்.
வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வியாபார வளர்ச்சி நன்றாகவே இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். சிறிய அளவிலான வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் தற்போது மிகப் பெரிய அளவில் தங்கள் வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவார்கள். நவீன பொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கும், அழகு சாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்துடன் கூடிய வளர்ச்சியைக் காண முடியும்.
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரிபவர்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கும். உங்கள் துறை சார்ந்த பணியில் சிறப்பாகப் பணியாற்றி பாராட்டுகளைப் பெறுவீர்கள். மிக எளிதாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அரசின் விருதுகள், பாராட்டுகள் கிடைக்கும்.
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் எதிர்பார்க்காத நல்ல ஊதியத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள். சாதனை படைக்கக் கூடிய படைப்புகளை படைப்பீர்கள். நல்ல வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். தவிர்க்க முடியாத சக்தியாகவும் மாறுவீர்கள். இசைக் கலைஞர்களுக்கும் நாட்டியக் கலைஞர்களுக்கும் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். வருமானம் தடையில்லாமல் இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். அனைத்து விதமான செல்வங்களையும் யோகங்களையும் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பம், குழந்தைகள், கணவர், உறவினர்கள், தாய் தந்தை என அனைத்து உறவுகளும் பக்கபலமாக இருப்பார்கள், அவர்களுடைய ஆதரவும் அரவணைப்பும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
நல்ல வேலை, சுயதொழில், சொந்தமாக வியாபாரம் ஆரம்பித்தல், சொந்த வீடு வாங்குதல், நிலம் வாங்குதல், ஆடை ஆபரணங்கள் சேர்க்கை என அனைத்தும் இயல்பாகவே நடந்தேறும். சகோதரர்கள் பக்கபலமாக மட்டுமல்லாமல், தேவையான உதவிகளை கேட்காமலேயே செய்து தருவார்கள். ஏற்கெனவே சகோதரிகளிடம் ஏதாவது மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அவை அனைத்தும் நீங்கி மீண்டும் ஒற்றுமை ஏற்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். மாணவர்களுக்கு சற்று கல்வியில் ஒரு சில பின்னடைவுகள், கற்றலில் தடுமாற்றம் போன்றவை இருக்கும். உயர்கல்வி மற்றும் பட்டக்கல்வி படிப்பவர்களுக்கு எந்தத் தடையும் இருக்காது, சிறந்த மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அடைவார்கள். படித்துக் கொண்டிருக்கும்போதே வேலைவாய்ப்பு உறுதியாகும். அளவுகடந்த நன்மைகள் கிடைக்கும்.
பொதுவாக சிம்ம ராசிக்காரர்களுக்கு உடல்நல பாதிப்புகள் என பெரிதாக ஏதும் இருக்காது. ஆனாலும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் தங்களுடைய ஆரோக்கியத்தை மிக கவனமாக பராமரிக்க வேண்டும். மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். ஒருசிலருக்கு மருத்துவ சிகிச்சைகள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியது வரலாம். இதய நோய் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். மஞ்சக்காமாலை, வயிற்றுக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளன. கவனமாக இருக்கவேண்டும். குரு பார்வையும், ஆறில் இருக்கும் சனிபகவானும் பெரிய அளவிலான பாதிப்புகளையோ, பிரச்சினைகளையோ தரமாட்டார்கள் என்பதை முழுமையாக நம்பலாம்.
வணங்க வேண்டிய தெய்வம் -
நன்னிலம் அருகே திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயம் சென்று வணங்கி வாருங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அருகே இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். நெய் தீபமேற்றி வணங்குங்கள். நன்மைகள் மேலும் மேலும் பெருகும்.
***********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago