- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
மிதுன ராசி வாசகர்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த பிலவ ஆண்டு உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களையெல்லாம் தரப்போகிறது என்று பார்ப்போம்.
சித்திரை மாத பிறப்பு அன்று உங்கள் ராசிக்கு அதிபதி புதன் உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான மீனத்திலும் உங்கள் ராசிக்கு 2க்கும் மூன்றுக்கும் அதிபதியான சந்திரனும் சூரியனும் 11ம் இடத்திலும் உங்கள் ராசிக்கு புண்ணிய ஸ்தானத்திற்கும், விரய ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரன் அதே பதினோராம் இடமான லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள். மேலும் எட்டாமிடத்தில் சனி பகவான், 9-ம் இடத்தில் அதிசாரமாக வந்த குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பது என கிரகங்களின் அமைப்பு மிகச் சிறப்பாகவே அமைந்திருக்கிறது.
அஷ்டம சனியின் பாதிப்பு இந்த குருபகவானின் பார்வையால் நிச்சயமாக வெகுவாகக் குறையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அது மட்டுமில்லாமல் இரண்டாம் அதிபதி சந்திரன் லாபஸ்தானத்தில் இருப்பதும், உங்கள் முயற்சிகளுக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய சூரியபகவான் உச்சமாக இருப்பதும் உங்களுடைய அனைத்து செயல்களிலும் வெற்றியைத் தருவதற்கு எந்தவித தடைகளும் இருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.
எடுக்கின்ற முயற்சிகள் மட்டுமல்லாமல் எடுக்காத முயற்சிகளில் கூட உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அதாவது நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இந்த இடத்தில் மிக முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால் உங்கள் ராசி அதிபதி புதன் பத்தாம் இடத்தில் இருந்தாலும் நீச்சம் என்னும் அந்தஸ்தை அடைவதால், எந்தக் காரியத்தில் இறங்கினாலும் ஒருமுறைக்கு இருமுறை நன்றாகச் சிந்தித்து அதன் பிறகு செயல்படவேண்டும். உடனுக்குடன் முடிவெடுக்காமல் இரண்டு நாட்களாவது தள்ளிபோட்டு, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கவனமாக யோசித்து செயல்பட வேண்டும். மற்றபடி இந்த பிலவ ஆண்டு உங்களுக்கு எந்தவிதமான குறையும் இல்லாமல் இருக்கப் போகிறது.
குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகவே இருக்கும். சகோதர சகோதரிகள் தக்க உதவிகளைச் செய்து தருவார்கள். குடும்பத்திற்கு புதிய உறுப்பினர் வந்து சேருவார். அது திருமண வகையிலாகவோ குழந்தை பாக்கியமாகவோ இருக்கலாம். சொந்த வீடு வாங்கும் நீண்டகாலக் கனவு இப்போது நிறைவேறும்.சுப காரியச் செலவுகள் அதிகம் ஏற்படும்.
குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தாய் தந்தையரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி சொத்துகள் உங்களுக்கு வந்து சேரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். கடன்களில் பெரும்பகுதி அடைபடும்.
தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதுவரை இடைஞ்சல்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த தொழில்முறை எதிரிகள் அடங்கிப் போவார்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு இந்த ஆண்டு ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். உற்பத்தியானப் பொருட்களில் சில குறைகள் இருந்து கொண்டே இருந்திருக்கும். இனி அந்த பிரச்சினைகள் ஏதும் இருக்காது. புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
தொழிலை விரிவுபடுத்துவது அல்லது வேறு நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவது போன்ற செயல்கள் இப்போதைக்கு வேண்டாம். உங்கள் தொழிலில் மட்டும் முழு கவனத்தை செலுத்துங்கள். அதேபோல புதிய தொழில் வாய்ப்புகள் ஏதும் தேடி வந்தாலும் நிதானமாக யோசித்து சரிவர இருந்தால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அஷ்டமச் சனிக் காலம் முடியும் வரை காத்திருங்கள்.
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபம் கிடைக்கும் விலகிச் சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். உங்களுடைய சொந்த பிரச்சினைகளே வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை இழப்பதற்கு காரணமாக இருந்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் இந்த காலகட்டம் நல்ல பலன்களைத் தரக் கூடியதாக இருப்பதால் வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வியாபாரத்தை நன்கு வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லுங்கள்.
விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக இருக்கும். உங்களுடைய விவசாயப் பொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசு சலுகைகள் கிடைக்கும். அரசிடமிருந்து வர வேண்டிய இழப்பீட்டுத் தொகை உடனடியாக கிடைக்கும். விவசாய இயந்திர பொருட்களில் அடிக்கடி பிரச்சினைகள் வந்துகொண்டே இருந்திருக்கும். இனி அந்த பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் விவசாய இயந்திரங்கள் சரிவர இயங்கும். பணப்பயிர்கள் உங்களுடைய எதிர்பார்ப்புக்குத் தக்கபடி லாபத்தை தரக்கூடியதாக இருக்கும்.
ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில், பங்கு வர்த்தகத் தொழில் போன்ற தொழில்களில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த முடக்கமான நிலை மாறி வளர்ச்சிப் பாதைக்கு செல்லும். உணவுத் தொழில் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இனி தடையில்லாத வருமானம் இருந்து கொண்டே இருக்கும். தற்போதைக்கு தொழிலை விரிவுபடுத்தும் செயலை மட்டும் செய்ய வேண்டாம். இப்போது இருக்கும் தொழிலை சரிவர கவனித்தாலே உங்களுடைய வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாக தீரும். நெருக்கடியான சூழ்நிலைகள் மாறி வசந்தமான சூழ்நிலை ஏற்படும்.
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மாறும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது உரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்களுடைய எழுத்துகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். உங்களுடைய திறமைக்கு தகுந்தது போன்ற நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். நல்ல நிறுவனமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.
கலைத் துறையில் இருப்பவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மிகச் சிறப்பான காலகட்டம் இது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் முதல் நான்கு மாதங்கள் மிக நல்ல பலன்கள் கிடைக்கக் கூடியதாக இருக்கும். இந்த நான்கு மாத காலத்திற்குள் கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இசை நாட்டியம் நாடகம் போன்ற துறையினருக்கும் மிகச்சிறப்பான வளமையான பலன்கள் நடக்கும். இதுவரை இருந்துவந்த கஷ்டமான சூழ்நிலைகள் மாறி இனிமையான காலம் வர இருக்கிறது. வாய்ப்புகள் எதையும் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவும். வருமானத்தை அதிகப்படுத்தி உங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது, எந்த வாய்ப்புகளையும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பெண்களுக்கு மிகச் சிறப்பான நன்மைகள் நடக்கும். நல்ல வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு தாமதப்பட்டுக் கொண்டிருந்த அல்லது மறைமுக எதிர்ப்புகளால் தள்ளிப் போய்க்கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாக நடக்கும். திருமணமான பெண்களுக்கு நீண்ட நாளாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த புத்திர பாக்கியம் இப்போது கிடைக்கும். சூழ்நிலை காரணமாகவும் கடன் பிரச்சினைகளில் சிக்கியவர்களுக்கும், மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திட்டு பிரச்சினைகளை சந்தித்தவர்களுக்கும் இப்போது விடிவுகாலம் பிறக்கப் போகிறது, உங்களுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இப்போது உங்களிடம் மன்னிப்பு கேட்டு பிரச்சினையைத் தீர்ப்பார்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு இருந்தாலும் கவனச்சிதறல் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது, ஞாபக மறதி பிரச்சினை அதிகமாகவே இருக்கும். எனவே அதிக கவனத்தோடு படிக்கவேண்டும். சிந்தனைகளை எங்கும் சிதற விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தேவையற்ற நட்பு வட்டத்தைத் தவிர்த்துவிடுங்கள். கல்வியில் சிறந்த மாணவர்களின் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.
பொதுவாக, மிதுன ராசிக்காரர்களுக்கு உடல்நல பிரச்சினைகள் என்று பெரிதாக ஏதும் இருக்காது, ஆனாலும் அவ்வப்போது ஒரு சில ஆரோக்கிய அச்சுறுத்தல்கள் வந்து போகும். குறிப்பாக சிறுநீரக கல் அடைப்பு, தோல் மற்றும் நரம்புகளில் பிரச்சினைகள், அலர்ஜி போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே உணவு மற்றும் தண்ணீர் விஷயங்களில் கவனமாக இருங்கள். சுயமாக மருந்து மாத்திரை எதுவும் எடுத்துக் கொள்ளாதீர்கள். மருத்துவ ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை கவனத்தில் வைத்துக் கொண்டால் ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான பிரச்சினைகள் ஏதும் இருக்காது.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். மேலும் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயங்களில், பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி ஒவ்வொரு புதன்கிழமையும் வழிபட்டு வாருங்கள். நெருக்கடிகள் விலகும். நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
**************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago