27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் 101
- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது திருமணப் பொருத்தம் என்னும் பத்து வித பொருத்தங்கள் குறித்துப் பார்ப்போம்.
மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன். திருமணத்தின்போது ஜாதக ரீதியான பொருத்தம் மட்டுமே மிக முக்கியமாக பார்க்கப்படவேண்டும். வெறுமனே நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது சரியாக இருக்காது. திருமணப் பொருத்தத்தில் நட்சத்திரப் பொருத்தம் வெறும் 10 சதவீதம் மட்டுமே பங்காற்றும். மீதம் 90 சதவிகிதம் ஜாதக ரீதியான பொருத்தம் பார்த்து நிர்ணயம் செய்வதுதான் சரியாக இருக்கும்.
ஒரு நட்சத்திரத்திற்கு குறைந்தது 16 நட்சத்திரங்கள் பொருந்தி வரும். ஆனால் ஜாதக ரீதியான பொருத்தங்கள் என்று பார்க்கும்போது ஒரு சில ஜாதகங்கள் மட்டுமே பொருந்தி வரும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
திருமணப் பொருத்தத்தின்போது ஜாதக ரீதியான பொருத்தம் பார்க்கும்போது 2-ம் இடம், 4-ம் இடம், 5-ம் இடம், 7-ம் இடம், 8-ம் இடம், 10-ம் இடம், 12-ம் இடம் என இத்தனை இடங்களை ஆய்வு செய்த பிறகே நிர்ணயம் செய்யப்பட வேண்டும். வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து செய்யப்படும் திருமணங்கள் பலவித பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும். இப்போது நன்றாக புரிந்து கொண்டுவிட்டீர்கள்தானே.
இப்போது நட்சத்திர பொருத்தம் என்னும் பத்து பொருத்தங்கள் எதைக் குறிக்கின்றன? எதற்காக பொருத்தம் பார்க்கிறோம்? என்பதை அறிந்து கொள்வோமா?
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது பெண்ணின் ஜாதகத்திற்குத் தான் ஆணின் ஜாதகத்தை பார்க்கப்படவேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆணின் ஜாதகத்திற்கு பெண்ணின் ஜாதகத்தை பொருத்திப் பார்க்கக்கூடாது.
‘என்ன இது... எப்படிப் பார்த்தால் என்ன... இரண்டும் ஒன்றுதானே’ என நீங்கள் எண்ணத் தோன்றும். ஆனால் பல வித வேறுபாடுகள் இதில் உள்ளன. இது பற்றிய விளக்கங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் முழுமையாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பெண்ணின் ஜாதகத்திற்கு தான் ஆணின் ஜாதகம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே!
தினப் பொருத்தம் -
பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் ஜென்ம நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது 2 - 4 - 6 - 8 - 9 - 11 - 13 - 15 - 18 - 20 - 24 என எண்ணிக்கை வந்தால் தினப் பொருத்தம் இருக்கிறது என்று பொருள், இது தம்பதியின் மன ஒற்றுமையைக் குறிக்கக்கூடியது.
கணப் பொருத்தம் -
நட்சத்திரங்களை மூன்று வகை கணங்களாக பிரித்திருக்கிறார்கள். தேவ கணம், மனித கணம், ராஜஸ கணம் என மூன்று வகை பிரிவுகள் உள்ளன. இருவருக்கும் தேவகணம் என்றால் பொருத்தம் உண்டு. இருவரும் மனித கணத்தில் இருந்தாலும் பொருத்தம் உண்டு. தேவ கணம் - மனித கணம் என்றிருந்தால் இருவரையும் இணைக்கலாம். மனித கணம் - ராஜஸ கணம் இணைக்கலாம்.
தேவகணம் - ராஜஸ கணம் இருந்தால் இணைக்கக்கூடாது. இருவரும் ராஜஸ கணம் என்றாலும் இணைக்கக் கூடாது. இது தேக அமைப்பு மற்றும் மனம் சார்ந்த ஒற்றுமைக்காக பார்க்கப்பட வேண்டியது.
மகேந்திர பொருத்தம் -
பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக் கொண்டு வரும்போது 4 - 7 - 10 - 13 - 16 - 19 - 22 25 ஆக இருந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு. இது புத்திர பாக்கியத்தைக் குறிக்கும்.
ஸ்திரீ தீர்க்க பொருத்தம் -
பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் 13க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் இருக்கிறது என்று அர்த்தம். இது கணவனின் ஆயுளைக் குறிக்கும்.
யோனி பொருத்தம் -
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்குகள் இருக்கும். அதை நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அப்படி தரப்பட்டிருக்கும் விலங்குகள் ஒன்றுக்கொன்று.... அதாவது பெண்ணின் நட்சத்திர விலங்கும் ஆணின் நட்சத்திர விலங்கும் பகை இல்லாமல் இருக்க வேண்டும். இது கணவன் மனைவி தாம்பத்தியம் பற்றி குறிக்கும்.
உதாரணமாக மகம் - ஆண் எலி, பூரம் - பெண் எலி, இது பொருத்தம் உள்ளது. ஆனால் புனர்பூசம் - பெண் பூனை, மகம் - ஆண் எலி, எலியும் பூனையும் ஜென்மப் பகை என்பதால் பொருந்தாது. இந்த பொருத்தம் சரியாக இருந்தால் தாம்பத்யம் திருப்தியாக இருக்கும். இல்லையென்றால் தாம்பத்யம் திருப்தியாக இருக்காது.
ராசி பொருத்தம் -
பெண்ணின் ஜென்ம ராசியில் இருந்து ஆணின் ஜென்ம ராசி 7க்கு மேல் இருந்தால் இந்த ராசியானது பொருத்தமாக உள்ளது என்று அர்த்தம்.
இது தசா புத்தி மற்றும் கோச்சாரத்தில் வரக்கூடிய குரு, சனி, ராகு - கேது பெயர்ச்சிகளின் போது, கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு சாதகமான கிரகப்பெயர்ச்சி இருக்கும், இப்படி இருப்பதால் குடும்பத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமநிலை இருக்கும் என்பதற்காக பார்க்கப்படுகிறது.
ராசி அதிபதி பொருத்தம் -
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் அதிபதியாக இருக்கும். இந்த கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு - பகை சமம் என்கின்ற அளவில் இருக்கும். உதாரணமாக சூரியனுக்கு செவ்வாய், குரு இந்த இருவரும் நட்பு, அதேசமயம் சூரியனுக்கு சனி, சுக்கிரன் பகை, புதன் சந்திரன் சமம்.
கிரகங்கள் ஒருவருக்கொருவர் பகையாக இருந்தால் அடிக்கடி குடும்பத்தில் வாக்குவாதங்களும், சிறு அளவிலான பிரச்சினைகளும் இருந்து கொண்டே இருக்கும். இவை குறித்துத்தான் இந்தப் பொருத்தம் என்பதற்காகத்தான் இது பார்க்கப்படுகிறது.
வசியப் பொருத்தம் -
வசியப் பொருத்தம் என்றதும் ஏதோ மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக இருப்பார்கள் என்றும் அப்படியானதைச் சொல்லும் பொருத்தம் என்றும் நினைத்துவிட வேண்டாம். இது ஒருவருக்கொருவர் மனதளவில் தங்களுடைய புரிதல், ஒற்றுமை, பரஸ்பரம் மதித்தல் போன்றவற்றைக் குறிப்பிடக் கூடியது இந்தப் பொருத்தம்.
மேஷத்திற்கு - சிம்மம் - விருச்சிகம்
ரிஷபத்திற்கு - கடகம் - துலாம்
மிதுனத்திற்கு - கன்னி
கடகத்திற்கு - விருச்சிகம் - தனுசு
சிம்மத்திற்கு - துலாம் - மீனம்
கன்னிக்கு - ரிஷபம் - மீனம்
துலாம் - மகரம்
விருச்சிகத்திற்கு - கடகம் - கன்னி
தனுசுக்கு - மீனம்
மகரத்திற்கு - மேஷம் - கும்பம்
கும்பத்திற்கு - மீனம்
மீனத்திற்கு - மகரம்
இவை ஒன்றுக்கொன்று வசிய ராசிகளாகும். ஏற்கெனவே சொன்னதுபோல இது மன ஒற்றுமையை குறிக்கக்கூடியது.
ரஜ்ஜுப் பொருத்தம் -
நட்சத்திரப் பொருத்தங்களிலேயே மிக முக்கியமான பொருத்தம் இந்த ரஜ்ஜு பொருத்தம். இந்த பொருத்தம் இருந்தால் மட்டுமே ஜாதகத்தை ஆய்வு செய்வார்கள். இந்தப் பொருத்தம் இல்லை என்றால் ஜாதகத்தை ஆய்வு செய்ய வேண்டியதில்லை, பொருத்தமே இல்லை என்பது ஜோதிடத்தில் இருக்கக்கூடிய அடிப்படை விதி. இதைத்தான் தாலி பொருத்தம், கழுத்துப் பொருத்தம் என்று அழைப்பார்கள்.
ரஜ்ஜு பொருத்தம் ஐந்து வகையாக இருக்கிறது, சிரசு ரஜ்ஜு, கழுத்து (கண்ட) ரஜ்ஜு, வயிறு ரஜ்ஜு, தொடை ரஜ்ஜு, பாத ரஜ்ஜு என ஐந்து வகை ரஜ்ஜு இருக்கின்றன.
செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றுக்கொன்று பொருந்தாது. இது சிரசு ரஜ்ஜு ஆகும்.
சந்திரனின் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் மற்றும் ராகுவின் திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த ஆறு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று பொருந்தாது. இது கழுத்து ரஜ்ஜூ ஆகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திரம், உத்திராடம், குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த ஆறு நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று பொருந்தாது. இது வயிறு ரஜ்ஜூ ஆகும்.
சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் மற்றும் சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி இந்த ஆறு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று பொருந்தாது, இது தொடை ரஜ்ஜு ஆகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் மற்றும் புதனின் ஆயில்யம், கேட்டை, ரேவதி இந்த ஆறு நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று பொருந்தாது,. இது பாத ரஜ்ஜு ஆகும்.
மீண்டும் சொல்கிறேன் இந்த ரஜ்ஜு என்னும் பொருத்தம் இருந்தால் மட்டுமே ஜாதகத்தை அடுத்தடுத்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேதை பொருத்தம் -
வேதை என்றால் எதிர்வினை என்று பொருள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு வேதை நட்சத்திரம் உண்டு. இந்த வேதை நட்சத்திரங்களைச் சேர்த்தால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள், தகராறுகள், அடிதடி முதலான பிரச்சினைகள் ஏற்படும்.
அஸ்வினிக்கு - கேட்டை
பரணிக்கு - அனுஷம்
கார்த்திகைக்கு - விசாகம்
ரோகிணிக்கு - சுவாதி
மிருகசீரிடத்திற்கு - சித்திரை, அவிட்டம்
திருவாதிரைக்கு - திருவோணம்
புனர்பூசத்திற்கு - உத்திராடம்
பூசத்திற்கு - பூராடம்
ஆயில்யத்திற்கு - மூலம்
மகத்திற்கு - ரேவதி
பூரத்திற்கு - உத்திரட்டாதி
உத்திரத்திற்கு - பூரட்டாதி
அஸ்தத்திற்கு - சதயம்
சித்திரைக்கு - மிருக சீரிடம், அவிட்டம்
சுவாதிக்கு - ரோகிணி
விசாகத்திற்கு - கார்த்திகை
அனுஷத்திற்கு - பரணி
கேட்டைக்கு - அஸ்வினி
மூலத்திற்கு - ஆயில்யம்
பூராடத்திற்கு - பூசம்
உத்திராடத்திற்கு - புனர்பூசம்
திருவோணத்திற்கு - திருவாதிரை
அவிட்டத்திற்கு - மிருகசீரிடம், சித்திரை
சதயத்திற்கு - அஸ்தம்
பூரட்டாதிக்கு - உத்திரம்
உத்திரட்டாதிக்கு - பூரம்
ரேவதிக்கு - மகம்
இப்படி ஒன்றுக்கொன்று வேதை ஆக இருக்கக் கூடிய, எதிர்வினையாக இருக்கக்கூடிய நட்சத்திரங்களை திருமணத்திற்கு இணைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் நண்பர்களாக இருப்பது தவறாகவே போகும்.
நாடிப் பொருத்தம் -
ஒவ்வொரு நட்சத்திரங்களும் ஒவ்வொரு வகையான நாடிகளைக் கொண்டிருக்கின்றன.
1) பார்சுவ நாடி
2) மத்திய நாடி
3) சமான நாடி
இவை உடல் பருமனைக் காட்டக் கூடியதாகும். அதேசமயம் ஒருவருக்கொருவர் இருக்கக்கூடிய தோஷத்தையும், தோஷ நிவர்த்தியையும் காட்டக்கூடியது. மேலும் இவை ஆரோக்கிய நிலையை வெளிப்படுத்தும்.
இன்னும் பல தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் சொல்லுகிறேன்.
- வளரும்
*******************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago