மூலம் நிர்மூலம்... சரியா? ரோகிணி... மாமனுக்கு ஆகாதா? மகம்... ஜகம் ஆளுமா?;  27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் 100 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

இது 100வது பதிவு. 100வது அத்தியாயம். ’27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள்’ தொடரின் 100வது கட்டுரை. உங்களுடைய அன்பும் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமில்லை. இனிய வாசகர்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்,

இந்த 100 பதிவுகளிலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான முழுமையான தகவல்களைத் தந்திருக்கிறேன் என்பதில் மனதில் ஒரு திருப்தி; நிறைவு. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு நட்சத்திர பாதங்களுக்கும் முழுமையான விளக்கத்தைத் தந்திருக்கிறேன்!

இந்த ’27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள்’ தொடரை, என் இளம் பிராயத்தில் இருந்து நான் கற்றறிந்த ஜோதிட நூல்கள், ஜோதிடத்தில் அசுர சாதனைகள் புரிந்தவர்களுடைய புத்தகங்கள், என்னுடைய ஜோதிட அனுபவங்கள் என அனைத்தையும் கலந்து, உங்களுக்கு எவையெல்லாம் தேவையோ, எவற்றையெல்லாம் நீங்கள் மிக எளிதாகப் புரிந்துகொள்ளமுடியுமோ... அவற்றை முழுமையாகத் தந்திருக்கிறேன்.

தொடரின் தொடக்கத்தில் குறிப்பிட்டதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்!

ஒரு ஜாதகத்தில் லக்னம், ராசி, நட்சத்திரம் இந்த மூன்றும் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் லக்னம் என்பது ஜாதகரான உங்களைக் குறிக்கும். ராசி என்பது உங்களுடைய வளர்ச்சியையும், நீங்கள் எடுக்கின்ற அத்தனை முடிவுகளையும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் செய்யும்.

ஆனால் பிறப்பின் நோக்கம் என்ன? எதை நோக்கி உங்கள் பயணம் இருக்கப்போகிறது? அதில் எதை எல்லாம் நீங்கள் சாதிக்கப் போகிறீர்கள்? அதை முழுமையாக அனுபவிக்க முடியுமா? என்பன போன்ற முக்கியமான விஷயங்கள் அனைத்தையும் உங்களுக்குத் தருவது நட்சத்திரமே!

அதிலும் நட்சத்திரப் பாதங்கள் மிகமிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால்தான் நட்சத்திரங்களைப் பற்றி எழுதும்போதே நட்சத்திர பாதங்களுக்கும் முழு விளக்கத்தை தர வேண்டும் என்பதை முடிவு செய்தேன். அவற்றையே உங்களுக்கு வழங்கினேன். அதாவது, நட்சத்திர பாதங்களுக்கும் முழு விளக்கத்தை தந்திருக்கிறேன். நிச்சயமாக அது உங்களுக்கு பயன்படும் என்பது உறுதி!

இந்தத் தொடர்... முக்கியமாக தொடரின் முக்கியமான சில தகவல்கள் வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் ஆதரவையும் பெற்று இருக்கின்றன. எண்ணற்ற வாசகர்கள் அவற்றையெல்லாம் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிறோம் என்று என்னிடம் தெரிவித்து வருகிறார்கள். ஒரு படைப்பாளிக்கு வேறென்ன சந்தோஷமும் நிறைவும் இருக்கப் போகிறது!

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், மூல நட்சத்திரம் பற்றிய தேவையற்ற ஒரு அச்சம் பலரிடமும் இருந்தது... இருக்கிறது. ’மூலம் நட்சத்திரம் குறித்த விளக்கங்கள் எங்கள் அச்சத்தையும் குழப்பத்தையும் போக்கின’ என்று ஏராளமான வாசகர்கள் தெரிவித்திருந்தார்கள்.

மூலம் நட்சத்திரம் இருக்கின்ற நட்சத்திரங்களிலேயே மிகச்சிறந்த நட்சத்திரம். எந்தவொரு செயலுக்கும் மூலம் இருந்தே ஆகவேண்டும். நதிமூலம் ரிஷிமூலம் என்பது போல ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் மூலம் என்னும் தொடக்கப்புள்ளி ஒன்று இருந்தே தீரும். ஒரு மரத்திற்கு ஆணிவேர் போல இந்த மூல நட்சத்திரம் மிகச்சிறந்த கட்டமைப்பை அமைத்துத் தரும்.

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த விதமான தோஷங்களும் கிடையாது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செல்வாக்கும், மரியாதையும், கவுரவமும் தானாக தேடி வரும் என்று பல உதாரணங்களோடு விளக்கி இருந்தது அனைவராலும் வரவேற்கப்பட்ட ஒன்று.

அதேபோல "மகம் ஜெகம் ஆளும்" என்ற ஜோதிடப் பழமொழி எப்படி சாத்தியம் என்பதை முழுமையாக விவரித்து இருந்தேன், மகத்தில் பிறந்தவர்கள் அனைவருமே அரசாள முடியுமா என்ற என்னிடம் ஜாதகத்துடன் வந்த பல அன்பர்களின் கேள்விகளுக்கெல்லாம் தனித்தனியே சொன்ன பதில்களை முழு விளக்கமும் தந்திருந்தேன்.
ஜெகம் என்றால் உலகம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஆர்வமும், அதீத உழைப்பும் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று! ஒருவருக்கு குடும்பமே உலகம், இன்னொருவருக்கு செய்கின்ற வேலையே உலகம், இன்னொருவருக்கு செய்கின்ற தொழிலே உலகம், இன்னும் ஒரு சிலருக்கு தன் குழந்தைகள்தான் உலகம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்களுக்கு அதுதான் உலகம். இப்படி மகத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களுக்குப் பிடித்தமான விஷயத்தில் மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டு சாதிப்பார்கள் என்பதைத்தான் மகம் ஜெகத்தை ஆளும் என்று ஜோதிடம் சொல்கிறது என்பதை விளக்கியதற்கு பலரும் புரிந்து மகிழ்ந்ததை தெரிவித்தீர்கள்.

அதேபோல ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது என்ற ஒரு நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது.

உண்மை என்ன?

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர் எட்டாவது குழந்தையாக இருக்க வேண்டும். அதிலும் அவர் அமாவாசையன்று பிறந்திருக்க வேண்டும். அப்படி பிறந்த குழந்தையால் மட்டுமே தாய்மாமனுக்கு ஆகாது. ரோகிணி நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்தால், அவருடைய தாய்மாமனுக்கு மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்குமா? என்றால் நிச்சயமாக கிடையாது.

அதாவது அவருடைய தாயாருக்கும் மாமனுக்கும் மனவருத்தங்கள் ஏற்பட்டு உறவு இல்லாமல் போகும். மற்றபடி வேறு எந்தவிதமான பிரச்சினைகளும் இருக்காது என்ற விளக்கத்தையும் தந்திருந்தேன். இவை குறித்தும் ஏராளாமானோர், தங்களின் சந்தேகம் தீர்ந்தது என்று தெரிவித்தார்கள்.

இதுபோல பல தகவல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இனிய வாசகர்களே! நான் குறிப்பிட்டிருந்த முக்கியமான தகவல்கள் அனைத்தையும் படித்து சேமித்து வைத்து செயல்படுத்தினால் நிச்சயமாக பல வெற்றிகளை நீங்கள் குவிப்பீர்கள் என்பது உறுதி.

இப்போது மேலும் சில தகவல்களைப் பார்ப்போம்.

திருமண பொருத்தத்தின் போது அனைவரும் பார்க்கக் கூடிய ஒரே விஷயம் நட்சத்திரப் பொருத்தம் என்னும் பத்து பொருத்தம் பார்ப்பதுதான்! உண்மையில் நட்சத்திரப் பொருத்தத்திற்கு 10 சதவீதம் மட்டுமே மதிப்பு. ஜாதக ரீதியான பொருத்தத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதுதான் ஜோதிடத்தில் கூறப்பட்டிருக்கக் கூடிய வழிமுறை; விதி; சாஸ்திரம் சொல்லும் கணக்கு.

ஆனாலும் இந்த நட்சத்திரப் பொருத்தமும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றுதான். பத்து பொருத்தம் என்கிறோமே... இந்த பத்துப் பொருத்தம் என்பது என்ன? அது ஏன் பார்க்கப்படுகிறது? என்பதை பற்றி இப்போது பார்ப்போம்...!

பத்து பொருத்தங்கள் -

1) தினப் பொருத்தம்

2) கணப் பொருத்தம்

3) யோனி பொருத்தம்

4) ராசி பொருத்தம்

5) ராசி அதிபதி பொருத்தம்

6) ரஜ்ஜு பொருத்தம்

7) வேதை

8) வசியம்

9) மகேந்திர பொருத்தம்

10) ஸ்த்ரீ தீர்க்கம்

11) நாடிப் பொருத்தம்

பத்து பொருத்தம் என்று சொல்லிவிட்டு பதினோரு பொருத்தம் இருக்கிறதே... என்ற கேள்வி எழலாம்.

உண்மையில் ஆதிகாலத்தில் 20 விதப் பொருத்தங்கள் இருந்தன. அதாவது திருமணம் செய்து வைக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் 20 பொருத்தங்கள் பார்க்கப்பட்ட காலமெல்லாம் இருந்தன. காலப்போக்கில் இவை இப்போது 11 பொருத்தங்கள் என்ற வகையில் மாறி இருக்கின்றன.

இன்னும் ஒரு சில ஜோதிடர்கள் விருட்சம் என்னும் பாலுள்ள மரம், பால் இல்லாத மரம் என்ற பொருத்தத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், இந்த நிலையில் இப்போது 11 பொருத்தங்கள் மட்டுமே இருக்கின்றன. இதுவும் இன்னும் சில காலத்தில் மேலும் குறையும், இப்போதே ஒரு சில பகுதிகளில் எட்டு பொருத்தம் மட்டுமே பார்க்கிறார்கள்.

இதில் ரஜ்ஜுப் பொருத்தம் என்பது மட்டுமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, ரஜ்ஜு பொருத்தம் என்பது வட்டார வழக்குகளில் கழுத்து பொருத்தம், தாலிப் பொருத்தம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ரஜ்ஜுப் பொருத்தம் என்பது ஆயுள் தொடர்பான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

எந்த ஜோதிடராக இருந்தாலும் ரஜ்ஜுப் பொருத்தம் இருந்தால் மட்டுமே மற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ச்சி செய்வார். பொருத்தம் இருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பார். ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் அந்த ஜாதகத்தை ஆய்வு செய்யவே மாட்டார். இது பொதுவான விஷயம். ஆனாலும் இதிலும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன.

அதையும் விரிவாகப் பார்ப்போம்.

அடுத்த பதிவில் விரிவாகவும் எளிமையுடனும் சொல்கிறேன்.

- வளரும்
*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்