குருப்பெயர்ச்சி பலன்கள்; மிதுன ராசி அன்பர்களே! தைரியமாக இருங்கள்; நிதானம் தேவை; வீண் வாக்குவாதம் வேண்டாம்; எச்சரிக்கையுடன் இருங்கள்! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

விடாமுயற்சியை எப்போதும் கைவிடாத மிதுன ராசிக்காரர்களே.

வர இருக்கும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு எந்த மாதிரியான பலன்களை தரும்? என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருந்த குரு பகவான் உங்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் தந்திருப்பார், குறிப்பாக திருமணம், நல்லவேலை, புதிய முயற்சிகளில் ஈடுபடுதல், அதில் வெற்றியைக் காணுதல் போன்றவை நடந்திருக்கும்.

அதேசமயம் அஷ்டமத்து சனி நடப்பதால் ஒரு சில காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்பட்டிருக்கும். இப்போது குரு பகவான் அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் இடத்திற்குச் செல்வது ஒரு வகையில் நன்மையைக் கொடுத்தாலும், பெரும்பாலும் சிரமங்களைத் தருவார் என்பது ஜோதிடத்தில் சொல்லப்படுகின்ற விதி.

அஷ்டமத்து சனி மற்றும் அஷ்டமத்து குரு ஒரு சில பிரச்சினைகளை உங்களுக்கு உண்டு பண்ணினாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு தைரியமாகச் செயல்படுவீர்கள். என்ன காரணம் என்றால்? இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் ராகுவும் ஆறாம் இடத்தில் கேதுவும் இருப்பதால் எந்தப் பிரச்சினை வந்தாலும் தைரியமாக எதிர்கொண்டு நிச்சயமாக வெற்றியைக் காண்பீர்கள்.

அதேசமயம், அஷ்டமத்து குரு என்பதை மறக்காமல் இருக்க வேண்டும். பெரிய அளவிலான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு நன்றாக சிந்தித்துச் செயல்படுங்கள் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் இருந்து விலகி இருங்கள். குடும்பத்தில் எப்படிப்பட்டப் பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். கணவன் மனைவி பிரச்சினைக்கு வெளி நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். பாகப்பிரிவினைகள் ஏதும் இருந்தால் முடிந்த வரை தள்ளிப் போடுங்கள், அல்லது கொடுப்பதை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருங்கள். தேவையில்லாத பிரச்சினைகள், வழக்குகள் என்று சென்றால் தோல்வியைச் சந்திக்க நேரிடும். இந்தக் காலகட்டத்தில் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. கடன் வாங்கினால் அதனால் மனநிம்மதி இல்லாமல் போகும். அதேபோல கடன் கொடுப்பதும் கூடாது. பிரச்சினைகளைச் சமாளிக்க நகைகளை அடகு வைப்பதும் கூடாது.

அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனத்தோடு பணிபுரிய வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை உங்கள் பணிகளை நீங்களே சோதனை செய்து கொள்ள வேண்டும். உயர் அதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். தேவையில்லாத வாக்குவாதங்கள், சம்பந்தமில்லாத பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். மீறினால் உங்களுக்கு எதிராகவே திரும்பவும். அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்பட நேரிடும். இடமாற்றம் கிடைத்தால் ஏற்றுக்கொள்வது நல்லது. இடமாற்றம் ஓரளவு உங்கள் பிரச்சினையை தீர்த்துத் தரும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். தொழில் செய்யும் இடத்தில் ஊழியர்களின் பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொடுக்க முன்வர வேண்டும். இல்லையென்றால் ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகும். இயந்திரங்களைச் சரிவர பராமரிக்க வேண்டும். தொழில் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை நன்கு ஆலோசித்த பின்பே தொழில் தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.

வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். புதிதாக கிளைகளை ஆரம்பிப்பது, புதிய வியாபாரத்தை ஆரம்பிப்பது போன்றவை இப்போது வேண்டாம். இருக்கின்ற வியாபாரத்தை செம்மையாகச் செய்தாலே போதும். லாபத்தைக் குறைத்துக்கொண்டு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியலில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம். அவதூறுகளைச் சந்திக்க நேரிடும். எனவே எந்தவொரு விஷயத்திலும் கருத்து கூறுவதற்கு முன், நன்கு யோசித்து கூறவேண்டும்.

ரசாயனம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தங்கள் நிறுவனங்களில் பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிக்கவேண்டும். உணவுத் தொழில் செய்பவர்களுக்கும் தங்களுடைய உணவகங்களில் சுகாதார முறையை சரியாக கடைபிடிக்க வேண்டும். பயணங்கள் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்கள், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில் செய்பவர்கள் தங்கள் வாகனங்களைச் சரிவர பராமரிக்க வேண்டும்.

பெண்களுக்கு ஒருசில நன்மைகள் நடக்கும். ஆனாலும் நிதானம் இழக்காமலும், தேவையில்லாத கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும், குடும்பத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமாக செயல்படக் கூடாது. மூன்றாம் மனிதர்களின் பேச்சைக் கேட்கக் கூடாது. அதேபோல உங்கள் குடும்பப் பிரச்சினைகளில் அடுத்தவர் தலையிடுவதை அனுமதிக்க கூடாது.

எந்த விஷயத்தையும் மனம் விட்டு பேசித் தீர்க்க வேண்டும். கணவன் மனைவி ஒற்றுமையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சூழ்நிலைக்கேற்ப பிரச்சினையை அணுக வேண்டுமே தவிர, பிரச்சினை பெரிதாகும்படியாக நடக்க வேண்டாம். பிரிவுக்கு இடம் கொடுக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். கடன் வாங்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ஆடம்பரச் செலுவுகளைச் செய்ய வேண்டாம், பணத்திற்கான தேவைகள் அதிகம் ஏற்படும். எனவே சிக்கனம் தேவை. பணிபுரியும் இடத்தில் உங்கள் வேலைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சிறிய தவறைக் கூட பூதக் கண்ணாடி கொண்டு பார்ப்பார்கள். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். இறைவழிபாட்டில் கவனம் செலுத்தினால் மனம் அமைதியாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கல்வியில் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது பொருளாதாரக் காரணமாகவும் இருக்கலாம். பாடங்களைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச்சினையாகவும் இருக்கலாம். தயக்கம் இல்லாமல் உதவிகளைக் கேட்டு கல்வியை தொடர வேண்டும். நம்மால் முடியுமா என்ற மனக் கலக்கத்தை கைவிட வேண்டும். முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள். நிச்சயமாக சாதிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் முதுகுக்குப் பின்னால் பலவித சதிகளைச் செய்வார்கள். எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விளையாட்டாகப் பேசுகின்ற பேச்சு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும். பொறுமை, நிதானம் மிக அவசியம்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் கிடைக்கின்ற தகவல்களை உறுதிப்படுத்திய பின் உலகிற்குச் சொல்லுங்கள். ஆர்வக் கோளாறாகச் செயல்பட்டு நற்பெயரை இழக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிதானப் போக்கை கடைபிடித்தால் இந்த அஷ்டமத்து குரு காலத்தையும், அஷ்டமத்து சனி காலத்தையும் எளிதாகக் கடந்து செல்ல முடியும் என்பதை நம்புங்கள். அனைத்தும் எதிர்மறையாக இருக்கிறதே என்று கவலை வேண்டாம். நிச்சயமாக பனிரெண்டாம் இடத்தில் இருக்கும் ராகு பலவிதத்திலும் உங்களுக்கு உதவி செய்வார். எதிரிகளைக் காணாமல் போகச் செய்வார். வருமானத்தை அதிகப்படியாகத் தருவார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு பணத்தைச் சேமிப்பது மட்டுமே.

ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சினை என்றாலும் மருத்துவ ஆலோசனையை பெற்றுக் பெற்றுக்கொள்வது நல்லது. தானாகவே மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டாம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். அதேபோல குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுடைய கல்வி தொடர்பான விஷயங்களில் இடையூறு செய்யாமல் அவர்கள் விருப்பத்திற்கு விடவேண்டும். இதை எல்லாம் சரியாக கடைப்பிடித்து வந்தால் இந்த அஷ்டம குரு காலம் மிக எளிதாகவே கடந்துசெல்லும்.

நான் ஏற்கெனவே பொதுப்பலனில் குறிப்பிட்டது போல இது ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப் போவதில்லை. சுமார் ஆறு மாத காலம் மட்டுமே இந்த மாதிரியான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியது வரும். இடையில் சுமார் 5 மாதகாலம் உங்களுக்குப் பெரும் நன்மைகளையும், யோகங்களையும் குருபகவான் நிச்சயமாக தருவார் என்பதை நம்புங்கள்.

நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - விதிகளை மாற்றித்தரும் திருப்பட்டூர் பிரம்மா ஆலயம் சென்று வாருங்கள்.

வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகளை செய்து தாருங்கள். மாணவ மாணவியருக்கு நோட்டு, புத்தகம், புத்தகப்பை, காலணிகள் போன்றவற்றை வாங்கித் தருவது நல்ல பலன்களைத் தரும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்