‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
நாம் இந்த பதிவில் மூலம் நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்குமான தனித்தனியே ஆன பலன்களையும் குணங்களையும் பார்ப்போம்.
மூலம் நட்சத்திரம் 1ம் பாதம் :-
மூலம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் அன்பின் இலக்கணம், பண்பின் உறைவிடம், இரக்கத்தின் இருப்பிடம். குடும்பத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பவர்கள். அதாவது இவர்கள் பிறந்த பின் இவரின் தந்தை சொந்தத் தொழில் செய்து முன்னேறியிருப்பார் அல்லது உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வு அல்லது பெரிய நிறுவனத்தில் பணி கிடைத்து உயரம் தொட்டிருப்பார்.
சகோதரர்கள் (மூத்தவர் / இளையவர்) இவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு குறைவு. இருந்தாலும் அவர்களால் எந்த நன்மையும் கிடைக்காது. சகோதரிகளாக இருப்பின் ஓரளவு நன்மை உண்டு. பூர்வீகச் சொத்து இருக்கும், அந்த சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும். தர்ம காரியப் பணிகளில் ஆர்வம் இருக்கும். குறிப்பாக ஆலயப் பணிகளில் தானாகவே வலியச் சென்று தன்னை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.
இவர்களுக்கு கண்மூடித்தனமான முன்கோபம் இருக்கும். எதிரிகளையும், எதிர்ப்புகளையும் துவம்சம் செய்யும் ஆற்றலும் இவர்களுக்கு இருக்கும்.
ஆனால் அது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக இருக்கும். எளிதில் உணர்ச்சிவசப்படுதல், பரபரப்பாக இருப்பது, ஒருநாளில் முடிக்கவேண்டிய வேலையை ஒரு மணிநேரத்தில் செய்து முடிப்பது போன்ற ஆற்றல் இவர்களின் ஸ்பெஷல்.
கட்டிடக்கலை வல்லுநர், கட்டுமானப் பொறியாளர், ஆசிரியர், வங்கிப்பணி, வட்டித்தொழில், அடகுக்கடை, பூமி தொடர்பான தொழில், இயந்திரம் தொடர்பான தொழில், விவசாய இயந்திரங்கள், அறுவை சிகிச்சை மருத்துவர், எலும்பு மருத்துவர், தாய்சேய் மருத்துவர், மருந்தாளுநர், காவல்துறைப் பணி, பாதுகாப்புப் பணி, மின்சார வேலை, கம்பிவட வேலை, நெருப்பு தொடர்பான பணிகள், ஆயுத வடிவமைப்பு போன்ற தொழில், வேலை அமையும்.
இவர்கள், கோப குணத்தையும், மனதில் ஏற்படும் ஆற்றாமையையும் குறைத்துக்கொள்ள வேண்டும். வாகனப் பயணங்களில் வேகத்தை வெகுவாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். ரத்தக்கொதிப்பும், நரம்புத் தளர்ச்சியும் இவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
பயணத்தில் கவனமில்லாவிட்டால் அடிக்கடி விபத்துகளை சந்திக்க வேண்டியது வரும். எலும்பு முறிவு, பல் நோய் போன்றவை அடிக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதை மறக்கக்கூடாது. நெருப்பு மற்றும் ரசாயனங்களில் இருந்து விலகி இருக்கவேண்டும். இவர்களுக்கு நெருப்பால் ஏற்பட்ட தழும்பு உடலில் நிச்சயமாக இருக்கும். எனவே நெருப்பிலிருந்து விலகி இருக்கவேண்டும்.
இவர்களின் இறைவன் - மயிலாடுதுறை மயூரநாதர்
விருட்சம் - மராமரம் (நெய்தல் நிலமான கடற்கரைப் பகுதியில் இந்த மரம் இருக்கும்)
வண்ணம் - மஞ்சள் மற்றும் அடர் சிவப்பு
திசை - கிழக்கு
**********************************
மூலம் நட்சத்திரம் 2ம் பாதம் :-
மூலம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகள். பொருளாதாரத்தைத் தேடி ஓடாமல் பொருளாதாரம் தம்மை நோக்கி வரும்படியாக வாழ்வை அமைத்துக்கொள்பவர்கள். பணபற்றாக்குறை என்பதே இல்லாமல் வாழ்பவர்கள்.
நிதானமாக சிந்தித்து செயல்படுபவர்கள். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பவர்கள், சகோதரப் பற்று அதிகம் உள்ளவர்கள். சகோதரர்கள் முன்னேற்றத்திற்கு உதவுபவர்கள். கூட்டுக்குடும்ப வாழ்வியலில் இருப்பவர்கள். சகோதரிகளுக்குப் பக்கபலமாக இருப்பவர்கள். அவர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவர்கள். எப்போதும் தூய ஆடைகளையே அணிபவர்கள். தன்னை வசதிபடைத்தவராக காட்டிக்கொள்பவர்கள். ஆடையிலும் பகட்டு இருக்கும், ஆபரணங்கள் அணிந்து கொள்வதிலும் ஆர்வம் இருக்கும்.
சுய தொழிலில் ஆர்வம் அதிகம் இருக்கும். இசை உள்ளிட்ட கலையார்வம் இருக்கும். பேசியே சாதிக்கக்கூடிய திறமை இருப்பதால் மார்க்கெட்டிங் துறையில் முன்னேற்றம் காண்பர்கள். ஆன்மிக பிரசங்கம் மற்றும் பேச்சையே தொழிலாகக் கொண்டிருப்பார்கள். ஆசிரியர், கலை பயிற்றுநர், ஆன்மிகம் ஜோதிடம் போன்றவற்றில் புலமை கொண்டிருப்பார்கள்.
வாக்கு பலிதம், குறி சொல்லுதல், விவசாயப் பணி, திரைத்துறை, வட்டித்தொழில், பணம் புழங்கும் இடத்தில் பணி, ஆடை உற்பத்தித் தொழில், பெண்களுக்கான அழகுப் பொருட்கள் விற்பனை, அலங்காரப் பொருட்கள் விற்பனை, பரிசுப் பொருட்கள் கடை, பயணங்கள் தொடர்பான தொழில், மனிதவள மேம்பாட்டுத் துறை, தன்னார்வலர்கள், மருந்துக்கடை, விவசாய இடு பொருள் விற்பனை, காய்கனி மொத்த வியாபாரம், அரிசி மண்டி போன்ற தொழில் இவர்களுக்கு அமையும்.
இனிப்பு உணவுகளில் ஆர்வம் காட்டுபவர்கள். சுவையான உணவுகளில் மட்டுமே கவனம் கொண்டவர்கள். இதன் காரணமாகவே வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சினை, பல் ஈறு பிரச்சினைகள், வயிற்றுப்புண், வாய்ப்புண், கண் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
இறைவன் - சிங்கீஸ்வரர் - திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு என்னும் ஊர்
விருட்சம் - பெருமரம் (தீக்குச்சிகள் இந்த மரத்தில்தான் செய்யப்படும்)
வண்ணம் - இளம் மஞ்சள், நீலம்
திசை - தென்கிழக்கு
************************
மூலம் நட்சத்திரம் 3ம் பாதம் -
மூலம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் கல்விகேள்விகளில் சிறந்தவர்கள். அபார ஞாபக சக்திக்காரர்கள், எந்த விஷயத்தை கற்பதிலும் கற்பூரமாக இருப்பவர்கள். கவலை என்பதே இல்லாதவர்கள். புதுப்புது முயற்சிகளில், பரிசோதனைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டே இருப்பவர்கள்.
விடாமுயற்சி இவர்களின் பலம். தோல்விகளால் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில் விக்கிரமாதித்தனுக்கு இணையானவர்கள். குடும்ப ஒற்றுமை அதிகமிருக்கும். சகோதர ஒற்றுமை பலமாக இருக்கும். உறவுகளுக்குள்ளேயே திருமண பந்தம் ஏற்படும். ஆனால் பணி நிமித்தமாக குடும்பத்தைப் பிரிந்து இருக்க வேண்டிய நிலையும் இருக்கும்.
தன் பிள்ளைகளை செல்வச் செழிப்போடும், அவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தி வளர்ப்பவர்களாகவும் இருப்பார்கள். பல மொழிகள் கற்றறிந்திருப்பார்கள். அறிவுத் திறமை மட்டுமல்லாமல் புத்தி திறமையும் மிக்கவர்கள். கற்பனா சக்தியில் மிதமிஞ்சியவர்கள். யாருக்கும் தோன்றாத கோணத்தில் சிந்தித்து புகழ் அடைபவர்கள்.
தன் எழுத்தால் பலரையும் கவர்பவர்கள், வசீகர எழுத்துக்கு சொந்தக்காரர்கள். கதை கவிதைகளில் நாட்டம் உடையவர்கள். பத்திரிகைத் துறையில் சாதிப்பவர்கள். தகவல் தொழில்நுட்பப் பணியில் இருப்பார்கள். அந்தத் துறையில் உயர்வான பதவியில் இருப்பார்கள். செய்தி ஊடகப் பணி, தபால்துறை, இன்சூரன்ஸ் நிறுவனம், பத்திரப் பதிவுத் துறை, ஊரகப் பணி, நூலகப் பணி, ஆசிரியர், விஞ்ஞான ஆய்வு, தூதரக பணி, மொழிபெயர்ப்பு பணி, தட்டச்சர், சுருக்கெழுத்தர், பயணம் தொடர்பான தொழில் போன்றவை அமையும்.
அளவான உணவை விரும்புபவர்கள். சக்தியான உணவின் மீதுதான் விருப்பம் இருக்கும். நரம்பு பிரச்சினைகள், வெரிகோஸிஸ் பிரச்சினைகள், தொண்டையில் சதை வளர்ச்சி, தோல் தொடர்பான நோய்கள் இருக்கும்.
இறைவன் - சூர்யநாராயணர்
விருட்சம் - செண்பகம் மரம்
வண்ணம் - ஊதா
திசை - வடமேற்கு
******************
மூலம் நட்சத்திரம் 4ம் பாதம் :-
மூலம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் இரக்கம் காட்டுவதில் தாயைப் போல் இருப்பவர்கள். தர்ம சிந்தனை இருக்கும். பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருப்பார்கள். நிர்வாகத் திறன் மிக்கவர்கள், எதையும் திட்டமிட்டு மற்றவர் ஆலோசனை பெற்று சரியாக செய்து முடிப்பவர்கள்.
குடும்ப ஒற்றுமையில் கவனமாக இருப்பார்கள். சகோதர சகோதரிகளிடம் பேரன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனாலும் இளைய சகோதர வகையால் வேதனைகளையும் சந்திப்பார்கள். குடும்பத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பேச்சும் செயலும் புரிந்து கொள்ளாதவர்களால் விமர்சனத்திற்கு ஆட்படுவார்கள். எந்தச் சூழ்நிலையிலும் தன் முடிவில் பின் வாங்காதவர்கள். இந்த குணத்தாலேயே பிரச்சினைகளையும் சந்திப்பார்கள். எவ்வளவு கோபம் வந்தாலும் உடனே தணிந்துவிடுவார்கள், புகழ்ச்சி விரும்பாதவர்கள். புண்ணிய காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.
அலங்காரப் பேச்சு பேசாமல் செயல்பட வைக்கும் பேச்சையே பேசுவார்கள். பயண ஆர்வலர்கள், அமைதியான இடங்களில் வசிக்க விரும்புவார்கள். ஆன்மிக சிந்தனை அதிகம் இருக்கும். ஆச்சரியம் என்னவென்றால் சிறு வயதில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்து கடும் பிரச்சினையில் சிக்கி அதிலிருந்து மீண்டு பிறகு தீவிரமான கடவுள் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் இவர்களுக்கு!
கலைத்துறையில் சாதிப்பார்கள். எழுத்து நடையும் விவரிக்கும் பாங்கும் அழகுற இருக்கும். பயணம் தொடர்பான தொழில், உணவுத்தொழில், காப்பகங்கள், தங்கும் விடுதி, பத்திரிகை மற்றும் ஊடகப் பணி, வாகனங்கள் பராமரிப்புத் தொழில், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை, உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கு, அயல்நாட்டு தொடர்புடைய தொழில், ஏற்றுமதி இறக்குமதி, கப்பல் பணி, கடல் ஆராய்ச்சி, கடல் பொருட்கள் விற்பனை, நிதி நிர்வாகம், நிதி மேலாண்மை, பத்திரிகை எழுத்து திருத்துதல், மொழி ஆராய்ச்சி, மருந்து ஆராய்ச்சி, மருந்து உற்பத்தி போன்ற தொழில் அல்லது வேலை அமையும்.
அளவான உணவு சாப்பிடுவார்கள். பகிர்ந்து உண்ணும் குணம் உடையவர்கள். உணவு விருப்பம் என எதுவும் இருக்காது. உடல்நலத்தில் சளி காய்ச்சல், நெஞ்சக நோய், தொடர் இருமல், தொண்டைப் புண் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
இறைவன் - மன்னார்குடி அருகே பாமணி ஊரில் இருக்கும் ஆதிசேஷன்.
விருட்சம் - ஆச்சா மரம்
வண்ணம் - மஞ்சள்
திசை - வடகிழக்கு
அடுத்த பதிவில் பூராடம் நட்சத்திரம் பற்றி பார்ப்போம்.
’பூராடம் நூலாடும்’ என்கிறார்களே உண்மையா?
குட்டி சுக்கிரன் என்றால் தெரியுமா?
குட்டி சுக்கிரன் இருந்தால் என்ன பரிகாரம் ?
அடுத்த பதிவில் பார்ப்போம்.
- வளரும்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
46 mins ago
ஜோதிடம்
55 mins ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago