27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 30; மகம் நான்கு பாதங்களின் கேரக்டர்கள்! நண்பர்களுக்கு முக்கியத்துவம், ருசியான உணவு, எளிதில் பணம், தப்பு செய்தால் ஏற்காத மனம்

By செய்திப்பிரிவு

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. மகம் நட்சத்திரக்காரர்களின் குணங்களை உங்களுக்கு விவரித்து வருகிறேன். இப்போது, மகம் நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்குமான தனித்துவத்தை தனித்தனியே விரிவாகவே சொல்கிறேன்.

மகம் 1ம் பாதம்-

மகம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள், நேர்மையானவர்கள். ஒழுக்கம் நிறைந்தவர்கள். ஆனால் கோபம் வந்தால் சட்டென கை நீட்டிவிடுகிற குணமும் இவர்களுக்கு உண்டு. அவர் யார்? எவர்? என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். ’பளார்’ என அறைந்து விடுவார்கள். மனதில் எதையும் மறைத்து வைத்து பேசமாட்டார்கள். மனதில் தோன்றுவதை பட்டென்று வெளிப்படையாக பேசிவிடுவார்கள். சின்ன தவறு செய்திருந்தால் கூட அந்தத் தவறை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். அதேபோல், மற்றவர்கள் செய்கிற தவறையும் மன்னிக்க மாட்டார்கள். தான் எப்படி அனைத்திலும் ஒழுங்காக இருக்கிறோமோ, அதேபோல அனைவரும் அதே மாதிரி ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

தன் வீடு, தன்னுடைய அறை, அலுவலகத்தில் தனக்கான அறை அல்லது மேஜை என அனைத்திலும் ஒரு ஒழுங்கு இருக்கும். அந்தந்தப் பொருள் அந்தந்த இடத்தில் சரியாக இருக்கவேண்டும் என்பதில் கண்டிப்புடனும் நேர்த்தியாகவும் இருப்பார்கள். தன் மனைவி மக்களையும் அதே மாதிரியாக ஒழுக்கத்துடன் பழக்கி வைத்திருப்பார்கள்.

மகம் நட்சத்திரத்தின் 1-ம் பாதத்தைச் சேர்ந்தவர்கள், எப்போதும், எதிலும் அவசர முடிவுகளை எடுப்பார்கள். அதில் ஏதாவது பிரச்சினை வந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். எந்த வேலைகளையும் நாளைக்கு பார்ப்போம் என தள்ளி வைப்பது இவர்களுக்கு அறவே பிடிக்காது. அதேபோல பல வேலைகளை ஒரேசமயத்தில், இழுத்து போட்டுக்கொள்ளவும் மாட்டார்கள். எடுத்த வேலையை முடித்து விட்டுதான் அடுத்த வேலையை கையில் எடுப்பார்கள்.

இவர்கள், சுறுசுறுப்பானவர்கள். இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவர்கள். வேகமாகச் சாப்பிடும் குணம் கொண்டவர்கள் இவர்கள். எப்போதும் மின்தூக்கியை பயன்படுத்தாமல் படிகளில் ஏறி இறங்குவார்கள். நட்புக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள், இளைய சகோதர வகையினரை சதா கேலிகிண்டல் என வெறுப்பேற்றுபவர்கள்.

பொதுவாகவே, மகம் நட்சத்திர 1ம் பாதக்காரர்கள், அதிக அளவில் கட்டுமானத் தொழிலில்தான் இருப்பார்கள், அரசுப் பணி, அதிகாரப் பணி, காட்டிலாகா, மரக்கடை, ஹார்டுவேர் கடை, இயந்திர உற்பத்தி (கிரைண்டர், மிக்ஸி, கட்டில், பீரோ) மணல் வியாபாரம், செங்கல் சூளை, மின்சாரப் பணி, உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு வீரர், செக்யூரிட்டி சர்வீஸ் போன்ற துறைகளில் இருப்பார்கள்.

ஆரோக்கியத்தில் இவர்களுக்கு அடிக்கடி வரும் பிரச்சினைகள் என்று பார்த்தால், வயிற்றுப்புண், மூலம், உடல்சூடு, இதயநோய் போன்றவைகளால் அடிக்கடி இன்னலுக்கு ஆளாவார்கள்.

இவர்களுக்கான இறைவன்- திருவண்ணாமலை அண்ணாமலையார் மற்றும் அனைத்து சிவாலயங்களில் உள்ள இறைவன்.

விருட்சம் - ஆலமரம்

ராசியான நிறம் - அடர் சிவப்பு மற்றும் இளம் மஞ்சள்

திசை - கிழக்கு
***********************************
மகம் 2ம் பாதம்-
மகம் 2ம் பாதத்தில் பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போமா?
இவர்கள் மிகப் பொறுமைசாலிகள். கோபம், ஆத்திரம் என எதையும் முகத்தில் வெளிக்காட்ட்வே மாட்டார்கள். தவறு செய்தவர்களிடம் அவர்களின் தவறுகளை நிதானமாக சுட்டிக்காட்டுவார்கள். தப்பு செய்தவர்களை திருத்துவார்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லையென்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள். எந்த வேலையையும் நிதானமாகத் திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். அதில் தவறேதும் வராமல் பார்த்துக்கொள்வார்கள். கண்ணால் ஒருமுறை பார்த்தாலே, எந்தவொரு விஷயத்தையும் கற்றுக்கொள்வார்கள். எவரிடம் பழகுகிறார்களோ அவர்களின் தகுதிக்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்வார்கள்.

எந்தச் செயலாக இருந்தாலும் அதனால் ஆதாயம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டே செயலுக்குள் இறங்குவார்கள். இடத்திற்கு தக்கபடி தன்னை மாற்றிக்கொள்வார்கள். எந்த வேலையையும் சலிக்காமல் செய்வார்கள். உடையில் நேர்த்தி, முகத்தில் பொலிவு, பேச்சில் இனிமை என்றிருப்பவர்கள். தன் உறவினர்கள், நண்பர்களை அரவணைத்துச் செல்லும் குணம் இவர்களுக்கு உண்டு. பொருளாதாரத் தேவைகளை பற்றி அதிகம் கவலைப்படாதவர்கள். காரணம்? அவர்களுக்கு தேவையான பணம் சரியான நேரத்தில் சரியாக கிடைத்துவிடும்.

உணவை பொறுமையாக மென்று தின்பார்கள். அதிக அளவில் பழங்களை எடுத்துக்கொள்பவர்கள். விதவிதமான உணவுகள் அதிலும் சுவையான உணவுகளை மட்டுமே உண்பார்கள். சாதாரண, சராசரியான உணவுகளை விரும்ப மாட்டார்கள்.

கட்டிடக்கலைஞர், ஆடை ஆபரண வடிவமைப்பாளர், விவசாயத் தொழில், நவரத்தின வியாபாரம், உணவுத்தொழில், சங்கீத குரு, பேராசிரியர், அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் இருப்பார்கள்.

உடல்நலத்தைப் பொறுத்தவரை, இவர்களுக்கு பார்வைக் கோளாறு, பல் நோய், வாய்ப் புண், ஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகள் வரும்.

இறைவன் - நின்ற கோல பெருமாள், குறிப்பாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்.

விருட்சம்- முத்திலா மரம்

நிறம் - நீலம் மற்றும் வெள்ளை

திசை - தென்கிழக்கு
***************************************

மகம் 3ம் பாதம் -
மகம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் கலகலப்பானவர்கள். கவலை என்பதே இல்லாதவர்கள். எதையும் கணக்கு போட்டே வாழ்பவர்கள். ஆதாயம் இருந்தால் மட்டுமே எந்த வேலையையும் செய்வார்கள், இலவச சேவை என்பதே இவர்கள் வரலாற்றில் இருக்காது, அதற்காக இரக்க மற்றவர்கள் என எண்ண வேண்டாம்! உதவிகள் செய்ய தயங்காதவர்கள், ஆனால் வேலையில் கறாராக விலை பேசித்தான் செய்வார்கள். அறிவாளிகள், புத்தி கூர்மையுடையவர்கள், எந்த வேலையை எப்படி முடிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள், அது குறுக்கு வழியாக இருந்தாலும் பரவாயில்லை என நினைப்பவர்கள்.

கணித திறமையாளர்கள், அறிவியல் ஆராய்ச்சி, தகவல் தொழில் நுட்பம், இந்த விஞ்ஞான உலகில் புதுப்புது தொழில் நுட்பங்கள் வந்து கொண்டேயிருக்கும் வேலையில், அவை அனைத்தையும் விரல் நுனியில் அறிந்து வைத்திருப்பார்கள், பத்திரிகை, ஊடகம், பன்மொழிப் புலமை, எழுத்துத் திறமை, அரசியல் நுட்பம், தூதரகப் பணி, ஆசிரியர், விமர்சகர், நகைச்சுவைத் திறமை, கலையார்வம், ஓவியம், சிற்பக்கலை என இவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

பயணங்களில் ஆர்வம் உள்ளவர்கள், உலகைச் சுற்றி வருபவர்கள், உலக அரசியல் முதல் பன்னாட்டுக் கலைகளை பதிவு செய்வது, பல மொழிகளைக் கற்பது போன்ற திறமைகளை வைத்திருப்பார்கள். விடிய விடிய விழித்திருப்பார்கள். ஆனால் முகத்தில் களைப்பு தெரியாது. தானும் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் கலகலப்பாக வைத்திருப்பார்கள். நல்ல உணவு எங்கு கிடைக்கும் என்பது இவர்களுக்கு அத்துப்படி,

உணவு விஷயத்தில் புதுப்புது உணவுகளை தேடித்தேடி சுவைப்பார்கள். ஆனால் அளவாகத்தான் சாப்பிடுவார்கள். செலவு செய்யத் தயங்காதவர்கள். அதேசமயம் தனக்குத் தேவையான பணத்தை எளிதில் சம்பாதிப்பவர்கள். பணத்தைத் தேடி ஓடமாட்டார்கள். மாறாக பணம் இவர்களைத் தேடி வரும்படியாக செயல்படுவார்கள்.

இவர்களுக்கு தோல் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். முதுகெலும்பின் முனையான மூலாதாரத்தில் பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - சயன திருக்கோல மகாவிஷ்ணு

விருட்சம் - இலுப்பை மரம்

நிறம் - பச்சை மற்றும் இளம் சிவப்பு

திசை - வடமேற்கு
***********************************
மகம் 4ம் பாதம் -
மகம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் இரக்க குணம், தெளிந்த ஞானம் உடையவர்கள். இவர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை என்னும் அளவுக்கு ஞான மார்க்கம் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு அத்துபடி. முகத்தில் குழந்தைதனம், மெலிந்த உடல்வாகு, ஒடிசலான தேகம், வளைந்த முதுகு, சுறுசுறுப்பான குணம், கற்பூர புத்தி, சிறிய விசயத்தற்கு கூட அதிக கவலைப்படுதல், தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு உதவும் குணம். கடமை தவறாத உழைப்பு, அதுவும் உண்மையான உழைப்பு, கடல் கடந்து வேலை, தொழில் செய்தல் பயணங்களில் அதிக ஆர்வம் உடையவர்கள்.

ஆசிரியர், வழக்கறிஞர், சமையல் கலை, உணவகம், சூப்பர் மார்க்கெட், பலசரக்குக் கடை, அரிசி வியாபாரம், தரகு, கமிஷன், நில வியாபாரம், இயந்திர பராமரிப்புப் பணி, ரெடிமேட் துணி தயாரித்தல் மற்றும் விற்பனை, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள் தயாரித்தல், காய்கறிக்கடை, பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, ரத்தின வியாபாரம், டிராவல்ஸ், வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்புதல், பயண ஏற்பாடு போன்ற துறைகளில் இருப்பார்கள்.

உணவு விஷயத்தில் அதிக அக்கறை காட்ட மாட்டார்கள். எந்த உணவாக இருந்தாலும் அளவோடு உண்பார்கள். ஆனால் எப்போதும் தனியாகச் சாப்பிட மாட்டார்கள் யாரவது நண்பர்கள், அறிந்தவர்கள் என எவரோடாவது சேர்ந்துதான் சாப்பிடுவார்கள்.

உடல்நலத்தில் இவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் மற்றும் சளி, இருமல், மூச்சிரைப்பு போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - அரசமரத்தடி விநாயகர்

விருட்சம் - பவளமல்லி

நிறம் - வெள்ளை மற்றும் பலவண்ணம்

திசை - வடக்கு


அடுத்து, பூரம் நட்சத்திரம் குறித்து விரிவாகப் பார்க்கலாம். ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம்!
- வளரும்


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்