சார்வரி ஆண்டு; கன்னி ராசிக்காரர்களே! நண்பர்களால் உதவி, வியாபாரத்தில் லாபம், வேலையில் நெருக்கடி, ஆரோக்கியத்தில் கவனம் - 12 மாதத்துக்குமான ஏ டூ இஸட் பலன்கள்!

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


தன்னுடைய பேச்சாலேயே அனைவரையும் வசீகரிக்கும் குணம் கொண்ட கன்னி ராசி வாசகர்களே!
இந்த புத்தாண்டு பலவித நன்மைகளை உங்களுக்கு ஏற்படுத்தி தரப்போகிறது. ஆனாலும் ஒரு சில விஷயங்களில் கூடுதல் கவனமும் எச்சரிக்கை உணர்வும் தேவை என்பதையும் இந்த புத்தாண்டு உங்களுக்கு வலியுறுத்துகிறது.
குடும்பத்தினர் உங்களுடைய செயல்களுக்கு முட்டுக்கட்டை போடுவார்கள். எதிர்ப்புக்குரல் அதிகம் இருக்கும். இப்படிப்பட்ட தடைகளை எல்லாம் தாண்டித்தான் நீங்கள் வெற்றி பெற வேண்டியது வரும். ஆனாலும் விடா முயற்சியுடன் தொடர்ந்து ஈடுபட அனைத்தும் உங்களுக்கு சாதகமாகும்.
வாழ்க்கைத்துணையிடமும் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளிடமும் கவனமாகப் பேசுங்கள், கோபத்தையும் எரிச்சலையும் காட்டாதீர்கள். முடிந்தவரை அன்பாகவும் கனிவாகவும் உங்களுடைய கருத்துக்களை முன்வையுங்கள். நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள். சகோதரர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் தேவையில்லாத சண்டை சச்சரவுகளை மேற்கொள்ள வேண்டாம். அது தீராத பகையை உண்டாக்கும்.
சொத்துப் பிரச்சினைகளில் விட்டுக்கொடுத்துச் சென்றால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது, இல்லையென்றால் வழக்குகளில் சிக்க நேரிடும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்கள் செப்டம்பர் வரை நீடிக்கும். அதன் பிறகு குணமாகும்.
தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். இவை அனைத்தும் செப்டம்பர் வரை இருக்கும். அதற்கு பின் ஒரு மாதத்திற்குப் பின்னர், தொழிலில் ஒருவித தேக்க நிலை ஏற்படும்.
வியாபார விஷயங்கள் அனைத்திலும் திருப்திகரமான லாபம் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது புதிய வியாபார வாய்ப்புகள் கிடைப்பது போன்றவை நடக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு வேலையில் எந்தவிதமான பிரச்சினைகளும் இருக்காது. அதேசமயம் அலட்சியமாகவும் இருக்க வேண்டாம்.
உங்கள் பணியை மிகச்சரியாக செய்துவரவேண்டும், அலட்சியம் காட்டினால் உத்தியோகத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் தொழில் வளர்ச்சி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வருமானம் பெருகும்.
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அதேசமயம் எதிர்ப்புகளும் அதிகமாகும். அவற்றையெல்லாம் சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்கு கிடைக்கும். கட்டுமானத் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான வளர்ச்சி ஏற்படும். சீரான லாபம் கிடைத்துக் கொண்டிருக்கும்.

கடன் பிரச்சினைகள் நெருக்கடி தந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனாலும் முடிந்தவரை கடன்களை அடைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். காரணம் இந்த ஆண்டின் இறுதியில் கடன் தொடர்பான நெருக்கடிகள் அதிகரிக்கும் சூழ்நிலை இருக்கிறது. எனவே இப்போதே படிப்படியாக கடன்களை குறைத்துக் கொண்டே வரவேண்டும்.
பெண்களுக்கு சுயதொழில் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும், ஏற்கெனவே தொழில் துறையில் இருப்பவர்களாக இருந்தால் மேலும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். துணிக்கடை குழந்தைகளுக்குத் தேவையான ஆடை விற்பனை போன்ற வியாபாரக் கடைகள் ஆரம்பிப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
கல்விக்கு தகுந்த வேலை கிடைக்கும். இப்பொழுது பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். திருமண முயற்சிகளை ஜூலை மாதத்திற்குப் பின் முன்னெடுக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் ஒரு தடை ஏற்பட்டு பிறகு மீண்டும் கல்வியைத் தொடர வேண்டிய நிலை ஏற்படும். ஞாபக மறதி அதிகமாகும். எனவே தியானம் யோகாசனம் போன்றவற்றைச் செய்யுங்கள்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களின் ஆதரவோடு பணப்பற்றாக்குறை நீங்கும்.

பொதுவாக கன்னி ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சிறிய பிரச்சினை என்றாலும் மருத்துவ ஆலோசனை பெற்றே தீரவேண்டும். சிறிய நோய் பாதிப்பு பெரிய அளவில் இட்டுச்செல்லும் சூழல் உள்ளது. எனவே தகுந்த மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுங்கள். தொடர் மருந்து உட்கொள்பவர்கள் தவறாமல் தங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சித்திரை மாதம்-
தேவையான உதவிகள் தேவையான நேரத்தில் மிகச்சரியாக கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டு. பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். லாபம் அதிகமாக கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது அல்லது வியாபாரத்தைத் தொடங்குவது போன்றவை மிக எளிதாக நிறைவேறும்தொலைதூர நண்பர்கள் அல்லது வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் மிகப்பெரிய உதவி கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். குழந்தைகளின் கல்விக்காக அதிக முயற்சி எடுத்து அவர்களை கல்வியின் பக்கம் கவனத்தைச் செலுத்த முற்படுவீர்கள். அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் குறையும், மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள்.

வைகாசி மாதம்-
அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்களால் மிகப்பெரிய உதவி கிடைக்கும். தாய்வழி உறவுகளால் நன்மைகளும் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். ஒருசிலருக்கு அரசின் சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். அரசு உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் பதவி உயர்வோடு கிடைக்கும்.

ஆனி மாதம்-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயங்கள் யாவும் மிக எளிதாக நிறைவேறும். மிக சாதுர்யமாக செயல்பட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள். எந்த முயற்சி எடுத்தாலும் அதில் முழு வெற்றியும், அதிகப்படியான லாபமும் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு லாபம் இரட்டிப்பாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் உதவியால் முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் தீரும். மனதை வருத்திக் கொண்டு இருந்த முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். அடகு நகைகளை மீட்பதற்கு வழிவகை கிடைக்கும். தொழில் தொடர்பாகவோ அல்லது வியாபாரத்திற்காகவோ வங்கிக் கடன் எதிர்பார்த்திருந்தால் வங்கிக் கடன் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. நீண்டநாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துக்களை விற்கவும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளுக்கு தொழில் அல்லது வியாபாரம் ஆரம்பிக்க முதலீடுகளைத் தந்து உதவுவீர்கள்.


ஆடி மாதம்-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும் மாதம். சேமிப்புகள் உயரும். கடன் பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். மறுமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழி ஒப்பந்தங்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களாலும் உறவினர்களாலும் அதிக ஆதாயம் பெறுவீர்கள். அயல் நாட்டில் இருக்கும் நண்பர்களால் மிகப்பெரிய உதவிகள் கிடைக்கும். நண்பர்களோடு இணைந்து புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்குவீர்கள். அதற்கான முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழிலுக்கு தேவையான முதலீடுகள் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மூத்த பிள்ளைக்கு திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் சுமுகமாக முடிவடையும்.. சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான தேதி குறிக்கப்படும்.

ஆவணி மாதம்-
அதிக நன்மைகள் ஏற்பட கூடிய மாதம். அதேசமயம் செலவுகளும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். அதாவது வரவும் செலவும் சமமாக இருக்கக்கூடிய மாதம். வீண் செலவுகள் ஏற்படுவதை விட, சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். மிகக் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வீட்டுப் பராமரிப்புச் செலவுகள், தொழில் நிறுவனத்தில் ஏற்படக்கூடிய பராமரிப்பு செலவுகள் என உபயோகமான செலவுகள் ஆகத்தான் இருக்கும். அதற்குத் தேவையான அளவுக்கு வருமானமும் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு நல்குவார்கள். குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும். உறவினர்களின் சுபநிகழ்ச்சிகளுக்கு ஒருசில தொகையை செலவிட வேண்டியது வரும். வீடுமாற்றம், உத்தியோகத்தில் இடமாற்றம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டுக்கு மாறுவார்கள், அது பணப் பிரச்சினைக்காக இருக்காது. குழந்தைகளின் கல்வி தொடர்பாக அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு அருகே மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் பெருகும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு அவருடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வங்கிப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு ஆதாயம் தரக்கூடிய பதவி கிடைக்கும். வெளிநாடு தொடர்புடைய தொழில் அல்லது வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

புரட்டாசி மாதம்-
உங்களுடைய திறமைகள் வெளிப்படக்கூடிய மாதம். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும், அது மிக சாதாரணமான வெற்றியாக இருக்காது. புகழ் தரக்கூடிய வெற்றியாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளை குடும்ப பெரியவர்கள் மூலம் தீர்த்து வைக்கப்படும். குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அவர்களின் கல்வி நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தின் மிக முக்கியமான நபர் ஒருவர் உங்கள் இல்லத்திற்கு வருவார். அவர் மூலம் ஒரு சில முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் தொடர்பாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலருக்கு தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். அவருடைய தொழில் அல்லது வியாபார நிறுவனத்தின் பொறுப்புகளை உங்களிடம் கொடுப்பார்கள். அதை ஏற்றுக்கொள்வது நன்மை தரும்.

ஐப்பசி மாதம்-
மிக திருப்தியான வருமானத்தை கொடுக்கக்கூடிய மாதம். தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சி அமோகமாக இருக்கும். லாபம் இருமடங்காக ஏற்படும். குடும்பத்தில் சுப விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். ஒருசிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகமும் ஏற்படும். வீட்டுக்கடன், தொழில் கடன் போன்றவை கிடைக்கும். வழக்கறிஞர் தொழில் செய்பவர்கள், கல்வியாளர்கள் இவர்களுக்கெல்லாம் மதிப்பு மரியாதை உயரக் கூடிய அளவில் அரசு கவுரவம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணங்கள் அல்லது வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளவும் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயமும் லாபமும் கிடைக்கப் பெறுவார்கள். நீண்ட நாளாக சந்திக்க நினைத்துக் கொண்டிருந்த ஒரு நபரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் தேவையான ஆதாயங்களையும் பெற முடியும்.

கார்த்திகை மாதம் -
இந்த கார்த்திகை மாதத்தில் இருந்து தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனமும் எச்சரிக்கை உணர்வும் தேவை. கடன் கொடுப்பது அல்லது கடன் வாங்குவது இருக்கக்கூடாது. முடிந்தவரை கையிருப்பை வைத்துக்கொண்டு அதற்குள்ளாகவே தொழில் மற்றும் வியாபாரத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். உற்பத்தி செய்யும் பொருட்களில் கூடுதல் கவனம், எச்சரிக்கை தேவை. இனி எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். ஒப்பந்தங்கள் போடுவது, காசோலைகள் கொடுப்பது போன்றவற்றில் அதிக எச்சரிக்கை உணர்வு அவசியம். எந்தவிதமான அலட்சியப் போக்குக்கும் இடம் கொடுக்க வேண்டாம். தந்தை வழி உறவுகளிடம் பகை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தந்தையாரின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டும். பாகப்பிரிவினைகள் போன்ற விஷயங்களில் பிடிவாதம் பிடிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினருடன் இணக்கமாக இருந்து கொள்ளுங்கள். அவர்களிடம் எரிச்சலையோ அல்லது கோபத்தையோ வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்து வாருங்கள். குறிப்பாக இந்த மாதம் குலதெய்வ வழிபாடு செய்வது மிக மிக அவசியம்.


மார்கழி மாதம்-
ஏன் எதற்கு என்றே தெரியாத அளவுக்கு செலவுகள் அதிகமாக ஏற்படும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். ஒரு சிலருக்கு தோல் மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள், வயிறு மற்றும் இதயம் சம்பந்தமான நோய்ப் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தை பராமரிக்க தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மீண்டும் ஒரு மருத்துவ ஆலோசனை பெற்று மருத்துவ முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது மருந்துகளை மாற்றிக் கொள்ளுங்கள். கடன் கொடுப்பதும் வாங்குவதும் அறவே இருக்கக்கூடாது. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகளிலும் வீடு தொடர்பான பிரச்சினைகளிலும் கவனமாக இருங்கள். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமாக இருக்க வேண்டும். அவர்களிடம் தேவையில்லாத வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இருந்தாலும் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது. ஒரு சிலர் தங்கள் பூர்வீகச் சொத்துக்களை விற்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி தேவையான நிலை வந்தால் தாராளமாக விற்கலாம். அதற்கு உகந்த நேரம் தான் இது.


தை மாதம் -
கடந்த இரண்டு மாதங்களாக ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தேவையான உதவிகள் அனைத்தும் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். வருமானம் பெருகும். லாபம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் மீண்டும் ஒற்றுமை ஏற்படும். ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாக குறையும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டு நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் வெகுவாக குறையும்.


மாசி மாதம் -
ஆரோக்கிய பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வீடு உள்ளிட்ட சில விஷயங்களை பழுதுபார்த்தல் நடக்கும். தொழில் மற்றும் வியாபார ஸ்தலங்களை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். பணியாட்களை அதிகமாக அமர்த்துவீர்கள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம், மதிப்பு மரியாதை உயரும். தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது வேறு நிறுவனங்களுக்கு மாறுதல் போன்றவை நடக்கும். அரசுப் பணியாளர்களாக இருந்தால் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். அப்படிப்பட்ட பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.


பங்குனி மாதம் -
பலவிதமான நன்மைகள் நடைபெறும். ஆனாலும் எதிலும் சற்று கவனமாக இருந்து கொள்ளுங்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். உணவகம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள், புதிய கிளைகள் தொடங்குவதற்கான உதவிகள் கிடைக்கும். சகோதர முறையில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருந்த ஒரு சில மனவருத்தங்கள், கருத்து வேறுபாடுகள் மறையும். நீண்டநாளாக மன உளைச்சல் தந்து கொண்டிருந்த கடன் ஒன்று தீரும். பெண்களுக்கு பிரசவ நேரமாக இருந்தால் சுகப்பிரசவம் ஏற்படும். இரட்டை குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்- பச்சை மற்றும் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்- 1, 5, 7

வீட்டில் செய்யக்கூடிய எளிய பரிகாரம் - பாசிப் பயறு பாயசம் செய்து குழந்தைகளுக்கு, அக்கம்பக்கத்தாருக்கு கொடுங்கள். பருவ வயதில் இருக்கும் பெண்களுக்கு ஆடைகளை தானமாகத் தாருங்கள்.

வணங்க வேண்டிய ஆலய தெய்வம் -
திருமறைக்காடு என்னும் தலத்தில் அதாவது வேதாரண்யம் கோயிலில் இருக்கும் சிந்தாமணி விநாயகர் வழிபாடு மிக மிக அவசியம். திருச்செந்தூரில் செந்தூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் மூவர் ஜீவசமாதி உள்ளது, அந்த மூவர் ஜீவ சமாதிக்குச் சென்று வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் தீரும், தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்