- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
கரோனாவின் கொடூர பாய்ச்சலில் இருந்து நாம் விரைவில் நிச்சயமாக மீள்வோம். உடல் வலிமையை விடவும் மன வலிமையே நோயை வெல்லும். மூன்று விதமான கொள்ளை நோய்களை வென்று (காலரா, அம்மை,போலியோ) உலகிற்கே வழிகாட்டியாக இருந்தவர்கள் நாம், இந்த கொள்ளை நோயையும் விரைவில் வென்றெடுப்போம் என உறுதி ஏற்போம்.
சரி... இப்போது நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரக்காரர்கள்... ஆயில்ய நட்சத்திரக்காரர்கள்.
இது கடக ராசியில் இருக்கும் நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் இது ஒன்பதாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான்.
இந்த ஆயில்யம் பாம்பு நட்சத்திரம். இது ஆதிஷேசனைக் குறிக்கும். இந்த ஆதிஷேசன் மகாவிஷ்ணுவின் படுக்கை என்பது நாம் அறிந்ததே.
ராம அவதாரத்தில் ஆதிசேஷன் லட்சுமணனாகவும், சங்கு பரதனாகவும், ஶ்ரீசக்கரம் சத்ருக்னனாகவும் பிறந்ததாக ராமாயணம் விவரிக்கிறது.
ஆமாம்... அண்ணனை கணநேரம் கூட பிரிய மனமில்லாமல், அண்ணன் ராமபிரானுக்கு சேவகம் செய்வதற்காக தன் மனைவியை கூட பிரிய தயங்காத, சகோதர ஒற்றுமைக்கு இன்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஶ்ரீலட்சுமணன் பிறந்தது ஆயில்யம் நட்சத்திரத்தில்தான்.
இந்த ஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும்? லட்சுமணனின் குணத்தை ஆராய்ந்து பார்த்தாலே ஆயில்யம் நட்சத்திரத்தின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளலாம்.
சகோதர பாசம், அன்புக்கு கட்டுப்படுதல், காரியத்தில் குறியாக இருப்பது, முன்கோபம், வைராக்கியம், தியாகம், எதையும் இழக்கத் தயாராக இருப்பது, எது கிடைத்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்வது, அவசர செயல்கள், காத்திருந்து பழிதீர்த்தல், எதிர்பார்ப்பில்லாமல் உதவிகள் செய்தல், சுயமாக கற்றுக்கொள்ளுதல், இலக்கு வைத்து செயல்படுதல் இவை எல்லாம் ஆயில்யத்தின் குணங்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த லட்சுமணனின் குணங்கள். ஆயில்ய நட்சத்திரக்காரர்களின் குணங்கள்.
வெளியாட்களிடம் பழகும்போது நல்லவராக இருக்கும் இவர்கள், தன் குடும்பத்தாரிடம் சிடுசிடுவென இருப்பார்கள். ஊருக்கே உபதேசம் செய்வார்கள். ஆனால் தான் அதை பின்பற்ற மாட்டார்கள். அதீதமாக முன்கோபம் கொண்டவர்கள். இந்த கோபத்தாலேயே பலரையும் பகைத்துக்கொள்வார்கள். மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் இவர்கள், தனக்கு யாரும் அறிவுரை கூறினால் அவற்றைக் காது கொடுத்து கூட கேட்கமாட்டார்கள்.
அன்பாகவும், ஆதரவாகவும் பேசும் இவர்கள், கோபம் வந்தால் விஷத்தைக் கக்குவது போல் வார்த்தைகளாலேயே கொல்வார்கள். தந்தையுடன் இணக்கமாக இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் தந்தைக்கு எதிராகவே நடந்து கொள்வார்கள்.
இவர்கள் போகும் பாதையில் அப்படியே போகாவிட்டால் ஒரு பிரச்சினையும் இருக்காது. மாறாக இது சரி தவறு என ஏதாவது நாம் கூறினால், நம்மை எதிரியாக பாவிப்பார்கள்.
எடுக்கின்ற முயற்சிகளில் எப்பாடுபட்டாவது வெற்றி காண்பார்கள், ஆயில்ய நட்சத்திரக்காரர்கள். தன் சுய முயற்சியாலேயே முன்னேறுவார்கள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மறைமுக சேமிப்பு வைத்திருப்பார்கள். அந்த சேமிப்பையும் பலமடங்காக பெருக்குவது எப்படி? என்ற வித்தை கற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்வதை விட சொந்தத் தொழில் செய்வதில்தான் ஆர்வம் காட்டுவார்கள்.
ஏன் சுயதொழில்? அதற்குக் காரணம் உண்டு. ஆயில்ய நட்சத்திரக்காரர்கள், சோம்பல் குணம் உடையவர்கள். அதுமட்டுமல்ல ... கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பார்களே தவிர... மாறாக பதில் சொல்லும் இடத்தில் இருக்க விரும்பமாட்டார்கள்.
இதன் காரணமாகவே வேலைக்குச் செல்வதை விட, சொந்தத் தொழில் செய்வதில் தான் ஆர்வம் காட்டுவார்கள். ஒருவேளை இவர்கள் வேலைக்குச் சென்றால், அந்த வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். தன்மானத்திற்கு பங்கமேதும் வந்தால் யோசிக்காமல் அந்தவேலையை உதறிவிடுவார்கள்.
ஆயில்ய நட்சத்திரக்காரர்கள், கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்களா? நிச்சயமாக இல்லை. இவர்கள் சராசரி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்களுக்கு கல்வியால் பெறும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவே அதிகம். இவர்கள் உயர்பதவிகளிலே இருந்தாலும் நிச்சயமாக சராசரி மாணவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.
கற்பனை உலகில் வாழ்பவர்கள் இவர்கள். கற்பனையாக கோட்டை கட்டி அதில் வாழ்பவர்கள். வாழ்க்கையில் முதலிடத்திற்கு வரவேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக இருக்கும்.
கதை, கவிதை, எழுத்து, தகவல் தொழில் நுட்பம், சித்த மருத்துவம், கால்நடை மருத்துவம் இவை அனைத்தும் ஆயில்யம் ஆகும்.
நூல், கயிறு, கம்பிகள், விஷ முறிவு மருந்துகள், இருமல் மருந்துகள், ஊசிகள், ஆணிகள், முள்கம்பிகள், கழுத்து டை, ஸ்டெதஸ்கோப், பூச்சரம், மலர்மாலை, பொன்னாடை, அங்கவஸ்திரம், பேனா, குப்பைக் கூடை, அழுகும் பொருட்கள் இவற்றைத் தயாரித்தல், விற்பனை செய்தல் என அனைத்தும் ஆயில்யமே.
பால் வியாபாரம், பால் தொடர்பான தயிர், நெய் உற்பத்தி மற்றும் விற்பனை, உணவகங்கள், மளிகைக்கடை, நோட்டுப் புத்தகம், எழுதுபொருள் விற்பனை, அடைக்கப்பட்ட உணவுகள், பழைய இரும்பு வியாபாரம், குப்பை சேகரிக்கும் நிறுவனம், வெல்டிங் வேலை, கிரில் வேலை, தச்சுத்தொழில்,ஒயர் சேர்கள், ஒயர் பைகள், டேப் கட்டில், கொசுவலை, மீன் வலை, நங்கூரம், இவை அனைத்துமே ஆயில்யம் ஆகும்.
கிருஷ்ணரின் அண்ணன் பலராமன் பிறந்ததும் ஆயில்யம்தான். கிருஷ்ணனுக்கு பக்கபலமாக இருந்தவர், ராமனுக்கு பக்கபலமாக இருந்தவர் என இவர்கள் எல்லோருமே ஆயில்யமே. இந்த ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் பிறர் முன்னேற தங்கள் உடல் பொருள் ஆவியைத் தரவும் தயங்காதவர்கள். ஆனாலும் இந்த ஆயில்ய நட்சத்திரக்காரர்களிடம் எச்சரிக்கையாகத்தான் பழக வேண்டும்! காரணம்... எப்போது எப்படி மாறுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.
ராமபிரான், புனர்பூச நட்சத்திரம் என எல்லோருக்கும் தெரியும். தன் வனவாசத்தில் ஆட்சி அதிகாரத்தை தனக்கு சம்பத்து தாரை நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பரதனிடம் தான் கொடுத்தான். வதை தாரையான ஆயில்யத்தில் பிறந்த லட்சுமணனிடம் தரவில்லை. ஒருவேளை லட்சுமணன் வனவாசம் போகாமல் ஆட்சியில் இருந்திருந்தால் ஶ்ரீராமனுக்கு வனவாசம் முடிந்த பின் அரசாட்சியை நிச்சயமாக திருப்பி தந்திருக்கவே மாட்டான். இதை அறிந்ததால்தானோ என்னவோ... லட்சுமணனை தன்னுடனேயே அழைத்துச் சென்றார் ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி.
ஆமாம்... ஆக்கிரமிப்பு செய்வதில் ஆயில்யம் ஆகச்சிறந்த நட்சத்திரம். எதையும் அப்படியே தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் குணம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு.
ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டமாட்டார்கள். எந்த உணவாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் உண்பார்கள். இதன் காரணமாகவே வயிற்று வலி தொடர்பான பிரச்சினைகளை சந்திப்பார்கள். இவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். காரணம் இவர்களுக்கு எளிதில் நோய் தொற்றும் அபாயம் உள்ளது. அதிலும் குறிப்பாக நுரையீரல் தொற்று, சளித் தொல்லை, தலையில் நீர் கோர்த்தல், அலர்ஜி, மேகநோய், தேமல், ரத்த சோகை, ரத்தம் உறையாமை போன்ற பிரச்சினைகள் வரும்.
ஆயில்ய நட்சத்திரக்காரர்கள், அவர்களின் குணம், செயல், நடத்தை என அனைத்தும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
-வளரும்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago