பூச நட்சத்திரக்காரர்களுக்கு பலன் தருபவர்கள் யார்? ஆகாதவர்கள் யார்?  27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் ; 23 -  ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

By செய்திப்பிரிவு

பூச நட்சத்திரக்காரர்களுக்கு பலன் தருபவர்கள் யார்? ஆகாதவர்கள் யார்?
27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் ; 23 -

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.


பூசம் நட்சத்திரத்தின் சிறப்புகளைப் பார்த்து வருகிறோம்.


பூச நட்சத்திரக்காரர்கள், நல்ல குணவான்கள். உதவும் மனப்பான்மை, தேவைகள் தானாகவே பூர்த்தியாகும் அதிர்ஷ்டசாலிகள் இவர்கள்.

குரு பிரகஸ்பதி மற்றும் பரதன் பிறந்த நட்சத்திரம் இந்த பூசம் என்றெல்லாம் பார்த்தோம். இன்னும் சிலரை பார்பரபோம்.

சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் பிறந்தது இந்த பூச நட்சத்திரத்தில்தான். முருகப்பெருமானின் துணைவியரில் ஒருவரான தெய்வானை பிறந்ததும் பூச நட்சத்திரத்தில்தான்.

வடலூர் அருட்பிரகாசர் அருட்பெரும் ஜோதி இராமலிங்க வள்ளலார் பெருமான் பிறந்ததும் பூசம் நட்சத்திரத்தில்தான்.

புத்தர் பெருமானுக்கு ஞானம் கிடைத்த போதிமரம் என்னும் அரச மரம் பூச நட்சத்திரத்தை குறிக்கும். ஆமாம், அரசமரம் பூச நட்சத்திரம்.

குழந்தை பாக்கியத்தைத் தருபவர் குருபகவான்- பூசம்

அரச மரம்- பூசம்.

புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வருவதன் காரணம் புரிகிறதா? எதை வேண்டிக் கொண்டு அரச மரத்தை சுற்றினாலும் அது நிச்சயம் கிடைக்கும்.

மார்பகம் பூசம், இதயம் பூசம், பால் பூசம், கரங்கள் பூசம், கரங்களில் இருக்கும் வளையல், காப்பு பூசம்.

மிக முக்கியமாக... ராகு கேது என இரண்டாகப் பிரிவதற்கு முன் ஒரே உடலாகத்தான் இருந்தார்கள். அப்போது அவர்கள் பெயர் “சுபர்பானு” என்னும் அசுரன். இவர் தேவர்கள் வரிசையில் நின்று அமிர்தம் உண்டபின் விஷ்ணுவால் தலை துண்டிக்கப்பட்டு, ராகு கேது என மாறினார்கள். (இது பெரிய கதை இங்கு சுருக்கமாக) இப்படி அமிர்தம் உண்ட இடம் இந்த பூச நட்சத்திரத்தில்தான். அதனால்தான் கடகத்தில் அமர்ந்த ராகு கேதுக்கள் எந்தவித தோஷத்தையும் தருவதில்லை.

மேலே கண்ட தகவல்களின் அடிப்படையிலேயே பார்த்தீர்களேயானால் பூச நட்சத்தினர் பொதுநலம் கொண்டவர்களேயன்றி சுயநலம் இம்மியிளவும் இருக்காது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை மற்ற கிரகங்களின் ஆதிக்கத்தால் சுயநலம் இருக்குமேயானால், இவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது, குற்ற உணர்வு உறுத்திக்கொண்டே இருக்கும்.

சரி, பூசநட்சத்திரக்காரர்களுக்கு உதவக்கூடியவர்கள் யார்? வாழ்க்கைத்துணையாக வருபவர் யார்? எதிரிகள் யார்? தொல்லை தருபவர்கள் யார்? யாரிடமிருந்து இவர்கள் விலகியிருக்கவேண்டும் என்பதையெல்லாம் பார்ப்போமா?

யோகத்தையும், லாபத்தையும், முயற்சிகளில் முழு வெற்றியையும் தரும் நட்சத்திரங்கள் -
ஆயில்யம்- கேட்டை- ரேவதி.
இந்த நட்சத்திர நபர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் முழு நன்மையைத்தரும். பணவரவு, காரியங்களில் வெற்றி, வாழ்க்கைத்துணை அமைதல், நண்பர்களாக அமைதல் மிகச்சிறப்பானதாகும்.


சொத்துக்கள் வாங்குதல், வாகனங்கள் வாங்க, வீடு குடி போக, தாம்பத்யம் சிறக்க, ஆதாயம் பெருக, சாதகமான நட்சத்திரங்கள்-

பரணி- பூரம்- பூராடம் இந்த நட்சத்திர நாட்கள் சிறப்பான நன்மைகளைத்தரும். இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணை அமைந்தால் வெகு சிறப்பாக இருக்கும்.

ஆரோக்கியம் மேம்பட, கடன் பெற, கடன் அடைக்க, எதிரிகளை அடக்க, வழக்குகளில் வெற்றி பெற உதவும் நட்சத்திரங்கள்- ரோகிணி- அஸ்தம்- திருவோணம். இந்த நட்சத்திரம் வரும் நாட்கள் சிறப்பானவை. நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணையாக இந்த நட்சத்திரக்காரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

நன்மைகள் பெறவும், தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கவும், பயணங்கள் மேற்கொள்ளவும், தொழில் தொடங்கவும் உகந்த நட்சத்திரங்கள்- திருவாதிரை- சுவாதி- சதயம். இந்த நட்சத்திர நாட்கள் பெரும் நன்மைகள் நடக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிக நன்மைகள் கிடைக்க, பயணங்களால் ஆதாயம் அடைய, எதிர்பாராத உதவிகள் கிடைக்க, மனம் நிறைந்த நண்பர்கள், வாழ்க்கைத்துணையாக இருக்க வேண்டிய நட்சத்திரங்கள்- புனர்பூசம்- விசாகம்- பூரட்டாதி. இந்த நட்சத்திர நாட்கள் வெகு சிறப்பான பலன்களை நீங்கள் பெற முடியும். மனதில் நினத்தது அப்படியே கிடைக்கும்.


புது முயற்சிகள் எடுக்கக்கூடாத, பயணங்கள் செய்யக்கூடாத, வாகனங்கள் வாங்கக் கூடாத, பத்திரப் பதிவு, வீடு குடி போகக் கூடாத, தொழில், வியாபாரம் தொட்ங்கக்கூடாத நட்சத்திரங்கள் -அசுவினி- மகம்- மூலம். இந்த நட்சத்திர நாட்கள், நண்பர்கள், வாழ்க்கைத்துணையாக அமைவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.


உங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மைகள் நடக்காத, அதேசமயம் உங்களை வைத்து மற்றவர்கள் ஆதாயம் பெறக்கூடிய நட்சத்திரங்கள்- கார்த்திகை- உத்திரம்- உத்திராடம் .


இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எந்தச் செயலும் உங்களுக்கு ஆதாயம் கிடைக்காது. ஆனால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். நண்பர்களாக அமைந்தால்... அவர்களால் எந்த உதவியும் கிடைக்காது, மாறாக நீங்கள் தான் அவர்களுக்கு ஏதேனும் உதவிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

எதைச் செய்தாலும் உங்களுக்கு எதிராக திரும்பக்கூடிய, பிரச்சினைகளின் வடிவமாக இருக்கக்கூடிய, தொல்லைகள் தரக்கூடிய, நண்பர்களாக இருந்தால் அவர்களால் தேவையில்லாத சிக்கல்களில் மாட்ட வேண்டிய, வாழ்க்கைத்துணையாக அமைந்தால் தினம்தினம் வேதனைகளை தரக்கூடிய நட்சத்திரங்கள் எவையெல்லாம் தெரியுமா?

மிருகசீரிடம்- சித்திரை- அவிட்டம் இந்த நட்சத்திர நாட்களில் எதுவும் செய்யக்கூடாது.முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.


பூச நட்சத்திரத்தின் தேவதை- பிரகஸ்பதி

அதிதேவதை- தட்சிணாமூர்த்தி

மிருகம்- ஆண் ஆடு

பறவை- நீர்காகம்

விருட்சம்- அரச மரம்

மலர் - கருங்குவளை

அடுத்த பதிவில் பூசம் நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதங்களுக்கும் உண்டான விளக்கங்களை விரிவாக பார்ப்போம்!
-வளரும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE