27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 19 ;
புனர்பூசக்காரர்களின் பலம், பலவீனம் இதுதான்!
- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
மனதுக்கு இனிய வாசகர்களுக்கு வணக்கம்.
இப்போது, நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் புனர்பூசம். நட்சத்திர வரிசையில் 7வது நட்சத்திரம். இந்த நட்சத்திரமானது மிதுன ராசியில் 3 பாதங்களும், கடக ராசியல் 4வது பாதமும் இருக்கும். இது ஒரு தேவகண நட்சத்திரம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான் ஶ்ரீராமபிரான், ஏகபத்தினி விரதன். பிறன்மனை நோக்காதவன். கோதண்டம் என்னும் வில்லுக்குச் சொந்தக்காரன். மனதில் சிறு களங்கமும் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்டவன். எதிரிக்கும் இரங்கும் குணம் கொண்டவன்... ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி.
சீதாதேவியை மணமுடிக்க இவர் வளைத்து ஒடித்த வில் சிவதனுசு. அந்த சுயம்வரத்தில் வில் வளைத்து அம்பு எய்ய வேண்டும் என்பதுதான் நிபந்தனை. ஆனால் ராமர் ஏன் வில்லை முறித்தார்?
ஒருமுறை சிவபெருமானுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் விளையாட்டாக அம்பு எய்தும் போட்டி நடந்தது. அப்போது இருவரும் தங்கள் வில்லைப் பயன்படுத்தாமல், தற்காலிகமாக ஒரு வில்லை இருவரும் செய்தனர், (சிவனின் வில் ’பிநாகம்’; விஷ்ணுவின் வில் சார்ங்கம், சாரங்கம் அல்ல) சிவன் சிவதனுசும், விஷ்ணு காண்டீபம் வில்லையும் செய்து போரிட்டனர். (இந்த காண்டீபம் அர்ஜுனருக்கு பின்னர் வந்து சேர்ந்தது.) சிவனின் வில் ஶ்ரீவிஷ்ணுவினால் சிறிது பின்னமானது (சேதமானது). அப்போது மகாவிஷ்ணு “இந்த பின்னமடைந்த சிவதனுசு ராம அவதாரத்தின் போது முற்றிலுமாக என்னால் முறிக்கப்படும்” என்றார்.
பிறகொரு தருணத்தில் தட்சனின் யாகத்தை அழிக்க இந்த சிவதனுசு பயன்படுத்தப்பட்டு ஜனகரின் வம்சாவளிக்கு வந்து சேர்ந்தது.
பின்னமடைந்த (சேதமடைந்த) எதுவும் பயன்படுத்தக்கூடாது என்பது பொது விதி. உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக்கூடாது, சேதமடைந்த சிலையை வணங்கக்கூடாது என்பதெல்லாம் இதன் அடிப்படையில்தான் சொல்லிவைக்கப்பட்டிருக்கிறது.
யாரெல்லாம் தூக்கமுடியாத சிவதனுசுவை தூக்கிய ராமனால், அதில் அம்பு பூட்டி எய்ய முடியாதா என்ன? ஆனால் பின்னமடைந்த பொருளை பயன்படுத்தக்கூடாது என்பதால் சிவதனுசுவை முற்றிலுமாக பங்கம் செய்தார். இது ’தனுர்பங்கம்’ என்று அழைக்கப்படுகிறது.
சரி, நாம் புனர்பூசத்தைப் பற்றிப் பார்ப்போமா?
புனர்பூசத்தில் பிறந்தவர்கள் இலக்கை அடையும்வரை ஓயமாட்டார்கள். அதேசமயம் முடிந்தவரை மற்றவர்களிடம் இணங்கிச் செல்வார்கள். அடுத்தவர் ஆலோசனையை செவிமடுத்துக் கேட்பார்கள். யாரையும் உதாசீனப்படுத்தமாட்டார்கள்.
எவ்வளவு ஏமாற்றங்கள், துரோகங்கள் வந்தாலும் மனமொடிந்து போகமாட்டார்கள். இடிந்து உட்காரமாட்டார்கள். வில் எவ்வளவு வளையுமோ அதேபோல வளைந்து போவார்கள். பிறகு அம்பின் வேகம் எவ்வளவோ அதேபோல மின்னல் வேகமெடுத்து செயல்படுவார்கள்; சாதிப்பார்கள்.
கல்வியில் சிறந்தவர்கள், கல்வியில் அறிவைப் பெறுபவர்கள் மத்தியில், இவர்கள் கல்வியில் ஞானம் பெறுபவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் உள்வாங்கி கிரகித்துக்கொள்பவர்கள். ஆனால் தனக்கு எல்லாம் தெரியும் என்று ஒருபோதும் தம்பட்டம் அடிக்கமாட்டார்கள். சுய பெருமை பேசாதவர்கள்.
தனக்குப் பெருமையோ, சோதனையோ அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். புனர்பூச நட்சத்திரக்காரர்கள், இரக்க குணம் அதிகம் கொண்டவர்கள் என்பதால், எளிதில் இவர்களை ஏமாற்றிவிடலாம்.
பணிபுரியும் இடத்தில் நேர்மையாக இருப்பதாலும், அதிக திறமைசாலியாக இருப்பதாலும் சக ஊழியர்களாலும், சில சமயம் உயரதிகாரிகளாலும் வெறுக்கப்படுபவராக இருப்பார்கள்.
“வேலை செய்கிறவனுக்கு வேலையைக் கொடு, சும்மா இருக்கிறவனுக்கு சம்பளத்தைக் கொடு” என்னும் பழமொழிக்கு இவர்களே பொருத்தமானவர்கள்.
ஆமாம்... ஒரே மாதிரியான வேலையில் இருக்கும் இருவரில், சும்மா இருக்கிறவருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு எளிதாகக் கிடைத்துவிடும். இந்த புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு எந்த உயர்வும் உடனே கிடைக்காது. இதை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். பதவி உயர்வு உள்ளிட்ட எதையும் போராடித்தான் பெற முடியும் என்பது எழுதப்படாத விதி.
இவர்களுக்கு அலுவலகங்களில் வேலை செய்யும் வாய்ப்புகளே அதிகம். ஆசிரியர், கல்லூரி, வங்கிப்பணி, பத்திரிகை, எழுத்துத் திருத்தம் (புரூஃப் ரீடர்) அச்சுக்கோர்த்தல், இடைத்தரகர், கதை எழுதுதல், கட்டுரையாளர், விளையாட்டுப் பயிற்சியாளர், பிரசங்கம், கதாகாலட்சேபம், பேச்சாளர், கலைத்துறை ஈடுபாடு, பயண ஏற்பாட்டாளர், வழிகாட்டி (கைடு), மருந்தாளுனர், சித்த வைத்தியம், பரம்பரை மருத்துவம் போன்ற வேலைகளில் இருப்பார்கள்.
பிரச்சினைகள் என எதுவும் வந்தால், தீர்வும் கூடவே வரும். எனவே பெரிய அளவிலான பாதிப்புகள் புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு இருக்காது. நண்பர்களால் உதவிகள் கிடைக்கப்பெறுவார்கள். நட்பு வட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். கணவன்/மனைவி உறவு பலமாகவே இருக்கும். ஆனால் இருவரின் உறவுகளால் தேவையற்ற பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
புனர்பூசக்காரர்கள், கடன் வாங்கக் கூடாது. கடன் வாங்கினால் திரும்ப அடைக்க பெரும்பாடு படவேண்டியது வரும். அதேபோல, கடன் கொடுக்கவும் கூடாது. கொடுத்த கடன் திரும்ப வராது.
சொந்தத் தொழில் செய்வது அவ்வளவு சிறப்பாக இருக்காது. காரணம்... தொழிலுக்குத் தேவையான கண்டிப்பு, கம்பீரம் புனர்பூசக்காரர்களிடம் இருக்காது. இருந்தாலும் பேரம் பேசாத, நிர்ணயிக்கப்பட்ட விலை கொண்ட தொழில்கள் சிறப்பாக இருக்கும். மருந்துக்கடை, உணவகங்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர், பால் வியாபாரம், காய்கறிக்கடை, பேக்கரி, ஐஸ்கிரீம் பார்லர், பள்ளி - கல்லூரிகள் நடத்துதல், டியூஷன் சென்டர், மொழிகள் தொடர்பான பயிற்சிகள், விளம்பர நிறுவனங்கள், அச்சகம், புத்தக வடிவமைப்பு, புத்தக நிலையம், பத்திரிகை நடத்துதல், பயண ஏற்பாட்டாளர், டிராவல்ஸ் நிறுவனங்கள் போன்ற தொழில்கள் அமையும்.
ஆரோக்கிய பிரச்சினைகள் குறித்துப் பார்த்தால், நுரையீரல் தொற்று, மன வளர்ச்சி குறைபாடு, சைனஸ், ஒற்றைத்தலைவலி, டான்சில்ஸ் முதலான பிரச்சினைகள், அது தொடர்பான அறுவை சிகிச்சைகள் செய்ய நேரிடும்.
ஆலய வழிபாடுகளில் அதீத ஆர்வமும், சித்த புருஷர்களைத் தேடி கண்டு கொண்டு தரிசிப்பதும், புனர்பூசக்காரர்களின் வழக்கம். அயல்நாடுகளுக்குச் செல்வது இவர்களின் குறிக்கோளாக இருக்கும். அது நிச்சயம் நிறைவேறும்.
இவர்களின் பலம், பலவீனம் இரண்டும் ஒன்றுதான்.
அவை என்ன?
எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் அந்த வேலை முடியும் வரை, வேறெந்த வேலையிலும் விஷயத்திலும் கவனம் போகாது. இந்த வழக்கம் வேலைக்கு சிறந்தது. அதேசமயம், குடும்பத்திற்கு இது சரிப்படாது. இதைப் புரிந்து கொண்டால் இவர்களின் வாழ்க்கை சிறக்கும்.
இன்னும் புனர்பூச நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்கள் குறித்து நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
அவற்றை அடுத்து பார்ப்போம்.
- வளரும்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago