’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மைகளையும் அந்த நட்சத்திரக்காரர்களின் குணங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
கார்த்திகை நட்சத்திரம் அக்னி அம்சம். இது கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் தேகத்திலும் இருக்கும். அப்படியெனில், இது குணாதியசத்தில் வெளிப்படுமா? நிச்சயம் வெளிப்படும்!
தவறுகளைப் பொறுக்க மாட்டார்கள். சிறுமை கண்டு பொங்குபவர்கள். பொய் பேசத் தயங்குபவர்கள். பொய் பேசினால் உடனடியாக மாட்டிக்கொள்பவர்கள். அடுத்தவர்களை ஒரே பார்வையில் எடை போட்டு விடுவார்கள். எதையும் தாங்கும் பக்குவம் உள்ளவர்கள். ஏமாற்றங்களை வெளிக்காட்டாதவர்கள். எதிரிகளைக் காத்திருந்து வீழ்த்துபவர்கள். அவச்சொல்லுக்கு ஆளாகாதவர்கள். அப்படி ஒருவேளை அவச்சொல்லுக்கு ஆளானால் துடித்துப் போவார்கள்.
அதேசமயம், துரோகம் தாங்கமாட்டார்கள். அப்படி துரோகம் செய்பவர்களை நட்பு வட்டத்தில் இருந்து தூக்கிவீசிவிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு ஏதேனும் கஷ்டம், சிக்கல், பிரச்சினை என்றால் நேரடியாக வராமல், யாரையாவது வைத்து அவர்களுக்கு உதவி செய்யும் பெருந்தன்மை குணம் கொண்டவர்கள்.
அக்னி தத்துவம் என்பதால் பித்த உடல்வாகு உடையவர்கள். எவ்வளவு உண்டாலும் மெலிந்த தேகம் கொண்டவர்கள். தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சினைகள் இருக்கும். பித்தம் தரும் உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உடல் சூட்டின் காரணமாக அடிக்கடி காது வலி வரும். இள வயதிலேயே கண்ணாடி அணியவேண்டி வரும். தலைவலி, வயிறு தொடர்பான உபாதைகள், முதுகெலும்பு பிரச்சினைகள் வரும். உணவு செரிமானம் உடனுக்குடன் ஆகிவிடும். எனவே பசியுணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
தன் வாழ்க்கைத்துணையிடம் அதிக நம்பிக்கை வைப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கைத்துணையிடம் மிகவும் அடங்கிப்போவார்கள். துணையின் பேச்சுக்கு மிகவும் கட்டுப்படுவார்கள். தெளிவாகச் சொல்வதென்றால் “வெளியில் புலி, வீட்டில் எலி” என்பது சரியாக பொருந்தும். மனமொத்த துணையே அமையும்.
நண்பர்களாக இருப்பவர்களிடம் மிக உண்மையாக இருப்பார்கள். அதேசமயம் துரோகம் செய்தாலோ மன்னிக்கவே மாட்டார்கள். ஆனால் நண்பர்களோ, வாழ்க்கைத் துணையோ அமைவதெல்லாம் சுயநலக்கார்ர்களாகவே அமைவார்கள்.
தன் தாய் தந்தையை எப்படி பார்த்துக்கொள்வார்களோ அதேபோல மாமனார் மாமியாரையும் நன்கு கவனித்துக்கொள்வார்கள்.
தன் பிள்ளைகளிடம் கண்மூடித்தனமாக பாசம் வைப்பார்கள். அவர்கள் கேட்காமலேயே தேவைகளை நிறைவேற்றித்தருவார்கள்.அதேசமயம் ஒழுக்கம் நிறைந்த பிள்ளைகளாக வளர்ப்பார்கள்.
கடன் வாங்க அஞ்சாதவர்கள், ஆனால் கடனால் எந்த பாதிப்புகளையும் சந்திக்கமாட்டார்கள். கடனை அடைப்பதில் சரியான திட்டமிடல் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் கடன் வாங்கியே தன் தொழில் முதல், தேவைகள் வரை அனைத்தும் செய்து கொள்பவர்கள்.
வேலைக்கு சென்றாலும் சரியான சமயத்தில் சொந்தத் தொழில் கண்டிப்பாகச் செய்வார்கள். அதிகபட்சம் சொந்தத் தொழில்தான் அமையும். பாரம்பரிய பரம்பரைத்தொழில் செய்வார்கள். உழவுத்தொழில், பண்ணைகள், ஆடை உற்பத்தி, மருந்து தொடர்பான தொழில், மருத்துவர், சித்த மருத்துவம் போன்ற தொழில் செய்பவர்களாக இருப்பார்கள்.
கார்த்திகை நட்சத்திரத்துக்கு உரிய தேவதை - அக்னி
ஆகவே, இவர்கள் அக்னி தலமான திருவண்ணாமலைக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்று வரவேண்டும். ஹோமங்கள், யாகங்களில் கலந்து கொள்ளவேண்டும். ஆலயங்களில் விளக்கேற்ற தேவையான எண்ணெய், நெய் தானம் வழங்குவது சிறப்பான நன்மைகளைத் தரும். கிருத்திகை நட்சத்திரப் பெண்கள், இல்லத்தில் காலை,மாலை இரு வேளையிலும் விளக்கேற்றி வழிபடுவது ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கே நன்மை தரும். நினைத்தது நிறைவேறும்.
அதிதேவதை - கார்த்திகேயன். எனவே முருக வழிபாடு செய்வது மிக நல்லது. அதிலும் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யுங்கள். அதிக சிறப்பான பலன்கள் தரும்.
கார்த்திகையின் வடிவம் - கத்தி. எனவே கூர்மையான பொருட்களை கையாளும்போது மிகுந்த கவனம் வேண்டும். உங்கள் பாதுகாப்புக்காக அல்ல, உங்களால் மற்றவர்களுக்கு எந்த தீங்கும் நிகழாமல் இருக்க இந்த கவனம் உதவும். .
கார்த்திகை நட்சத்திரத்துக்கான மிருகம் - பெண் ஆடு. ஆகவே, ஆடுகளுக்கு உணவளிப்பது நல்லது. நவக்கிரகத்தில் செவ்வாய் பகவானின் வாகனம் ஆடு. எனவே செவ்வாய் எனும் அங்காரகனை வழிபாடு செய்யுங்கள். செவ்வாய்க்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
விருட்சம்- அத்தி மரம்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் சுக்கிரனின் விருட்சம் அத்தி மரம். அப்படி இருக்க, சூரியனின் நட்சத்திரமான கார்த்திகைக்கும் அத்தி மரமே விருட்சம் என்பது ஏதோ முரண்பாடாக தெரிகிறதல்லவா? இதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
சுக்கிரனின் தன்மைகளில் ஆணின் விந்துவும் உண்டு. ஆனால் நன்றாக கவனியுங்கள். விந்து மட்டுமே குழந்தை பிறப்புக்கு போதாது. அந்த விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கை மிகமிக முக்கியம். அந்த உயிரணுவில் இருக்கும் உயிர் என்னும் வீரியம் மற்றும் வேகம் மிக முக்கியம். இந்த வீரியம் வேகம் இருந்தால் மட்டுமே குழந்தை உருவாகும். ஆக சுக்கிரன்- விந்து, சூரியன்- விந்துவில் உள்ள உயிரணு.
அத்தி மரம் கார்த்திகைக்கு வந்தது எப்படி என்று இப்போது புரிந்திருக்கும். அத்திப்பழத்தில் ஆண்களின் விந்து பெருக்கத்திற்கு தேவையான சக்தி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அத்தி மரத்தை தலவிருட்சமாக கொண்ட ஆலயங்கள்-
திருச்செந்தூர் முருகன் ஆலயம்.
சென்னை திருவொற்றியூர் வன்மீகநாதர் ஆலயம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம்.
திருச்சி கீரனூர் சிவலோக நாதர்.
இந்த ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து தல விருட்சத்திற்கு தூபதீபம் காட்டி, நீர் ஊற்றி வாருங்கள். அத்தி மரத்தை உங்களுக்கு வசதியான இடங்களில் வளர்த்து வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். வளர்ச்சி பெருகும். வசதிகள் அனைத்தும் கிடைக்கும்.
பெரும் நன்மைகள் தரும் நட்சத்திரங்கள்-
ரோகிணி,அஸ்தம், திருவோணம்
இந்த மூன்று நட்சத்திரங்களும் அதிக நன்மைகளைத்தரும். இந்த நட்சத்திரக்காரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழுமையான நன்மைகளைத்தரும். பணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். புது முயற்சிகளை இந்த நட்சத்திர நாட்களில் தொடங்கினால் வெற்றி உறுதி என முழுமையாக நம்பலாம்.
மேலும் இந்த நட்சத்திர வடிவங்களை வீட்டிலும், அலுவலகத்திலும், தொழிலகங்களிலும் வைத்துக்கொள்வது நன்மைகளை அதிகப்படுத்தித்தரும்.
ரோகிணி- தேர்
அஸ்தம் - மகாலட்சுமியின் (படம்) அபய முத்திரை
திருவோணம்- (வில்) அம்பு இந்த வடிவங்களை பயன்படுத்துங்கள். நன்மைகள் பெருகுவதை கண்கூட காண்பீர்கள்.
சொத்துக்கள் வாங்கவும், விற்கவும் உகந்த நட்சத்திரங்கள்-
திருவாதிரை, சுவாதி, சதயம்
இந்த நட்சத்திர நாட்களில் சொத்துக்கள் வாங்கவும், வாகனங்கள் வாங்கவும் செய்யலாம். அதே போல சொத்துக்கள் லாபகரமாக விற்பதற்கும் மிகவும் உகந்தது. வங்கிக் கணக்கு தொடங்கவும் சிறந்தது.
கடன் வாங்க, கடன் அடைக்க, தொழில் தொடங்க உகந்த நட்சத்திரங்கள்-
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
தொழில் தொடங்க தேவையான கடனுதவி பெறவும், வீட்டுக்கடன் வாங்கவும், கடன்களை திரும்ப அடைக்கவும் உகந்த நட்சத்திரங்கள்.
மேலும் நன்மை தரும் நட்சத்திரங்கள் -
அஸ்வினி, மகம், மூலம், பரணி, பூரம், பூராடம் இந்த ஆறு நட்சத்திரங்களும் நன்மை தருவதாக இருக்கும்.
தவிர்க்க வேண்டிய, நட்பாக வைத்துக்கொள்ளக் கூடாத நட்சத்திரங்கள் -
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
இவர்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத்துணையாக வந்தாலும் அவஸ்தைகளுடன் வாழ வேண்டும். இந்த நட்சத்திர நாட்களில் புதிய முயற்சிகள் செய்யக்கூடாது, பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. அறுவை சிகிச்சை செய்யக்கூடாது.
உங்களால் மற்றவர்களுக்கு நன்மையும் அவர்களால் எந்த நன்மையும் நடக்காது. அந்த நட்சத்திரங்கள்-
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.
ஏன்தான் பழகினோமோ? என எண்ணத்தோன்றும் நட்சத்திரங்கள்-
ஆயில்யம், கேட்டை, ரேவதி
இந்த நட்சத்திரக்காரர்கள் என்றாவது பெரிய அளவில் சிக்கலில் மாட்டிவிட்டு விடுவார்கள். வாழ்க்கைத்துணையாக வந்தாலோ... நிம்மதி என்பதே இல்லாமல் போகும். முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இந்த நட்சத்திர நாட்களில் செய்யும் எந்த வேலையும், எந்த முயற்சிகளும் உங்களுக்கு எதிராகத்தான் போகும்.
வேதை என்னும் நெருப்பாய் இம்சை தரும் நட்சத்திரம்- விசாகம். முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.
இன்னும் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் குறித்த தகவல்கள் ஏராளம்.
- வளரும்
*********************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago