சவரக்கத்தி, சாவி, மண்வெட்டி... கார்த்திகை நட்சத்திரம்!  27 நட்சத்திரங்கள்... ஏ டூ இஸட் தகவல்கள்! 7 :  

By செய்திப்பிரிவு


’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.


கடந்த அத்தியாயங்களில், முதல் நட்சத்திரமான அஸ்வினி மற்றும் அடுத்த நட்சத்திரமான பரணி நட்சத்திரம் அந்த நட்சத்திரக்காரர்களின் குணங்கள், அவர்களுக்கு தோழமையாகவும் இணக்கமாகவும் இருக்கும் நட்சத்திரக்காரர்கள், இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள், உகந்த நிறங்கள், கிழமைகள், விருட்சங்கள் முதலான விஷயங்களையெல்லாம் பார்த்தோம்.


இப்போது 27 நட்சத்திரங்களின் வரிசையில், அடுத்து நாம் பார்க்க இருப்பது... கிருத்திகை நட்சத்திரம். அதாவது, கிருத்திகை நட்சத்திரத்தின் வீரியம் எவ்விதம், இந்த நட்சத்திரக்காரர்களின் குணநலன்கள், கேரக்டர்கள் என்னென்ன, இவர்களின் தெய்வங்கள், விருட்சங்கள் என்பதையெல்லாம் ‘ஏ டூ இஸட்’ பார்க்கலாமா?


கார்த்திகை நட்சத்திரத்தை கிருத்திகை நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள். மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களின் வரிசையில், 3வது நட்சத்திரம் கிருத்திகை.


கார்த்திகை நட்சத்திரமானது வானில் ஆறு நட்சத்திரங்களின் கூட்டு வடிவம். இது பார்ப்பதற்கு சவரக்கத்தியின் வடிவத்தில் இருக்கும்.
இந்த நட்சத்திரக் கூட்டத்தை வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும். அதுமட்டுமல்ல... 27 நட்சத்திரங்களிலேயே இந்த கார்த்திகை நட்சத்திரக் கூட்டமே அதிக உஷ்ணம் வாய்ந்தது என்கிறது வானியல் சாஸ்திரம்.


முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப்பெண்களே நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள் என்று விவரிக்கின்றன புராணங்கள். எனவே, இந்த கார்த்திகை நட்சத்திரம் முருகனின் ஆசி பெற்ற நட்சத்திரம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

முருகனை வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் நம்மில் பலருக்கும் தெரிந்திடாத ஒன்றும் உண்டு. அது... கார்த்திகை நட்சத்திரப் பெண்களின் பெயர்கள்.


முருகனை வளர்த்த கார்த்திகை நட்சத்திர பெண்களின் பெயர்கள் இதோ...!


அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்கிற இந்த ஆறு பெண்கள்தான் முருகக் கடவுளை வளர்த்தார்கள். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால்தான் கந்தக் கடவுளுக்கு கார்த்திகேயன் எனும் திருநாமம் அமைந்தது.


நட்சத்திரங்களையே பெயராக வைப்பது நம் வழக்கம். அதாவது அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அஸ்வினி என்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ரோகிணி என்றும், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுவாதி என்றும், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ரேவதி என்றும் பெயர் சூட்டி மகிழ்வோம். இதில் ஒன்றைக் கவனித்தீர்களா? எல்லாமே பெண்களுக்கான பெயர்கள். பெண் குழந்தை பிறந்தால், இந்தப் பெயர்களைப் பயன்படுத்தலாம். பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு பரணி என்று பெயர் வைப்பார்கள்.


ஆனால் கார்த்திகை நட்சத்திரத்துக்கு இருக்கிற மிக முக்கியமான சிறப்பு உண்டு. கிருத்திகா, கார்த்திகா என்று பெண் குழந்தைக்கும் கார்த்திகேயன், கார்த்திக் என்று ஆண் குழந்தைக்கும் கிருத்திகை நட்சத்திரத்தைக் கொண்டு பெயர் சூட்டலாம்.


பொதுவான விஷயம் ஒன்று... கார்த்திகை நட்சத்திரத்தை பெயராகக் கொண்டவர்கள், படிப்பிலும் தான் சம்பந்தப்பட்டிருக்கும் துறையிலும் மின்னும் நட்சத்திரமாக ஜொலிப்பார்கள்.


சரி, கார்த்திகை நட்சத்திரம் பற்றிய ஏ டூ இஸட் தகவல்களைப் பார்ப்போம். கிருத்திகை நட்சத்திரக்காரராக நீங்கள் இருந்தாலோ உங்கள் வீட்டில் எவரேனும் இருந்தாலோ, நண்பர்கள் உறவினர்கள் என இருந்தாலோ அவர்களுக்கான இந்த ஜென்மம் முழுமைக்குமான குணங்கள், கேரக்டர்கள், தெய்வங்கள் என ஒரு முழுமையான டேட்டா இது. எனவே உங்கள் வட்டத்தில் உள்ள கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இந்த அத்தியாயங்களை ‘ஷேர்’ செய்யுங்கள். அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அந்தப் பயன் மூலமாக உங்களுக்கு மனநிறைவும் புண்ணியமும் கிடைப்பதை நீங்களே உணருவீர்கள்.


கார்த்திகை நட்சத்திரம், மேஷ ராசியில் முதல் பாதத்தையும் மற்ற மூன்று பாதங்களை ரிஷப ராசியிலும் கொண்டிருக்கிறது. ஆகவே, கார்த்திகை நட்சத்திரக்காரர்கள், மேஷ ராசியின் குணமும் ரிஷப ராசியின் குணமும் கொண்டிருப்பார்கள்.


அதாவது சுள்ளென்று கோபமும் வரும். கோபத்திற்குப் பின்னர் தடக்கென்று கனிவுடனும் இருப்பார்கள். உழைப்பதற்கு சளைக்கவே மாட்டார்கள், கார்த்திகை நட்சத்திரக்காரர்கள். அதேபோல், உழைப்புக்கேற்ற வருமானமும் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தினர் மீது அதிகம் பாசம் காட்டுவார்கள். வீட்டார், உற்றார் சுற்றார் மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள்.


கார்த்திகை நட்சத்திரக்காரர்கள், தங்கள் பிள்ளைகள் என்னவாக வரவேண்டும் என்பதைச் சரியாகத் திட்டமிட்டு வளர்ப்பார்கள். உற்றார் உறவினர் என எல்லோரிடமும் கனிவுடன் இருப்பார்கள். எந்த வேலையைச் செய்தாலும் அதில் அதிக நேர்த்தியுடன் செயலாற்றுவார்கள்.
கார்த்திகையின் வடிவம், சவரக்கத்தி வடிவம். சவரக்கத்தியானது அழகற்றதை அழகாக்கும். ஒழுங்கற்றதை ஒழுங்காக்கும். இப்போது இரண்டு பாரா வரை பார்த்த விஷயங்கள் எல்லாம் இந்த சவரக்கத்திக்கு ஒப்பிடுப் பாருங்கள். ஏற்பு உடையதாக இருப்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
கார்த்திகை நட்சத்திர நண்பர்களின் கேரக்டர்களை இன்னும் பார்ப்போம்.


நட்பில் மிக மிக நேர்மையுடன் இருப்பார்கள். அப்படியான நேர்மையை எதிர்தரப்பிலும் எதிர்பார்ப்பார்கள். நேர்மை தவறினால் அந்த நொடியே நட்பிலிருந்து சம்பந்தப்பட்டவர்களை விலக்கிவிடுவார்கள். பிறகு என்னவிதமான, எத்தனை விதமான கர்ணம் போட்டாலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.


உடை அணிந்துகொள்வதில் அப்படியொரு கச்சிதமான நேர்த்தியுடன் இருப்பார்கள். தோற்றத்தில் பொலிவுடனும் நகங்களை சீராக வைத்துக்கொள்வதில் ஒரு ஒழுங்குடனும் இருப்பார்கள்.


எதையும் கூர்ந்து கவனிப்பார்கள். தான் கற்றதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள். பயணங்களில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.


இன்னுமொரு முக்கியமான தகவல்...


இதோ இந்த வடிவத்தைப் பாருங்கள்...


இது சவரக்கத்தி மாதிரி மட்டுமல்லாமல், பூட்டைத் திறக்கும் சாவி வடிவமும். மண்வெட்டியை ஒத்த வடிவமும், தீபக்கால் போன்றும் இருப்பதை கவனியுங்கள்.

எப்படிப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் அவற்றில் இருந்து எளிதில் தப்பிவிடுவார்கள். அது அலுவல் பிரச்சினையாக இருந்தாலும், தொழில் ரீதியான சிக்கல்களாக இருந்தாலும் சரி, எளிதில் தப்பிக்கவும் செய்வார்கள். அவற்றில் இருந்து தீர்வையும் அடைவார்கள்.
உதாரணமாக தொழிலில் உற்பத்தியான பொருளில் தவறுதலான மாற்றம் ஏற்பட்டு விட்டால் அதையே ஒரு டிரெண்டாக உருவாக்கி, அதிலும் லாபம் பார்க்கும் வல்லமை கொண்டவர்கள்.

அதேபோல், சரியான நிர்வாகம் இல்லாமல் சீரழிவு அடைந்த நிறுவனங்கள், கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் வசம் வந்தால் போதும்... அந்த நிறுவனத்தை நம்பர் ஒன் இடத்தில் உட்காரவைத்துவிடுவார்கள்.
ஆலய தீபம், கோபுரக் கலசம், வீட்டில் ஏற்றப்படும் தீபம் என அனைத்தும் கார்த்திகையின் அம்சம்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நெற்றித்திலகம் கார்த்திகை, திருவண்ணாமலையின் உச்சி கார்த்திகை, யாகங்கள், ஹோமங்கள், கார்த்திகை. அதாவது, பரணி அடுப்பு என்று பார்த்தோம். அதில் எரியும் நெருப்பு கார்த்திகை.

புதிதாக உருவாக்குவது கார்த்திகை. ஆணின் விந்தணுவில் உள்ள உயிரணு கார்த்திகை.


பிரதமர், முதல்அமைச்சர் கார்த்திகை, நகர்ப்புற உருவாக்கம் கார்த்திகை, நிதானமாகத் திட்டமிட்டு வளருதல் கார்த்திகை. மலைகளின் உச்சி, வீட்டின் மேல்தளம், மரத்தின் உச்சி, வைரம் பாய்ந்த மரங்கள் அதாவது உச்சிப்பகுதி என்பவையெல்லாம் கார்த்திகையைக் குறிக்கும்.

வலதுகண், செவிப்புலன், முதுகெலும்பும் மூளையும் இணையும் இடம் என்பவையும் கார்த்திகையைக் குறிக்கும். கண்ணில் தோன்றும் ஒளி, உணவைச் செரிக்கவைக்கும் அக்னி என்பவையும் கார்த்திகையே!

பொதுவாகவே, கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு நோய்த் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும். பருவகால நோய்கள் இவர்களுக்கு எளிதில் வராது. காரணம்... இவர்கள் ராஜஸ குணத்துக்காரர்கள் (இந்தத் தொடரின் முதல் பதிவில் எல்லா நட்சத்திரம் குறித்தும் விரிவானதொரு விளக்கம் உள்ளது, படிக்காதவர்கள் படித்துக் கொள்ளுங்கள்). ராஜஸ கணம் கொண்டவர்களாக இருப்பதால், நோய் பாதிப்பு குறைவாக இருக்கும், சளைக்காமல் வேலை பார்த்தாலும் சோர்வு என்பதே இருக்காது.

உஷ்ணமான தேகம் உடையவர்கள். எனவே மற்றவர்களைவிட உடல்சூடு அதிகம் இருக்கும். நெருக்கமானவர்கள் கூட இவர் அருகில் படுக்காமல் சற்று விலகியே படுப்பார்கள். அந்தளவுக்கு உஷ்ணம் இவர் உடலில் வெளிப்படும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் பற்றிய தகவல்கள்... இன்னும் ஏராளம்.


- வளரும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்