- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
பரணி தரணி ஆளும்!
அற்புதமான இந்த வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் உரியவர்கள் பரணி நட்சத்திரக்காரர்கள். தரணி என்றால் உலகம். பலருக்கும் இந்த வீடே உலகம்தானே! ஆக, உலகையே வீடாக்கிப் பார்ப்பவர்களாகட்டும், வீட்டையே உலகமாக நினைத்து வாழ்பவர்களாகட்டும்... அவர்கள் பரணி நட்சத்திரக்காரர்களெனில், அவர்கள்தான் ஆள்பவர்கள்.
பரணி நட்சத்திரத்தின் தனித்தன்மைகள் என்ன... அவர்களின் குணங்கள்... அவர்களின் இயல்புகள் என்னென்ன என்று பார்ப்போம்.
பரணி.... சுக்கிர பகவானின் நட்சத்திரம்.
அஸ்வினி என்பது பிறந்த குழந்தையின் அடையாளம். அந்தக் குழந்தை வளர்வதற்கான உணவு என்பது பரணி. ஆம் பரணியின் அடையாளம் அடுப்பு. வானில் மூன்று நட்சத்திரங்களின் கூட்டமைப்பே பரணி. இது பார்ப்பதற்கு அடுப்பு போன்றே இருக்கும்.
எனவே, இவர்கள் உணவுப்பிரியர்களாக இருப்பார்கள். அது மட்டுமல்ல சுக்கிரனின் நட்சத்திரம் என்பதால் ஆடம்பரமாகவும் இருப்பார்கள். தன்னை அழகுபடுத்திக்கொள்பவர்களாகத் திகழ்வார்கள். ஆபரணங்களை விரும்பி அணிவார்கள்.
மேலும் இந்த பரணி நட்சத்திரமானது மேஷ ராசியில் இருக்கும். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். எனவே மண்ணாசை அதிகம் உடையவர்கள். அதாவது, மனை, விளைநிலம், வீடு என்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
இங்கே முக்கிய தகவல் ஒன்று...
மகாபாரதத்தில் கௌரவர்களின் மூத்தவனான துரியோதனன் பிறந்தது பரணி நட்சத்திரத்தில்தான்! மகாபாரதத்தின் அடிப்படைச் சிக்கலுக்கும் யுத்தத்திற்கும் காரணம்... மண்ணாசை என்பது நாம் அறிந்ததுதான்!
அதனால்தான் பரணியில் பிறந்தவர்கள் நிறைய நிலபுலங்களை வாங்குவார்கள். மண்ணின் மீதான ஆசைகளை அதிகமாகக் கொண்டிருப்பார்கள்.
பரணி அடுப்பு என்று சொன்னேன். அரிசி, பருப்பு, காய்கறி என தனித்தனிப் பொருட்களை ஒன்றிணைத்து அருமையான உணவு படைப்பது போல, இருப்பதையெல்லாம் கொண்டு மிகப்பெரிய ஒன்றை உருவாக்குவார்கள் பரணி நட்சத்திரக்காரர்கள். எனவே சமையல்கலை வல்லுநர்களாகவும் இருப்பார்கள். சமையல் மட்டுமின்றி மற்ற எந்த விஷயமாக இருந்தாலும் தனித்துவம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
கட்டுமானப் பணி எனும் கட்டிடக்கலை பரணிக்கே உரித்தானது. பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் கட்டிட வல்லுநர்களாக இருப்பார்கள் என்று சொல்வது உண்டு. ஆனால் மேஷ ராசியில் இருக்கும் அஸ்வினிக்கோ மற்றும் கார்த்திகைக்கோ இது பொருந்துவதைவிட பரணி நட்சத்திரத்துக்கே 100 சதவிகிதம் பொருந்தும்.
பரணி நட்சத்திரக்காரர்கள், வார்த்தை ஜாலம் உடையவர்கள். தன் பேச்சாலேயே மற்றவர்களை கட்டிப்போட்டுவிடுவார்கள். பேச்சால் ஜீவனம் செய்பவர்கள். மேடைப்பேச்சு, பட்டிமன்றப்பேச்சாளர், உபந்யாசம், கதாகாலட்சேபம் முதலான துறைகளில் மின்னுவார்கள்.
ஒருசிலர் பேசினால் “எப்போ முடிப்போரோ” என எண்ணத்தோன்றும். ஆனால் பரணி நட்சத்திரக்காரர்கள் எப்படி ஆரம்பிக்க வேண்டும், எங்கே இடை நிறுத்தம் செய்ய வேண்டும், எப்படி முடிக்க வேண்டும் என்பதில் படு கச்சிதமானவர்கள்.
சுக்கிரனின் நட்சத்திரம் என்பதால் ஆடை வடிவமைப்பு, ஆபரணங்கள் வடிவமைப்பு போன்ற துறைகளில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
ஒரு குடும்பத்தில் பரணி நட்சத்திரக்காரர் இருந்தாரேயானால். ஒட்டு மொத்த குடும்பமும் அவருடைய பேச்சுக்கு கட்டுப்படும். இன்னும் சொல்லப்போனால் அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. அவர் குடும்பத் தலைவராக அல்லது தலைவியாக இருக்கலாம். பிள்ளைகளாகவும் இருக்கலாம்.
பரணி நட்சத்திரத்தின் மரம் நெல்லி. ஔவைக்கு அதியமான் தந்தது நெல்லிக்கனி. தொடர்ந்து, நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ஆயுள் கூடும். உடல் உறுதியாகும்.
மிக முக்கியமாக சுக்கிரனின் காரகமான சுக்கிலம் என்னும் விந்து கெட்டிப்படும். புத்திரபாக்கியம் விரைவில் கிடைக்கும். ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
பரணியின் மிருகம் - யானை
யானை உருவம், யானையின் தந்தத்தில் செய்த பொருட்கள் எல்லாமே பரணியின் அம்சம். எனவே, பரணியில் பிறந்தவர்கள் யானை உருவத்தையோ அல்லது தந்தத்தால் ஆன பொருட்களையோ தங்களுடைய வீட்டிலும், பணி ரியும் இடத்திலும், தொழிலகத்திலும் வைத்துக்கொள்வது செல்வவளத்தைப் பெருக்கும்.
பரணி நட்சத்திரக்காரர்கள், அபார ஞாபக சக்தி உடையவர்கள், கண்ணால் பார்ப்பதை கைகளால் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். குடும்பத்தின் மீது அதிகப் பாசம் வைத்திருப்பார்கள். பொருள்தேடி உலகம் சுற்றுவார்கள். மறைமுக சேமிப்பு அதிகம் உடையவர்கள். கலகலப்பானவர்கள். எளிதில் காதல் வயப்படுபவர்கள்.
காம எண்ணங்கள் அதிகம் உடையவர்களாக பரணி நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள். அதிக நண்பர்களைக் கொண்டவர்கள். எடுத்துக்கொண்ட வேலைகளை சிறிதும் பிசகில்லாமல் செய்து முடிப்பவர்கள். ஆளுமை தன்மை உடையவர்கள். அதிகாரப் பணியில் இருந்தாலும் சகஜமான பழக்கத்தால் அனைவரையும் தன் வசப்படுத்துபவர்கள்.
பரணி நட்சத்திரக்கு உரிய நெல்லிமரத்தை தல விருட்சமாக கொண்ட ஆலயங்களுக்கு சென்று தரிசித்து வந்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெற்று வாழலாம்!
நெல்லி மரத்தை தல விருட்சமாகக் கொண்ட ஆலயங்கள் -
திருநெல்லிக்கா என்னும் திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதர் ஆலயம், திருவாரூர். இந்த ஆலயத்தில் நெல்லி மரம் தல விருட்சம்..
மேலும் சுவாமிமலை, திரு ஆவினன்குடி (பழனி) இந்த ஆலயங்களிலும் நெல்லி மரமே தல விருட்சம்.
பரணியின் தேவதை - துர்கை
கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்கை ஆலயத்தில் நெல்லி மரமே தலவிருட்சம். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் ஆண்டுக்கொருமுறையோ, அல்லது வாய்ப்பு கிடைக்கும்போதோ... பட்டீஸ்வரம் சென்று துர்கையை வணங்கி வாருங்கள்.
பரணியின் அதிதேவதை இருப்பவர் - யமதர்மன்.
திருக்கடையூர் அபிராமி அன்னையின் ஆலயத்திற்கும், திருபைஞ்ஞீலி எமதர்மன் சாபம் நீங்கிய ஆலயத்திற்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று தரிசித்து வாருங்கள். ஆரோக்கியம் மேம்படும். ஆயுள் பலம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள்.
பரணி நட்சத்திரக்காரர்களின் பகை நட்சத்திரங்கள் என்னென்ன, வாழ்க்கைத் துணையாகவும் வாழ்க்கைக்குத் துணையாகவும் நட்பாகவும் உறவாகவும் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் எவை என்பது குறித்தெல்லாம் அடுத்து பார்க்கலாம்!
- வளரும்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago