பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமே ஒவ்வொரு எழுத்தினை நமது முன்னோர்கள் ஜோதிடத்தில் சொல்லியிருக்கிறார்கள். அதன்படி பார்க்கும்போது பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள முடியும். இந்திந்த எழுத்தினை கொண்டவர்கள் எந்தெந்த குணாதிசயங்களில் கொண்டிருப்பார்கள் என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.
அஸ்வினி : சூ, சே, சோ, லா,
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்திலும் செவ்வாய் ஆதிக்கத்திலும் பிறந்தவர்கள். இவர்கள் கொண்ட கொள்கையில் மாறாதவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு புத்திமதி சொல்லக்கூடிய அளவிற்கு நடந்து கொள்வார்கள். இவர்கள் கல்வி சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும். இவர்கள் வேலைக்கு செல்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள். விநாயகரை வழிபாடு செய்து வருவது அவர்களுக்கு நன்மையைக் கொடுக்கும்
பரணி : லீ, லூ, லே, லோ,
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். முகம் மிகவும் லட்சணமாக இருக்கும். இவர்கள் சுக்கிரன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பது வல்லவர்கள். அதிகாரமிக்க மனிதர்களுடன் தொடர்பு முக்கிய நபர்களின் மூலமாக ஆதாயம் இவையெல்லாம் இவர்களுக்கு ஏற்படும். அதிகாரமிக்க பதவி இவர்களுக்கு தானாகவே வந்து சேரும். காதல் கிரகமான சுக்கிரன் நட்சத்திரத்தில் சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் காதல் சம்பந்தமான விஷயங்களில் விருப்பம் இருந்தாலும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் இவர்களுடைய காதல் கைகூடாமல் போகலாம். இவர்கள் மகாலட்சுமி வழிபாடு செய்து வருவது நன்மையை கொடுக்கும்.
கார்த்திகை : ஆ, ஈ, உ, ஏ,
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதல் பாதம் சூரியன் செவ்வாய் ஆதிக்கத்திலும் மற்றும் 2, 3, 4 ஆகிய பாதங்கள் சூரியன் சுக்கிரனுடைய ஆதிக்கத்திலும் இருப்பவர்கள். தந்தையை பிரதிபலிப்பவராக இவர்கள் இருப்பார்கள். இவர்களுடைய குரல் கணீரென்று இருக்கும். நேரத்தை சரியானபடி கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வேலை செய்வதைவிட தொழில் செய்வது சிறந்தது என்று எண்ணுபவர்கள். அரசு அதிகாரம் போன்ற விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டவர்கள். இவர்கள் சிவனை வழிபாடு செய்து வருவது நன்மையைக் கொடுக்கும்.
ரோகிணி : ஓ, பா, பீ, பூ,
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆதிக்கத்தில் இருப்பார்கள். இவர்கள் கொடுத்த வாக்கினை உயிருக்குச் சமமாக மதிப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். தாம் எடுத்துக் கொண்ட பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பற்களின் அமைப்பு முத்துக்கள் போன்று இருக்கும். இவர்கள் முகம் வட்டமாக இருக்கும். சமயோசித புத்தி அதிகம் கொண்டவர்களாகவும் உழைப்பு மிகுந்தவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். ஸ்ரீகிருஷ்ண பகவானை வழிபாடு செய்து வருவது அவர்களுக்கு நன்மையைக் கொடுக்கும்.
மிருகசீரிஷம் : பே, போ, கா, கீ
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், செவ்வாய் சுக்கிரன் மற்றும் செவ்வாய் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். முதல் இரண்டு பாதங்கள் செவ்வாய் சுக்கிரனும் கடைசி இரண்டு பாதங்கள் செவ்வாய் புதனும் கொண்டவர்கள். இவர்கள் எந்த ஒரு வேலையையும் சீக்கிரமே முடித்து விடுவார்கள். பூமி சம்பந்தமான விஷயங்கள் இவர்களுக்கு எப்போதும் கை கொடுக்கும். எப்போது மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தைரியம் அதிகம் கொண்டவர்கள். மனதில் பட்டதை நேரடியாக சொல்பவர்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்து வருவது இவர்களுக்கு நன்மையைக் கொடுக்கும்.
திருவாதிரை : கூ, க, ங, ச,
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழி பாட்டனார் பிரதிநிதிகளாக இருப்பார்கள். தனியாக இவர்கள் எப்பொழுதுமே செயல்பட முடியாது. துணை என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். புத்தி நுணுக்கம் அதிகம் கொண்டவர்கள். உணவுப் பிரியராக இருப்பார்கள். அதிகமான பயணங்களை விரும்புவதாக இருப்பார்கள். செய்யும் வேலையை உயிருக்குச் சமமாக மதிப்பவர்கள். அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும்.
புனர்பூசம் : கே, கோ, ஹா, ஹி,
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குரு புதன் மற்றும் குரு சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். எப்பொழுது மற்றவர்களுக்கு போதனை சொல்லக்கூடிய இடத்தில் இருப்பார்கள். முடிந்தவரை நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். வாழ்க்கையில் மிக கடினமான பாதைகளை தாண்டி வருபவர்கள். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவர்களுக்கு எப்போதுமே குழப்பம் என்பது இருந்து கொண்டிருக்கும். அதிகமான உழைப்பில் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணை மிகவும் நேர்மையானவராக இருப்பார். இவர்கள் பெருமாள் வழிபாடு செய்து வருவது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
பூசம் : ஹூ, ஹே, ஹோ, டா,
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் தனது கொள்கையில் இருப்பவர்களாகவும் இருப்பார்கள். தனது உழைப்பின் மூலம் வாழ்க்கையில் உன்னத நிலையை அடைபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு துரோகம் செய்தவர்களை மன்னிக்கும் குணம் இவர்கள் இயற்கையிலேயேக் கொண்டிருப்பார்கள். குபேரன் வழிபாடும் முருகன் வழிபாடும் இவர்களுக்கு நன்மையைக் கொடுக்கும்.
ஆயில்யம் : டீ, டூ, டே, டோ
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த வைராக்கியம் கொண்டவர்களாகவும் கொள்கையில் மாறாத பற்றும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒரு நோக்கத்தை தெளிவாக வைத்துக் கொண்டு தங்களது பயணத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசும் தாயாரை விட தந்தையாரின் மீது அதிக பாசம் கொண்டவர்களாகவும் தாய்வழி உறவினர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் நாக தேவதை வழிபாடு செய்து வருவது நன்மையைக் கொடுக்கும்.
மகம் : மா, மீ, மூ, மே,
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சொல்லும் செயலும் ஒருங்கே அமையப் பெற்றவர்களாகவும் மிகுந்த தைரியம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தந்தையாரின் உருவ அமைப்பு அல்லது உள்ள அமைப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு திருமணம் செய்யும்போது மிகவும் ஜாக்கிரதையாக பார்த்து செய்வது நல்லது. இல்லை எனில் திருமணம் முறிவில் போய் முடியலாம். இவர்கள் மற்றவர்களிடம் வேலை பார்ப்பதை விட வேலை வாங்குவதை மிக எளிதாக செய்வார்கள். இயற்கையிலேயே மேலாண்மை திறன் கொண்டவர்கள் இவர்கள். சூரியன் மற்றும் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்களுக்கு பைரவர் வழிபாடு நன்மையைக் கொடுக்கும்.
பூரம் : மோ, டா, டீ, டூ,
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுக்கிரன் மற்றும் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இயற்கையிலேயே இவர்களுடைய முகம் வசீகரமாக இருக்கும். தங்களுடைய சொல் செயல் இவைகளால் மற்றவர்களை தன்வசம் ஈர்க்கும் திறன் கொண்டவர்கள். பணம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சீக்கிரமே கற்றுக் கொள்ளக் கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இவர்கள் மகாலட்சுமி வழிபாடு செய்து வருவது நன்மையைக் கொடுக்கும்.
உத்திரம் : டே, டோ, பா, பீ,
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரியன் மற்றும் சூரியன் புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். மிகுந்த உழைப்பு சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். தங்களுடைய குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர்களாகவும் தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை தானே செய்பவர்களாகவும் இருப்பார்கள். சிறிது முன்கோபம் கொண்டவர்கள். உணவு சம்பந்தமான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஐயப்பன் வழிபாடு செய்து வருவது உடலுக்கு நன்மையைக் கொடுக்கும்.
ஹஸ்தம் : பூ, ஷா, ணா, டா
ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திரன் மற்றும் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். அதிகமான வித்தைகளை கற்றுக் கொள்வதிலும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள். பலவிதமான கலைகளின் மீது நாட்டம் கொண்டவர்கள். எதிர்பாலினரை தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல் இவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்திருக்கும். கலைத்துறையில் பிரகாசிக்கும் வாய்ப்புகள் இவர்களுக்கு அதிகம். கல்வியில் சாதனை புரிபவர்களாகவும் பல பாராட்டுகள் விருதுகளைப் பெறுபவர்களாகவும் இருப்பார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும்.
சித்திரை : பே, போ, ரா, ரீ,
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதல் இரண்டு பாதங்கள் செவ்வாய் புதனின் ஆதிக்கத்திலும் கடைசி இரண்டு பாதங்கள் செவ்வாய் மற்றும் சுக்கிரனுடைய ஆதிக்கத்திலும் பிறந்தவர்கள். பூமி சம்பந்தமான விஷயங்களில் அதிக விருப்பம் கொண்டவர்களாகவும் வேலை சம்பந்தமான விஷயங்களில் அதிக கவனம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் வாழ்வில் ஒளி வீசும். இவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் மிகுந்த பொறுப்பு உடையவர்களாகவும் சிறந்த சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்து வருவது அவர்களுக்கு நன்மையைக் கொடுக்கும்.
ஸ்வாதி : ரூ, ரே, ரோ, தா,
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் நேர்மையாளர்களாகவும் அதிக உழைப்பினை விரும்புபவராகவும் இருப்பார்கள். 27 நட்சத்திரங்களிலேயே நேர்மைக்கு உகந்த நட்சத்திரம் சுவாதி. எந்த ஒரு கடினமான வேலைகளையும் மிகவும் சுலபமாக தங்களது உழைப்பின் மூலம் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்கள் நரசிம்மர் வழிபாடு செய்து வருவது அவர்களுக்கு நன்மையை கொடுக்கும்.
விசாகம் : தீ, தூ, தே, தோ,
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதல் மூன்று பாதங்கள் குரு - சுக்கிரன் மற்றும் கடைசி பாதம் குரு மற்றும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கையில் வாழ்பவர்கள். கொள்கை பிடிப்பு மிகவும் அதிகமாகவும் எடுத்த வேலையை சரியான நேரத்தில் கனகச்சிதமாக செய்து முடிப்பவர்கள். நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அந்த வேலையை முடித்து விட்டுத்தான் மறு வேலைக்கு செல்வார்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் முருகப் பெருமான் வழிபாடு செய்து வருவது நன்மையைக் கொடுக்கும்.
அனுஷம் : நா, நீ, நூ, நே,
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் வைராக்கியம் கொண்டவர்களாகவும் கடும் உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் நோக்கத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். இவர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் ஒரு நல்ல நோக்கம் ஒளிந்திருக்கும். இவர்கள் சனி மற்றும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். அதிர்ஷ்டத்தை விட உழைப்பினை நம்புபவர்கள். இவர்கள் குலதெய்வத்தை வழிபாடு செய்து வருவது நன்மையைக் கொடுக்கும்.
கேட்டை : நோ, யா, யீ, யூ
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். மதியூக திறமை அதிகம் கொண்டவர்கள். மற்றவர்களைவிட இவர்களுடைய மூளையின் வேகம் மிகவும் வேகமாக இருக்கும். எந்த கடினமான பணிகளையும் தங்களது புத்தி சாதுர்யத்தால் சுலபமாக செய்து முடிப்பார்கள். புதனின் ஆதிக்கம் நிறைந்திருப்பதால் தாய்வழி உறவினர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெருமாளை வழிபாடு செய்து வருவது அவர்களுக்கு நன்மையைக் கொடுக்கும்.
மூலம் : யே, யோ, பா, பீ,
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேது மற்றும் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பினை நம்புபவர்கள். அதிக வாய்ப்பினை வாழ்க்கையில் பெறுபவர்கள். பழமையான நம்பிக்கைகளின் மீதும் சடங்குகளின் மீதும் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசத் தெரியாதவர்கள். திருமணத்திற்கு பிறகு ஒருவர் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். சித்தர்கள் வழிபாடு ஒருவனுக்கு நன்மையைக் கொடுக்கும்.
பூராடம் : பூ, தா, பா, ட,
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுக்கிரன் மற்றும் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். தங்களின் முக வசீகரத்தால் மற்றவர்களை கவர்ந்து இழுக்கக் கூடியவர்களாகவும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆற்றல் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை யார் திருமணம் செய்கிறார்களோ அவர்கள் மிகப்பெரிய பாக்கியங்களை - அதிர்ஷ்டங்களை பெறுவார்கள். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நன்மையைக் கொடுக்கும்.
உத்திராடம் : பே, போ, ஜா, ஜீ,
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரியன் குரு மற்றும் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். அனைவரின் வாழ்க்கைக்கும் ஆலோசனை வழங்குவதில் கெட்டிக்காரராக இருப்பார்கள். ஆனால் தங்கள் சுய முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்டும் குணம் இருப்பதால் தங்கள் வாழ்க்கையில் சிறு தடுமாற்றங்களை சந்திப்பீர்கள். நேர்மையானவர்கள். கோடி கொடுத்தாலும் குறுக்கு வழியில் செல்ல மாட்டீர்கள். மன நிம்மதியே முக்கியம் என மனசாட்சிக்கு பயந்து நடப்பீர்கள். இவர்கள் சிவனை வணங்குவதன் மூலம் நன்மைகள் பெறலாம்.
திருவோணம் : கீ, கூ, கே, கோ,
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திரன் மற்றும் சனி ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். மற்றவர்களிடம் அதீத மரியாதையை எதிர்பார்ப்பீர்கள். பொது இடத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என் நினைப்பீர்கள். அதன்படி நடக்கவும் செய்வீர்கள். பழமையை விரும்புவராக இருப்பீர்கள். ஆன்மீக பயணம் உங்களின் மனதிற்கு இனிமையானதாக இருக்கும். பழமையான கோவில்களை தேடிச்சென்று வழிபடுவீர்கள். மற்றவர்களுக்கான வாழ்க்கையான உங்கள் வாழ்க்கை இருக்கும். நீங்கள் உழைப்பதால் உங்கள் குடும்பம் மட்டுமின்றி குறைந்தது நான்கு குடும்பமாவது பலன் பெறும். பெருமாளை வணங்கி வருவதன் மூலம் மாற்றங்கள் வந்து சேரும்.
அவிட்டம் : கா, கீ, கூ, கே,
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் மற்றும் சனி ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். குடும்ப உறுப்பினர்களை விட நண்பர்களும் சுற்றி உள்ளவர்களுமே இவர்களுக்கு அதிக உதவி செய்வார்கள். தாய் தந்தையர் மீது அதீத பாசம் மிகுந்தவராகவும், உடன் பிறந்தவர்களுக்கு உதவிகரமாகவும் இவர்கள் இருப்பார்கள். இவர்களின் முன்னோர்கள் இறை வழிபாட்டிலும், ஆன்மீக பணிகளிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். வாழ்வில் மிகப்பெரிய போராட்டம், அவமானங்களுக்குப் பின் அவர்கள் வாழ்வில் உயர ஆரம்பிப்பார்கள். இவர்களின் வளர்ச்சி அவமானப்படுத்தியவர்களுக்கு பாடமாக இருக்கும். இவர்கள் முருகனை வணங்குவதால் மிக நன்மைகள் ஏற்படும்.
சதயம் : கோ, சா, சீ, சூ,
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராகு மற்றும் சனி ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நீட்ட முகத்தையும் உடல் மெலிதானதாகவும், சற்று உயரமானவர்களாகவும் இருப்பார்கள். கடமை உணர்ச்சி மிக்கவர்கள். பேசும் பொழுது படபடப்பாக பேசக் கூடியவர்கள். பகுத்தறிவாளர்கள் சீர்திருத்தக் கொள்கைகளில் விருப்பம் உடையவர்கள். மன உறுதியுடன் போராடி மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கக் கூடியவர்கள். இவர்கள் மனதில் இருப்பதை யாரும் புரிந்து கொள்ள முடியாது. நறுமணம் வீசும் வாசனை திரவியங்களை அதிகம் பூசிக் கொள்பவர்கள். விவசாயத்திலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர்கள். பணப் புழக்கம் இவர்கள் இடத்தில் சரளமாக இருப்பதால் கொஞ்சம் ஈகோவும் இருக்கும். சில இடங்களில் இவர்களிடம் நேர்மைக்கு அளவே இருக்காது. அம்மனை வணங்கி வருவது நன்மையைக் கொடுக்கும்.
பூரட்டாதி : சே, சோ, தா, தீ
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குரு - சனி ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் நடுத்தர உயரத்தைக் கொண்டவர்கள். கம்பீரமாக காட்சியளிப்பவர்கள். பரந்தமனப்பான்மையும் கொண்டவர்கள். எந்த நேரத்திலும் நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள். நிதானமாக முடிவு எடுக்க மாட்டார்கள். கொஞ்சம் அவசர புத்தி. தெய்வ நம்பிக்கை உண்டு. மற்றவர்களிடம் எளிதாக பழகக் கூடியவர்கள். யாராலும் இவர்களை சீக்கிரம் புரிந்து கொள்ள முடியாது. பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். சிரித்துப் பேசியே தங்களது காரியத்தை சுலபமாக சாதித்துக் கொள்வார்கள்.
உத்திரட்டாதி : தூ, தா, ஜா, ஞா,
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி குரு ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் எந்த காரியத்தையும் புதுப்புது முயற்சிகளில் செய்து பார்க்கக் கூடியவர்கள். ஒருவரைப்பார்த்தவுடன் அவர் எப்படிப்பட்டவர் என்பதை எடை போட்டு விடுவார்கள். இவர்களுக்கு மறைத்து வைக்கும் ஆற்றலும் உண்டு. அதனால் எப்படிப்பட்ட ரகசியத்தையும் இவர்களிடம் கூறலாம். குறுக்கு வழியில் செல்வது இவர்களுக்கு பிடிக்காது. நேர்வழியில் மட்டும் பணம் சம்பாதிக்க விரும்புவார்கள். எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். குலதெய்வத்தை வணங்கி வருவது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
ரேவதி : தே, தோ, சா, சீ
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன் குரு ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். எந்த ஒரு முடிவினையும் நிதானமாக எடுப்பவர்கள். இவர்கள் தந்தையாரை வெளியில் மதிப்பதை விட மானசீகமாக மதிப்பவர்கள். அதே வேளையில் சிற்சில உடல் உபாதைகளும் சிறு வயதிலிருந்தே இவர்களுக்கு இருக்கும். கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்கள். பணம் சம்பந்தமான விஷயங்களில் நாட்டம் கொண்டவர்கள். கொடுத்த வேலையை செவ்வனே செய்பவர்கள். முக வசீகரம், அழகு, மிடுக்கான நடை, உடைகளில் கவனம் போன்றவை இருக்கும். உணவில் காரம், உப்பு சரியான அளவில் இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள். முருகனை வழிபடுவது இவர்களுக்கு மாற்றத்தைக் கொடுக்கும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago