- ஜோதிடர் ஜெயம் சரவணன்
அசுவினி -
குருப் பெயர்ச்சி அன்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த குருப் பெயர்ச்சியால் நன்மைகள் பெறும் நட்சத்திரங்களில் முதன்மையான நட்சத்திரம் உங்கள் நட்சத்திரமான அஸ்வினி.
உங்களின் பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்து மனதை மகிழ்ச்சிப்படுத்தும் வாரம் இது. தெளிவாக முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த உங்களுக்கு இனி எந்த தடுமாற்றமும் வராது.
இப்போது இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலைக்குச் செல்வீர்கள். அந்த வேலையும் மிக எளிதாக கிடைக்கும். இதுவரை உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சொந்தமாக தொழில் செய்ய முனைவார்கள். இதுவரை வேலை கிடைக்காமல் வருத்தத்தில் இருந்த உங்களுக்கு இந்த வாரமே வேலைக்கான பணி ஆணை கிடைக்கும்.
சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். பெரிய மனிதரின் உதவியால் இந்த சொத்து பிரச்சினை தீரும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இருந்தவர்களுக்கு இப்பொழுது தந்தையின் உடல்நலம் வியக்கத்தக்க வகையில் சீராகும்.
உத்தியோகம் - வேலையில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்கள் மீதான களங்கம் துடைக்கப்படும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து வேறு ஊரில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது குடும்பத்தோடு சேர வழி கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியடையும். ஒரு சிலர் உத்தியோகத்தை விட்டுவிட்டு சொந்தத் தொழில் தொடங்கும் நேரம் ஆரம்பித்துவிட்டது.
தொழில் - தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். வழக்குகள் சாதகம் ஆகும். அல்லது வாபஸ் பெறப்படும். எதிர்ப்புகளை எல்லாம் மீறி வெற்றி பெறப் போகிறீர்கள். இந்த வாரம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் செயல் வடிவம் பெறும். தாமதப்பட்ட வங்கிக்கடன் இப்பொழுது எளிதாகக் கிடைக்கும். ஒரு பெரிய சொத்தை விற்று தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்யப் போகிறீர்கள். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் அதை செயல்படுத்துவதற்கான நேரம் தொடங்கிவிட்டது. பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு இனி சரிவு என்பதே கிடையாது. வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி இனி வளர்ச்சியை நோக்கிச் செல்வீர்கள்.
பெண்களுக்கு - குழப்பங்கள் தீரும். மனம் தெளிவடையும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். சகோதர வழியில் இருந்த சச்சரவுகள் நீங்கும். ஒற்றுமை பலப்படும். சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
மாணவர்களுக்கு - கல்வியில் இருந்த குழப்பங்கள் தீரும். ஆசிரியரின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு கிடைக்கும். புதிய பயிற்சிகள் ஏதாவது ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
கலைஞர்களுக்கு - காத்திருந்த வாய்ப்பு இப்பொழுது உறுதியாகும். தடைகள் அகலும். வாய்ப்புகள் பெருகும். ஒப்பந்தங்கள் உண்டாகும்.
பொதுப்பலன் - இனி பயம், தயக்கம் தேவையில்லை. அனைத்தும் சாதகமாக இருக்கும். பிரச்சினைகள் அனைத்தும் தீரும். எதிரிகள் காணாமல் போவார்கள். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கிப் போகும். ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவுகள் இல்லாமல் போகும். கடன்கள் தீரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். மறுமணத்திற்கு வரம் தேடி வந்தவர்களுக்கு இப்பொழுது வரன் அமையும்.
இந்த வாரம் திங்கள், வியாழன், சனி இந்த மூன்று நாட்களும் நல்ல பலன்கள் கிடைக்கும். செவ்வாய், புதன் சந்திராஷ்டமம் கவனம் வேண்டும். ஞாயிறு சாதகமாக இல்லை.
வணங்க வேண்டிய தெய்வம் - நவக்கிரகத்தில் இருக்கும் சூரியபகவானுக்குசெந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து தீபமேற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
***************************************
பரணி -
யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் எனத் தெரியாமல் குழம்பி நிறைய பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது குருவின் பார்வையால் மனம் தெளிவடையும். சிந்தனைகள் சீராகும். இனி நல்லவர்களை மட்டுமே அடையாளம் காண்பீர்கள். எதிரிகள் துரோகிகள் இனி காணாமல் போவார்கள். இனி உங்களுக்கு வெற்றி மட்டுமே தேடி வரும். கண்ணை மூடிக்கொண்டு எந்த முயற்சியை மேற்கொண்டாலும் எளிதாக வெற்றி பெறுவீர்கள்.
வழக்குகள் தீரும். சொத்து வழக்குகள் சாதகமாகும். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இப்போது பணத்தை திரும்பப் பெறுவீர்கள். பொறுப்பில்லாமல் இருந்த உங்கள் மகன் இப்பொழுது பொறுப்பை உணர்ந்து நல்வழிக்கு வருவார். முடங்கிக் கிடந்த நீங்கள் இனி வேகமான செயல்பாட்டுக்கு வருவீர்கள்.
உத்தியோகம் - பணியிடத்தில் ஏற்பட்ட அவமானங்கள் துடைக்கப்படும். உங்களைப் பற்றி தவறாக மேலதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்தவர்கள் அந்த அலுவலகத்தை விட்டே வெளியேறுவார்கள். இனி உங்கள் அலுவலகத்தில் எதிரிகள் என்பதே இருக்காது. உங்களுடைய திறமை மீது இப்பொழுது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும். உங்கள் கருத்துக்கள் ஏற்கப்படும். இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது பலன் கிடைக்கப் போகிறது. நல்ல நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்வு அழைப்பு வரும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். ஆரம்பத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் உழைப்பால் அதை எளிதாக வென்று நல்ல பெயர் எடுப்பீர்கள்.
அரசு ஊழியர்களுக்கு நல்ல இடமாற்றம் ஏற்படும். வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறுவார்கள். அதுவும் பதவி உயர்வு, ஊதிய உயர்வோடு கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும்.
தொழில் - தொழிலில் இதுவரை இருந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மாறும். தொழில், வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும். ஆர்டர்கள் வர ஆரம்பிக்கும். தேங்கிக்கிடந்த உற்பத்திப் பொருட்கள் இப்பொழுது நல்ல விலைக்கு வணிகம் ஆகும். தொழிலாளர்களின் மனக்கசப்புகள் நீங்கி உங்கள் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு தர தொடங்குவார்கள். சுயதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
கால்நடை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள் வளர்ச்சியைக் காண்பார்கள். பங்கு வர்த்தகத் துறையினர் சரிவிலிருந்து மீண்டு லாபம் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டுத்தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு கூட்டாளிகள் ஒற்றுமை பலப்படும்.
பெண்களுக்கு - கடன்கள் தீர வழி கிடைக்கும் அடகு நகைகளை மீட்பீர்கள். பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். சகோதரர் வழியில் ஆதாயம் ஏற்படும். மருத்துவம், வழக்கு போன்ற தொழில் செய்பவர்கள் இப்பொழுது மேற்படிப்பு படிக்க வாய்ப்புகள் உண்டாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். விவாகரத்து வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
மாணவர்களுக்கு - நல்ல முன்னேற்றங்கள் கல்வியில் உண்டாகும். தேர்வுகள் எதுவும் நடந்தால் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சியை சமர்ப்பித்து பட்டயம் பெறுவார்கள்.
கலைஞர்களுக்கு - எதிர்காலத்தைப் பற்றிய பயம் நீங்கும். வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கும். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
பொதுப்பலன் - இனி சோம்பலுக்கும் அலட்சியத்திற்கும் விடை கொடுப்பீர்கள். கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. இனி வளர்ச்சியை நோக்கிச் செல்வீர்கள். பணப்புழக்கம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இனி பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். தடைபட்டிருந்த கல்வி மீண்டும் தொடங்கும். அயல்நாட்டுப் பயணங்கள் அயல்நாட்டு வேலைகள் உறுதியாகும். அடகு வைத்த சொத்துக்களை மீட்பதற்கு வழி கிடைக்கும். சொந்த பந்தங்களின் எதிர்ப்புகள் மாறி உறவுகள் மீண்டும் பலப்படும்.
இந்த வாரம் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி இந்த நான்கு நாட்களும் நற்பலன்களும் யோகங்களும் உண்டாகும். புதன் கிழமை சந்திராஷ்டம தினம் கவனம் தேவை. திங்கள் மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களும் சாதகமாக இல்லை.
வணங்க வேண்டிய தெய்வம் - அம்மன் ஆலயங்களில் சர்க்கரைப் பொங்கலிட்டு, அம்மனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குங்கள். நற்பலன்கள் அதிகமாகும்.
***************************************************************************
கார்த்திகை
மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் நீங்கும். குருவின் அருளால் பிரச்சினைகள் தீர்ந்து வீர நடை போடுவீர்கள். இதுவரை தடைக்கல்லாக இருந்த எல்லாம் படிக்கற்களாக மாறும். எதிர்ப்புகள் காட்டியவர்கள் மனம் மாறி ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். இதுவரை இருந்த பணத்தட்டுப்பாடு நீங்கி பணமும் பொருளும் எடுத்த எல்லா முயற்சிகளும் கைநழுவி போய்க்கொண்டிருந்தது. இனி அனைத்தும் வெற்றிகரமாக மாறும் வீட்டை புதுப்பித்தல், புது வீடு வாங்குதல் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும்.
இதுவரை திருமண முயற்சிகள் தள்ளிப் போனவர்களுக்கு இப்பொழுது திருமணம் உறுதியாகும். பயணங்கள் ஏற்பட்டு அதில் லாபம் பெறுவீர்கள். இதுவரை மேற்கொண்ட பயணங்கள் வீணாகியிருந்தது. இனி வீண் அலைச்சல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
உத்தியோகம் - வேலையில் இருந்த அழுத்தங்கள் தீரும். சக ஊழியர்களின் வெறுப்பு மாறும். ஒற்றுமை ஏற்படும். ஒருவருக்கொருவர் உதவிகரமாக மாறுவார்கள். தேங்கிக்கிடந்த பணிகள் இப்பொழுது விறுவிறுவென நிறைவேறும். அயல்நாட்டில் வேலை செய்யும் விருப்பம் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது அவர்களுடைய விருப்பம் நிறைவேறும். பாஸ்போர்ட் விசா குளறுபடிகள் நீங்கும். அயல்நாட்டில் இருப்பவர்களுக்கு குடியுரிமை சம்பந்தமான தாமதங்கள் நீங்கும் சம்பந்தப்பட்ட தேர்வுகள் வெற்றியாக மாறும்.
விற்பனைப் பிரதிநிதிகள் போன்ற அலைச்சலை அதிகம் கொண்ட ஊழியர்கள் இனி அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்புகள் பெறுவீர்கள்
தொழில் - தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மந்தநிலை மாறும். ஒரு புதிய நபரின் ஆலோசனையைக் கேட்டு தொழில் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அயல்நாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் போடப்படும். புதிய கிளைகள் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும். விரிவுபடுத்த வங்கிக்கடன் இப்போது கிடைக்கும்.
புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் வெற்றி காண்பார்கள். அதற்கான சாத்தியக்கூறுகள் இந்த வாரம் தென்படும். மொத்த வியாபாரத் தொழில் பார்ப்பவர்கள் கமிஷன் ஏஜெண்டுகள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கட்டுமானத் தொழில் செய்பவர்கள் அனைவரும் முன்னேற்றப் பாதையை கண் முன்னே காண்பார்கள். வியாபாரம் விருத்தி அடையும். சிறிய கடை வைத்து வியாபாரம் செய்தவர்கள். இப்போது பெரிய அளவில் கடையை விரிவு படுத்துவார்கள். நின்றுபோன பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.
பெண்களுக்கு - கஷ்டம் தீரும். மனநிம்மதி உண்டாகும். குடும்ப உறவினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெறும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். குலதெய்வ வழிபாடு செய்ய முற்படுவீர்கள். கடன்கள் தீரும்.
உங்களுக்கு வரவேண்டிய பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என காத்திருந்தது, கையில் கிடைக்கும். மண வாழ்வில் இருந்த வருத்தங்கள் மாறும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். இரண்டாவது குழந்தை தாமதமாகிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது அந்த பாக்கியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு - கல்வியில் இருந்த மந்தநிலை சோம்பல் விலகும். கல்வியில் இப்பொழுது ஆர்வம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். உயர்கல்வி படிப்பவர்களுக்கு ஆசிரியர் ஒருவரின் உதவி கிடைக்கும்.
கலைஞர்களுக்கு - இனி கவலைக்கும் வருத்தத்துக்கும் இடமில்லை. நண்பர்கள் உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். ஒப்பந்தங்கள் உறுதியாகும்.
பொதுப் பலன் - மன இறுக்கம் அகலும். சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் வருமானம் பெருகும். செலவுகள் அதிகம் இருந்தாலும் வருமானம் குறையாது. ஒரு சிலருக்கு சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வராமல் தள்ளிப் போகும்.
அரசு மற்றும் அரசியல்வாதிகளுக்கு புதிய பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கும். ஒரு சிலருக்கு பதவியில் மாற்றம் ஏற்படும். அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு வயிற்றில் வலி, செரிமானப் பிரச்சினை, இடுப்பு பகுதியில் பிரச்சினைகள் வரும் .
இந்த வாரம் திங்கள், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு இந்த ஐந்து நாட்களும் நன்மைகள் உண்டாகும். பணவரவு, முயற்சிகளில் வெற்றி, பயணங்களால் ஆதாயம், சொத்துக்களால் லாபம் ஏற்படும். செவ்வாய் மற்றும் வியாழன் சாதகமாக இல்லை.
வணங்க வேண்டிய தெய்வம் - சிவாலயத்தில் சிவனுக்கும் நந்திக்கும் மாலை அணிவித்து அர்ச்சனை செய்யுங்கள், தடைகள் அகலும். முயற்சிகள் வெற்றியாகும்.
*****************************************************************************
ரோகிணி -
பயம், பயம், பயம், எங்கும் எதிலும் பயம் என இருந்த காலம் கடந்து விட்டது. குருப் பெயர்ச்சியான இன்று முதல் இந்த பயம் காணாமல் போகும். தைரியம் பிறக்கும். ஆரோக்கிய அச்சுறுத்தல் இனி இருக்காது. ஆரோக்கியம் மேம்படும். நாலாபக்கமும் வந்து கொண்டிருந்த பிரச்சினைகள் இனி வராது.
உங்களுக்கு எதிரான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். பணவரவில் இருந்த தடைகள் அகலும். இனி பணப்புழக்கம் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும். சொத்துக்கள் விற்பது வாங்குவது தடையில்லாமல் நடக்கும். அயல்நாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். அது தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலும் இப்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
உத்தியோகம் - வேலையில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. சுமூகமாக இருக்கும். அலுவலக நண்பர்களிடம் இருந்த மனவருத்தங்கள் தீரும். பணியிட மாற்றம் ஏற்படும். ஒருசிலர் வெளிநாடு செல்வார்கள். வேலை இல்லாமல் இருந்தவர்கள், இந்த வாரம் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் படுவீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள்.
IT யில் வேலை செய்பவர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மராமத்து வேலை செய்பவர்கள், புனரமைப்பு பணி செய்பவர்கள், சர்வீஸ் சென்டர் போன்ற பணிகளைச் செய்பவர்கள் , அனைவருக்கும் சாதகமான பலன்களே நடக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.
தொழில் - மனக் கவலைகள் தீரும் வாரம் . ஒரு பெரிய மனிதரின் உதவியால் பெரிய பிரச்சினை ஒன்று சுமூகமாக தீர்க்கப்படும். ஒரு சிலர் தொழில் ஆரம்பிக்கும் முயற்சிகளில் ஈடுபட முயல்வீர்கள். ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மொத்த வியாபாரிகள் தங்கள் விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இது கட்டுமான தொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும்.
தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்பவர்கள் மந்த நிலை தொடர்வதைக் கண்டு வருத்தத்தில் இருப்பார்கள். கவலை வேண்டாம்.இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் இது சரியாகும்.வழக்குகள் ஏதேனும் இருந்தால் தள்ளிப் போட முயற்சி செய்யுங்கள். உற்பத்தி பொருட்களில் கவனம் செலுத்துங்கள். மொத்த வியாபாரிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். களவுக்கு இடம் கொடுக்காதீர்கள். மின் சாதனங்கள் குறைபாடுகளை சரி செய்து வையுங்கள்.
பெண்களுக்கு - கவலைகள் தீரும்.பணப்புழக்கம் சரளமாக இருக்கும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. அரசு தேர்வுகள் ஏதும் எழுதினால் சாதகமான செய்தி கிடைக்கும்.
மாணவர்களுக்கு - கல்வியில் முயற்சி இருந்தால் முன்னேற்றம் உண்டு. முயற்சியும் ஆர்வமும் இல்லை எனில் மதிப்பெண் குறையும்.
கலைஞர்களுக்கு - இழுபறியாக இருந்த பிரச்சினை ஒன்று இந்த வாரம் முடிவுக்கு வரும்.நீண்ட நாள் வராமல் இருந்த பணம் இப்போது வரும். வாய்ப்புகள் சிபாரிசின் பேரில் கிடைக்கும்.
பொதுப் பலன் - குடும்பம், வேலை உள்ளிட்ட விஷயங்கள் நன்றாக இருக்கும். ஆனால் தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். உதவுகிறேன் பேர்வழி என்று உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நண்பர்களுக்கு கடன் கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது கண்டிப்பாக கூடாது. ஒரு சிலர், சொத்துக்கள் விற்று கடனை அடைக்க முயற்சிப்பார்கள். மீதம் உள்ள பணத்தை மனையில் முதலீடு செய்வீர்கள்.
வாகனங்களில் செல்லும்போது கவனம் வேண்டும். வாகனங்களை சரிவர பராமரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த வாரம் செவ்வாய், வியாழன்,சனி,ஞாயிறு இந்த நான்கு நாட்களும் சாதகமான நாட்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.
திங்கள், புதன், வெள்ளி இந்த மூன்று நாட்களும் சாதகமாக இல்லை.
வணங்க வேண்டிய தெய்வம் - மகாவிஷ்ணு ஆலயத்தில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி வழிபடுங்கள்.பாதுகாப்பாக இருப்பது போல் உணர்வீர்கள்.
*************************************************************************************
மிருகசீரிடம் -
எல்லா பிரச்சிசனைகளும் உங்களை கட்டம் கட்டி வதைத்து வந்தது. இனி ஒவ்வொரு பிரச்சினைகளாக தீர்ந்து கொண்டே வரும். நெருக்கடி தந்த வழக்குகள் நீர்த்துப்போகும். காரணம் குருவின் தனுசு ராசி பெயர்ச்சி தான்.
குடும்பத்தில் இருந்துவந்த இறுக்கமான சூழல் இனி இருக்காது. குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மனம்விட்டுப் பேசி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வார்கள். பணவரவில் இருந்த தடைகள் மெல்ல மெல்ல அகலும். நெருக்கடி தந்த கடன்கள் இனி ஒவ்வொன்றாக அடைபடும். அடகு வைத்த நகைகளை மீட்க வழி கிடைக்கும். எதிர்பாராத வகையில் பெரும் தொகை ஒன்று கைக்கு வந்து சேரும், இந்த பெரும் தொகை உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்கு இட்டுச்செல்லும்.
உத்தியோகம் - பணியிலிருந்த நெருக்கடிகள் மாறும். அலுவலகத்தில் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். உங்கள் மீதான அலுவலக விசாரணை கைவிடப்படும் அல்லது உங்களுக்கு சாதகமாக மாறும். இடமாற்றம் விரும்பியவர்கள் இப்பொழுது இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
அயல்நாடு செல்லும் முயற்சி அதில் இருந்த தடைகள் அகன்று இப்பொழுது பயணம் மேற்கொள்வீர்கள். ஒரு சிலர் அலுவலக விஷயமாக வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். வேலைக்காக குடும்பத்தைப் பிரிந்து இருந்தவர்கள் இப்பொழுது குடும்பத்தோடு சேர்ந்திருக்க வழி உண்டாகும். அலைச்சல் மிகுந்த வேலை உடையவர்களுக்கு அலைச்சல்கள் குறையும். அலுவலகத்திலேயே வேலை பார்க்கும் சூழ்நிலை உருவாகும்.
தொழில் - தொழிலில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மந்தநிலை தொடரும். எதிர்பார்த்த பண விஷயங்கள் ஒப்பந்தங்கள் தாமதமாகும். செலவுகள் அதிகரிக்கும். கட்டுமானத் தொழில் ஓரளவு கைகொடுக்கும். கமிஷன் தொழில் செய்பவர்கள் ஓரளவு லாபம் பார்ப்பார்கள். மொத்த விற்பனையாளர்கள் ஓரளவுக்கே விற்பனை நடக்கும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணமுடையவர்கள் மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.இப்போது அதற்கான முன் வடிவங்கள் முன்முயற்சிகள் எடுக்கலாம். வழக்குகள் எதிராக போவதுபோல் தெரிந்தாலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு - குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பற்றாக்குறை பட்ஜெட் இனி இருக்காது. ஒருசில பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். சகோதரர்களுக்கு திருமணம் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
மாணவர்களுக்கு - கல்வியில் கவனச் சிதறல் ஏற்படும். தேவையற்ற ஆடம்பர நாட்டங்கள் ஏற்படும். கவனம் திசை மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
கலைஞர்களுக்கு - நீண்டநாளாக பேசிக்கொண்டிருந்த ஒரு விஷயம் இப்பொழுது உங்களுக்கு சாதகமாகும்.புதிய ஒப்பந்தம் ஒன்று கிடைத்து பணப் பிரச்சினைகள் தீரும்.
பொதுப்பலன் - பேச்சில் மென்மை இருக்கட்டும். கடினமான காயப்படுத்தும் சொற்களை பயன்படுத்தாதீர்கள். சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். வெளி நபர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நண்பர்களிடம் அளவாக வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு சிலருக்கு திருமண முயற்சிகள் கைகூடும். சிறு தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். டிராவல்ஸ் நிறுவனம் நடத்துபவர்கள் ஒரு பெரிய நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடுவீர்கள். அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகள் பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அலர்ஜி போன்ற ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மூச்சிரைப்பு பிரச்சினை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு தோலில் அரிப்பு எரிச்சல் கொப்புளம் போன்றவை வரலாம்.
இந்த வாரம் திங்கள், புதன்,வியாழன்,ஞாயிறு இந்த நான்கு நாட்களும் நற்பலன்கள் நடக்கும். தனவரவு திருப்தி தரும். பயணங்கள் லாபம் உண்டாகும். சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
செவ்வாய், வெள்ளி, சனி இந்த மூன்று நாட்களும் சாதகமாக இல்லை, கவனம் வேண்டும்.
வணங்கவேண்டிய தெய்வம் - அபிராமி அந்தாதி படித்து வாருங்கள்.காலை மாலை இருவேளையும் படிப்பது வெகு சிறப்பு. முடியாவிட்டால் ஒரு முறையாவது படியுங்கள். நல்லதே நடக்கும், தடைகள் அகலும், மனம் தெளிவடையும்.
*****************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago