இந்த வார நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 21 முதல் 27ம் தேதி வரை - திருவோணம் முதல் ரேவதி வரை 

By செய்திப்பிரிவு

- ஜோதிடர் ஜெயம் சரவணன்

திருவோணம் -
நற்பலன்கள் நடக்கும் என்று சொல்வதை விட, எல்லாவிதமான யோகங்களும் கிடைக்கும் என்று சொல்வதுதான் சரி. வீடு வாங்குவது முதல் பதவி உயர்வு பெறுவது வரை திருமணம், குழந்தை பாக்கியம், வெளிநாடுகளுக்கு செல்லுதல், வெளிநாடுகளில் பணிபுரிதல் என எல்லாவிதமான யோகங்களும் கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். நிலம் பூமி மூலம் ஆதாயம் கிடைப்பது, அதிர்ஷ்ட வாய்ப்புகள் திடீரெனக் கிடைப்பது என இந்த வாரம் நன்மைகள் அதிகம் நடக்கும் வாரமாக இருக்கிறது.

உத்தியோகம் - வேலையில் மனநிறைவும் திருப்தியும் உண்டாகும். எடுத்த வேலைகள் அனைத்தையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வும் கிடைக்கும். ஒருசிலருக்கு தலைமைப் பதவி வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு சிலருக்கு அலுவலக விஷயமாக வெளிநாடு செல்லுதல் உண்டாகும். கட்டிடப் பணியாளர்கள், இயந்திரப் பணியாளர்கள், மராமத்து பணி செய்பவர்கள் எனஅனைவருக்குமே இந்தவாரம் யோகத்தைத் தரும்.

தொழில் - தொழில் அசாத்திய வளர்ச்சி பெறும். மற்றவர்கள் மிரண்டு போகும் அளவுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்களுடன் கூட்டு சேர பலரும் முன்வருவார்கள். உங்கள் தொழிலை மற்றொரு தொழிலோடு இணைத்து செயல்பட வைப்பீர்கள். புதிய நிறுவனங்கள் ஆரம்பித்தல், கிளை நிறுவனங்கள் ஆரம்பித்தல் போன்றவை நடக்கும். புதிய தொழில் முனைவோர் வெற்றிகரமாக தொழிலை ஆரம்பிப்பார்கள். வியாபாரிகள், கமிஷன் ஏஜென்ட் தொழில் செய்பவர்கள், தரகு தொழில் செய்பவர்கள், வாகன விற்பனையாளர்கள், மென்பொருள் விற்பனை, ஹார்டுவேர்ஸ் கடை, வைத்திருப்பவர்கள் என அனைவருக்குமே இந்த வாரம் பணம் கொழிக்கும் வாரமாக இருக்கிறது. வியாபாரத்தில் வளர்ச்சி முன்னேற்றம் உண்டாகும்.

பெண்களுக்கு - சொத்தில் பங்கு கிடைக்கும், பாகப்பிரிவினைகள் சுமூகமாக இருக்கும். .சகோதரர்கள் விட்டுக் கொடுப்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் ஏதும் இருந்தால் சுமூகமாக மாறும்.

மாணவர்களுக்கு - அருமையான வாரம். தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்பீர்கள். தொலைதூரக்கல்வியில் சேர்வீர்கள்.

கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகளும், நிறைய ஒப்பந்தங்களும் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். பயிற்சி மையங்கள் ஆரம்பிப்பீர்கள்.

பொதுப்பலன் - எல்லா வாய்ப்புகளும் நல்ல வாய்ப்புகளே, கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் சரி இல்லாதது கூட சரியாக நடக்கும். எனவே கிடைக்கின்ற அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி சொத்துக்கள் வாங்குதல், குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், தேவைகளை பூர்த்தி செய்தல் என திட்டமிட்டு செய்தால் எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழலாம். இந்த காலகட்டம் பொன்னான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் காலகட்டமாகும். எப்போதோ செய்த சிறு உதவி கூட இப்போது மிகப்பெரிய பலனைத் தரும்.


வெள்ளிக்கிழமை சந்திராஷ்டமம். அதைத் தவிர திங்கள் புதன் சனி ஞாயிறு இந்த நான்கு நாட்களும் யோகமான நாட்கள். செவ்வாய், வியாழன் வெள்ளி இந்த மூன்று நாட்களும் சாதகமாக இல்லை.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வணங்குங்கள். நிறைய நன்மைகளைப் பெறலாம். முன்னேற்றங்கள் தடையில்லாமல் இருக்கும்.

***********************************************************************************************
அவிட்டம் -
நன்மைகள் அதிகமாகவும், தீமைகள் குறைவாகவும் நடக்கும். அதற்காக தீமைகள் பெரிய பாதிப்பை உண்டாக்கி விடுமோ என்ற பயம் தேவையில்லை. இங்கே தீமைகள் என்பது தாமதத்தைத்தான் குறிக்கும். மற்றபடி வெற்றியைத் தடுக்காது .எனவே இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கிறது. எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு கனவு இப்போது நனவாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் இப்போது நிறைவடையும். தாமதித்துக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்போது உறுதியாகும். திருமணத் தேதி குறிக்கப்படும். நீண்ட நாள் நோயில் இருந்து விடுபடுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்தியோகம் - வேலையில் ஓய்வு கிடைக்காவிட்டாலும் உற்சாகமான மன நிலையிலேயே இருப்பீர்கள். எடுத்த வேலையைக் கச்சிதமாக முடித்துத் தருவீர்கள். அலுவலகத்தில் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். ஒரு சில நண்பர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். அதைக் கண்டும் காணாமலும் விட்டுவிடுங்கள். பெரிய நிறுவனத்திலிருந்து வேலைக்காக அழைப்பு வரலாம். தாராளமாக ஏற்றுக் கொள்ளுங்கள். விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் இலக்கை எட்டி மகிழ்ச்சி அடைவார்கள். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் மனநிறைவான ஊதியம் பெற்று மகிழ்வார்கள். கடைகளில் பணிபுரிவோர் ஊக்கத் தொகை பெற்று முதலாளியின் அன்புக்கு பாத்திரம் ஆவார்கள்.

தொழில் - நல்ல வளர்ச்சி உண்டு. நிறைய ஆர்டர்கள் பெறுவீர்கள். பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். எனவே பணவரவுக்கு தடையில்லை. சிறு தொழில் செய்பவர்கள் வளர்ச்சி அடைவார்கள். தங்கள் தொழிலை விரிவு படுத்துவதற்கான வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். கூடுதல் இயந்திரங்கள் வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். இதுவரை விற்காத வீடு மனைகள் கூட விற்பனையாகும். மீண்டும் தொழில் சூடுபிடிக்கும். புதிய தொழில்முனைவோர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெற்று தொழிலை ஆரம்பிப்பார்கள்.

பெண்களுக்கு - மன மகிழ்வும் மனநிறைவும் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். மருத்துவச் செலவுகள் குறையும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவியோடு புத்திரபாக்கியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு - பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள். புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும். அதற்கான பயிற்சி மையத்தில் சேர்வீர்கள். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு - அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பு உண்டு. அதனால் பெரிய வருமானம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் துறை சம்பந்தப்பட்ட பயிற்சி மையங்களில் ஆரம்பிப்பீர்கள்.

பொதுப்பலன் - குலதெய்வ வழிபாடு அவசியம். பரிகார ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். இதுவரை போகமுடியாத அல்லது நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்த கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சொந்த வீடு வாங்குதல், விவசாய நிலங்கள் வாங்குதல் போன்றவை நடக்கும். கால்நடைகள் வளர்த்தல் உண்டாகும்.
இந்த வாரம் செவ்வாய், வியாழன், ஞாயிறு இந்த மூன்று நாட்கள் யோக பலன்களைத் தரும். லாபங்கள் பெருகும். திங்கள், புதன், வெள்ளி, சனி இந்த நான்கு நாட்களும் பெரிய நன்மைகள் ஏதும் நடைபெறாது.

வணங்கவேண்டிய தெய்வம் - ஸ்ரீலட்சுமி குபேரரை வழிபடுங்கள் நன்மைகள் அதிகமாகும். பணவரவு அதிகரிக்கும். மனநிம்மதி உண்டாகும்.

***********************************************************************************


சதயம் -


மனதில் என்ன நினைக்கிறீர்களோ, அதை அப்படியே செயலாக்கிக் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் காணாமல் போகும். போலியான நண்பர்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்வார்கள். பிறருக்கு உதவி செய்து அதன் மூலம் மன நிறைவு அடைவீர்கள். கனவுகள் நனவாகும் நேரம் இது. வாய்ப்புக்கள் அதிர்ஷ்டமாக மாறும். தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் அவர்களுக்கான சேமிப்பு ஆகியவற்றைத் தொடங்குவீர்கள். .வங்கிகளில் இருந்த கடன் பிரச்சினைகள் தீர்ந்து மன அமைதி கொள்வீர்கள்.

உத்தியோகம் - பணியில் மன நிறைவு உண்டாகும். பெரிய பிரச்சினைகள் ஏதுமில்லை. இடமாற்றம் விரும்பினால் உண்டாகும். இப்போது முயற்சி செய்தால் வெளிநாடுகளுக்குச் செல்லலாம். அங்கு உடனே வேலை கிடைக்கும். அதுவும் குடும்பத்தோடு செல்வதற்கு வாய்ப்பு உண்டு. பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். சம்பள உயர்வு பெறுவார்கள்.

தொழில் - தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். காலாவதியான இயந்திரங்களை மாற்றிவிட்டு நவீன இயந்திரங்களை வாங்குவீர்கள். அதற்கான முயற்சிகள் இப்போது நடக்கும். ஊழியர்கள் உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஊழியர்களை தேர்ந்தெடுப்பீர்கள். உங்கள் தொழிலுக்கு மாற்றாக வேறு ஒரு தொழிலைச் செய்ய முற்படுவீர்கள். அதற்கான வேலைகளை இந்த வாரம் தொடங்குவீர்கள். அது தொடர்பான வல்லுநர்களை கலந்தாலோசிப்பீர்கள்.

பெண்களுக்கு - நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட வாழ்க்கைத்துணை உதவி செய்வார். வீட்டிலிருந்தே வேலை செய்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் உள்ள நீங்கள் அதை வியாபாரமாக மாற்றி பணம் சம்பாதிப்பீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். ஆண் வாரிசு எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது ஆண் வாரிசு கிடைக்கும்.

மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி பெறும். கல்விச் சுற்றுலா செல்வீர்கள்.

கலைஞர்களுக்கு - உங்கள் கலைச்சேவைக்கு புகழ் கிடைக்கும். மரியாதை கவுரவம் போன்றவை கிடைக்கும். அரசின்ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்

பொதுபலன் - கருத்துவேறுபாடுகளால் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தவறான நண்பர்கள் விலகிச்செல்வார்கள். உண்மையான நண்பர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் வெளியேற வேண்டியது வரும். உங்களுடைய உழைப்பைக் கூட்டாளிகள் சுரண்டிக் கொள்வார்கள். வழக்குகள் சாதகமாகும்.அரசு தொடர்பான வழக்குகள் ஏதும் இருந்தால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.
திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்கள் யோகமான நாட்கள். ஆதாயங்கள் பெருகும்.
செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்கள் பெரிய நன்மைகள் ஏதும் கிடைக்காது, முயற்சிகள் தள்ளிப்போகும்.

வணங்கவேண்டிய தெய்வம் - சித்தர்கள், மகான்கள் வழிபாடு நல்ல பலனைத் தரும். அதிலும் ஜீவசமாதி உள்ள ஆலயங்கள் மனநிம்மதியை தரும். தெளிவான சிந்தனைகள் உண்டாகும்.

******************************************************************************************************************************


பூரட்டாதி -
மனதில் குழப்பமும் பிறகு தெளிவும் உண்டாகும். பதவி மாற்றம் இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள். வழக்குகள் ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போகும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலும் நீங்கி குணமாகும். மீண்டும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். ஒரு சிலர் வேலையை விட்டுவிட்டு அதன் பிறகு வேறு வேலை தேடுவார்கள். தாமதமானாலும் நல்ல வேலை கிடைக்கும்.

உத்தியோகம் - வேலையில் அழுத்தங்கள் இருந்தாலும் சிரித்த முகத்தோடு செய்து முடிப்பீர்கள். போட்டி பொறாமைகள் அதிகமிருக்கும். வேலையை ராஜினாமா செய்யும் எண்ணம் உண்டாகும். மாற்று வேலையை உறுதி செய்தபின் வேலையை கைவிடுங்கள். கடைகளில் வேலை செய்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகமாகும். அலைச்சல் அதிகரிக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல் அதிகமாகும். ஆனால் அதற்குண்டான ஆதாயம் கிடைக்கும். ஒருசிலர் நண்பர்களுக்காக வேலை பரிந்துரை செய்வீர்கள்.

தொழில் - வளர்ச்சி உண்டு சிலசமயம் தளர்ச்சியும் உண்டு. ஒரு சில ஒப்பந்தங்கள் தள்ளிப் போகலாம். அல்லது கைவிட்டுப் போகலாம். ஆனால் விடாது முயற்சி செய்தால் தொழில் பிரச்சினை இல்லாமல் செல்லும். கடன்கள் அழுத்தம் தந்தாலும் பிரச்சினைகள் தராது. புதிய கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடியாத பட்சத்தில் வேண்டுமானால் வாங்கலாம். புதிய தொழில் தொடங்கும் சிந்தனை உள்ளவர்கள் இப்போது தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தனியாக தொழில்செய்ய முற்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் திருப்தியை உணர்வார்கள். ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஆடு வளர்ப்பு, கோழிப் பண்ணை போன்ற தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். அதை விரிவு படுத்தவும் முயற்சிப்பீர்கள்.

பெண்களுக்கு - மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். சொத்து சேர்க்கை உண்டு. பூர்வீக சொத்து கிடைக்கும். பூர்வீக சொத்து வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். சகோதரர்கள் இறங்கி வருவார்கள். சகோதரிகள் அன்பு பாராட்டுவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். புத்திர பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும்.

மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் உண்டு. அதேசமயம் ஆடம்பர நாட்டத்தால் கவனச் சிதறலும் உண்டு. மனதை ஒருநிலைப் படுத்தினால் இந்த தடுமாற்றம் இருக்காது. நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். கௌரவம் கிடைக்கும்.

கலைஞர்ளுக்கு - .நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

பொதுப்பலன் - நிதானமாக முடிவு எடுத்தால் அனைத்தும் நன்மையாகும். அவசர முடிவுகள் அறவே கூடாது. தம்பதிகளுக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. வறட்டு கௌரவம் பிடித்தால் பிரிவை நோக்கி செல்லும். எனவே முடிந்தவரை ஒருவொருக்கொருவர் அனுசரித்துச் செல்லுங்கள்.
இந்த வாரம் திங்கள், செவ்வாய், வியாழன் சனி இந்த நான்கு நாட்கள் நல்ல பலன்களைத் தரும். பணவரவு உண்டாகும். சொத்துக்களால் லாபம் உண்டாகும்.
புதன், வெள்ளி, ஞாயிறு இந்த மூன்று நாட்களும் பெரிய பலன்கள் ஏதும் இருக்காது.

வணங்க வேண்டிய தெய்வம் - நவக்கிரகத்தில் உள்ள குருபகவானுக்கு கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து குழந்தைகளுக்கு தானம் தாருங்கள். மனதில் தெளிவு பிறக்கும். குழப்பங்கள் விடைபெறும். நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

**************************************************************

உத்திரட்டாதி -
சுப பலன்கள் நடைபெறும். வீடு மாற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது அச்சுறுத்தல் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் வராது. சொந்தத் தொழில் செய்பவர்கள் நிதானப் போக்கை கடைபிடித்தால் பிரச்சினைகள் ஏதும் வராது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் வந்தாலும் நீங்கள் அமைதி காத்தால் பிரச்சினைகள் ஒன்றுமில்லாமல் போகும். நீங்களும் பிடிவாதம் பிடித்தால் பிரச்சினை பெரிதாகும். எனவே நிதானம் தேவை. ஒரு சிலருக்கு வீடு அல்லது சொத்துக்கள் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படியான விரயங்கள் நல்லது.

உத்தியோகம் - வேலையில் அழுத்தங்கள் இருந்தாலும் கண்டும் காணாமல் இருந்தால் பிரச்சினைகள் ஏதும் இல்லை. இல்லை என்றால் வேலையை விட்டு வெளியேற வேண்டிய நிலை உண்டாகும். எனவே பொறுமை மிக அவசியம். சக ஊழியர்கள் கேலி கிண்டல் செய்வார்கள். அதைப் பொருட்படுத்த வேண்டாம். உயரதிகாரிகள் தேவையற்ற கேள்விகளைக் கேட்டு மனதில் சுமையை ஏற்றுவார்கள், எனவே நிதானமும் பொறுமையும் இருந்தால் இவற்றை எளிதாகக் கடந்து செல்லலாம். வேலை மாற்றம் சிந்தனை வரும். அடுத்த வேலையை உறுதி செய்தபின் இந்த வேலையை விட்டுவிடலாம். ஏனென்றால் இப்போது உங்களுக்கு இடமாற்றம் தேவை.

தொழில் - தொழில் பற்றிய கவலை அதிகமாகி கொண்டே இருக்கும். சற்று பொறுமையாக மாற்று ஏற்பாடுகளை யோசித்துப்பாருங்கள். நல்ல வழி கிடைக்கும். அதற்கான நேரம் இப்போது தொடங்கிவிட்டது. இதுவரை தோன்றாத சிந்தனைகள் இப்போது உதயமாகும். அதை பரிட்சார்த்த முறையில் சோதித்து, பிறகு நடைமுறைப்படுத்துங்கள், வெற்றி உண்டாகும். மொத்த வியாபாரிகள் வியாபாரத்தில் தேக்க நிலையைக் கண்டு கவலைப்படுவீர்கள், இன்னும் சில நாட்களில் இந்த கவலைகள் மாறும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அந்த நிலையை கண்டு வருத்தப்படுவீர்கள். நீங்களும் ஏதாவது புதிய உத்தியைக் கையாண்டு வியாபாரத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்லலாம், அதற்கான வழி கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் சுமாராகவே இருக்கிறது.

பெண்களுக்கு - ஆசைகள் அதிகம் இருந்தாலும் அதை அடைவதற்கு கடும் சிரமம் ஏற்படும். எனவே பொறுமையாக இருந்தால் அனைத்தும் தானாக கிட்டும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவ உங்களின் பொறுமை மிக அவசியம். பண உதவி கடைசி நேரத்தில் கிடைத்து மனநிம்மதி உண்டாகும்.

மாணவர்களுக்கு - கவனமாக இருந்தால் கல்வியில் முன்னேற்றம் உண்டு. கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உயர்கல்வி கற்பவர்களுக்கு எந்த தடையும் இருக்காது. சுமுகமாக இருக்கும்.

கலைஞர்களுக்கு - நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். வருமானம் பல வழிகளிலும் வரும். முயற்சிகள் முழு வெற்றியைத் தரும்.

பொதுப்பலன் - பொறுமை கடலினும் பெரிது. எனவே நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். அவசரம் ஆபத்தில் முடியும். எனவே பொறுமை மிக அவசியம். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. இரவு நேரப் பயணங்கள் தவிர்க்க வேண்டும். பொதுப் போக்குவரத்து வாகனத்தையே பயன்படுத்துங்கள். இந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய ஐந்து நாட்களும் நற்பலன்கள் கிடைக்கும். வியாழன் மற்றும் சனி இந்த இரு நாட்கள் சாதகமான பலன்களைத் தராது.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து தானம் தாருங்கள். ஆலயத்தில் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் தானம் செய்யுங்கள் . தடைகள் விலகும். குழப்பங்கள் மறையும். நன்மைகள் பெருகும்.

************************************************************************************************

ரேவதி -


நல்ல பலன்கள் நடைபெறும். மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் . தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் அகலும். எதிரிகள் காணாமல் போவார்கள் போட்டியாளர்கள் தோற்றுப் போவார்கள்.

உத்தியோகம் - வேலையில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. சுமுகமாகவே இருக்கும். அலுவலக நண்பர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். பணியிட மாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வும் உண்டாகும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும் வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டு வேலை உறுதியாகும். சகோதர சகோதர வழி உறவுகள் உங்கள் வேலைக்கு உதவுவார்கள். உடலுழைப்பு தொழிலாளர்கள் ஆதாயம் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள்.

தொழில் - தொழில் முன்னேற்றப் பாதைக்கு செல்லும். தேக்க நிலைகள் மாறும். தேங்கி நின்ற பொருட்கள் விற்பனையாகும். ஊழியர்களின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் சிந்தனை தள்ளிப்போகும். வல்லுநர்கள் உதவியோடு தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் உண்டாகும். புதிதாக தொழில் தொடங்க நினைப்போர் இன்னும் சில வாரங்கள் பொறுத்திருந்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மொத்த வியாபாரிகள் கணிசமான லாபம் பார்ப்பார்கள். கமிஷன் ஏஜன்ட்கள் சுமாரான லாபம் அடைவார்கள். ஓரளவு வளர்ச்சி உண்டு


பெண்களுக்கு - திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். கர்ப்பப்பை மற்றும் இடுப்பு முதுகு பிரச்சினை இருந்தவர்கள், இப்போது குணம் அடைவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

மாணவர்களுக்கு - மந்த நிலையிலிருந்து வெளியே வாருங்கள். சுறுசுறுப்பாக இருங்கள். மொத்தக் கவனத்தையும் படிப்பில் செலுத்துங்கள். வெற்றி பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். பண வரவு திருப்தி தரும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

பொதுப்பலன் - நன்மைகளும் பாதிப்புகளும் கலந்தே இருக்கிறது. அதேசமயம் நன்மைகள் அதிகமாக இருப்பதால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. தனவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் முடிவில் அனைவரும் சமாதானம் அடைவார்கள்.
இந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் இந்த நான்கு நாட்களும் நல்ல பலன்களைத் தரும்.
வெள்ளி, சனி, ஞாயிறு இந்த மூன்று நாட்கள் சாதகமாக இருக்காது.

வணங்க வேண்டிய தெய்வம் - விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வயதானவர்களுக்கு தானம் தாருங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்