இந்த வார நட்சத்திரப் பலன்கள் (அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை) : திருவாதிரை  முதல் மகம் வரை

By செய்திப்பிரிவு


ஜோதிடர் ஜெயம் சரவணன்


திருவாதிரை
எதிர்ப்புகளும் அதனால் சந்திக்கும் போராட்டங்களும் வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது அதை எதிர்கொள்ள எத்தனையோ சாமர்த்தியங்களை நீங்களும் கையாண்டு கொண்டுதான் இருக்கிறீர்கள். அடுத்தடுத்து செலவுகள் காத்துக் கொண்டிருக்கிறது என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை இருக்கிறது. ஆனால் இந்த வாரம் உங்கள் செயல்கள் எல்லாம் படிப்படியாக வெற்றியை தரக்கூடியதாகவே உள்ளது. முயற்சிகளில் லாபம் கிடைக்கும். பணத்தேவைகள் சரியான நேரத்தில் கிடைத்து செலவுகளை சமாளிப்பீர்கள்.

உத்தியோகம் - உங்கள் வேலை மட்டுமல்ல அடுத்தவரின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அலுவலக வேலையை வீட்டிற்கு சென்ற பின்னும் பார்ப்பீர்கள். இதற்கு ஊதியமாக சிறு தொகை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் தண்டனைக்கு உரியதாக இருக்கும். ஆனால் வெளிநாடு சென்று வேலை பார்க்க விரும்புவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். அயல் நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை விசா நீட்டிப்பு கிடைக்கும். குடியுரிமை விண்ணப்பம் ஏற்கப்படும்.

தொழில் - கடன் வாங்கியே தொழிலை நடத்த வேண்டி இருக்கும். இந்த வாரமும் கடன் வாங்கும் சூழ்நிலை இருக்கிறது. கடனும் கிடைக்கும். ஆனால் இன்னும் சில மாதங்களில் கடன் தீரும்.
ஆனாலும் புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் வந்துகொண்டே இருக்கும். புதியதாக தொழில் தொடங்கும் எண்ணம் இருப்பவர்கள் இன்னும் சில நாட்கள் பொறுத்துக்கொண்டால் வாய்ப்புகள் தானாக வரும்.

பெண்களுக்கு - மற்றவர்களோடு உங்களை ஒப்பிடுவதை மாற்றிக் கொள்ளுங்கள். மனம் அமைதி பெற தியானம் செய்யுங்கள். மனச்சுமையை குறைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் உடல் நல பாதிப்புக்கு ஆளாவீர்கள்.

மாணவர்களுக்கு - படிப்பைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் கவனம் போகும். கல்வியே மேன்மை தரும் என்பதை உணர்ந்தால் படிப்பில் கவனம் வரும்.

கலைஞர்களுக்கு - உங்களுக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருங்கள். அது விரைவில் வரும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். வருகின்ற பணம் உடனே கரைந்தும் போகும். மொத்தத்தில் தேவைகள் பூர்த்தியாகும்.

பொதுப் பலன் - மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த விஷயத்தையும் நன்கு ஆலோசித்து முடிவு எடுங்கள். கீழ்கண்ட நாட்களில் முடிவெடுங்கள் எல்லாம் சுபமாகும். செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் சாதகமாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் - மகிஷாசுரமர்த்தினி, அன்னை ஸ்ரீதுர்கை. மற்றும் பிரத்தியங்கரா தேவி இவர்களை வணங்குங்கள். மனதில் தெளிவும் தைரியமும் பிறக்கும்.

*************************************************************************


புனர்பூசம்
பிரச்சினைகள் வருவதும் பிறகு தானாகத் தீருவதும் உங்களுக்கு வாடிக்கை. இந்த வாரம் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. அசாத்திய தைரியமும் துணிச்சலும் உங்களை வழி நடத்தும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். எதிரிகள் காணமல் போவார்கள். வீடு மாற்றம் வாகன மாற்றம் போன்ற சிந்தனைகள் மேலோங்கும். கடன் தீர வழிவகைகள் கிட்டும்.

உத்தியோகம் - பணிச்சுமைகள் இருந்தாலும் அதன் பாதிப்பு ஏதும் உணர மாட்டீர்கள். இன்னும் சொல்லப்போனால் அழுத்தம் என்பதை உணரக்கூட மாட்டீர்கள். சக ஊழியர்கள் முகத்துக்கு நேரே நட்பும் முதுகுக்கு பின் பகையும் பாராட்டுவார்கள். உங்கள் மீது வீண் புரளி கிளப்புவார்கள். நீங்கள் தவறு செய்வதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அனைத்தும் நன்மையில் முடியும்.

தொழில் - சீராகச் செல்லும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய வங்கிக் கடன் வாங்குவீர்கள் அல்லது அதற்கான ஏற்பாடுகளை இந்த வாரம் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். வெளி மாநிலம் வெளிநாடு தொடர்பு உடைய ஒப்பந்தங்கள் பேச்சு வார்த்தைகள் நடக்கும். தரகு தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நடத்துபவர்கள் புதிய கிளை துவங்குவார்கள். கட்டுமானப் பொருட்கள் விற்கும் வியாபாரிகள் பெரிய வியாபார ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களுக்கு - துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள் அது குடும்ப பிரச்சினையாக இருக்கலாம் அல்லது வேலை சம்பந்தபட்டதாகவும் இருக்கலாம். தற்போது பணிபுரியும் இடத்தை விட நல்ல நிறுவனத்திற்கு மாறுவதற்கான காலச் சூழல் உள்ளது. திருமணம் உறுதி செய்யப்படும். எதிர்பாராத வகையில் பணம் அல்லது பாகப்பிரிவினை வகையில் சொத்து சேர்வது நடக்கும்.

மாணவர்களுக்கு - அருமையான வாரம். நல்ல நட்புகளால் கல்வியில் உதவி கிடைக்கும். வெளிநாட்டில் கல்வி கற்பதற்காக விண்ணப்பித்திருந்தால் இந்த வாரம் நல்ல தகவல் வரும்.

கலைஞர்களுக்கு - பரபரப்பாக இயங்க ஆரம்பிப்பீர்கள், அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு நல்ல வாய்ப்புகள் விருது முதலான கெளரவம் கிடைக்கும்.

பொதுப் பலன் - திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் சாதகமாகவும், தன வரவும், பயணங்களால் ஆதாயமும் கிடைக்கும். செவ்வாய் மற்றும் ஞாயிறு எதிர்மறை எண்ணங்களும், செயல்களும் உண்டாகும். எனவே இந்த இரு நாட்களையும் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் - சக்கரத்தாழ்வார் வழிபாடும், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணமும் நற்பலன்களைத் தரும்.

**************************************************************************************************


பூசம்
கிரகங்கள் அனைத்தும் சாதகமாக இருந்தாலும் ஏதாவதொரு தடை வருகிறதே என்றிருந்த கவலை இந்த வாரம் விலகும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இந்த வாரம் ஒவ்வொன்றாக நடந்தேறும்.

உத்தியோகம் - எந்த பிரச்சினையும் இல்லாமல் கலகலப்பாக இருப்பீர்கள். சக ஊழியர்களோடு பயணத் திட்டம் வகுப்பீர்கள். அதற்கான முன்னேற்பாடுகளை இந்த வாரம் செயல்படுத்துவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள், பதவி உயர்வுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். வங்கிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் பணி புரியும் இடத்திலேயே இடமாற்றம் செய்யப்படுவீர்கள்.

தொழில் - நீண்ட நாள் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். அரசுடன் நடந்து வந்த வழக்குகள் முடிவுக்கு வரும். ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அயல் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உதவி கிடைக்கும். அந்த உதவியால் புதிதாக தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் வழிவகை கிடைக்கும். அச்சுத் தொழில் செய்பவர்கள் பதிப்பாளர்கள், புத்தக நிறுவனம் நடத்துபவர்கள் இந்த வாரம் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். கட்டுமானத் தொழில் செய்பவர்கள், செங்கல் சூளை, வர்ண வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். மருந்துக்கடை வைக்க இடம் தேடியவர்களுக்கு இந்த வாரம் நல்ல இடம் கிடைக்கும்.

பெண்களுக்கு - திருமணம் உறுதியாகி மன மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் நடந்து இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வாரம் இறைவன் அருளால் குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்கள் இந்த வாரம் பணி ஆணை பெறுவார்கள். பரம்பரைச் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு உங்கள் பங்கு வந்து சேரும் அல்லது அது தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். ஒரு சிலர் ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மாணவர்களுக்கு - நீண்ட நாளாக தேடிய புத்தகம் அல்லது முக்கிய குறிப்புகள் இந்த வாரம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு - திரைத்துறை, இசைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் ஒப்பந்தங்கள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

பொதுப் பலன் - தீவிரமாக உழைத்தால் நல்ல விளைச்சல் காணலாம். திருமணம் உறுதியாகும். சொந்த வீடு கனவு நிறைவேறும். வெளிநாட்டு வேலை மற்றும் வணிகம் கிடைக்கும். செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் நல்ல பலன்கள் நடக்கும். திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்கள் எதிர்மறையான விஷயங்கள் நடக்கும். முடிந்த வரை இந்த நாட்களில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் - முருகப் பெருமானை வணங்குங்கள். சண்முக கவசம் பாராயணம் செய்யுங்கள். மேலும் நன்மைகள் நடக்கும்.

***************************************************************************************


ஆயில்யம்
முயற்சிகளில் சலிப்பே ஏற்படாது. விடாது முயற்சியுடன் எடுத்த காரியங்களில் வெற்றியைக் குவிப்பீர்கள். இந்தவாரம் நற்பலன்களும் எடுத்த காரியங்களில் முழு வெற்றியும் கிடைக்கப்பெறுவீர்கள். சொந்த வீடு கனவு நிறைவேறப் போகிறது. அதற்கான பண உதவி, வங்கிக் கடன் கிடைக்கும்.

உத்தியோகம் -அலுவலகத்தில் கொடுத்த பணியை திருப்திகரமாக முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்களின்ஆதரவும் பாராட்டும் கிடைக்கப்பெறுவீர்கள். உயரதிகாரியின் ஆதரவு இருப்பதால் மேலும் சில பணிகளைப் பெற்று அதில் சாதிக்க முயல்வீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். கட்டுமானத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பள உயர்வு ஊக்கத்தொகை கிடைக்கப் பெறுவார்கள். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் மனம் மகிழும் வகையில் இந்த வாரம் மகிழ்ச்சிகரமாகவே இருக்கிறது.

தொழில் - தொழில் வளர்ச்சிப் பாதையை நோக்கிச்செல்லும். போட்டி நிறுவனங்கள் பின் வாங்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள் அரசுடன் இணக்கமாகச் செல்வீர்கள். அதன்மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். ஊழியர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் தொழில் முனைவோர் இந்தவாரம் அதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். ஒரு சில நிறுவனங்கள் மற்ற நிறுவனத்தோடு இணைந்து தொழில் செய்ய முனைவது நடைபெறும். சிறுதொழில் நடத்துபவர்களுக்கு நிறைய ஆர்டர்கள் பெற்று மனம் மகிழும் வகையில் தொழில் சிறப்பாக இருக்கும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்பவர்கள் நல்ல வருமானம் ஈட்டுவார்கள்.

பெண்களுக்கு - இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். உறவினர்கள் வருகை மன மகிழ்ச்சி தரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல தேர்ச்சி விகிதம் எடுத்து அரசு வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வங்கி உள்ளிட்ட மத்திய அரசுப்பணி கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும்.

மாணவர்களுக்கு - சிறப்பான வாரம், கல்வியில் அதீத ஆர்வமும் கவனமும் ஏற்படும். சக மாணவர்கள் தேடி வந்து உதவுவார்கள்.

கலைஞர்களுக்கு - பொன்னான வாய்ப்புகள் வீடு தேடி வரும். பெரிய அளவிலான வாய்ப்புகளும் அதன் மூலம் பெரிய தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படும்.

பொதுப் பலன் - திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்கள் உங்களுக்கு சாதகமாகவும் பெரிய வாய்ப்புகள் கிடைப்பதற்கும் பணவரவு கிடைப்பதற்கும் உரிய நல்ல நாட்களாகும். செவ்வாய், சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு பாதிப்புகளையும் சங்கடங்களையும் தரும். இந்த நாட்களைத் தவிர்த்து விடுங்கள். பேச்சுவார்த்தை நடத்துவது ஒப்பந்தங்கள் போடுவது ஆகியவற்றில் பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் பேசித் தீர்ப்பது கூடாது.

வணங்க வேண்டிய தெய்வம் - வெங்கடேச பெருமாள் ஆலயம் சென்று வாருங்கள். பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். எல்லா நற்பலன்களும் கூடுதலாக நடக்கும்.

*****************************************************************************

மகம்
எந்தக் காரியத்தையும் நேர்த்தியாக முடிக்கும் உங்களுக்கு சமீப காலமாக மனக் கஷ்டங்களும் உடல் உபாதைகளும் இருக்கும். இவை அனைத்தும் இந்த வாரத்திலிருந்து படிப்படியாக தீரும். குலதெய்வ வழிபாடும் ஆன்மிகப் பயணங்களும் இந்த வாரம் இருக்கும். குறிப்பாக பரிகார ஆலயங்களாக தேடிச் சென்று வருவீர்கள்.

உத்தியோகம் - இந்த வாரமும் வேலையில் அழுத்தங்களும் சுமைகளும் இருக்கும். ஆனாலும் கவலைப்படாமல் உங்கள் பணியை செய்து கொண்டே இருப்பீர்கள். மேலதிகாரியின் வருத்தத்துக்கு ஆளாவீர்கள். நல்ல நண்பர் கூட இப்போது உதவ முடியாத நிலை உண்டாகும். உங்கள் வேலையை யாரும் பகிர்ந்து கொள்ளக்கூட வரமாட்டார்கள். ஆனாலும் முனைப்போடு செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். நீண்ட தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் பற்றிய கவலை அதிகரிக்கும். இது அனைத்தும் இன்னும் சில நாட்கள் தான் குருபெயர்ச்சிக்கு பின் சாதகமான சூழல் உருவாகும்.

தொழில் - இப்போதைய நிலையே தொழிலில் தொடரும்.பெரிய எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம். இருப்பதை இருப்பதுபோலவே கொண்டு சென்றால், தொழிலில் பெரிய பாதிப்புகள் ஏதும் வராது. தொழிலை டெவலப் செய்கிறேன் என்று ஏதாவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் பின்னடைவு ஏற்படும். இது அனைத்து தொழில் செய்வோருக்கும் பொருந்தும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும், புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பெண்களுக்கு - முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். ஆடை ஆபரணம் சொத்து சேர்க்கை உண்டு. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்லுங்கள்.

மாணவர்களுக்கு - எவ்வளவு ஆழ்ந்து படித்தாலும் ஞாபக மறதி அதிகமாக இருக்கும். எனவே மனதை ஒரு நிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்துங்கள்.

கலைஞர்களுக்கு - இந்த வாரமும் வாய்ப்புகளைத் தேடி அலைவீர்கள். ஆனால் வாய்ப்புகள் வர இன்னும் சில நாட்கள் ஆகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

பொதுப் பலன் - திங்கள், செவ்வாய், வியாழன், சனி இந்த நான்கு நாட்களும் நல்ல பலன்களைத் தரும். சாதகமான விஷயங்கள் நடக்கும். புதன், வெள்ளி, ஞாயிறு இந்த மூன்று நாட்களும் பெரிய அளவில் நன்மைகள் ஏதும் தராது.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீஆண்டாள் அன்னையை வணங்குவதும், ஆண்டாள் அருளிய திருப்பாவை படியுங்கள். நன்மைகள் நடக்கும், தடைகள் அகலும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்