சந்திராஷ்டமம்னா என்ன... அப்போது என்ன செய்யணும்? 

By செய்திப்பிரிவு


ஜோதிடம் அறிவோம் 2 - 57

ஜோதிடர் ஜெயம் சரவணன் 


வணக்கம் வாசகர்களே. 
இன்று நாம் பார்க்க இருக்கும் ஜோதிட விளக்கம் சந்திராஷ்டமம். 
சந்திரன், உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் அதாவது எட்டாவது ராசியில் சஞ்சரிக்கும் போது உண்டாகும் தோஷம் இந்த சந்திராஷ்டம தோஷம். 
என்ன செய்யும் இந்த சந்திராஷ்டமம்? என்ன பரிகாரம்? பார்க்கலாம்.....! 
சந்திரன் என்பவர் நமது தேகம் (உடல்), எண்ணம், மிக முக்கியமாக மனம். ஆகியவற்றுக்கு ஹெச்.ஓ.டி. அதாவது தலைவர். 
மனம் என்பது சிந்தனையையும் குறிக்கும், சந்திரன் முழு மறைவு ஸ்தானமான அஷ்டமத்தில் அதாவது எட்டாவது ராசியில் சஞ்சரிக்கும்போது மனமும் செயலும் ஒரே அலை வரிசையில் செல்லாமல் மாறுபட்ட அலைவரிசையில் தாறுமாறாக பயணிக்கும்.  
அப்போது எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும். சந்திராஷ்டம நாட்களில் மனமும் உடலும் ஒருவித பதட்டத்தில் இருப்பதை நாம் உணரலாம். இந்த காரணத்தினாலேயே செய்கிற செயல்கள், எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் தவறாகவே இருக்கும். 
அலுவலகத்தில் சக ஊழியரோடு வீண் பிரச்சினை, மற்றவர்களைப் பற்றிய தவறான விமர்சனங்கள் உங்கள் மீதே திருப்பப்படுவது, அக்கம்பக்கத்து வீட்டாரோடு தகராறு என்றெல்லாம் சந்திக்க நேரிடும். இந்த நாட்களில், பயணங்கள் போகக்கூடாது. மீறிப்போனால் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். 
புதிய ஒப்பந்தங்கள் போடக்கூடாது. புதிய முடிவுகள் எடுக்கக்கூடாது.  
ஞாபக மறதியால் பொருட்களை பறிகொடுத்தல், நீங்கள் செல்லும் சாலை மட்டுமே அதிக அளவு போக்குவரத்து நெரிசல் உண்டாவது, உங்களுக்காக காத்திருந்த மாதிரி சிவப்பு சிக்னல் விழுவது, இக்கட்டான நேரத்தில் பஞ்சர் ஆவது, செருப்பு அறுந்து போவது என்றெல்ல்லாம் நடக்கிற தருணங்களைக் கவனித்துப் பாருங்கள். அன்றைக்கு சந்திராஷ்டமாக இருக்கும்.  
இந்த சந்திராஷ்டமமானது, மனக்குழப்பம், அர்த்தமற்ற பயம், படபடப்பு அடைவது, கவனக்குறைவு உண்டாவது என பலவிதமான பாதிப்புகளை உண்டாக்கும்,
சரி இதற்கான பரிகாரம்தான் என்ன? 
சந்திராஷ்டம நாட்களில் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபட்டு அந்த நாளைத் தொடங்குங்கள். பாதிப்பு குறையும், விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுங்கள். நல்லதே நடக்கும்.  
தேங்காய் எண்ணெய்க்குளியல் எடுப்பதும், அரிசிமாவை உடல் முழுவதும் தேய்த்து குளிப்பதும் சந்திராஷ்டம பாதிப்பை இல்லாமல் செய்துவிடும். 
வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் வைத்து வழிபடுவதும், எறும்பு புற்றுக்கு பொரி, வெல்லம் போன்ற உணவு பொருட்களை தூவிவிடுவதும் நன்மை தரும்.
பிறைசூடனான  சிவபெருமானை வழிபடுவதும், சந்திர அம்சமான அம்பிகையை வழிபடுவதும், அபிஷேகத்திற்கு பால், பன்னீர்,தயிர், இளநீர் வழங்குவதும் சந்திராஷ்டம தோஷத்தை நீக்கும். 
சௌந்தர்ய லஹரி படிப்பது அல்லது கேட்பதும் நன்மை உண்டாக்கும். விநாயகர் அகவல் படிப்பதும்  நன்மை தரும்.  
இந்த பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து செய்துவிட்டு உங்கள் எந்த பணியையும் செய்யலாம், பயணங்கள் செல்லலாம், புதிய ஒப்பந்தங்கள் போடலாம், எந்த பாதிப்பையும் தராது என்பதே உண்மை. 
இந்த பரிகாரங்களை செய்து சந்திராஷ்டமத்தை எதிர்கொள்ளுங்கள். அற்புதத்தை உணர்வீர்கள், இந்த பரிகாரங்களை மற்றவர்களுக்கும் பரிந்துரையுங்கள், அடுத்தவருக்கு உதவுவதே சிறந்த பரிகாரம்தானே!? 
சந்திராஷ்டம சோதனைகள் பாதிப்பை ஏற்படுத்தாத ராசிகளும் உண்டு.  அவை என்னென்ன  தெரியுமா? 
ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் இந்த நான்கு ராசிகளுக்கும் சந்திராஷ்டம பாதிப்பு ஏற்படாது. 
காரணம் இந்த நான்கு ராசிகளும் சந்திரனின் ஆட்சி வீடான கடகத்திற்கு மறைவு ஸ்தானங்கள் ஆகும். மறைவு ஸ்தானங்கள் என்பது 3,6,8,12 ஆகும். 
 ரிஷபத்திற்கு கடகமானது மூன்றாவது ராசியாகும். 
சிம்மத்திற்கு கடகம் 12ம் இடம், தனுசுக்கு கடகம் எட்டாமிடம், கும்ப ராசிக்கு கடகமானது 6ம் இடம்.  
ஒரு மறைவு ஸ்தானாதிபதி மற்றொரு மறைவு ஸ்தானம் செல்ல அது “விபரீதராஜயோகமாக” மாறும். எனவே இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் பாதிப்பை உண்டாக்குவதில்லை.
நிறையபேருக்கு தெரியாத ஒன்று...  
சந்திராஷ்டமம் பாதிப்பைத் தரும். அதேபோல், சந்திரனால் இன்னொரு சிக்கலும் குழப்பமும் நமக்கு வரும் தருணமும் இருக்கிறது.  அதாவது, சந்திரன் நம் ராசியில் பயணிக்கும் போது படபடப்பு, பதட்டம், நிதானம் இழத்தல் போன்றவை உண்டாகும்.  ஆனால் சந்திராஷ்டம அளவுக்கான பாதிப்பையோ பிரச்சினைகளையோ தராது. இந்த சின்னச் சின்ன சிக்கல்களும் பிக்கல்களும் இருக்கக் காரணம்... சந்திரன் என்பவன் மனோகாரகன்.  எனவே பெரிதாக பயம் கொள்ளத் தேவையில்லை.  
அடுத்த பதிவில் சந்திப்போம். 
- தெளிவோம் 
 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE