29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார்.
மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அயன சயன போக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
இந்த சனிப்பெயர்ச்சியில் கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிடாமல் காரியங்களைச் செய்யும் போது அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த பெயர்ச்சியின் மூலம் பதவி உயர்வு கிடைக்கும்.வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம்.
» திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்
» பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழா - 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டம் தொடக்கம்
அரசியல்வாதிகளுக்கு உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள்.
பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027
ரிஷபம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் ராசியையும் , ஏழாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
இந்த சனிப்பெயர்ச்சியில் பல சாதகமான நிலைமைகள் வர இருக்கிறது. உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவார். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.
தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும்.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால் துறையில் வெற்றி வாகை சூடலாம்.
பெண்மணிகள் இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > ரிஷபம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027
மிதுனம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
இடம் பெயரும் கர்மகாரகன் சனியால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொதுநலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரண்டு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்குச் சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும்.
பெண்களுக்குக் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > மிதுனம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027
கடகம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி பாக்கிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
சனி பகவான் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். உங்களை மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்பட வைப்பார். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு சகஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது.
அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும்.
பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் வீண்வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். . நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி உங்களின் முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > கடகம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027
சிம்மம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது களத்திர ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப்பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். வம்பு, வழக்குகளிலிருந்தும் விடுபட்டு புதிய மனிதனாக ஆவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு சனி கவுரவமான பதவிகளை வழங்குவார். உங்களின் கடமைகளை பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம். வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும்.
அரசியல்வாதிகள் உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் சில முடிவுக்கு வரும்.
பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > சிம்மம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027
கன்னி ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி களத்திர ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ராசியையும் , பத்தாம் பார்வையால் சுகஸ்தானத்தையும் பார்க்கிறார்.
உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். உங்கள் புகழும், கவுரவமும் உயரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும்.
அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > கன்னி: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027
துலாம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ரண ருண ரோக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலவிதமான குழப்பங்கள் இருந்தும் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல வழிகள் உதயமாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள். வியாபாரிகளுக்கு கடும் முயற்சிகளுக்கு பின் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும்.
அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கலைத்துறையினருக்கு பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும்.
பெண்மணிகளுக்கு ஆன்மீகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > துலாம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027
விருச்சிகம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
துர்க்கை அன்னையை தொடர்ந்து வழிபட்டால், எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். தர்ம காரியங்களைச் செய்வீர்கள். தடங்கல்களைத் தாண்டி வெற்றியடைவதில் ஐயமேயில்லை. உங்களின் தனித்தன்மையை இழக்க மாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள் உங்களுக்குச் சாதகமாகவே அமையும்.
குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து முடிக்க வழிபிறக்கும். உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள்.
வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும்.
பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழிவகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > விருச்சிகம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027
தனுசு ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையாக உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
எதிலும் நிதானமாகவும், அளவெடுத்துச் சிறப்பாகவும் செயல்பட வைப்பார். இதனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். உங்களின் சுய முயற்சியின் அடிப்படையில் செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள். உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும் நன்மை உண்டாகும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வத்தோடு செல்வாக்கும் உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க உதவிகளைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும். கலைத்துறையினர் சககலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > தனுசு: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027
மகரம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தைரிய வீரிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகியிருந்த தாய் வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். எப்போதோ உங்களுக்கு உதவியவர்களுக்கு நீங்கள் மனமுவந்து உதவும் காலகட்டம் இது. உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். தொழிலில் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும்.
அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். சமுதாயத்திற்குப் பயன்படும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும்.
பெண்மணிகள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள், படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > மகரம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027
கும்பம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது ராசியில் இருக்கும் சனி பகவான் விலகி தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
உங்கள் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். நேர்மையான எண்ணங்களால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்.
அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும்.
பெண்மணிகள், மனநிம்மதியைக் காண்பீர்கள். தர்ம காரியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற தக்க பயிற்சிகளில் ஈடுபடவும் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > கும்பம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027
மீனம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே - இதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ராசிக்கு வருகிறார். மூன்றாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.
சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். வியாபாரிகள் உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலும் உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும் | முழுமையான பலன், பரிகாரத்துக்கு > மீனம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago