துலாம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027 முழுமையாக!

By Guest Author

29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

துலாம்: எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் துலா ராசி அன்பர்களே! நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர். நீங்கள் நவக்கிரகங்களில் அசுரகுரு என்றழைக்கப்படும் தனகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் பட்டம் பதவிகள் பெறுவீர்கள். திறமைகள் பல கொண்டவர்கள். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது.

கிரகநிலை: இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ரண ருண ரோக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்கள்: பலவிதமான குழப்பங்கள் இருந்தும் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போகலாம். எப்போதும் போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். அதேசமயம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நண்பர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும். உடலில் இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள். பந்தயங்கள், போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். பெற்றோர் வழியில் நிலவி வந்த மனக் கஷ்டங்கள் தீர்ந்து, குடும்பத்தில் குதூகலம் நிறையும். நீங்கள் பிரபலம் ஆவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதேசமயம் உங்களின் பொருளாதாரத் திட்டங்களில் சிறிது தொய்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சில நேரங்களில் மனம் நொந்து போவீர்கள். இருப்பினும் பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

சனி பகவானால் வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். உங்களின் நண்பர்கள், உங்களுக்குத் தேவையானவற்றைத் தவிர்த்துத் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள். உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள்.

வியாபாரிகளுக்கு கடும் முயற்சிகளுக்கு பின் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன்சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.

அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்களின் முயற்சிகளை எதிர்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்களின் கற்பனை சக்தி ஊற்றுபோல் பெருகும். இது வருமானமாகவும் மாறி பயன் தரும்.

பெண்மணிகளுக்குக் கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும். ஆனால் பெற்றோர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.

சித்திரை 3, 4 பாதங்கள்: கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

சுவாதி: வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண் பகை உண்டாகலாம். கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும்.

பரிகாரம்: சப்த கன்னியரை வழிபட்டு வரவும். லக்ஷ்மி அஷ்டோத்திரம் பாராயணம் செய்வது நலம் தரும். எலுமிச்சை கனியைப் பிழிந்து சாறு எடுத்து அம்மனுக்கு அபிஷேகத்திற்கு படைத்துவர வாழ்வில் வசந்தம் வீசும் | சனி பகவானின் பார்வைகள்:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

37 mins ago

ஜோதிடம்

46 mins ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்