கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) சனியை ராசிநாதனாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! இந்த ஆண்டு நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும்.
குடும்பம்: உங்களுடைய தெளிவான எண்ணங்களால் குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். பெரியோர்களின் தொடர்பு உண்டாகி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். வெளியூர் – வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். லாபகரமான முதலீடுகளைச் செய்து உபரி வருமானம் நிரந்தரமாக வர வழி வகுத்துக் கொள்வீர்கள். மறைமுகக் கலைகளான ஆழ்மனத் தியானம் போன்றவற்றைச் சுயமாகக் கற்றுக் தேர்ந்து அடுத்தவர்களுக்கும் கற்றுத் தருவீர்கள். சகோதர சகோதரிகளின் குறைகளைப் பெரிதுபடுத்தமாட்டீர்கள். மேலும் முன்பு உங்களை ஏமாற்றியவர்களையும் இந்த காலகட்டத்தில் மன்னித்துவிடுவீர்கள்.
ஆரோக்கியம்: ஆரோக்கியத்தில் நல்ல மாறுதல்கள் ஏற்படும். மருத்து மாத்திரைகளுக்கான செலவினங்கள் குறையும்.
பொருளாதாரம்: தனாதிபதி குரு சஞ்சாரத்தல் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். கடன் பிரச்சினை குறையும். அடுத்தவரின் உதவி பெற்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வீட்டு வேலைகள் நிறைவடையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உயரதிகாரிகளின் ஆதரவை உறுதுணையாகக் கொண்டு உங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சக பணியாளர்களின் பொறாமைப் பார்வை உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். உங்கள் அன்றாடப் பணிகளில் சிறு குறையும் நேராமல் மிகுந்த அக்கறை செலுத்தி வருவதே மிக அவசியம். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கும். பொருளாதார நிலையில் பற்றாக்குறை நேர இடமில்லை. சிக்கன நடவடிக்கைகளின் மூலம் ஓரளவு சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
வியாபாரிகளுக்கு: கடன் விஷயத்தில் கவனமாக இருந்தால் மனநிறைவிற்கு குறைவிராது. வியாபாரம் லாபகரமாகவே நடைபெற்று வரும். நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வியாபாரத்திலும் வளர்ச்சியைக் காண்பது அவசியமாகும். அதே நேரத்தில் அவர்களைத் திருப்தியடையச் செய்யும் வகையில் தரமான பொருள்களைக் கொள்முதல் செய்து வைப்பது வியாபாரத்தை பெருக்க உதவும். தொழில் வளர்ச்சியும் வருமானமும் சீராக இருந்து வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடன் வாங்கும் அவசியம் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஒழுங்காகத் திட்டமிட்டு முறைப்படி செயல்படுவதன் மூலம் தொழிலில் படிப்படியாக முன்னேற்றப் போக்கைக் காணலாம்.
பெண்களுக்கு: வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிபாராத நன்மைகளைப் பெறக் கூடும். தள்ளிப்போய் வந்த திருமணம் திடீரென்று முடிவாகி திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும். உடல்நலத்தில் சிறுசிறு உபாதைகள் அடிக்கடி ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் கவனமாக இருந்து வருவது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்களைத் தவிர்க்கலாம். வேலை நிமித்தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழச் சந்தர்ப்பம் உருவாகும்.
அரசியல்வாதிகளுக்கு: உங்களுக்கு சில சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும் நீங்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து வருவதன்மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். மனதை அலைபாயவிட்டு மற்றவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி நிலை தடுமாறுவது எதிர்காலத்தில் துன்பம் தரும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு நடப்பது அவசியம். உங்களுக்குத் தரப்பட்டுள்ள பணிகளைத் திறமையாக நிறைவேற்றுவதிலேயே உங்கள் நோக்கமெல்லாம் இருந்து வருவது அவசியம்.
கலைத்துறையினருக்கு: இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ இடமுண்டு. பின்னணி இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் கூடுதலான வாய்ப்புகளைப் பெற முடியும். வெளியூர்ப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள நேரும். சக கலைஞர்களிடம் சுமுகமாக் நடந்து கொள்வதன் மூலம் உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். வண்டி, வாகனவசதிகள் சிலருக்கு அமையக் கூடிய நிலை உண்டு. பயிற்சி பெற்று வரும் கலைஞர்கள் அரங்கேற்றத்தை நடத்தி மகிழ சில மாதங்கள் பொறுத்து இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு: நீங்கள் முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்வகுப்புகளுக்குச் செல்லக் கூடும். இடையில் நிறுத்தி வைத்திருந்த சில பகுதிகளுக்கான தேர்வுகளையும் இப்போது எழுதி நிறைவு செய்வீர்கள். சிலர் உயர் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லவும் முயன்று வெற்றி பெறுவீர்கள். ஞாபக மறதி, உடல்சோர்வு சில நேரங்களில் ஏற்படக் கூடுமாயினும், அதற்கு இடங்கொடுக்காமல் இருப்பது நல்லது. சுற்றுலாப் பயணங்கள் என எங்காவது செல்ல நேரும்போது குளங்களில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு நீங்கள் செய்த வேலைகளை மற்றவர்கள் செய்ததாகக் கூறி நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் தேவை. வியாபாரிகள் லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவர். உடனிருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் லாபம் அடைவீர்கள். உடனிருப்பவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் திருப்தி உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சதயம்: இந்த ஆண்டு எந்த காரியத்திலும் கவனம் தேவை. பெரியவர்களிடம் நற்பெயர் எடுத்து மகிழ்ச்சி காண்பீர்கள். மனம் தெளிவடையும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள்.
பூரட்டாதி 1, 2,3 பாதங்கள்: இந்த ஆண்டு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து சந்தோஷம் காண்பீர்கள். இடம், வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அதற்கான காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பீர்கள். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று பலனடைவீர்கள். வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
44 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago