துலாம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!

By Guest Author

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே! இந்த ஆண்டு நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். சிறிய அளவு முயற்சிகள்கூட பெரிய பலனைத் தரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சுலபமாக நடக்கும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். உடல் உபாதைகளுக்கு மாற்று சிகிச்சை முறைகளை மேற்கொள்வீர்கள். அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். மழலைச் செல்வம் கிடைக்கும். மனதிற்கினிய தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

ஆனாலும் புதியவர்களுடன் கூட்டு சேர வேண்டாம். மேலும் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி சமுதாயத்தில் புகழ் பெற்ற பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களின் அந்தஸ்து உயரும். சகோதர, சகோதரிகளுடன் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு உங்களின் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். அனாவசியச் செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டாம். வரவுக்குத் தகுந்த செலவுகளைச் செய்யவும். மேலும் மனதில் எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றும்.

குடும்பம்: குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேர்வார்கள். வருமானம் படிப்படியாக உயரும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன் வெற்றிகொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களின் செயல்களில் வேகத்துடன், விவேகத்தையும் கூட்டிக்கொள்வீர்கள். உங்களுக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறுவார்கள். உங்களின் பழக்க வழக்கங்களில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தாருடன் இனிய சுற்றுலா சென்று வருவீர்கள். நேர்வழியில் சிந்தித்து உங்களின் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

பொருளாதாரம்: சனி பகவானின் ஆதிக்கத்தால் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். சுப நிகழ்ச்சிகள் செய்யும் சூழ்நிலை உண்டாகும். அதற்கான செலவுகளை சமாளிக்கவும் முடியும்.

ஆரோக்கியம்: உடல் நிலையில் இருந்து வந்த கஷ்ட சூழ்நிலை நீங்கும். ஆரோக்கியத்திற்காக இதுவரை செய்து வந்த செலவு நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கடின உழைப்பை தாரக மந்திரமாகக் கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகவும். சிலர் உங்களுடன் பகைமை பாராட்டுவார்கள். ஆனாலும் வருமானத்திற்குக் குறைவு இருக்காது. அலுவலக ரீதியான பயணங்களால் நல்ல அனுபத்தைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

வியாபாரிகள்: வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். திட்டமிட்டபடி செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பழைய கடன்களை அடைத்த பிறகே புதிய கடன்களைப் பெற முயற்சி செய்யவும். மற்றபடி வாடிக்கையாளர்களின் வருகை நல்லமுறையிலேயே இருக்கும். ஆனாலும் புதிய முதலீடோ அல்லது விரிவாக்கலோ இருந்தால் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் மதிப்புக்கும், மரியாதைக்கும் குறைவு வராது. உங்களின் பிரார்த்தனைகள் வீண் போகாது. பண வரவு அதிகரிக்கும். குழந்தைகள் உதவிகரமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் நடத்துவதில் ஏற்பட்ட தடைகள் விலகும். உற்றார், உறவினர்களுடன் ஒற்றுமை தொடரும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சிறிது மந்த நிலை காண்பார்கள்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவும், கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறி புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். ஆனாலும் மாற்றுக் காட்சியினர் உங்கள் பேச்சில் குறை காண முயல்வார்கள். எனவே அநாவசிய விவகாரங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

கலைத்துறையினர்: கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். மற்றபடி உங்களின் பெயரும், புகழும் உயரும். சக கலைஞர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். சக கலைஞர்களுடன் நல்ல உறவை வைத்துக்கொள்வீர்கள். கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகும். தொழில் ரீதியாக உங்களை புறந்தள்ள நட்புடன் பழகியவர்களே முயற்சி செய்வார்கள். கடின உழைப்பை செயல்படுத்தினால் மட்டுமே முன்னேற முடியும்.

மாணவமணிகள்: மாணவமணிகளின் படிப்பில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோரின் உதவியுடன் நன்றாகப் படித்து வெற்றி பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்துவிட்டு ஆசிரியர் நடத்திய பாடங்களை அன்றைய தினமே படித்து மதிப்பெண்களை அள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொண்டு உடலையும், மனதையும் நன்றாக வைத்துக்கொள்ளுங்கள். மருத்துவம், இஞ்சினியரிங் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறந்த கவனத்துடன் செயல்பட்டு தேர்ச்சி பெறுவார்கள். இது தொடர்பான கல்வி நிறைவு செய்தவர்கள் உடனடியாக வேலை வாய்ப்பு பெறுவார்கள். நண்பர்களால் உதவி உண்டு.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சிறிது கால தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.

சுவாதி: இந்த ஆண்டு குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது. வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள். பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும். விற்பனையின் போது கவனம் தேவை. சக ஊழியர்களுடன் பழகும் போது கவனம் தேவை. வேலைகள் எளிமையாக தோன்றும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி | அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 mins ago

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்