குருப் பெயர்ச்சி: ரிஷபம் ராசியினருக்கு எப்படி? - 01.05.2024 முதல் 13.04.2025 வரை

By செய்திப்பிரிவு

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்தவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் அமர்ந்து பலவிதங்களிலும் உங்களுக்கு நஷ்டங்களையும், பிரச்சினைகளையும், நிம்மதியற்றப் போக்கையும் உருவாக்கிக் கொண்டிருந்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை உங்கள் ராசிக்குள் நுழைகிறார். ஜென்ம குரு என்பதால் நீங்கள் இனி ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

சிறுசிறு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது. உணவு கட்டுப்பாடும் இனி அவசியமாகிறது. கொழுப்புச் சத்து, வாயுப் பதார்த்தங்களையெல்லாம் நீங்கள் தவிர்ப்பது நல்லது. கணவருடன் சின்ன சின்ன மோதல்கள் அதிகமாகிக் கொண்டே போகும். சாதாரண விஷயத்தையெல்லாம் பெரிதாக்காதீர்கள். சந்தேகப் பார்வையை தவிர்த்துவிடுவது நல்லது.

முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். அரசியல் செல்வாக்குக் கூடும். குரு உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையும். மகனுக்கும் நீங்கள் எதிர்பார்த்தபடி எல்லாம் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து கைக்கு வரும். குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவர் உங்களைப் புரிந்துக் கொள்வார்.

உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு கணவர் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். அதனால் சிறுசிறு பிரிவுகள் ஏற்படும். குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் பணப் புழக்கம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஜென்ம குருவாக இருப்பதால் பணப்பற்றாக்குறையும் அவ்வப்போது ஏற்படும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். தூக்கம் கொஞ்சம் குறையும். பெரிய நோய்கள் இருப்பதைப் போல் தோன்றும். ஆனால் பாதிப்புகள் இருக்காது.

குருபகவானின் நட்சத்திர பயணம்: 1.5.2024 முதல் 13.6.2024 வரை உங்கள் சுகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் வீடு மனை அமையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். புது வாகனம் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் சாதகமாக முடிவடையும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். என்றாலும் இக்காலகட்டத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காய்ச்சல், சளித் தொந்தரவு, விரக்தி வந்து நீங்கும்.

13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். இளைய சகோதர பாசமாக நடந்து கொள்வார். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை சுமுகமாக முடியும். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். முக்கியப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கோயில் விழாவில் முதல் மரியாதை கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு ஆரோக்கியக் குறைவும், விபத்துகளும், மன இறுக்கமும், திடீர் பயணங் களும், செலவுகளும், கணவன் மனைவி பிரிவும் வந்துபோகும்.

20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை உங்கள் சப்தம, விரயாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மனைவி வழி உறவினர்களால் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் பள்ளி, கல்லூரி சேர்க்கைகள் நல்ல விதத்தில் முடியும். வேற்று மொழி பேசுபவர்கள் உதவுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் நிலவும். வேலையாட்களும் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். ஆக மொத்தம் இந்த குருமாற்றம் சற்றே மனநிம்மதியற்றப் போக்கையும், ஆரோக்கிய குறைவையும் தந்தாலும் மற்றொரு பக்கம் ஓரளவு வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 17 கிமீ தொலைவில் உள்ள ஆலங்குடியில் உள்ள சிவாலயத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள். வீட்டில் நல்லது நடக்கும்.

(நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், புதன்கிழமை, 01.05.2024 கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திரு வோண நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோக நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியி லிருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் 1 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE