மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | ஏப்.14, 2024 முதல் ஏப்.13, 2025 வரை எப்படி?

By Guest Author

மேஷம்: புரட்சிகரமான தொலை நோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்களே! பூர்வ புண்யாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே உச்சமடைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைப்பட்டு வந்த அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். புது வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் பொறுப்பு கூடும். பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

நட்பு வட்டம் விரிவடையும். உங்களின் சுகஸ்தானாதிபதியாகிய சந்திரன் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மாதக் கணக்கில், வாரக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடியும். மனோபலம் அதிகரிக்கும். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

இந்த வருடம் முழுக்க கேதுபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால் ஆரோக்கியம் மேம்படும். மனதில் ஒரு வித தெம்பு, தைரியம் இருக்கும். ராகுவும் உங்களுக்கு ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தீராத கடன்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் -மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். வட்டிக்கு வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உங்களின் ஸ்டேட்டஸ் ஒரு படி உயரும்.

30.04.2024 வரை ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். 01.05.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும்.

ஷேர் மூலம் பணம் வரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சேர்க்கை உண்டு. சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு.

இந்த குரோதி வருடம் முழுவதுமாக உங்கள் ராசிக்கு சனிபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். வருமானம் உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனைவி வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். இயக்கம், சங்கம் இவற்றில் கவுரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் புது முதலீடு செய்து சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து ஓரளவு லாபம் பெறுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம். பங்குதாரர்கள் உங்களது கருத்துகளை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார்கள். கமிஷன், கட்டிட உதிரி பாகங்கள், கடல் வாழ் உயிரினம், பெட்ரோ - கெமிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பிரபலங்கள், நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவது, அழகு படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெற வேண்டி வரும். கார்த்திகை, பங்குனி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகளும் தேடி வரும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். இந்த குரோதி வருடம் நீங்கள் கையில் எடுத்த காரியங்கள் அனைத்திலும் உங்களை வெற்றி பெற வைக்கும். பரிகாரம்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமான் கோயில் சென்று தரிசியுங்கள். சகல பாக்கியமும் உண்டாகும். கால் இழந்தவர்களுக்கு உதவுங்கள்.

ரிஷபம்: எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்ட நீங்கள், உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். ராசிக்கு 2-ம் வீட்டில் இந்த குரோதி ஆண்டு பிறப்பதால் சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும். சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். ஆடி, ஆவணி மாதத்தில் இழுபறியாக இருந்த அரசு காரியம் முடியும். வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வருவீர்கள்.

30.04.2024 வரை குரு ராசிக்கு 12-ல் நிற்பதால் எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகமாகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவினங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். ஆன்மிகவாதிகளின் ஆசிப் பெறுவீர்கள். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் கிடைக்கும்.

01.05.2024 முதல் உங்களுடைய ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் உடல் நலம் பாதிக்கும். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சரியான மருத்துவரை அணுகி உரிய மாத்திரையை உட்கொள்வது நல்லது. கணவன் - மனைவிக்குள் பனிப்போர் அதிகரிக்கும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும்.

முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து பேசுவது நல்லது.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 10-ம் இடத்திலேயே தொடர்வதால் உங்களின் கடின உழைப்புக்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது பதவி, பொறுப்புகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள்.

இந்த வருடம் முழுக்க ராகு லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் திடீர் ராஜ யோகம் உண்டாகும். கருநாக பாம்பாகிய ராகு லாப வீட்டில் நிற்பதால் வீடு, சொத்து எல்லாம் அமையும். மூத்த சகோதர வகையில் சில உதவிகள் கிடைக்கும். உங்களிடம் உள்ள திறமைகள் வெளிப்படும். கணவன் - மனைவிக்குள் ஒரு புரிதலுடன் இருப்பீர்கள். சொந்த வீடு நிச்சயமாக அமையும்.

கேது 5-ல் நிற்பதால் பூர்வீகச் சொத்து பிரச்சினைகள் வருமோ என்றெல்லாம் நினைக்க வேண்டாம், மே 1-ம் தேதி முதல் குருபகவான் பார்வை கேதுவின் மேல் விழுவதால் அதுமுதல் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தர்ம காரியங்கள் செய்வீர்கள். பழைய கலாச்சாரத்தையும் பின்பற்றுவீர்கள். என்றாலும் பிள்ளைகளிடம் அதிகம் கண்டிப்பு காட்டாமல் அவர்கள் போக்கிலேயே அவர்களை வழி நடத்துங்கள்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். லாபம் மந்தமாக இருக்கும். மாறி வரும் சந்தை நிலவரத்தை அவ்வப் போது உன்னிப்பாக கவனித்து செயல்படப்பாருங்கள். விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப்பாலும் பழைய சரக்கு களை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்து ழைப்பின்மையால் லாபம் குறையும். மற்றவர்களை நம்பி அனுபவமில்லாத தொழிலில் இறங்க வேண் டாம். கார்த்திகை, தை, மாசி மாதங்களில் பற்று வரவு உயரும். முடிந்த வரை கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது. ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய், மூலிகை, கமிஷன் வகைகளால் ஆதாயமுண்டு.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் 10-ல் தொடர்வதால் உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிகாரி உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார். உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். சித்திரை, ஆடி, மாசி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். இந்த தமிழ் புத்தாண்டு இடமாற்றத்தையும், வேலைச் சுமையையும் தந்து உங்களை அலைக் கழித்தாலும் உங்களுடன் பழகுபவர்களின் உண்மை சுயரூபத்தை உணர்த்துவதாக அமையும். பரிகாரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானை திருவாதிரை நட்சத்திர நாளில் தும்பை பூ மாலை அணிவித்து வணங்குங்கள். தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

மிதுனம்: எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டீர்கள். சூரியன், புதன் மற்றும் சுக்ரன் ஆகிய கிரகங்கள் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த குரோதி வருடம் பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். பிரபலங்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

பணப்புழக்கம் அதிகமாகும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். புதிய வீடு கட்ட முடிவு செய்வீர்கள். கௌரவப் பதவி, புது பொறுப்புகள் தேடி வரும். அர சால் அனுகூலம் உண்டாகும்.

உங்கள் ராசியிலேயே இந்த குரோதி வருடம் பிறப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. குருபகவான் 30.4.2024 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால் வீண் விரயம், ஏமாற்றம், தூக்கமின்மை, செலவுகள் வந்துச் செல்லும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

இந்தாண்டு முழுக்க ராகுபகவான் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நிர்வாகத்திறன் அதிகரிக்கும். தொழிலதிபர்கள், ஆன்மிகப் பெரியோரின் அறிமுகம் கிடைக்கும். சிலர் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்குவீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலுடன் வேறு சில வியாபாரமும் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.

கேது 4-ம் வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை குறைந்தாலும் ஜெயித்து காட்டுவீர்கள். தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது.

வீடு மாற வேண்டிய சூழல் உருவாகும். சிலர் இருக்கும் ஊரிலிருந்து, மாநிலத்திலிருந்து வேறு ஊர், மாநிலம் செல்ல வேண்டிய அமைப்பு உண்டாகும். இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 9-ல் நிற்பதால் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். புதிய வீடு வாங்குவீர்கள்.

வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கு வீர்கள். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டாகும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். அறிவுப் பூர்வமாக சிந்திப்பதுடன் சந்தை நிலவரத்தையும் அறிந்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள். கட்டுமானப் பொருட்கள், பெட்ரோ -கெமிக்கல், போர்டிங், லாஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவார்கள்.

மே மாதம் முதல் குரு சாதகமாக இல்லாததால் உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள். புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.
இந்த தமிழ்ப் புத்தாண்டு உங்களை கடினமாக உழைக்க வைத்து, தன்னம்பிக்கையால் தலை நிமிரச் செய்யும். பரிகாரம்: ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் ,ஸ்ரீரங்கநாதப் பெருமாளை ரேவதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள்.

கடகம்: சீர்திருத்தச் சிந்தனை அதிகமுள்ள நீங்கள், மந்திரியாக இருந்தாலும் மனதில் பட்டதை பளிச்சென பேசுவீர்கள்.குரோதி வருடம் பிறக்கும்போது சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால் குடும்பத்தில், கணவன் - மனைவிக்குள் இருந்து வந்தப் பிணக்குகள் நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சமூகத்தில் மதிக்கத் தகுந்த அளவுக்கு கவுரவப் பதவியில் அமருவீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிட்டும். சொந்த - பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று பணி அழைப்பு வரும்.

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் உண்டு. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில் களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 30.04.2024 வரை குரு 10-ல் தொடர்வதால் வேலைச்சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். விலை உயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் போராட்டங்கள் குறையும். தடைகளெல்லாம் நீங்கும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பதவிகள், பொறுப்புகள் தருவார்கள்.

இந்தப் புத்தாண்டு முழுவதுமாக சனி உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். ஆழ்ந்த உறக்கமில்லாமல் தவிப்பீர்கள். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோ அல்லது உங்களது தவறுகளை சுட்டிக் காட்டினாலோ அதை பொறுமையாக ஏற்றுக் கொள்வது நல்லது.

இந்த குரோதி வருடம் முழுவதும் ராகு பகவான் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். நேர்மறை எண்ணங்களை உள்வளர்த்துக் கொள்ளுங்கள். கேது 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மனோபலம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். கவுரவப் பதவிகள் வரும். விலை உயர்ந்த தங்க ஆபரணம், ரத்தினங்கள் வாங்குவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் வந்துப் போகும். எதிர்பார்த்த ஆர்டர் தாமதமாக வரும். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். பழைய ஏற்றுமதி - இறக்குமதி, லாட்ஜிங், வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விட்டுக் கொடுத்து போகவும். ஐப்பசி, மாசி, தை மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புது அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் ஒருதலைபட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு. இந்தப் புத்தாண்டு சின்ன சின்ன கசப்பான அனுபவங்களைத் தந்தாலும் அனுபவ அறிவால் முன்னேறுவதாக அமையும். பரிகாரம்: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும்  சிம்ம தட்சிணாமூர்த்தியை ஏதேனும் ஒரு வியாழக் கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். முடிந்தால் ஏழை நோயாளிக்கு மருந்து வாங்கிக் கொடுங்கள்.

சிம்மம்: ஏர்முனையாக இருந்தாலும், போர் முனையாக இருந்தாலும் எதிலும் முதலில் நிற்பவர்களே! உங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சுருங்கிய முகம் மலரும். கடந்த வருடத்தில் வாட்டிவதைத்தப் பிரச்சினைகளுக்கு இந்த வருடத்தில் தீர்வு கிடைக்கும். தம்பதிக்குள் அன்யோன்யம் உண்டாகும்.

சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிட்டும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் விருந்தினர் எண்ணிக்கை அதிகரிக்கும். புது சிந்தனைகள் பிறக்கும். பிள்ளைகளின் நெடுநாள் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அவர்களின் வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.

ராசிநாதன் சூரியனும், ஜீவனாதிபதி சுக்ரனும் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 30.04.2024 வரை உங்கள் ராசிக்கு குருபகவான் 9-ல் நிற்பதால் பிரச்சினைகளை தொலைநோக்குப் பார்வையுடன் தீர்க்கும் சூட்சுமத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும் பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மகன், தாயாருக்கு இருந்த நோய் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ம் வீட்டில் நுழைவதால் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். சட்டத்துக்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

இந்த வருடம் முழுக்க சனி உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக தொடர்வதால் முன்கோபம் அதிகமாகும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். திருமண முயற்சிகள் தாமதமாக முடியும். முக்கிய காரியங்களை மற்றவர்களை நம்பி விடாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும்.

இந்தாண்டு முழுக்க ராகு 8, கேது 2-ம் இடத்திலும் நீடிப்பதால் இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப்பாருங்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். முன்கோபம் அதிகமாகும். பல் வலி, காது வலி வந்துப் போகும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். வறட்டு கவுரவத்துக்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஓரளவு லாபம் வரும். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயமடை வீர்கள். பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர் பாதையில் செல்வது நல்லது. இடமாற்றம் உண்டு. புரட்டாசி, ஐப்பசி, தை மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும். ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாகும். வேறு சில புது வாய்ப்புகளும் வரும். சம்பளம் உயரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.

இந்த தமிழ் புத்தாண்டு முற்பகுதியில் சின்ன சின்ன முடக்கங்களையும், சங்கடங்களையும் தந்தாலும், மையப்பகுதியில் வருங்காலத் திட்டங்களை ஓரளவு நிறைவேற்றித் தருவதாக அமையும். பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து 7 கி.மி தொலைவில் உள்ள அழிசூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருளாலீசுவரரை சென்று வணங்குங்கள். ஏழைக் கன்னிப்பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்கள். வசதி, வாய்ப்பு பெருகும்.

கன்னி: வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் நீங்கள், மனிதநேயம் மாறாதவர்கள். சந்திரன் 10-வது ராசியில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வருங்காலத்துக்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புது வேலை கிடைக்கும். பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. போட்டி, தேர்வுகளில் வெற்றி உண்டு. கோபம் குறையும்.

இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் தனாதிபதி சுக்ரன் 7-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதுடன் உங்களது ராசியையும் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். இந்தாண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும்.

30.4.2024 வரை குருபகவான் 8-ல் மறைந்திருப்பதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். 01.05.2024 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நுழைவதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வீண் குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவுப் பிறக்கும். திடீர் பணவரவு, யோகம் எல்லாம் உண்டாகும் பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். சொந்த - பந்தங்களின் சுயரூபம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். தந்தையுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும்.

வருடப் பிறப்பு முதல் இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலேயே ராகு தொடர்வதால் வீண் சந்தேகத்தாலும், ஈகோ பிரச்சினையாலும் கணவன்- மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். மனைவி வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். கேதுவும் இந்தாண்டு முழுக்க உங்கள் ஜென்ம ராசியிலேயே அமர்ந்திருப்பதால் ஆரோக்கியம் பாதிக்கும். ஹார்மோன் பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே பச்சை கீரை, காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை குறையும். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வைகாசி, ஆவணி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் வியாபாரம் செழிக்கும். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலை விட்டு விட்டு வேற்று தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. உணவு, ஸ்பெகுலேஷன், சிமெண்ட், கல்வி கூடங்களால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். யாரைப் பற்றியும் புகார் கூறாதீர்கள். சக ஊழியர்களால் உதவிகள் உண்டு. சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். வருடத்தின் பிற்பகுதியில் சிலர் உங்கள் மீது வழக்குத் தொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆகமொத்தம் இந்த குரோதி ஆண்டு ஒருபக்கம் வசதி, வாய்ப்புகளைத் தருவதுடன், சற்றே சுகவீனங்களையும் தருவாக அமையும். பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்புவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகம்பகரேஸ்வரர் கோயிலில் இருக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று நெய் விளக்கேற்றி வணங்குங்கள். ஏழை மாணவனுக்கு நோட்டு, புத்தகம் வாங்கிக் கொடுங்கள். நிம்மதி கிட்டும்.

துலாம்: மற்றவர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ள நீங்கள், துவண்டு வருவோருக்கு தோள் கொடுப்பவர்கள்! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த குரோதி வருடம் பிறப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறுவீர்கள். உங்கள் மீது உங்களுக்கே இருந்து வந்த அவநம்பிக்கைகள் நீங்கும். சாதிக்கும் எண்ணம் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள் என்றாலும் 6-ல் வீட்டில் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள் வந்துச் செல்லும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

இந்தாண்டு முழுக்க 5-ம் இடத்திலேயே சனி அமர்ந்திருப்பதால் முடிவுகள் எடுப்பதில் ஒருவித குழப்பமும், தடுமாற்றமும் இருந்துக் கொண்டேயிருக்கும். பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரை நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தமாக அதிகம் செலவு செய்து சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் சரிசெய்து கொள்ளுங்கள்.

30.04.2024 வரை குருபகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும்.

மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். 01.05.2024 முதல் குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். மறதியால் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இழக்க நேரிடும். முன்கோபத்தால் நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள்.

இந்தாண்டு முழுக்க ராகு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரச்சினைகள் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். புது பதவிகள் தேடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலமாக பணம் வரும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும்.

மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். எதிரானவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாய மடைவீர்கள். வேற்றுமொழி, மதம், அண்டை மாநிலத்தவர்களால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் உண்டாகும்.

கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொள்வீர்கள். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாட்கள் தூக்கம் குறையும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதையும் கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.

புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பற்று வரவு உயரும். சிலர் சொந்த இடம் அல்லது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புரோக்கரேஜ், ஸ்பெகுலேஷன், அழகு சாதனப் பொருட்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். மதிப்பு கூடும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டிவரும். பதவி உயர்வுக்கான தேர்வில் வெற்றி பெற்று புதுபதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். இந்தப் புத்தாண்டு சின்ன சின்ன ஏமாற்றங்களை தந்தாலும் வெளிச்சத்தை நோக்கி பயணிக்க வைத்து சாதனைகள் படைக்கத் தூண்டும். பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று நெய் தீபமேற்றி வணங்குங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள். வெற்றி நிச்சயம்.

விருச்சிகம்: வாக்குசாதுர்யத்தால் வாதங்களில் வெல்லும் நீங்கள், வந்த சண்டையை விட மாட்டீர்கள். சூரியனும், சுக்ரனும் சாதகமாக இருக்கும் போது இந்த குரோதி வருடம் பிறப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். புது வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள்.

உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். சவால்களை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி பைசல் செய்வீர்கள்.

30.04.2024 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

1.05.2024 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் உங்களின் திறமைக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களுடைய பெருந் தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த - பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும். அக்கம் - பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தில் சீரமைப்புப் பணிகள மேற்கொள்வீர்கள்.

இந்தாண்டு முழுக்க அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கட மான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே நேரடியாக தலையிட்டு முடிப்பது நல்லது. சொத்து வாங்கும் போது முறையான பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் வழக்கறிஞரை வைத்து சரி பார்த்து வாங்குவது நல்லது. தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் அதிகமாகும்.

இந்தாண்டு முழுக்க ராகு ராசிக்கு 5-ம் வீட்டிலேயே அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போவது நல்லது. அவர்களின் திருமணம், உயர்கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். கூடாப் பழக்கமுள்ளவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந் தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது.

கேது இந்தாண்டு முழுக்க லாப ஸ்தானத்திலேயே நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். புதுப் பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள்.

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். பெரியளவில் முதலீடுகள் வேண்டாம். கடன் வாங்கி கடையை விரிவுபடுத்தி, நவீனமாக்குவீர்கள். உணவு, இரும்பு, கன்சல்டன்சி, ரியல் எஸ்டேட், மர வகைகளால் ஆதாயம் உண்டு. பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். சிலர் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள்.

01.05.2024 முதல் உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சனி 4-ல் நிற்பதால் மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாகும். இந்தப் புத்தாண்டு ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு பரபரப்பாகவும், அதிக நேரம் உழைக்க வைப்பதாகவும் இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை தருவதாக அமையும். பரிகாரம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கையில் வீற்றிருக்கும் ஸ்ரீகால பைரவரை சென்று வணங்குங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். ஆரோக்கியம் சீராகும்.

தனுசு: சிறு உளிதான் பெரிய மலையை உடைக்கும் என்ற சூட்சமத்தை உணர்ந்த நீங்கள், சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பவர்கள். ராசிக்கு 7-ம் வீட்டில் குரோதி வருடம் பிறப்பதால் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். தள்ளிப் போன திருமணம் உடனே முடியும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும்.

இந்தாண்டு பிறக்கும் நேரத்தில் சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் வீராவேசமாக பேசி விமர்சனங்களுக்குள்ளாவதை விட கனிவாகப் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பது தான் நல்லது என்ற முடிவுக்கு வருவீர்கள். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவுக்கு அவர்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

வருடப் பிறப்பு முதல் 30.04.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் நிற்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் செய்து வைப்பீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்புணர்வு ஏற்படக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

சனிபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டிலேயே இந்தாண்டு முழுக்க முகாமிட்டிருப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் வந்து அமையும். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். உங்களை எதிர்த்தவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அறிஞர்கள், நண்பர்கள் சிலரின் கருத்துகளை கேட்டு அதன்படி நடந்துக் கொள்வீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

இந்தாண்டு முழுக்க ராகு 4-ம் இடத்திலும், கேது 10-ல் இடத்திலும் தொடர்வதால் சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். சொத்தை விற்பதாக இருந்தால் ஒரே தவணையில் பணம் வாங்கிக் கொண்டு உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வது நல்லது. தாயாருக்கு அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி, கழுத்து எலும்புத் தேய்மானம் வந்துச் செல்லும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். அவர் உங்களை கோபத்தில் ஏதேனும் பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம். நேரம் தவறி சாப்பிட வேண்டியிருக்கும். அலைச்சலும் இருக்கும். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உணவில் பழங்கள், காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஐம்பது ரூபாயில் முடியக்கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். இடப்பெயர்ச்சி உண்டு. வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்களால் தொந்தரவுகள் ஏற்படும். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு அபராதத் தொகை கட்ட வேண்டி வரும்.

அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும். சின்ன சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். வீட்டில் கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய் பிரச்சினை வந்துப் போகும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் வரும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக்ட் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும். ஆவணி மாதத்தில் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள்.

01.05.2024 முதல் குரு உங்கள் ராசிக்கு 6-ல் அமர்வதால் உத்தியோகத்தில் பொறுப்பு அதிகமாகும். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள்தான் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.

சிலர் பணியிலிருந்து கட்டாய ஓய்வுப் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகும். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்த புத்தாண்டு உங்களைக் கொஞ்சம் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதுடன், சமூகத்தில் வளைந்துக் கொடுத்துப் போகும் கலையை கற்றுத் தருவதாக அமையும். பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், அய்யாவாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை சென்று வணங்குங்கள். செங்கல் சூளை அல்லது கல்குவாரியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மகரம்: பிரச்சினையிலிருந்து பின்வாங்காமல் எதிர்த்து நிற்கும் நீங்கள், சமூக அவலங்களை தட்டிக் கேட்பவர்கள். குரோதி வருடம் சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்லும் நேரத்தில் பிறப்பதால் சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பழைய நண்பர்களை சந்தித்து கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.

இந்த குரோதி வருடம் உங்களுக்கு 6-வது ராசியில் பிறப்பதால் சவால்களை சந்திக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பயணங்களும், செலவுகளும் உங்களை துரத்தும். சிலருக்கு வேற்றுமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

30.04.2024 வரை குருபகவான் 4-ல் அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும், நடத்தை கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருக்கும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி சற்று தாமதமாக கிடைக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன விபத்துகள் வந்து நீங்கும். சிலர் சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற வேண்டியது வரும்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 5-ல் நுழைவதால் ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டில் சந்தோஷம் பெருகும். கல்யாணம், காது குத்து, கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். தாயாருக்கு இருந்து வந்த நோய் குணமடையும்.

மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த நண்பர்கள், உறவினர்கள் இனி விரும்பி வந்து பேசத் தொடங்குவார்கள். குலதெய்வ கோயிலில் நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளும் சாதகமாக முடிவடையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் 2-ல் அமர்ந்து பாதச்சனியாக தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்காதீர்கள். குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவுகள் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.

கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி வந்துப் போகும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. சிலர் கண்ணை பரிசோதித்து மூக்குக் கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை வரும். நெருக்கடியான நேரத்தில் உங்களை பயன்படுத்தி விட்டு கறிவேப்பிலையாய் தூக்கி எறிந்துவிட்ட நண்பர்கள், உறவினர்களை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

எதிர்தரப்பு வாய்தாவால் வழக்குத் தள்ளிப் போகும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. கூடாப்பழக்கம் தொற்ற வாய்ப்பிருக்கிறது. நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறை அதிகமாகும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்துச் செல்லும். பூர்வீக சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையேயென வருத்தப்படுவீர்கள். பேருந்துகளில் செல்லும் போது படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம்.

ராகு 3-ம் வீட்டிலேயே இந்த வருடம் முழுக்க முகாமிட்டிருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். பழைய பிரச்சினைகளை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். மாற்று மதம், மொழி, மாநிலத்தவர்களால் உதவிகள் உண்டு. இளைய சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள்.

கேது 9-ம் இடத்திலேயே நீடிக்கயிருப்பதால் தந்தையாருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை, மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்துப் போகும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை தலை தூக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்துக் கொண்டேயிருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள் வீர்கள். சந்தை நிலவரத்தை அவ்வப் போது உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செயல்படப்பாருங்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக திருத்துங்கள். தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும்.

தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். மூலிகை, கட்டிட உதிரி பாகங்கள், துணி, புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்துப் போகவும். ஐப்பசி, தை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் உண்மையாக இருப்பது மட்டும் போதாது, உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். உங்களின் கடின உழைப்பை மூத்த அதிகாரிகள் புரிந்துக் கொள்வார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். இழந்த சலுகைகளையும், மதிப்பு, மரியாதையையும் மீண்டும் பெறுவீர்கள்.

உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறுயிடத்துக்கு மாற்றப்படுவார். வருடத்தின் பிற்பகுதியில் தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். இந்த குரோதி வருடம் அவ்வப்போது உங்களை கோபப்படுத்தி முணுமுணுக்க வைத்தாலும் அனுபவ அறிவால் முன்னேற வைக்கும். பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், கொழுமம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீகல்யாண வரதராஜரை சென்று வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கும்பம்: சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் காய் நகர்த்தி காரியத்தை கச்சிதமாக முடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சூரியன் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். சி.எம்.டி.ஏ, எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விசா வரும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். மனைவிவழியில் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும்.

இந்தப் புத்தாண்டு உங்களின் 5-ம் வீட்டில் பிறப்ப தால் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். மகளுக்கு இந்தாண்டு கல்யாணம் சீரும் சிறப்புமாக முடியும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள், பதவிகள் வர வாய்ப்பு உள்ளது. தூரத்து சொந்தம் தேடி வரும். பூர்வீக சொத்தை சீரமைப்பீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

இந்தாண்டு முழுக்க ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்மச் சனியாக தொடர்வதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். தினசரி நடைப்பயிற்சி மேற் கொள்வது நல்லது. கணவன் - மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். எதுவாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டு பேசி முடிவுகள் எடுக்கப் பாருங்கள். சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷ யங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

30.04.2024 வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். அக்கம் - பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.

01.05.2024 முதல் குரு ராசிக்கு 4-ல் நுழைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் உண்டாகும். தாயாருடன் விவாதங்கள் வரக் கூடும். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

இந்தாண்டு முழுக்க நிழல் கிரகங்களான ராகு 2-ம் வீட்டிலும் கேது 8-ம் இடத்திலும் நீடிப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். பார்வைக் கோளாறு வரக்கூடும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். பலவீனம் இல்லாத மனிதர்களே இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டு நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். வழக்கால் நெருக்கடி வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போகவும். தனி நபர் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட மரியாதைக் குறைவான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது நிம்மதி இழப்பீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். திடீர் லாபம் உண்டு. புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.

உத்தியோகத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும் ஓர் அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்சினைகள் வந்துச் செல்லும். இந்தப் புத்தாண்டு ஆரோக்கிய குறைவையும், காரியத் தடங்கல்களையும் தந்தாலும் தொடர் முயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும். பரிகாரம்: அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை சென்று வணங்குங்கள். தந்தையில்லா பிள்ளைக்கு உதவுங்கள். மன நிம்மதி உண்டாகும்.

மீனம்: மேல் தட்டு மக்களை விட குடிசையில் வாழ்பவர்களுக்காக அதிகம் யோசிப்பவர்களே! குரோதி வருடம் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பிறப்பதால் சின்ன சின்ன கனவுகளெல்லாம் நனவாகும். மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பது, அறை கட்டுவது, வீட்டுக்கு வர்ணம் பூசுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று சிலர் நகரத்தில் வீடு வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். தாய்வழி சொத்து கைக்கு வரும்.

இந்தப் புத்தாண்டு சுக்ரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் பிறப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். மனதில் அமைதி உண்டாகும். பேச்சில் கனிவு பிறக்கும். பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என நினைப்பீர்கள். கலை, இலக்கியம் இவற்றில் மனம் ஈடுபாடு கொள்ளும். சிலரின் படைப்புகள் பத்திரிகையில் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உடன்பிறந்த வர்களின் கோபம் குறையும்.

30.04.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடல் நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தையாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்கியமும் சீராகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குரு ராசிக்கு 3-ல் அமர்வதால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப் பாருங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்க சான்றிதழ், தாய் பத்திரத்தையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ஊர் பொதுக் காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம்.

இந்த வருடம் முழுவதுமாக சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான, விரயச் சனியாக தொடர்வதால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களில், உள் விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். எளிதாக முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடித் தான் முடிக்க வேண்டி வரும். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். எதிர்காலம் பற்றிய பயம் வந்துப் போகும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து முன்னின்று முடிப்பீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். திடீர் பயணங்களால் திணறுவீர்கள்.

இந்த குரோதி வருடம் முழுவதும் உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். உடம்பில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சட்டப்படி ஆவணங்களையெல்லாம் தயாரித்து வழக்கறிஞர் மூலமாக இறங்குவது நல்லது. வெற்றுத் தாளில் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்து விடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். இழப்பு களை சரி செய்வீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். பதிப்பகம், போர்டிங், லாஜிங், ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் பங்குதாரராக அறிமுகமாவார்.

உத்தியோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்கு வார்கள். கேட்ட இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் பாராட்டிப் பேசப்படும். பொய் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.

இந்த குரோதி ஆண்டு அனைத்திலும் வெற்றி பெற வைப்பதுடன், பணம், பதவியையும் அள்ளித் தருவதாகவும் வாழ்வில் புதிய சகாப்தத்தையும் படைக்கும் வல்லமையையும் தரும். பரிகாரம்: மதுரை மாவட்டத்தில் அருள்பாலிக்கும் மீனாட்சி அம்மனை சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள். கடன் பிரச்சினை தீரும்.

- வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்